2G ஸ்பெக்ட்ரம்! கனிமொழி கைதாவாரா? முன் ஜாமீனா? இதுக்கு ஒரு கணிப்பும் இல்லையே!



சென்னைப்பதிவர் ஒருவரிடம், (மரா தன்னைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம், இது வேறொருவர்) அரட்டையில் தேர்தல் நிலவரம் குறித்து நேற்றைக்கு விசாரித்துக் கொண்டிருந்தேன். நேற்றைக்கு பதில் எதையும் காணோம்! இன்றைக்கு, அரட்டையில் திமுக அணிக்கு 120-230 இடங்கள் வரை கிடைக்கும் என்று  "தன்னுடைய"  நம்பிக்கையை வந்து சொன்னார். கொஞ்சம் சிரித்துக் கொண்டேன்! வேறு என்ன சொல்ல!

ஹெட்லைன்ஸ்டுடே தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, திமுக முந்துகிற மாதிரி ஒரு கணிப்பை வெளியிட்டது. திமுகவுக்கு ஆதரவு மூன்று சதவேதமும் அதிமுகவுக்கு ஏழு சதவீதம் வரை கூடியிருப்பதாகச் சொன்ன இந்த கணிப்பு வெறும் ஆறாயிரம் வாக்காளர்களிடம் மட்டுமே எடுக்கப் பட்டதாக, அதன் மெதடாலஜியையும் சேர்த்து சொன்னதில் என்னுடையசந்தேகத்தை, அதன் நம்பகத்தன்மையைக்குறித்து இந்தப் பதிவில்,  எழுப்பி இருந்தேன்.

இதே ஹெட்லைன்ஸ்டுடே தன்னுடைய முந்தைய கணிப்பில் அதிமுக முந்துவதாக சொல்லியிருந்தது. இப்போது திமுக முறை! ஆனால் திமுக ஊடகங்கள் இந்த கணிப்பைப் பெரிதாக எடுத்து ஊதவில்லை என்பதிலேயே இன்னும் கொஞ்சம் சந்தேகம் எழுந்தது.விதிமுறைகளை மீறியதாக ஹெட்லைஸ்டுடேவுக்கு தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பி இருக்கிறது. இன்றைக்கு உடன் பிறப்புகளுக்கு  தேறுதல் சொல்கிற பொறுப்பை தினமலர் நாளிதழ் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியைப் பாருங்கள்!

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த தருணங்களில் disinformation என்று செய்திகளைத் திரித்து வெளியிடுவது, குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிற உத்தியாக இரண்டு தரப்புமே செய்து கொண்டிருந்தன மார்கெடிங் உத்தியாக, ஒரு தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய தயாரிப்பின் குணங்களை விரிவாக சொல்வதற்கு பதிலாக, போட்டியாளரின் தயாரிப்பைப் பற்றி கொஞ்சம் சந்தேகம் ஏற்படுத்துகிற மாதிரி நாசூக்காகச் செய்வதை,  இங்கே இந்திய அரசியலில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், தங்களுடைய தவறுகளுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக, அவன் மட்டும் யோக்கியமோ என்று கவனத்தைத் திருப்புகிற மாதிரி, பொய்களைத்  திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் கோட்பாட்டை விட்டு விடாமல் பின்பற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. 
ஒரு அளவுக்கு மிஞ்சினால் என்ன ஆகும்?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக அணி பல குளறு படிகளைச் செய்திருக்கிறது. முதலாவதாக, நகர்ப்புறங்களில் எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியாதென்று கிராமப்புறத் தொகுதிகளாகப் பார்த்து வெறும் 119 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிட முடிவு செய்தது.  அடுத்ததாக, கொங்குப் பகுதியில் கொங்கு வேளாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சி செய்த திமுக, அதிலும் தோல்வி அடைந்து இருப்பதாகத் தான் தெரிகிறது. இன்பைய தினமலர் நாளிதழிலேயே, நக்கீரன் வார இதழில் எழுத்தாளர் சோலை எழுதும் தொடரில் இருந்து எடுத்துப் போட்ட செய்திக் கட்டுரையின் ஒரு பகுதி இது:

"
விரிந்த வலிமையான கூட்டணி அமைக்க, தி.மு.க., விரும்பியது. ஆனால், விரும்பத்தகாத முறையில், கட்சிகளின் பலத்தைவிட, கூடுதலாக இடங்களை ஒதுக்கித் தந்துவிட்டது. கொங்கு சீமையில் வேளாளர் சமுதாயம் தான், தி.மு.க., நினைவுக்கு வந்தது. ஆனால், நாயுடு சமுதாயத்தினரும், ஒக்கலிகர் சமுதாயத்தினரும் கணிசமாக இருக்கின்றனர் என்பது அதன் நினைவுக்கு வரவில்லை.

தொகுதி அமைப்பு, சமூக அமைப்பைக் கருத்தில் கொள்ளாது, வேட்பாளர்களை தி.மு.க., தேர்வு செய்தது. மாவட்டச் செயலர்களோ, மாவட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஈடாக எவரும் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். அதனால், பல தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளி விட்டனர் அல்லது தங்கள் ஆட்களை நிறுத்தினர். வெற்றிக்காக வேட்பாளர் என்பது தான், தி.மு.க.,வின் முந்தைய தாரக மந்திரம். குறிப்பிட்ட நபருக்காக சீட்டு என்ற காங்கிரஸ் வியாதி, இந்தத் தேர்தலில், தி.மு.க.,வையும் லேசாக தொற்றிக் கொண்டதைக் காண முடிந்தது."

கடுமையான தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு,  2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று மட்டுமல்லாமல்,எங்கும் எதிலும் ஊழல், அரசு இயந்திரத்தின் மெத்தனம் எல்லாவற்றையும் தேர்தல் நேரங்களில் அளிக்கிற வாக்குறுதிகள், இலவசங்களில் மறக்க வைத்து விட முடியும் என்பது ஒன்றே திமுகவின் நினைப்பாக இருந்தது. போதாக்குறைக்கு திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தல்களில் வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்க்கப் பட்ட அ"னா பார்முலா வேறு! நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பது திமுக விஷயத்தில் உண்மையாகிப் போனது.

ஆனால், திமுக ஒன்றை மறந்து விட்டது மட்டும் நிச்சயமாக இந்தத் தேர்தல்களில் பிரதிபலித்தது. முந்தைய தேர்தல்களில் எந்த அளவக்கு அரசு இயந்திரத்தை துஷ்ப்ரயோகம் செய்யப்பட்டதோ, பணத்தை வீசி இறைத்து தேர்தல்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டதோ அந்த அளவுக்கு, இந்தத் தேர்தல்களில்,அதுமாதிரி நடந்து விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக இருக்கும் என்பது தான் அது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த அளவுக்கு ஜனங்களுடைய ஆதரவைப் பெறும் என்பதோ, மதுரை இளவரசரே முடக்கி வைக்கப் படுவார் என்பதோ திமுக எதிர்பார்க்காத விஷயங்கள். திமுக தலைவரே அறிவிக்கப் படாத எமெர்ஜென்சி என்றெல்லாம் புலம்புகிற மாதிரியாகிப் போனது!

அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் மீதான தனது அதிருப்தியை முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.அதே நியாயம் அரசியல் வாதிகளுக்கு  மட்டும் கிடையாது  போல!

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கைமாறியதில் தயாளு அம்மாள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாததற்கு அவருக்குத்  தமிழ் தெரியாது, சரத்துக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து விட்டார் என்று காரணம் கூறும் சிபிஐ, ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.

இந்த மினிட்ஸே பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் தயாளு அம்மாளை வழக்கில் சேர்க்காமல் தப்புவிப்பதற்காக தயாரிக்கப்பட்டது என்றும் கருதப்படும் நிலையில், மே மாதம் 6 ஆம் தேதி சரத்குமாரும் கனிமொழியும் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அதுபற்றி விவாதிப்பதற்காக கூடிய தி.மு.க உயர் நிலை கூட்டத்தில் கலைஞர் பேசும்போது, "நான் எப்போதும் கட்சியைக் காட்டிக்கொடுப்பவனல்ல. என்னைக் கைது செய்தபோதெல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றவன்" என்று கூறியுள்ளது, கனிமொழியின் கைது தவிர்க்கமுடியாதது என்று கலைஞரே நம்புவதாகத்தான் கருதமுடிகிறது. அவ்வாறு கைதுசெய்யப்பட்டால், கட்சிக்கு எதிராக காட்டிக்கொடுக்காதே என தன் மகளுக்குக் கலைஞர் தெரிவித்த செய்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் மனம் விட்டு பேச நிறைய இருக்கிறது" என கனிமொழி கூறிய பூடக கருத்தும் இதையே உறுதிபடுத்துவதாக உள்ளது.

இது போக, அமலாக்கத்  துறை விசாரணைக்கு நாளை (5/5/11)  ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. நாளை மறுநாள் ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதி மன்றம் முன்னால் ஆஜராகும்படி சம்மன்! கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்றே செய்திகள்  கசிந்து கொண்டிருக்கின்றன. நேற்றிலிருந்து திமுக அமைச்சர்கள் டில்லியில் முகாமிட்டு, கைது நடவடிக்கையைத் தவிர்க்க அல்லது ஜாமீன் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதும், சி ஐ டி  நகர் வீட்டில் மகள், வீரமணி உட்படப்பலருடன் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தியதும், கருத்துக் கணிப்புக்களை விட, கனிமொழி கைது என்றாகிவிடக் கூடாது என்பதில் மட்டும் தான் திமுக அதிக கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

திமுகவின் நினைப்பு சரியா ,கருத்துக் கணிப்புக்கள் இவைகளை எல்லாம் பிரதிபலிக்கிறதா இல்லையா என்பது இன்றைக்குப் பத்தாம் நாள் தெரிந்துவிடும்!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்!

இத்தனை கூத்துக்களைப் பார்த்த பிறகும், இப்போதுள்ள தேர்தல் முறையில் ஜனநாயகம் பிழைத்திருக்கும் என்று நம்புகிறீர்களா?

தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? ஒவ்வொரு கட்சிக்கும் அது பெறுகிற அதரவு வாக்குகளின்  அடிப்படையில் மட்டும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்கிற முறைக்கு மாறவேண்டிய அவசியம் புரிகிறதா? ஊழல் குற்றச்சாட்டு, அல்லது சரிவர செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை வேண்டுமே!

இதையெல்லாம் குறித்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

சொல்வதைக் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



 

........இப்போ கனிமொழி! அப்புறம் சோனியாவா?



அங்குசம் மிக மிகச் சின்னது தான்!ஆனாலும் கூட ஒரு பெரிய யானையையே அடக்கி மண்டிபோட வைத்துவிடுகிற வலிமை அங்குசத்திற்கு இருக்கிறது.அதே மாதிரித் தான், சில தனிநபர்களும்! அவர்களை எவ்வளவு எள்ளி நகையாடினாலும், முட்டைகளை வீசி எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினாலும், எள்ளல், வெறுப்புக் கலந்த பிரசாரத்துக்கு உட்படுத்தப் பட்டாலும் கூட, அதெல்லாம் அவர்களைக் கண்டு எழும் அச்சத்தினால் தான் என்பது வெள்ளிடைமலை.

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி!

பெயரைச்சொல்லும்போதே, இன்னதென்று சொல்ல முடியாத உணர்வை ஏற்படுத்தக் கூடியவர்.தமிழக அரசியல் வாதிகளால், வெறும் கோமாளியாகவும், எதிலும் எப்போதும் சேர்த்துக் கொள்ளப்படக் கூடாத, முடியாத ஒரு சக்தியாகவும் சித்தரிக்கப் பட்டவர். எப்படி ஒரு சிறிய அங்குசம், பெரிய யானையை மண்டியிட வைத்துக் கொண்டு இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், இன்றைய தினமணி நாளிதழில் திரு எஸ் குருமூர்த்தி, ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிந்தனையைத் தூண்டுகிற,  ஒரு செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார்! அதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.


“நாட்டு மக்கள் அனைவரும் சொல்லிவிட்டார்கள், இத்தோடு போதும் என்று; அப்போதுதான் யாரும் எதிர்பாராதது நடக்கிறது. யாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப் பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.

அப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் என்று அவரை யார் சொல்வது? சுப்பிரமணியன் சுவாமியா? நானா? இல்லை. அப்படிச் சொல்வது கிளியோ பாஸ்கல்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர்தான் இந்த கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று.  ""உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா?'' என்று!

 ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.  யார் இந்த கிளியோ பாஸ்கல்?

சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெüரவமிக்க உறுப்பினர்.
அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு - ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளம் உலகிலேயே 3-வது இடத்தில் இருக்கிறது. 3 கோடியே 80 லட்சம் பேரால் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 50 கோடி. 2005-ல் தொடங்கப்பட்ட இந்தச் செய்தி இணைய தளம் உடனடியாக உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ.ஓ.எல். என்ற நிறுவனம் ரூ.1,450 கோடி கொடுத்து இந்த இணையதளத்தை வாங்கியிருக்கிறது.

2008-ம் ஆண்டு இந்த இணையதளத்தைத்தான் உலகின் மிகச்சிறந்த செய்தி இணையதளமாக லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்சர்வர்' மதிப்பிட்டிருக்கிறது.

கிளியோ பாஸ்கல் யார், அவர் எழுதும் ஹஃபிங்டன் போஸ்ட் இணைய தள செய்திப் பத்திரிகை எத்தகையது என்று பார்த்தோம். சோனியா காந்தி குறித்து அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று இனி பார்ப்போம்.

"கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார்.
சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணு முணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.

1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார்.

எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு1984- லிருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின.

நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார். போஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார்.

சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார்.

இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.

அர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்தில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை.

1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.

1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.

 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்து விடுவார். உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல். சோனியா காந்தி மீதான ஊழல் புகாருக்கு சர்வதேசத் தன்மை இருக்கிறது என்கிறார் பாஸ்கல்.

இந்தியாவில் நடப்பவற்றை இப்போது நாம் பார்ப்போம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் சோனியா காந்தியின் பின்னணி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவே பார்க்கின்றன. சோனியா காந்தியின் ஊழல்குறித்து பாஸ்கல் எழுதுவது என்னவென்றே இந்தியர்களுக்குப் புரிவதில்லை. சோனியா பதவியை விரும்பாத தன்னலமற்ற தலைவி என்றும், ஊழலுக்கு எதிரான தேவதை என்றும்தான் இந்தியர்களில் பலர் பார்க்கின்றனர். அதனால்தான் ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்று பெரிய நேர்மையாளரைப் போல அவரால் வேஷம் போட முடிகிறது.

அவர் உண்மையிலேயே நேர்மையானவர்தானா என்று ஆராய்வதற்குப் பதிலாக, ஊழலை ஒழிப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியைப் பாராட்டி மகிழ்கிறது. இந்தியர்கள் பேராசை பிடித்தவர்களாகி விட்டார்கள், அவர்களுடைய தார்மிக உலகு சுருங்கிவிட்டது என்று அவர் இந்தியர்களையே வசை பாடுகிறார், ""ஆ, சோனியா எப்படி வெளிப்படையாகப் பேசிவிட்டார்'' என்று அகமகிழ்கின்றன இந்திய செய்தி ஊடகங்கள்!.

ஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரேவுக்குத் தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.

சோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹசா ரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.

சோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹசா ரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.

அவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக் காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.

கிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்--:

ஊழல் விவகாரங்களில் சிக்கி, சந்தேகத்துக்கு உரியவராகத் திகழும் சோனியா காந்தி, ஊழலை ஒழிக்க வந்த தேவதையாக இந்தியப் பத்திரிகைகளால் சித்திரிக்கப்படுகிறார்.”


அப்பா பொது நல வழக்கு என்று தொடருவார். மகன் உள்ளே புகுந்து, அதில் இருந்து எப்படி விடுபடுவது என்று சொல்லித்தருகிறேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை அணுகுவார் என்று சாந்தி பூஷன்-பிரசாந்த் பூஷன்களைப் பற்றிக் கூட சமீபத்தில் சில திரித்துச் சொல்லப்பட்ட செய்திகள் வந்தன.

எது எப்படியோ, ஸ்பெக்ட்ரம் ஊழலாகட்டும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழலாகட்டும், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, மற்றும் சாந்திபூஷன் தொடுத்த வழக்குகளின் அடிப்படையிலேயே, யானை மாதிரி மதம் பிடித்துத்திரிந்த ஊழல் அரசியல்வாதிகள், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மண்டியிட்டு நிற்கிற மாதிரி ஆயிற்று என்பது தான் உண்மை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு ஆ.ராசாவை மட்டும் பலிகடாவாக ஆக்கியதோடு நின்றுவிடாமல், அதில் சம்பந்தப்பட்ட பெருந் தலைகளையும் குடும்பத்தோடு இப்போதுதான் தொட ஆரம்பித்து இருக்கிறது. 

ஊழல் கூட்டணி தர்மத்தில், போபார்ஸ் வழக்கு ஆரம்பித்து எதிலும் சிக்காமல் உத்தம அன்னையாக சித்தரிக்கப்படும் சோனியாவையும் நீதியின் கரங்கள் தொடுகிற காலம் இப்போது தான் முதன்முதலாக நெருங்கி வந்திருக்கிறது.

அங்குசங்கள் சிறியவைதான்! மதம் பிடித்து அலைகிற யானைகளை மண்டியிடச் செய்ய அங்குசங்கள் வேண்டும்!

வரவேற்போம்!