செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! டில்லித்தேர்தல் முடிவுகள்! ஏமாறப்போவது யாரோ?

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளை முற்றிலும் எதிர்பாராதது என்று சொல்லி விட முடியாது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்திருக்கிற வாக்குசதவீதம் கொஞ்சம் ஆச்சரியப் படுத்தத்தான் செய்கிறது.  


வெஸ்ட்மினிஸ்டர் தேர்தல் முறையில்  கட்சிகள் வாங்குகிற  வாக்கு சதவீதத்துக்கும்  கெலிக்கிற சீட்டுகளுக்கும் சம்பந்தமே இருக்காது என்பதைப் புரிந்து கொண்டால் கிடைத்திருக்கிற சீட்டுக்கள் மயக்கத்தைத் தராது. தவிர இதற்கு முன்னால் ராஜீவ் காந்தி காலத்தில் இப்படிக் கிடைத்த அதிக சீட்டுக்கள் காங்கிரசுக்கு ஜன்னியை உண்டுபண்ணியதும்   கட்சித்தாவல் தடை சட்டம் கொண்டு வந்த கூத்தும்   நினைவுக்கு வருகிறதா? 


The AAP landslide is driven by the same junoon that propelled Modi into power. That exaggerated hope leads inevitably to exaggerated disillusionment. The BJP rout will undoubtedly hearten Modi critics but it should offer little comfort to Kejriwal who is likely to feel the brunt of all that impatience very soon.

ஊடகங்கள் கணிப்பதில் ஐந்து தவறுகளைச் செய்ததாகச் சொல்கிற இந்த செய்திக் கட்டுரை தான் இப்படி முத்தாய்ப்பாகவும் சொல்கிறது. இதே தளத்தில் டில்லியின் அர்பன் வாக்காளர்கள் பொறுமையற்றவர்கள்  என்றும் சொல்லி  ஒரு ஆறு விஷயங்களை டில்லித் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும்  சொல்லியிருப்பது அதிகபட்ச ஊடக அபத்தக் காமெடி.  


பிஜேபி இந்தத் தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறது? இந்த முடிவுகளை எல்லோரையும்போல எதிர்பாராதது, இமாலயத்தவறு நடந்துவிட்டது என்று சொல்லப் போகிறார்கள் என நினைத்தால் அது தவறு. டில்லியில்  ஜனங்களுடைய மனநிலைமை  எதிராக இருப்பதை, டில்லி யூனியன் பிரதேசத்தில் பிஜேபியின் கட்சி அமைப்பு பலவீனமாக இருப்பதை, ஒரு நல்ல உள்ளூர்முகத்தைக் காட்டமுடியாமல், உட்கட்சிப் பூசல்களுடன் இருந்ததை நன்றாகவே உணர்ந்திருந்தார்கள் என்றே விஷயம் தெரிந்த அரசியல்பார்வையாளர்கள் சொல்கிறார்கள். யதார்த்தா பென்னேஸ்வரன்   போன்ற டில்லிவாசிகளின் கணக்குக் கூடக் கொஞ்சம் பொய்த்துப்போன அதிசயம், நடந்தது  உண்மையிலேயே அதிசயம்தானா என்ற கேள்விதான் இப்போது முன்னுக்கு வந்து நிற்கிறது.
 

இது எழுத்தாளர் மாலனுடைய முகநூல் பகிர்வு. இதில் சொல்லியிருப்பதில் ஒரு பகுதி உண்மை. நாடாளுமன்றத் தேர்தல்களில் கருத்துக் கணிப்பு, எதிர்பார்ப்புக்கள் எல்லாம் காங்கிரஸ், பிஜேபி அல்லாத மூன்றாவது அணி தான்  முன்னிலை வகிக்கும், அதிலும் மம்தா பானெர்ஜி, மாயாவதி, ஜெலலிதா ஆகிய மூவர்தான் அடுத்த அரசியல் திருப்பத்துக்கு முன்னிலை வகிப்பார்கள் என்று தேர்தகள் பண்டிதர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன படியே  மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும்  தேர்தல் முடிவுகள் இருந்தன. தேர்தல் பண்டிதர்கள்  கணக்கைப் பொய்யாக்கி பிஜேபி  தனித்தே 283 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வேகத்திலேயே கடந்த  எட்டு மாதங்களில்  காஷ்மீர்  கொல்கத்தா என்று வரிசையாக அடித்து  ஆடிக் கொண்டிருந்ததில் நிறைய சலசலப்புகள், எதிர்ப்புக்களை மோடிக்கு எதிராகத் திரட்டுவதில் அத்தனை கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கிற மாதிரி ஒரு சித்திரம் உருவானது. ஆனால் முற்றுப் பெறாத  சித்திரமாக, சரியான தலை(மை)யில்லாமல் இன்னமும் இருப்பதிலிருந்தே மாலன் சொல்ல விட்டுப்  போனதாக, மாநிலக்கட்சிகள் தங்கள் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிற விஷயம் இருக்கிறது.  அதே நேரம், காங்கிரஸ் விட்டுப்போன வெற்றிடத்தை இந்தியா முழுமைக்குமாக பிஜேபியால் நிரப்ப முடியவில்லை, அதற்கு இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தில்லி தேர்தல் முடிவு திருப்பு முனையானது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கும் போக்குக்கு இடமில்லை என்பதை காட்டியுள்ளது. இந்த மாற்றம் இப்போதைக்கு அவசியமான ஒன்று என மம்தா பானெர்ஜி  கூறியுள்ளார். ஆனால் என்ன புலம்பினாலும் சாரதா சிட் ஃ பண்ட் ஊழல் விவகாரம் மம்தா பானர்ஜியின் அரசியல் சகாப்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிற அபாயம் நீடிக்கவே செய்கிறது.

இந்தப் பேட்டியில் சுதிப்தோ சென் கூறியிருப்பது என்னவெனில், ""சாரதா நிதி நிறுவனம் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு உடனடியாக இந்த வழக்கில் இணைக்காவிட்டால், "கொள்ளைக்கார கட்சி' எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டுவிடும்'' என்று கூறியுள்ளார். கட்சியின் பெயரை அவர் குறிப்பிடாவிட்டாலும், அது மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் என்று பேசப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், அமைச்சர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனியும் மத்திய அரசு பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.என்கிறது தினமணி தலையங்கம்   

இந்த எட்டு  மாதங்களில் மத்தியில் பிஜேபி ஆட்சி மிகப்பெரிய சாதனைகளைச் செய்து முடிக்காவிட்டாலும் . ஜீபூம்பா கூட, கெட்ட பெயரைச் சம்பாதிக்கவில்லை என்ற சூழ்நிலையில் டில்ல்லி வாக்காளர்கள் இப்படி ஒரு தேர்தல் முடிவைத் தர வேண்டிய காரணம் என்ன? 

முக்கியமாக பெருநகரங்களில் குறிப்பாக டில்லியில் வாக்காளர்களுடைய எதிர்பார்ப்பு, பொறுமையின்மை இரண்டுமே  அதிகரித்துக் கொண்டே வந்த விதம். ஏன்  எப்படி என்ற சால்ஜாப்புக்கெல்லாம் காது கொடுத்துக் டில்லி ஜனங்கள் கேட்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள்  ஜீபூம்பா என்பாயோ திறந்திடு செசேம் என்பாயோ எங்களுக்கு வேண்டியது எல்லாம் குறைந்த விலையில் மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து இப்படி அடிப்படை வசதிகள், அவ்வளவுதான்! ஜனங்களைக் கிளர்ந்தெழச்செய்வது மிக எளிது. ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதானது அல்ல. இப்படி ஒரு இடியாப்பச்சிக்கலில் தலையைக் கொடுத்துவிட்டு, பதில் சொல்ல முடியாமல்  49 நாட்களிலேயே ராஜினாமா செய்துவிட்டு ஓடிய ஒருவரை மறுபடி மொத்த சீட்டுக்களையும் கொடுத்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆட்டை ரெடி செய்து விட்டார்கள் என்பது மட்டும் தெளிவு. இப்படி ஒரு நிலைமை தங்களுக்கும்  வரலாம், அதைவிட டில்லி கைவிட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தெளிவோடுதான்  பிஜேபியினர் இருந்தார்கள் என்று தான் படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால் அனுபவமில்லாத ஒரு அவசரக்குடுக்கை . குருட்டுப் பூனை எங்கே எப்படித் தாவும்  என்றெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.

அர்பன் வாக்காளர்கள் ஓர் புதிய போக்கைக் காட்டியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஏமாறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய ஜனநாயகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.

..

7 comments:

  1. அரசியல் விமரிசனங்களே அலாதியானது. எதை எப்படி எதனுடன் கூட்டிக் கழித்து வகுத்துக் கணக்குப் போடுகிறார்கள் என்று தெரியாது. ஆனால் எதையாவது எப்படியாவது எதனுடனாவது கூட்டிக் கழித்து வகுத்துக் கணக்குப் போட்டு விடுவார்கள் என்பது தான் வேடிக்கை.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய கணக்கு ரொம்ப சிம்பிள். 1962 முதல் கூடிக் கொண்டே வந்த மாநிலக் கட்சிகளின் செல்வாக்கும் அகில இந்தியப் பங்களிப்பும் saturation point ஐ எட்டி விட்டது. மாநிலக் கட்சிகள் கொஞ்சம் தங்களை அகில இந்தியக் கட்சிகளாக விஸ்தரித்துக் கொள்ள வேண்டும் அல்லது வாலை சுருட்டிக் கொண்டு மாநிலத்துக்குள்ளாக மட்டும் இயங்க வேண்டும். அதுவும் கூட இனி எடுபடுமா என்பது சந்தேகமே. அகில இந்தியக் கட்சிகளும் கூட , காங்கிரஸ் மாதிரி தேசியக் கட்சி என்று சொல்லிக் கொண்டு மாநிலப் பிரச்சினைகளில் கண்டுகொள்ளாமல் இருந்த போக்கை மாற்றிக் கொண்டாகவேண்டும். 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் நான் பார்ப்பது இந்த அடிப்படையில் மட்டுமே.

      Delete
  2. நிச்சயம் பொறுத்திருந்து பார்க்க தான் போகிறோம்...பதிவுக்கு மிக்க நன்றி...

    மலர்

    ReplyDelete
    Replies
    1. பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர வேறு சாய்ஸ் நமக்கிருக்கிறதா என்ன ?! :-)))))

      Delete
  3. மாநில கட்சிகள் மாநில அளவில் தங்கள் வளர்ச்சியையும் செல்வாக்கையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. அதே சமயத்தில் அகில இந்திய கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலும் நாடாளுமன்றம் மட்டுமே குறியாகப் போய்விட்டது பரிதாபம். எந்தந்த மாநிலங்களில் தங்களுக்கு செல்வாக்கு இல்லையோ அந்தந்த மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சிகளை தம் சொந்த மாநிலப் பிரிவை விட அதிகம் நம்பியிருக்கின்றன. அதாவது தங்கள் மாநிலக் கட்சியை வலிமை மிக்கதாக செய்வதை விட இருக்கிற வலிமை வாய்ந்த மாநிலக் கட்சியை சார்ந்திருப்பதை சுலப வெற்றிக்கான வாய்ப்பாக கருதுகின்றன. இதான் மாநில கட்சிகளுக்கான இரண்டு மடங்கு கொண்டாட்டம்.
    மாநிலத்தில் வளர்ச்சியும் வலிமையும் அடைந்து விட்டால் போதும், அ.இ. அளவில் செல்வாக்கு பெறலாம், அதே சமயத்தில் மாநிலத்திலும் கோலோச்சலாம்.

    அகில இந்திய கட்சிகள் தங்களது மாநிலக் கட்சிப் பிரிவுகளை வளர்க்காத வரைக்கும் பேருக்குத் தான் அகில இந்திய கட்சிகளே தவிர நிதர்சனத்தில் பல்வேறு குழுக்களான மாநிலக் கட்சிகளையும் உள்ளடக்கிய அவர்களின் அபிலாஷைகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவியல் தான்.

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தருணத்தில் பொன்னீலன் எழுதிய ஜீவா என்றொரு மானுடன் புத்தகத்தை மறுபடி வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். தேசீய உணர்வு என்பது பிரதேச உணர்வுகளையும் உள்ளடக்கியது. தேசீய உணர்வுகளையும் மிஞ்சி நிற்பது வசுதைவக குடும்பம் என்கிற மானுட உணர்வு -சகமானுடனைப் புரிந்துகொள்வது ஏற்றுக்கொள்வது.

      Delete
  4. புத்தகம் கைவசம் இருக்கிறது, எஸ்.கே.சார்!...

    மாநிலக் கட்சிகள் அ.இ.கட்சிகளாக விஸ்வரூபம் எடுக்க எடுக்க நாட்டுக்கு நல்லது. ஏக இந்தியா உணர்வு நம் நாடி நரம்புகளில் பற்றிப் பரவி ஜொலிக்க வேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பிரதேச ஒற்றுமைகள் வலுப்பட வேண்டும். அகில பாரதம் என்பது சுதந்திர தேவியின் சொல்லொணா துயரம் சுமந்த கனவல்லவோ?..







    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!