தலைப்புச் செய்திகள்! கனிமொழி, கருணாநிதி, தயாநிதி அப்புறம் சுப்பிரமணியன் சுவாமி!



''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.


டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''


''அப்புறம்..?''


சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. 

'200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு 
கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். 

சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே  திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''


''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''

''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்திய போதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. 

சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை. 

 நன்றி! மிஸ்டர் கழுகு! ஜூனியர் விகடன் 29-06-2011 இதழ்

 ******

னதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். (அப்பாடா! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியவர்கள் பெருமூச்சு​விடலாம்!) 
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். அதற்காக, கடந்த புதன்கிழமை கிளம்பியவரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தோம்.

'2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப் போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்​களேன்?''

''இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் பினாமிகள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இந்த ஊழலில் சிக்கி இருக்கிறார்கள். 

இந்த வி.ஐ.பி-க்கள் எல்லோரையும் சினிமாவில் வருவதுபோல், ஒரே ஃப்ரேமில் கைது செய்துவிட முடியாது. இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே மூன்றாவது குற்றப் பத்திரிகையில் இடம்பெறுவார்கள்

எனக்குக் கிடைத்த தகவல்படி, அடுத்தடுத்து 11 குற்றப் பத்திரிகைகள் வரை தாக்கல் ஆகப்போகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் விரைவில் சிக்குவார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். அடுத்து சிக்கப்போகிறவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.  

இவருக்குப் பிறகு, மிகப் பெரிய பெயர் வரும். அது யார் என்று இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன்!''


''அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா?''


''நிச்சயமாகத் தமிழகத்தில் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க-வில் முக்கியமானவர்கள் எல்லாம் சிக்கிவிட்டார்கள். கருணாநிதிக்கு ரொம்ப வயதாகி​விட்டது. அவரை எந்த முறையில் கொண்டு​வரலாம் என்று ஆலோசித்து வருகிறோம். தயாளு அம்மாள், சாட்சிகள் வரிசையில் வருகிறார். ராஜாத்தி அம்மாளின் பெயரும் இருக்கிறது. இவை எல்லாம் பெரிய சமாசாரம் இல்லை. அதைவிட உயர் பதவியில் இருப்பவர்களை வளைத்துப் பிடிப்பது தான் விஷயம். ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் பலன் பெற்றவர்கள் என்கிற பட்டியலும் தயார் ஆகும்போது, அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் சிக்கலாம். கடைசியில், சோனியா காந்தி பெயரும் வரும். 

இவர்களை எப்போது வழக்கில் கொண்டுவருவேன் என்பதை நான்தான் முடிவு செய்வேன்(!). ஏனென்றால், இதை சி.பி.ஐ. செய்யாது. ஆட்சியில் இருப்பவர்களை அது நெருங்காது. காலம் வரும்போது, நான் நீதிமன்றம் மூலம் இதே சி.பி.ஐ-யை வைத்து சோனியாவை விசாரிக்கச் சொல்வேன். 

சோனியாவுக்கு இரண்டு தங்கைகள். அனுஷ்கா, நாடியா. இருவரும் அவரவர் கணவரைவிட்டுப் பிரிந்தவர்கள். இருவரும் அடிக்கடி துபாய்க்குப் போய் வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் டீலிங்கில் வந்த பணத்தை இவர்கள் சீனாவில் 'மக்காவ்' என்கிற இடத்தில் உள்ள வங்கியில் பதுக்கிவைத்து இருக்கிறார்கள். எவ்வளவு தெரியுமா? 35 ஆயிரம் கோடி. 

சுவிஸ் வங்கியில்கூட பணம் போட்டு இருப்பவர் ஒரு கிரிமினல் என்று தெரிந்தால், அவரது முதலீடு விவரங்களை வெளியே சொல்லிவிடுவார்கள். மக்காவ்வில் இந்த வசதி இல்லை. என்ன குற்றம் செய்து இருந்தாலும், அங்கு இருந்து ஒரு 'பிட்' தகவலைக்கூட பெற முடியாத அளவுக்கு சீக்ரெட் பாங்க் அது. அதன் விவரங்கள் விரைவில் வெளிவரப்போகிறது.


மத்தியில் நிதித் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயித்த கமிட்டியில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம், ஆ.ராசாவுடன் இணைந்துதான் முடிவு எடுத்து இருக்கிறார். இதை ஒரு ஃபைலில் ஆ.ராசாவே குறிப்பிட்டு இருக்கிறார். (அதன் நகல்களை நம்மிடம் காட்டுகிறார்) பல பேட்டிகளில் ஆ.ராசாவும், சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதற்கு, பத்திரிகை 'கட்டிங்'குகளே சாட்சிகள். இப்படி இருக்கும்போது, ஆ.ராசா மட்டும் திகார் ஜெயிலில் இருக்க... இன்னொரு காரணகர்த்​தாவான அவர் மட்டும் மத்திய மந்திரியாக நீடிப்பது எந்த வகையில் நியாயம்? 

நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது வழக்குப் போட பிரதமரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அந்தத் துறையில் இருந்து சிதம்பரம் மாற்றப் பட்டுவிட்டார். ஆகவே, எனக்கு இப்போது பிரதமரின் அனுமதி தேவைப் படாது. இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு ஆகஸ்ட் 24-ல் வருகிறது. 

இதோ... நான் உங்களிடம் காட்டும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அவற்றைப் பரிசீலித்து நல்ல முடிவு சொல்வார்கள் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடக்கும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி, கோ-அக்யூஸ்டாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்கிற விவாதம் வரப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள்!'' என்று சிரித்தார்.


இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் புயல் அடங்​காதோ!

- ஆர்.பி./நன்றி! ஜூனியர் விகடன் 29-06-2011 இதழ் 

ஜூவி,குமுதம் உள்ளிட்ட வாரப்பத்திரிகைகளைப் படிப்பதை நிறுத்தியே பல வருடங்களாகிவிட்டது! முன்புபோல சிறுகதைகள், தொடர்கதைகள் அதிகம் வெளிவருவதில்லை, வாசகர்களுடைய ரசனை மேலோட்டமாகக் கொறித்து விட்டுப்  போய்விடுகிற செய்திகளின் மீதுதான் அதிகமாக இருக்கிறது என்பதாலோ என்னவோ!

இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்பது தமிழில் கொஞ்சம் விகாரப்பட்டுத்தான் இருக்கிறது  என்பதென்னவோ உண்மை!

******

தயாநிதி மாறன் தானாக முன்வந்து ராஜினாமா செய்யாவிட்டால், ஜூலை முதல்வாரத்தில் மத்திய அமைச்சரவையில் செய்யப்படவிருக்கும் மாற்றத்தில் கழற்றி விடப்படுவார் என்று காங்கிரஸ்கட்சி தொடர்ந்து செய்திகளைக் கசிய விட்டுக் கொண்டே இருக்கிறது. தயாநிதி கழன்று கொள்கிற மாதிரிக் காணோம்! 

பதவி என்பது நாங்கள் தோளில் போட்டிருக்கும் மேல்துண்டைப் போல என்று வசனம் பேசுகிற கழக அமைச்சர் எவரும், அவ்வளவு சுலபமாக தோளில் போட்டிருக்கும் மேல்துண்டை உதறி விட மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்து, சிரிப்பாகிப் போன விஷயம், இதற்குப் போய் இவ்வளவு முக்கியத்துவமா என்கிறீர்களா?


அதுவும் சரிதான்!



 

3 comments:

  1. சுப்பிரமணியம் சுவாமியின் பேச்சையோ, டி.வி. பேட்டிகளையோ நீங்கள் ஓரிரு மாதங்களுக்கு நீங்கள் கேட்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் வாழும் இந்தியர்கள் சனி/ஞாயிறுகளில் அவரைச்சந்த்தித்து அவ்ரது மழலைத்தமிழைக் கேட்கும் வாய்ப்பு ஆண்டுதோறும் கிடைக்கிறது.
    இம்முறை என்ன சொல்லப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
    இங்கிருந்து செல்லும் எனக்கும் இந்த வாய்ப்புக் கிட்டும் என்று நம்புகிறேன். கேட்டுவிட்டுத் தொடர்பு கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  2. மிகவும் நல்லது! ஒலிப்பதிவு, யூட்யூப் தளத்தில் பேச்சு வலையேற்றம் இந்த முறைகளில் நீங்கள் இதை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளலாமே! மதுரைக்கு வந்திருக்கிறார் என்பது அவர் வந்துபோன பிறகு செய்தித்தாட்களில் ஒரு மூலையில் பார்த்தபிறகுதான் தெரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக, சுப்பிரமணியன் சுவாமியை ஒரு கோமாளி, எதிலும் சேர்த்துக் கொள்ள முடியாதவர், நம்பகத்தன்மை இல்லாதவர், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வேண்டுமானால் பயன்படுவாரே தவிர, உருப்படியான சிந்தனை இல்லாதவர் என்ற மாதிரியான அபிப்பிராயங்கள் இங்கே தமிழ்நாட்டில் நிறைய உலவிக் கொண்டிருந்தன.

    அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத திராவிட இயக்கங்கள் ஒருபடி மேலே போய் முட்டை வீசித் தாக்குவது மட்டுமே சுப்ரமணிய சுவாமிக்கு சொல்லக்கூடிய ஒரே பதில் என்று உயர்நீதிமன்றத்திலும் முட்டைத்தாண்டவம் ஆடிக் காட்டின! மனிதர் எதற்கும் அசராமல், தான் நினைத்ததை நடத்திக் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்!

    மனம் திறந்து பேசுவது என்ன என்பதைக் கேட்பதற்கு ஆவலாய் உள்ளேன்!

    அதுபோக, கவிஞர் திருலோக சீதாராம் பற்றிய உங்களுக்குத் தெரிந்த தகவல்கள், மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ளலாமா? கொஞ்சம் பின்னூட்டமாகவே உங்கள் பதிலை அல்லது மின்னஞ்சல் வழியாகச் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  3. கருணாநிதியும், கே.டி. பிரதர்சும் சேர்ந்து இன்னும் எத்தனை பேரை தற்கொலை பண்ண வைக்கப் போறானுங்களோ தெரியவில்லை. இந்த மாதிரி மொள்ளமாரி நாய்களுக்கு வால் பிடிக்கப் போனால் இந்த கதி தான் நேரும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!