கேள்விகளில் புது வருடத் தீர்மானங்கள்!

படமே விடை சொல்லும்!கேள்விகளும் எழுப்பும்!


"கேள்விகளைக் கேளுங்கள், கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததே!" என்று கேட்டபடியே அண்ணாச்சி  உள்ளே நுழைந்தார் அண்ணாச்சி யாரென்று கேட்கிறீர்களாஅவரும்  புள்ளி ராசா வங்கியில் வேலை பார்த்தவர் தான்! புள்ளிராசா வங்கி என்று தேடிப் பார்த்தீர்களானால் அண்ணாச்சி எவ்வளவு புள்ளி விவரம் தெரிந்தவர் என்பதுதெரிய வரும்! புள்ளி, புள்ளி வைத்துக் கோலம் போடுவது, புள்ளி விவரம்   இதெல்லாம்  எனக்கு நிறையவே அலெர்ஜி என்பதையும் பழைய பகிர்வுகளில் பார்க்கலாம் . 

"
அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணாச்சி! இரண்டு பதிவர்கள் ஒரே விஷயத்தை இருவேறு கோணங்களில் இருந்து அலசியிருந்ததைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே என்று எழுதிக் கொண்டிருந்தேன்! அவ்வளவுதான்." என்றேன் அண்ணாச்சி நான் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்ட மாதிரித் தோன்றவில்லை. லேப்டாப்பில் எதையோ கொஞ்சம் சீரியசாகத் தேடிக் கொண்டிருந்தார். புது வருடத் தீர்மானங்கள் பற்றி ஒரு சங்கிலிப் பதிவாக மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதியதை யாரோ ஒரு புண்ணியவான் வந்து படித்து விட்டுப் போனதைக் கொஞ்சம் பார்த்தார்.




"
புதுவருடத் தீர்மானங்கள் நிஜமாகவே இல்லையா?" அண்ணாச்சி கேட்டதில் நிறையவே ஆச்சரியம் இருந்தது

"
ஆமாம் அண்ணாச்சி" என்றேன்  "தீர்மானங்கள் நிறைய எடுத்துக் கொள்கிறோம், அவைகளை இன்னொருதரம் திரும்பிப் பார்ப்பதற்கு முன்னாலேயே மறந்தும் போய்விடுகிறோம்! அப்படியான தீர்மானங்கள் எதற்கு என்று தான் இப்போதெல்லாம் தீர்மானங்களே வேண்டாம் என்கிற ஒரே தீர்மானம்!"

"
தீர்மானமே வேண்டாங்கிறதுல இருக்குற தீர்மானம், ஏதோ தீர்மானம் எடுத்து அதை நடைமுறைப்படுத்துகிறதுல இல்ல! அப்படித்தானே!" அண்ணாச்சி கொஞ்சம் நக்கலாகக் கேட்ட மாதிரியும் இருந்தது, கொஞ்சம் அனுசரணையாக, ஒருவித அனுதாபத்தோடு கேட்ட மாதிரியும் இருந்தது. கொஞ்சம் யோசிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டேன். வாயைத் திறந்து பதில் சொன்னால் தானே வம்பு?!

"
அப்படியானால் இந்த வருஷம் செய்யறதுக்கு வேலை, திட்டம் எதுவுமே இல்லையாக்கும்?"  என்று ஆரம்பித்த அண்ணாச்சி, என்னைப் பதில் பேசாதே என்று பார்வையாலேயே அடக்கிவிட்டுத் தொடர்ந்தார் "வெளிப்படையாகச் சொன்னாலும் சொல்லா விட்டாலும் ஒரு தெளிவான தீர்மானம், இலக்கு இல்லாமல் யாருமே இருப்பதில்லை. ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் இந்த வருடத்தில் குறைந்த பட்சம் இன்னின்னதை செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.சில சமயங்களில் வெளிப் படையாக எழுதியும் வைத்துக் கொள்கிறோம்.எங்கே சறுக்குகிறோம்,தோற்கிறோம் என்றால் நாம் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களில் நாமே உறுதியாக இருப்பதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள், தீர்மானங்களுக்கு நம்மைப் பொறுப்பாளியாக்கிக் கொள்வதில்லை என்றால் புறம் அது ஊமை கண்ட கனவு மாதிரித்தானே முடியும்?" .

அண்ணாச்சி சொன்னதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தேன்.




புதுவருடத் தீர்மானங்களாக அல்லது இந்த வருடம் எட்டப்பட வேண்டிய இலக்குகளாக எதை எதை நினைக்கிறோம்? இதை முடிவு செய்வதற்கு முன்னால், சென்ற வருடம் இதே மாதிரி தீர்மானித்ததில் எவையெவை அரைகுறையாக அல்லது இந்த வருடமும் முக்கியமாக இருக்கின்றன என்பதைக் கவனிக்கிறோமா?

தீர்மானங்கள், இலக்குகளை முடிவு செய்யும்போது நம்மிடம் இருக்கும் பலம்-பலவீனங்களை மதிப்பிட்டு இலக்குகளை எட்டுவதற்கான செயல் திட்டத்தையும்  யோசித்துத் தெளிவான முடிவெடுத்திருக்கிறோமா? இந்த முடிவுகளைத் தொடர்ந்து கண்காணித்து, குறைநிறைகளைப்பார்த்து செயல் படுகிறோமா?

என் மனதில் ஓடிய கேள்விகளை அண்ணாச்சி படித்து விட்டார் என்றே தோன்றியது. "நீ யோசிப்பதும் கேள்விகளை வரிசைப் படுத்தியதும் சரியானது தான்! கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று சொல்வது சுலபம்! கேள்விகளை சரியான வரிசைப் படுத்துவதில், கிடைக்கும் விடைகளில் இருக்கும் விஷயங்களை சரி செய்வதில் தான் அடுத்தகட்டம்,கேள்விக்கான வித்து இருக்கிறது என்பது புரிகிறதா?"

"
கொஞ்சம் புரியவில்லை என்கிற மாதிரித்தான் இருக்கிறது அண்ணாச்சி!" என்றேன்

இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் ஒருதரம் பார்த்து விட்டு எனக்கு என்ன புரியவில்லை என்பதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்  என்று கொஞ்சம் சொல்லுங்களேன்! அண்ணாச்சி, கொஞ்சம் நன்றாகவே போட்டுத் தீட்டிவிட்டார்!அவர் சொன்னதோடு நீங்கள்புரிந்து கொண்டதும் ஒத்துப் போகிறதா என்பதைக்


கொஞ்சம் பார்த்து விடலாம்!

ஜெயிப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை! ஜெயிக்கலாம் வாங்க!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!