501! கனிமொழி, கருணாநிதி,கேடி பிரதர்ஸ் அப்புறம் ஒரு திருக்குறள்.....!2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் பெறப்பட்ட ரூ214 கோடி பணத்தைத் தான் கலைஞர் டிவி வாங்கியது என்றால், அந்தப் பணம் தற்போது எங்கே?அதை சிபிஐ கைப்பற்றியுள்ளதா என்று உச்சநீதிமன்றம் சிபிஐயிடம் கேட்டுள்ளது. சினியுக் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது கடன் தொகை அல்ல, மாறாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் பரிமாறப்பட்ட லஞ்சப் பணம் என்பது சிபிஐயின் வாதம். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் கலைஞர் டிவியின் பங்கு தாரர்களான கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இருவரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது சிபிஐக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் விளக்கங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பித்தனர். கனிமொழி, ராசாவுடன் இணைந்து சதி செய்து சினியுக் நிறுவனம் மூலமாக பெற்றதாக கூறப்படும் லஞ்சப் பணம் ரூ. 214 கோடி எங்கே?. அந்தப் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

கனிமொழி மீதான வழக்கு விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். கனிமொழியிடம் விசாரணை முடிந்து விட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.தொலைத் தொடர்புத்துறையில் நடந்ததாக கூறப் படும் இந்த மிகப் பெரிய ஊழலால், அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்ட அளவை சரியாக குறிப்பிட வேண்டும்.இப்படி மூன்று கேள்விகளுக்கு சிபிஐ தெளிவான பதிலை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அப்போது கனிமொழியின் வக்கீல் குறுக்கிட்டு ஏதோ கூறினார். இதையடுத்து அவருக்குப் பதிலளித்த நீதிபதிகள், மனித உரிமை மீறல்களிலேயே மிகவும் மோசமானது ஊழல்தான் என்று சொன்னவுடன்  கனிமொழியின் வழக்கறிஞர் அமைதியானார்.பின்னர் நீதிபதிகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின், விசாரணை நிலவர அறிக்கையை ஜூன் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இருபதாம் தேதியாவது ஜாமீன் கிடைத்துவிடுமா என்று கேட்கிறீர்களா? வழக்கு விவரங்களை, வடஇந்திய ஊடகங்கள் தெளிவாகவும் விரிவாகவும் செய்தி வெளியிடுவதைப்போல, இங்கே தமிழ் ஊடகங்கள் வெளியிடுவது இல்லை. தமிழ் ஊடகங்களை மட்டுமே பார்த்தால், என்னவோ உச்சநீதி மன்றத்தில் இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டனேயே முதல் வேலையாக ஜாமீன் வழங்குவதுதான் உச்சநீதிமன்றம் செய்யும் வேலை என்று பரபரப்புத்  தலைப்பாக இருக்கும். அதே மாதிரி, மாறனுடைய பதவி பறிப்பு இன்றைக்கே இப்போதே நடந்துவிடும் என்று தான் பரபரப்புச் செய்திகளாகப் பார்த்திருப்பீர்கள்! சோனியாவும் மன்மோகன் சிங்கும் இந்த இரண்டு நாட்களுக்குள், இதுவிஷயமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று செய்திகள் வந்தன.சிபிஐ மூன்றாவது குற்றப்பத்திரிகையை இந்த மாத இறுதி வாக்கில் தாக்கல் செய்ய இருக்கிறது. அந்தத் தருணத்தில் வாணவேடிக்கைகள் இருக்கலாம்!.

திமுகவுக்கு அடிவயிற்றைக் கலக்குகிறதாகவே ஒவ்வொரு அரசியல் நிகழ்வும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜெயலலிதா இன்று மாலை டில்லிக்கு வந்திருக்கிறார். பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத், வலது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, டில்லி முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான  ஷீலா தீட்சித் என்று வரிசையாகப் பல கட்சிப் பிரமுகர்களும் "மரியாதை நிமித்தமாக" ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறார்கள். 

நாளை டம்மிப் பீஸ் மன்மோகன் சிங்கை ஜெயலலிதா சந்திக்க ருப்பதைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை. தற்சமயம் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகச் சொல்லப்படும் சோனியா-ஜெயலலிதா சந்திப்பு நடக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வியாக ஊடகங்கள் தற்சமயம் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சோனியா நேரடியாக சந்திக்காவிட்டாலும் தன்னுடைய சார்பில் யாரையேனும் அனுப்பப் போகிறாரா, அல்லது தமிழக முதலமைச்சர் திமுகவுக்கு பீதியை நிறையவே கிளப்பிவிட்ட திருப்தியில் தமிழகம் திரும்பப்போகிறாரா என்பதை நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

சோனியா எத்தனை முறை வெளிநாடுகளுக்குப் போனார், எதற்காகப் போனார், என்ன சாதித்தார், எவ்வளவு செலவாயிற்று என்ற விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிசாரை சேர்ந்த ரமேஷ் வர்மா பிரதமர் அலுவலகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். பதில் சொல்லாமல், அங்கே இங்கே என்று சென்ற வருடம் பெப்ருவரியில் இருந்து அலைக்கழித்து தகவலைப் பிரதமர் அலுவலகம் தரவில்லை.

தலைமைத் தகவல் ஆணையர், உடனடியாக இந்தத்  தகவலை, மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். தேசீய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற முறையில், சோனியா கடந்த பத்தாண்டுகளில் மேற்கொண்ட வெளி நாட்டுப் பயணங்களால் அரசுக்கு எந்த செலவுமில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டது, இப்போது சந்திக்கு வந்திருக்கிறது!

அது ஒருபக்கம் இருந்தாலும்,என்ன நடக்குமோ எங்கே உதைக்குமோ என்ற கவலை திமுகவுக்கு நிறையவே இருக்கிறது., ஜெயலலிதாவின் டில்லி விஜயத்தில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை, திமுக காங்கிரஸ் உறவு தொடர்கிறது என்று மனீஷ் திவாரியே சொல்லி விட்டார் என்று கலைஞர் தொலைகாட்சி தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளப் படாதபாடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது!

அய்யன் வள்ளுவன் சொன்ன குரல் ஒன்றை குறளோவியம் எழுதியவருக்கு, ஒரு செய்திக்கட்டுரையில் இரா. சோமசுந்தரம் என்பவர் நினைவு படுத்தியிருக்கிறார். தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்திக் கட்டுரை, இங்கே, தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்!

  
உள்வேர்ப்பர் ஒள்ளியவர்…..!

இரா.சோமசுந்தரம்

தினமணி நாளிதழில் எழுதிய செய்திக் கட்டுரை 
First Published : 13 Jun 2011 02:44:37 AM IST


மார்ச் 5-ம் தேதி திமுகவின் உயர்நி லைக் குழுக் கூட்டத்தில், "அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்கிறோம், வெளியிலிருந்து ஆதரவு தருவோம்' என்று தீர்மானிக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கள் ராஜிநாமா கடிதங்களை வீட்டிலிருந்தபடி தொலைநகலில் அனுப்பி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்காமல், கடிதத்துடன் பிரதமரைச் சந்திக்கச் சென்றனர்.

அன்றைய தினம் தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாகக் கூறப் பட்டது. ஆனாலும், கனிமொழி மீதான வழக்கை நீர்த்துப்போகச் செய்ய மத்திய அரசு உதவவில்லை என்ற கோபம் என்று பத்திரிகைகள் எழுதின.

இப்போது முன்பைக் காட்டிலும் பிரச்னை படுமோசமாக ஆகிவிட்டது. கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் முழு விவரமும் தமிழ் நாளிதழ்களில் வெளியாகவில்லை. ஆனால், ஆங்கில இதழ்களில், குறிப்பாக வடஇந்திய இதழ்களில் வரிவரியாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் பிணை மறுக்கப்படுவதன் காரணம் குறித்து நீதிமன்றம் பட்டியலிட்டிருப்பதைப் பார்த்தால், உச்ச நீதி மன்றத்திலும் கூட பிணையில் செல்ல அனுமதி கிடைக்குமா என்று நினைத்தாலே கண்ணைக் கட்டுகிறது.

இன்றைய சூழலில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வரும் அனைத்துக் காரணிகளும் கைவசம் இருந்தாலும்கூட, திமுக தலைமை அதைச் செய்யவில்லை. கூட்டணி குறித்து பொதுக்குழு விவாதிக்கும் என்கிறது.

திமுக தலைமையின் நிதானத்துக்குக் காரணம் இருக்கிறது. அது இரு கோடுகள் தத்துவம்தான். ஒரு கோட்டைச் சிறியதாக்க வேண்டுமானால் அதன் பக்கத்தில் இன்னொரு பெரிய கோடு போட வேண்டும்.

அதாவது மாறன் விவகாரம் மிகப் பெரிதாக வெடிக்கும்போது, கனி மொழி விவகாரம் ஒன்றுமில்லாத விவகாரமாக மாறிவிடும்! 

அப்படியாக மாறும் வரை அல்லது வடஇந்திய ஊடகங்கள் அப்படியாக மாற்றும் வரை காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது என்பதுதான் திமுக தலைமையின் எண்ணமாக இருக்க முடியும்!?

வரும் ஜூன் 30-ம் தேதி 2ஜி அலைக்கற்றை ஊழலில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. அப்போது தயாநிதி மாறனின் பெயர் நிச்சயமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்செல் நிறுவன முன்னாள் இயக்குநர் சிவசங்கரன் அதற்கான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார்.

ஏற்கெனவே, தயாநிதி மாறன் மீது ஏகக் கோபத்தில் இருந்த வட இந்திய ஊடகங்கள் இப்போது கூட்டு சேர்ந்து கொண்டு, இந்தத் தீ அணைந்து போகாமல் ஊதிக்கொண்டிருக்கின்றன. ஆகவே, பிரதமர் நினைத்தாலும் சரி, சோனியா காந்தி முயற்சி செய்தாலும் சரி, இந்த விவகாரம் தலைக்குமேல் வெள்ளம்தான்!

ஆகவே, ஜூன் 30-ம் தேதி மாறன் விவகாரத்தில் சிபிஐ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைக் காண்பதற்கான கால அவகாசம் கருதியே இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நம்ப இடமிருக்கிறது.

மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதை திமுக தலைமை விரும்புமா என்ற கேள்விக்கு அவசியமே இல்லை. கனிமொழியைக் காப்பாற்றினால், கட்சியைக் காப்பாற்றியதுபோல என்று கூறிய அதே திமுக தலைமை, தற்போது தன் கட்சியின் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக திமுக எதிர்கொள்ளும் என்று சொல்லாமல், "இல்லை. அவரது வழக்கை அவரே பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார் என்கிற பதிலின் மூலம், கழன்று கொண்டுவிட்டது. அதாவது, சுருக்கமாகச் சொன்னால், மாறனைக் காப்பாற்ற திமுக முயற்சி செய்யாது என்பதுதான் அதன் பொருள்!

இந்த அளவுக்கு என்ன கோபம்? மாறன் குடும்பத்துடன் உறவில் விரிசல் ஏற்பட்டபோது, கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது. மாறன் வீட்டில் ரகசிய தொலைபேசி நிலையம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அன்றைய அமைச்சர் ராசாதான் உத்தரவிட்டார். சிபிஐ அறிக்கையும் தயாரானது.

இந்த நேரத்தில் மீண்டும் இரு குடும்பங்களும் இணைந்தன. மீண்டும் தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவியும் கட்சியில் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. அன்புகாட்டிய பிறகும் அவர்கள் உதவி செய்யாமல் ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்தார்கள் என்கிற கோபம் திமுக தலைமைக்கு இருக்குமெனில் அது நியாயமானதும்கூட!

இரண்டு குழந்தைகள் அனுபவம் இல்லாமல் ஏட்டிக்குப் போட்டியாகச் சமையல் செய்திருந்தால், அனுபவமுள்ள, சமையல்கலையில் மெச்சும் ஆற்றல் கொண்ட பெரியவர்கள் என்ன செய்வார்கள்? "இதில் உப்பு இல்லை,கொஞ்சம் உப்பைப் போடு. இதில் நிறைய உப்பைப் போட்டு விட்டாய். யார் வேண்டுமானாலும் உடனே வாய்விட்டுச் சொல்லி விடுவார்கள். இப்படியா சமைப்பது? இதில் காரத்தைக் கூட்டி, கொஞ்சம் காய்கறிகளை வெட்டிப்போட்டு கொதிக்க வை. உப்பு மறைந்துவிடும்.... " இப்படியாகச் சமையலைச் சரி செய்து குழந்தைகளுக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டாமா?'

பழைய கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு, சமைக்கத் தெரியாமல் சமைத்திருக்கிறார்கள் என்பதால் அசிங்கப்படட்டும் என்று வேடிக்கை பார்த்தால், அந்தப் பெரியவர்கள் மீது குழந்தையின் பெற்றோருக்கு கோபம் வருமா, வராதா?

ஆமாம்பா. என் குழந்தைகள் ஏதோ தத்துபித்து என்று சமைத்தன. அது ஒரு பெரிய விஷயமில்லை. உன் சமையல் திறமையை ஊரே பார்க்கட்டும் என்பதுதான் அந்தக் கோபம்!
.
 அய்யன் வள்ளுவர் சொல்கிறார்.

 பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
 உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

என்று  அறிவுடையவர் பகைவர் தீங்கு செய்த அப்போதே தம் சினத்தை வெளிப்படுத்தார். வெல்வதற்குத் தகுந்த காலம் பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வர்.

இப்போது திமுகவில் நடப்பது அதுதான். "திமுக ஒரு குடும்பம்' என்றொரு காலம் இருந்தது. அந்தக் குடும்பம் திராவிட முன்னேற்றக் கழகக் குடும்பம்.

இன்றும் திமுக ஒரு குடும்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் குடும்பம்!.

அந்தத் திமுகவில் பிரச்னை வந்தால் அது கட்சிப் பிரச்னை. இந்தத் திமுகவில் வந்திருப்பது குடும்பப் பிரச்னை. குடும்பப் பிரச்னையைக் கட்சிப் பிரச்னையாக்கக் கருணாநிதி முயற்சிக்கிறார். விளைவு?

குடும்பமே பல "கட்சிகளாகப் பிளந்து" பிரச்னையாகி விட்டிருக்கிறது. பாவம் திமுக!!

இது என்ன ஐநூற்று ஒன்று?

அந்தக்காலத்தில் பிரபலமாக விளம்பரப்படுத்தப்பட்டதே அந்த பார் சோப்பா? இல்லை! இல்லை!
இந்தப்பக்கங்களில், இது 501 வது இடுகை.No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!