தீர்மானங்களைத் தீர்மானிப்பது எது?

....


தீர்மானங்களைத் தீர்மானிப்பது எது? நியாயமாக முந்தைய பதிவில் இந்தக் கேள்விதான் முக்கியமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஒரு கருத்தை வலிந்து திணிக்கிற மாதிரி எழுதக் கூடாதென்பதில் கவனமாக இருக்கிறேன். ஒரு ஆரோக்கியமான உரையாடல் கருத்துப் பரிமாற்றங்களை வேண்டியே, பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தாலும் கூட,நான் சொல்வதைக் கவனிப்பவர்கள் என்னை விட ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். நான் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும், தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை ஒரு கோடி காட்டக் கூட பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை. பின்னூட்டங்களில் தங்களுடைய எண்ணங்களைப் பொதுவெளியில் முன்வைப்பதில்லை.ஆனாலும் வருகிறார்கள், வாசிக்கிறார்கள், பேசாமலேயே இருந்து விடுகிறார்கள் 

ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்தக் கருத்து இருக்கிறது ஆனாலும் அதைப் பொதுவெளியில் பேசமாட்டேன், கருத்துப் பரிமாற்றம் செய்ய மாட்டேன் என்றிருப்பதற்கு உண்மையிலேயே  என்ன காரணம் என்பது எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் இவர்களில் பலர் வேறு விஷயங்களில், இடங்களில் கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல் இணையத்தில் உரையாடுவதையுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

இது எனக்குப் பழகிப்போய் விட்டதனாலோ என்னவோ நண்பர் போகன் ஒரு கூகிள் ப்ளஸ்ஸில் சொன்னதுபோல, நமக்கு நாமே பாணியில்  (யார் கவனித்தாலும் சரி கவனிக்காவிட்டாலும் சரி) தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பதில் கிருஷ்ணமூர்த்தி போட்டியின்றித் தொடர்ந்து ஜெயித்து வருகிறார் என்று சொல்கிற மாதிரித்தான் இந்தப்பக்கங்களில் பல பதிவுகள் என்ன அசைவை, கருத்தை உருவாக்கின என்பதே தெரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தீர்மானம் என்று சொல்லும்போதே ஒரு உறுதியான முடிவு என்பதாக பொருள் வந்து விடுகிறது அப்படி ஒரு ஒரு உறுதியான முடிவு எடுப்பதற்கு உதவியாக ஐந்து படிகள் இருக்கின்றன அதைச் சொல்லும் படத்தை முந்தைய பதிவிலேயே போட்டிருந்தது நினைவிருக்கிறதா?

 
SMART  இந்த ஐந்தெழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! Specific, Measurable, Attainable,Relevant and Time-bound.

ஆக ஒரு லட்சியம் அல்லது இலக்கு தீர்மானம் அல்லது முடிவு (decision) என்று எதுவானாலும் இந்த ஐந்துபடிகளில் தான் செய்ய முடியும். முதலில் உங்களுடைய இலக்கு அல்லது தீர்மானம் என்பது தெளிவாக வரையறுக்கப்படவேண்டும் 

அடுத்ததாக அது அளவிடப்படக் கூடியதாக இருக்கவேண்டும்இன்னின்ன வரையறைகளுக்குள் என்று குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக இலக்கு அல்லது தீர்மானம் என்பது எட்டப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

நான்காவது மிக மிக முக்கியம். காலத்தோடு  ஒட்டியதாக, பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

ஐந்தாவது படியும் மிக முக்கியம். ஒரு குறிப்பிட்ட கால வரைக்குள் செய்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

இப்படிச் செம்மையாகத் தீர்மானிக்க முடியாத எதுவுமே தீர்மானம் என்ற சொல்லுக்குப் பொருத்தமில்லாதவை நிறைவேற்ற முடியாதவை.

என்ன சொல்கிறீர்கள்?

2 comments:

  1. //ஆனால், ஒரு கருத்தை வலிந்து திணிக்கிற மாதிரி எழுதக் கூடாதென்பதில் கவனமாக இருக்கிறேன்.//

    'கவனமாக இருக்கிறேன்' என்பதற்கு பதில் 'தீர்மானமாக இருக்கிறேன்' என்று எழுதியிருந்தாலும் சரியே.

    அந்த தீர்மானத்தால் தான் எழுதிய பதிவும் எளிதில் புரிகிற மாதிரி தீர்க்கமாக இருக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள். அனுபவத்தில் கொள்ள மிகவும் உபயோகமாக இருக்கக் கூடிய தொடர் என்று தெரிகிறது.

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி சார்!இந்தப் பதிவின் பின்னணியில், இப்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை,அதன் மீது ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் செய்து கொண்டிருப்பதை (என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சில வெளிக் காரணிகள்) ஆராய்ந்து கொண்டிருப்பது இருக்கிறது.

    இந்த அனுபவம் எனக்கு ஒரு பரீட்சையாக இருப்பதை உணர்கிறேன்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!