வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! கனிமொழி, கருணாநிதி, காங்கிரஸ்! அப்புறம், கேடி பிரதர்ஸ்...?


எதிர்பார்த்தது போலவே,ஒரு வழியாக திமுகவின் உயர்நிலைக் குழு கூடி பத்துத் தீர்மானங்களை நிறைவேற்றி முடிந்திருக்கிறது. புலி வருது, புலிவருது என்று பலமுறை பரபரப்பைக் கிளப்பியவன் கதையைப் போலவே, திமுக உயர்மட்டக் குழு கூடி என்ன முடிவெடுக்கும் என்பதை முடிவெடுப்பவர்களுக்கு முன்னமேயே மற்றவர்கள் அறிந்து வைத்திருந்தது தான் மிகப்பெரிய சோகம்! கருணாநிதி, கதை-வசன கர்த்தாவாகப் பட்டையைக் கிளப்பியகாலம் எல்லாம் ஓய்ந்துபோய் நீண்ட காலமாகி விட்டது என்பதைஅவரைத் தவிர மற்ற எல்லோருமே தெரிந்து வைத்திருப்பது   திமுகவின் தற்போதைய பலவீனம்.  
இன்றைக்கு, கனிமொழி, சரத்குமார் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் எஸ் எல் பி, மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அநேகமாகத் திங்கட் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஜாமீன் கிடைக்குமா என்பது வேறு விஷயம்!.
வாக்காளர்களுக்கு நன்றி, ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசின் தீர்மானத்துக்கு  வரவேற்பு என்ற சாங்கியங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், உயர் மட்டக் குழுவில் திமுக அமைச்சர்கள் எவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற மாட்டார்கள் (தயாநிதி மாறன் விவகாரம் தனி! அதை அவரே பார்த்துக் கொள்வாரென்று  தாத்தா ஏற்கெனெவே முடிவு சொல்லிவிட்டார்!) என்று ஆரம்பித்து, காங்கிரசுடன் உறவு சுமுகமாக இருக்கிறது என்று பூசி மெழுகி விட்டு, சிபிஐ கனிமொழி விவகாரத்தில் இரட்டைவேடம் போடுவதாகக் கண்டனம், 2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சட்டபூர்வமாக எதிர்கொள்ளப்போவதாக அறிவிப்பு (வேறு வழி?) ஜெயலலிதா அதிரடியாக, திமுக அரசு தன்னுடைய சாதனைகளாகப் பீற்றிக் கொண்ட சில விஷயங்களை ரத்து செய்ததற்குக் கண்டனம் என்று சரமாரியாக எதிர்ப்பு, கண்டனங்கள் என்று தீர்மானங்களைப் போட்டு முடிந்திருக்கிறது.

இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்று கேட்கிறீர்களா?

ஓவர் பில்டப்பிலேயே கவிழ்ந்துபோனதை, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வெறும் கட் அவுட் புலிகள் தான் நிஜப்புலிகள் இல்லை என்பதை கட்சியின் அடிமட்டத் தொண்டன் முதல் சாதாரண ஜனங்கள் வரைதெரிந்து வைத்திருப்பதை, தலைவர்கள் இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருப்பது இந்திய அரசியலில் இன்னொரு விசித்திரம்! 

ஜனங்கள் கொஞ்சநாள் பேசுவார்கள், அப்புறம் மறந்து போய் விடுவார்கள், அனுதாபப்பட்டு மறுபடி ஆட்சிக் கட்டிலிலும் அமர வைப்பார்கள் என்பதில் தலைவர்களுக்கு  இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை, ஜனங்கள் தான் புரிந்து கொண்டு "அசைக்க" வேண்டும்!!

இப்போதைக்கு, திமுக தலைவரின் மனைவி குடும்பமும், துணைவியின் குடும்பமும் ஒற்றுமையை மெயின்டைன் செய்கிறார்கள்! மருமகன் குடும்பம்? அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்வார்கள்! ஆக, தொண்டனை எவரும் பார்த்துக் கொள்ளப்போவதில்லை! அவ்வளவு தான்!

வலி, வேதனை, அவமானத்தை விழுங்கிக்கொண்டு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில் தொடர்வது என்று திமுக உயர்மட்டக் குழு முடிவெடுத்திருப்பதாக டைம்ஸ் நவ் தொலைகாட்சி செய்தி சொல்கிறது!


கூடாநட்பு கேடுதரும் என்று பேசியதற்குப் பதிலடியாக, காங்கிரஸ் சந்தேஷ் என்ற காங்கிரஸ் கட்சியின் மாத இதழில், திமுகவின் ஊழலால் தான் தோற்றோம் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்! இப்படி ஒரு மாத இதழ் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வருவதோ, அதில் இப்படியெல்லாம் பதிலடிகள் இருப்பதோ இங்கே எவருக்காவது தெரியுமா

உள்நாட்டில் சொதப்புவதுபோலவே  வெளியுறவு விவகாரங்களிலும் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருப்பதும், உள்நாட்டுப் பாதுகாப்பு உட்பட எல்லாமே சீரழிந்து நிற்பதும் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் தருணங்கள் எல்லாவற்றிலும் பொதுவாகக் காணமுடிகிற ஒரு விஷயம். நேரு காலத்தில் இருந்து இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது எப்படி பலவீனமாக இருந்தது என்பதை, நேரு, சாஸ்திரி, தலைமைப்பண்பு என்ற தலைப்பில் இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே நிறையப் பேசியிருக்கிறோம். 

ராணா வழக்கில் சிகாகோ நீதிமன்றம், மும்பை தாக்குதல் வழக்கில் ராணா குற்றமற்றவர் என்று விடுதலை செய்திருக்கிறது, வேறு இரண்டு குற்றச் சாட்டுக்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருப்பதால், முப்பதாண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி இருக்கும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டிவிட்டரில் இது தொடர்பாக அனுப்பிய குறுஞ்செய்தி இன்றைக்கு இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது!

காங்கிரசுக்கு சொரணை என்பது சுட்டுப் போட்டாலும் வராது! தெரிந்ததுதானே என்கிறீர்களா?


பழ.நெடுமாறன், கொஞ்சம் உறைக்கிற மாதிரித்தான் இன்றைய தினமணி நாளிதழில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்! உறைக்க வேண்டிய நபர்களுக்கு உறைக்கிறதோ இல்லையோ, கருணாநிதியின் சுயநல அரசியலைப் புரிந்துகொள்ள உதவுகிற கேள்விகள் என்ற வகையில் இந்தப் பக்கங்களுக்கு வருகிற வாசகர்கள் அவசியம் படிக்கவேண்டியது  என்று தினமணி நாளிதழுக்கு நன்றியுடன் பகிர்கிறேன்.


கெட்டபின்பு ஞானி!

பழ. நெடுமாறன்

கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது தோல்வியில் பிறந்த ஞானோதயம்  ஆகும். கூடா நட்பு என திமுக தலைவர் கருணாநிதி கருதியதும் சுட்டிக் காட்டியதும் யாரை என்பது குறித்து அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.

காங்கிரஸ் கட்சியோடு திமுக கொண்டிருக்கும் உறவைக் கூடா நட்பாக அவர் கருதி இருப்பாரேயானால் அந்தத் தவறை உணருவதற்கு நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக அவருக்கு ஆகியிருக்கிறது.காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கட்சி திமுக ஆகும். அண்ணா, காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றிணைத்து 1967-ம் ஆண்டில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார்.

ஆனால், அண்ணா மறைந்த உடனேயே காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையையும் அவருடனேயே புதைத்தார் கருணாநிதி.

1969-ம் ஆண்டில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடை பெற்றபோது காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான வேட்பாளரான சஞ்சீவ ரெட்டியை எதிர்த்துப் பிரதமர் இந்திராவால் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.வி.கிரியை ஆதரித்து வெற்றிபெற வைத்ததில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு.

இத்தேர்தலில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவு தருமாறு பெரியார் விடுத்த வேண்டுகோளை கருணாநிதி புறக்கணித்தபோது இந்திராவின் நட்பு கூடா நட்பாகத் தெரியவில்லை.

அந்தத் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு மாறி இருக்குமேயானால் இந்தியாவின் அரசியலே மாறி இருக்கும். பின்னாளில் நேர்ந்த நெருக்கடி நிலைப் பிரகடனம்,"மிசா' கொடுமைகள் போன்றவை நடந்திராது.

ஆனாலும், கருணாநிதி தனது தவறைப் பிடிவாதமாகத் தொடர்ந்தார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிர சோடு கூட்டுச்சேர்ந்து வெற்றியும் பெற்றார். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தன.

1975-ம் ஆண்டு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு சர்வாதிகாரத்தின் சாயல் படர்ந்தது. முரசொலி மாறன், ஸ்டாலின் உள்பட ஏராளமான திமுகவினர் "மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளுக்கு ஆளாயினர். முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு, சாத்தூர் பால கிருட்டிணன் போன்றவர்கள் உயிரிழந்தனர். நாடெங்கும் பல கொடுமைகள் அரங்கேறின. 

இதெல்லாம் தனது கூடாநட்பினால் விளைந்த கொடுமைகள் என்பதை உணர்ந்து கருணாநிதி திருந்தினாரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

1980-ம் ஆண்டில், ""நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக'' என்ற பதாகையைத் துôக்கிப் பிடித்து மீண்டும் காங்கிர சோடு கூட்டுச் சேர்ந்தவர் கருணாநிதி. சிட்டிபாபு போன்றவர்களின் மரணத்துக்குக் காரணமான காங்கிர சோடு கூடாநட்புக் கொள்ளலாமா என்பது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

கடந்த முப்பதாண்டு காலத்துக்கு மேலாக காவிரிப் பிரச்னையால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக, கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவகௌடா தமிழர்களுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றவர்.காவிரி நடுவர் குழுவின் தலைவராக இருந்த சித்ததோஷ் முகர்ஜி மீது தவறான வழக்குத் தொடர்ந்து அவர் தானாக பதவி விலகும்படி செய்தவர் தேவகௌடா.

நேர்மையானவரான முகர்ஜி பதவி விலக நேர்ந்ததால் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் அதே தேவகௌடாவை இந்தியாவின் பிரதமராக்குவதில் முன் நின்றவர் கருணாநிதி.

தேவ கௌடாவுடன் தனது கூடாநட்பு தமிழக விவசாயிகளுக்குக் கேடாய் முடிந்ததைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை கருணாநிதி.

2003-ம் ஆண்டு காங்கிர சோடு இவர் கொண்ட கூடாநட்பு ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு அடிப்படையாக அமைந்தது.இலங்கை ராணுவத்தினரில் 63 சதவிகித அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டது, ஆயுதங்களும் அள்ளித் தரப்பட்டன. ஆனால், இவற்றைத் தடுத்து நிறுத்த கருணாநிதி சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.

2009-ம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்த இவர் முன்வரவில்லை.திமுக-வின் ஆதரவோடு மட்டுமே மன்மோகன் அரசு பதவியில் நீடித்த காலம் அது, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படாவிடில் ஆதரவைத் திரும்பப் பெறுவது என இவர் உறுதியான முடிவு எடுத்திருந்தால் ஒரு லட்சம் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும்.

ஆனால், அதைவிட கூடா நட்பே மேலானது என இவர் நினைத்தது தமிழ் இனத்துக்கே கேடாய் முடிந்தது.

2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கிற்று. தங்கள் ஆட்சியைத் தொடர திமுகவின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவைப்படும் நிலை இல்லை.
எனவேதான் மகனுக்கும், மகளுக்கும் பேரனுக்கும் பதவி கேட்டு தில்லியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடாநட்பினால் விளைந்த கேடு இது என்பதை அவர் அப்போதும் உணரவில்லை.

தமிழர்களின் ரத்தத்தால் சிவந்து கறை படிந்த ராசபட்சவின் கரங்களைக் குலுக்குவதற்குத் தனது மகள் உள்படத் தூதுக்குழுவை அனுப்புவதற்கு அவர் கொஞ்சமும் வெட்கப்பட்டதில்லை. இதன் விளைவாக, உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்ததற்கு ராசபட்சவுடன் தான் கொண்ட கூடா நட்பு தானே காரணம் என அவர் இன்னமும் உணரவில்லை.

காங்கிரசோடு தனது கூடா நட்பினால் ஈழத்தமிழர்கள் அழிக்கப் பட்டபோது கொஞ்சமும் கவலைப்படாதவர், அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தனது மகள் ஊழல் புகாரில் சிறையில் அடைக்கப் பட்டபோது கூடா நட்பின் விளைவு எனப் புலம்புவதில் பயன் என்ன?

நாற்பதாண்டுக் காலத்துக்கு மேலாக காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி உறவாடிப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் கருத்தாக இருந்தாரே தவிர, தமிழர்களுக்கு அதனால் விளைந்த கேடுகளைக் குறித்துக் கொஞ்மும் கவலைப்படவில்லை.

தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளையோ, மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்புதல், சேதுக்கால்வாய் போன்றவற்றையோ, ஈழத்தமிர் பிரச்னையையோ தீர்ப்பதற்கு கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் எதுவும் செய்ய அவரால் இயலவில்லை.

இந்த நாற்பதாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இவருக்கு இருந்த நெருக்கமான நட்பும் மத்திய ஆட்சியில் இருந்த செல்வாக்கும் மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க கொஞ்சமும் உதவவில்லை. 

மாறாக, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் தனது குடும்பத்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது.


கூடா நட்பின் விளைந்த பயன் இது ஒன்றுதான்.

கவியரசர் கண்ணதாசன் எழுதியதைப்போல கெட்டபின் ஞானி ஆவது அவருக்கும் பயன் தராது குடும்பத்துக்கும் பயன் தராது, நாட்டுக்கும் பயன் தராது.




2 comments:

  1. http://padikka.blogspot.com/ இந்த வலைப்பதிவை வைத்திருக்கும் ராஜு என்ற சிங்கைப்பதிவரிடமிருந்து வந்திருக்கும் இரண்டு அநாகரீகமான கமெண்டுகள் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. முதல் கமெண்டில், நீ ஒளிந்துகொண்டு எங்களை அனானி என்கிறாயா என்று கேட்டிருக்கிறார்.

    நான் ஒளிந்து கொள்ளவுமில்லை, ஓடிப் போய் விடவுமில்லை! தைரியமிருந்தால் உண்மையான அடையாளத்தோடு வரட்டும்!எதிர்கொள்கிறேன்!

    ReplyDelete
  2. //இப்போதைக்கு, திமுக தலைவரின் மனைவி குடும்பமும், துணைவியின் குடும்பமும் ஒற்றுமையை மெயின்டைன் செய்கிறார்கள்! மருமகன் குடும்பம்? அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்வார்கள்! ஆக, தொண்டனை எவரும் பார்த்துக் கொள்ளப்போவதில்லை! அவ்வளவு தான்!//
    உண்மை உண்மை.. அருமையான பதிவு,

    நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
    சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!