வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! வரலாறும் படிப்பினையும்!



வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! அதென்ன, வெள்ளிக்கிழமைதான் கேள்வி வருமா, அப்படியானால் மற்ற கிழமைகளில் என்ன வரும் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், இங்கே எழுதிக் கொண்டிருந்த, இன்னமும் இந்தக் கதைகளைத் தேடியே இந்தப்பக்கங்களுக்கு புதிய நண்பர்களை வர வைத்துக் கொண்டிருக்கும் பீர்பால் கதைகளில் கடைசியாக எழுதிய கதையைப் பார்த்து விட்டு, அப்புறம் கேள்விக்குப் போகலாம்!




பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதரவு இல்லா விட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள்.

அக்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர்பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

எல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை, புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

அரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார்.

"
எனக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார்.

சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

"
இன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை.

சபையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்னபோதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!

அக்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

"
பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

"
அப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!

"
எங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர் தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

"
நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

"
முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

"
ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

தங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை!

கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார்   என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

தன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா!

வேறென்ன செய்ய முடியும்!
 
ooOoo 

இந்தப்பக்கங்களில் அரசியல் உள்ளிட்டு எத்தனையோ விஷயங்களைக் குறித்து எழுதிக் கொண்டிருந்ததில், சென்ற ஆண்டு, வேண்டுமென்றே ஒரு பெருத்த இடைவெளி. சுமார் ஏழுமாதங்கள், பதிவுகளை எழுவதில் ஏகப்பட்ட இடைவெளி.வெறுமனே பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பதனால் என்ன பயன்? நேரடியாகக் களம் இறங்கிச் செயல் படுகிற மாதிரி வருமா? என்னுள் உறுத்திக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது சரி என்று முடிவெடுத்தேன். தொழிற்சங்கம், அரசியல் என்று முப்பது ண்டுகளுக்கும்  மேலாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தவன் வேறு மாதிரி முடிவெடுக்க முடியாதே!

புதுத்திண்ணை இணைய இதழில் திரு மலர்மன்னன்
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதிய ஒரு வேண்டுகோள் களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது என்ற முடிவுக்குத் தோதாக வந்து சேர்ந்து கொண்டது. புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்ற செய்தியை கூகிள் ப்ளஸ் முதலான தளங்களில்  பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.சென்ற அக்டோபர் கடைசி வரை, தொடர்ச்சியாக பொதுவெளியில் ஒரு இயக்கமாகவே நடத்திவந்ததுகடந்த இரு மாதங்களாகக் குறைந்தும் போனது கிடைத்த அனுபவங்கள் அப்படி! அனுபவங்களைப் பரிசீலனை செய்தத்தில் கிடைத்த தகவல்கள், அப்படியே பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள முடியாதவையும் கூட!

ஞானாலயா ஆய்வு நூலகம்  மாதிரியான புத்தக சேகரங்கள் பாது காக்கப்பட வேண்டியவை.கௌரவிக்கப்பட வேண்டியவை.இந்த விஷயத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றுவதை, இந்தச் சுட்டிகளில் இருக்கும் செய்திகளைப் பார்த்து விட்டு நேரடியாக புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கே அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறேன்.



ooOoo


திரு ராமச்சந்திர குஹா எழுதிய Patriots and Partisans புத்தகம்,  ப்ளிப்கார்டில் ஆர்டர் செய்திருந்தது இன்றைக்குக் கைக்குக் கிடைத்தது. நேற்றைக்கு அனுப்பிவிட்டதாக மின்னஞ்சல் இன்றைக்கு டெலிவரி. இந்த நிறுவனத்துடைய சேவை என்னை வியக்க வைக்கிறது. இந்த ஆண்டு வாசிக்க நினைக்கும் புத்தகமாக இதை மூன்று நாட்களுக்கு முன்தான் கூகிள் ப்ளஸ்ஸில் பரிந்துரை செய்திருந்தேன்.

இப்போது வெள்ளிக்கிழமைக் கேள்வியாகக் கேட்க நினைப்பது!

தி டெலிகிராப் நாளிதழில் சென்ற வருடம் நவம்பரில் வெளியான திரு ராமச்சந்திர குஹாவின் கட்டுரையில் 2009 பொதுத் தேர்தல்களின் போது முன் வைத்த சில கருத்துக்களை மறுபடியும் முன்வைப்பது போல, ஒரு நான்கு விஷயங்களை, இந்திய அரசியல் மேம்பட உதவும் என்று சொல்கிறார். இந்தக் கட்டுரையை வாசித்து விட்டு எழுதி வைத்த குறிப்புக்கள் என்னுடைய யோசனையில் நாற்பது நாட்களுக்கும் மேலாக, இன்னமும் ஒரு முழுமையான வடிவத்தை எட்டவில்லை

சுருக்கமாக, இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெற, மேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குஹா சொல்வது  இந்தப்பதிவில் சொல்லியிருந்ததைப் படித்தீர்களா? நடைமுறை சாத்தியம்தானா? உங்கள் கருத்தென்ன?

2 comments:

  1. 1. முதல் விஷயம் நடக்கும் என்று தோன்றவில்லை. மக்களுக்கு கவர்ச்சி தேவை.
    2. இரண்டாவது விஷயமும் கனவுதான்.
    3. மூன்றாவது விஷயம் நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஒற்றுமை வருவது மிகவும் கடினம்.
    4. அர்விந்த் கெஜ்ரிவல் போன்றவர்களை ஆதரிக்கலாம். மத்திமர் வகுப்பிற்கு உயர்ந்த வகுப்பு ஆகுவது ஒன்றே லட்சியம். அதனால் இந்த மாதிரி விஷயங்களில் இறங்க மாட்டார்கள்.

    எல்லாவற்றிற்கும் மக்கள் மனது மாற வேண்டும். கவர்ச்சியை விடுத்து உண்மை அறியும் மனது வேண்டும். காமராஜர் கவர்ச்சி ஆனவர் அல்ல, கவர்ச்சி முன் தோற்றார். அண்ணாவும், கருணாவும் வார்த்தை ஜாலத்தால் கவர்ச்சி பெற்றார்கள், ஜெயித்தார்கள். எம் ஜி ஆர் அதை விட கவர்ச்சி ஆக தென்பட்டார், ஜெயித்தார். நாட்டில் எல்லா வளமும் மக்களுக்கு போய் சேர காமராஜர் பாடுபட்டார். அதனால் மக்கள் மொழி போன்ற extra curricular விஷயத்தில் ஆர்வம் காட்ட முடிந்தது. இன்று இருப்பது போல் பிரச்சனைகள் இருந்து இருந்தால் காமராஜரும் அரசியல் செய்து இருக்கலாம். பாவம் அவர் அப்பாவி. மக்களுக்கு தேவை என்றாவது கிடைக்கும் தேன் மட்டுமே. தினமும் கிடைக்கும் கூழை விட என்றாவது கிடைக்கும் தேன் மீது மக்களுக்கு அக்கறை அதிகம்.

    ReplyDelete
  2. என்ன கருத்தைச் சொல்வது என்று பலரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பளீர் பளீரென பதில்சொல்லியிருக்கிறீர்கள்.அதற்காகவே என்னுடைய வாழ்த்துகள்.பௌதீக, ரசாயனப் பரிசோதனைகளில் கிடைக்கிற மாதிரி சமுதாய இயக்கத்தில் மிகவும் துல்லியமான விடை கிடைப்பது இல்லை. ஜனங்களுடைய மனோநிலையைக் கணிப்பதில், நமக்கு முக்கியமில்லாத ஒன்றாகத் தோன்றுமொரு காரணி நிகழ்வுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக் கூடியது.

    திரு ராமச்சந்திர குஹா சொன்ன நாலு அம்சங்களில் முதலிரண்டும் நடக்கும் என்று தோன்றவில்லை, வெறும் கனவுதான் என்று சொல்லியிருப்பது ஓரளவுக்கு சரி.எதனால் என்று யோசித்துப் பாருங்களேன்! இங்கே ஜனங்களுடைய எதிர்பார்ப்புக்களுக்கும், கட்சிகள் நடந்துகொள்வதற்கும் ஏகப்பட்ட இடைவெளி இருக்கிறது. ஒரே வார்த்தையில் சொல்வதானால், இங்கே அரசியல் கட்சிகள் ஜனங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மதித்து அதற்கேற்றபடி அரசியல் முடிவுகளை எடுப்பதே இல்லை.

    மூன்றாவது, இடதுசாரி இயக்கங்களுடைய ஒற்றுமை. ஒட்டு வங்கி அரசியலில் தங்களைத் தொலைத்துவிட்டு நிற்கிற வரைக்கும் இது சாத்தியமில்லைதான்.தவிர, இந்தியச் சூழ்நிலையை இடதுசாரிகள் இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ளவே இல்லை.

    நான்காவதாக எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அதிகரித்து வரும் மத்தியதர வர்க்கம் தனக்கென ஒருஅரசியல் கட்சியைத் தொடங்கவேண்டும். அண்ணா .ஹசாரேவின் ஊழலுக்கெதிரான இந்தியா இயக்கத்தை இந்த அளவுக்கு முன்னெடுத்துச் சென்றது மத்தியதர வர்க்கம் தான்.இன்னும் ஆழமாக, அடித்தட்டு மக்களிடம் ஒரு அதிர்வை உண்டாக்குவதற்கு முன்னாலேயே,தொய்வடைந்துவிட்டது. ஆனால், இது மீண்டும் கிளர்ந்தெழும்.

    நேரடியாக இந்த நான்குமே சாத்தியமில்லாததாகத்தான் தோற்றும். ஆனால்,இப்போதுள்ள தேர்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தால், உதாரணமாக winner takes all என்ற முறையை மாற்றி, ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்குகிற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தான் சட்ட/நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவம் என்றாக்கினால்,ஒரு நபர் இரண்டு முறைக்குமேல் முக்கியமான பதவிகளில் நீடிக்க முடியாது என்ற டெர்ம் லிமிடேஷன், அப்புறம் சின்னச் சின்ன விஷயங்களைக் கொண்டு வந்தாலேயே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!