2G ஸ்பெக்ட்ரம்! கனிமொழி கைதாவாரா? முன் ஜாமீனா? இதுக்கு ஒரு கணிப்பும் இல்லையே!



சென்னைப்பதிவர் ஒருவரிடம், (மரா தன்னைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம், இது வேறொருவர்) அரட்டையில் தேர்தல் நிலவரம் குறித்து நேற்றைக்கு விசாரித்துக் கொண்டிருந்தேன். நேற்றைக்கு பதில் எதையும் காணோம்! இன்றைக்கு, அரட்டையில் திமுக அணிக்கு 120-230 இடங்கள் வரை கிடைக்கும் என்று  "தன்னுடைய"  நம்பிக்கையை வந்து சொன்னார். கொஞ்சம் சிரித்துக் கொண்டேன்! வேறு என்ன சொல்ல!

ஹெட்லைன்ஸ்டுடே தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, திமுக முந்துகிற மாதிரி ஒரு கணிப்பை வெளியிட்டது. திமுகவுக்கு ஆதரவு மூன்று சதவேதமும் அதிமுகவுக்கு ஏழு சதவீதம் வரை கூடியிருப்பதாகச் சொன்ன இந்த கணிப்பு வெறும் ஆறாயிரம் வாக்காளர்களிடம் மட்டுமே எடுக்கப் பட்டதாக, அதன் மெதடாலஜியையும் சேர்த்து சொன்னதில் என்னுடையசந்தேகத்தை, அதன் நம்பகத்தன்மையைக்குறித்து இந்தப் பதிவில்,  எழுப்பி இருந்தேன்.

இதே ஹெட்லைன்ஸ்டுடே தன்னுடைய முந்தைய கணிப்பில் அதிமுக முந்துவதாக சொல்லியிருந்தது. இப்போது திமுக முறை! ஆனால் திமுக ஊடகங்கள் இந்த கணிப்பைப் பெரிதாக எடுத்து ஊதவில்லை என்பதிலேயே இன்னும் கொஞ்சம் சந்தேகம் எழுந்தது.விதிமுறைகளை மீறியதாக ஹெட்லைஸ்டுடேவுக்கு தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பி இருக்கிறது. இன்றைக்கு உடன் பிறப்புகளுக்கு  தேறுதல் சொல்கிற பொறுப்பை தினமலர் நாளிதழ் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியைப் பாருங்கள்!

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த தருணங்களில் disinformation என்று செய்திகளைத் திரித்து வெளியிடுவது, குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிற உத்தியாக இரண்டு தரப்புமே செய்து கொண்டிருந்தன மார்கெடிங் உத்தியாக, ஒரு தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய தயாரிப்பின் குணங்களை விரிவாக சொல்வதற்கு பதிலாக, போட்டியாளரின் தயாரிப்பைப் பற்றி கொஞ்சம் சந்தேகம் ஏற்படுத்துகிற மாதிரி நாசூக்காகச் செய்வதை,  இங்கே இந்திய அரசியலில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், தங்களுடைய தவறுகளுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக, அவன் மட்டும் யோக்கியமோ என்று கவனத்தைத் திருப்புகிற மாதிரி, பொய்களைத்  திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் கோட்பாட்டை விட்டு விடாமல் பின்பற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. 
ஒரு அளவுக்கு மிஞ்சினால் என்ன ஆகும்?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக அணி பல குளறு படிகளைச் செய்திருக்கிறது. முதலாவதாக, நகர்ப்புறங்களில் எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியாதென்று கிராமப்புறத் தொகுதிகளாகப் பார்த்து வெறும் 119 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிட முடிவு செய்தது.  அடுத்ததாக, கொங்குப் பகுதியில் கொங்கு வேளாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சி செய்த திமுக, அதிலும் தோல்வி அடைந்துருப்பதாகத் தான் தெரிகிறது. இன்பைய தினமலர் நாளிதழிலேயே, நக்கீரன் வார இதழில் எழுத்தாளர் சோலை எழுதும் தொடரில் இருந்து டுத்துப் போட்ட செய்திக் கட்டுரையின் ஒரு பகுதி இது:

"
விரிந்த வலிமையான கூட்டணி அமைக்க, தி.மு.க., விரும்பியது. ஆனால், விரும்பத்தகாத முறையில், கட்சிகளின் பலத்தைவிட, கூடுதலாக இடங்களை ஒதுக்கித் தந்துவிட்டது. கொங்கு சீமையில் வேளாளர் சமுதாயம் தான், தி.மு.க., நினைவுக்கு வந்தது. ஆனால், நாயுடு சமுதாயத்தினரும், ஒக்கலிகர் சமுதாயத்தினரும் கணிசமாக இருக்கின்றனர் என்பது அதன் நினைவுக்கு வரவில்லை.

தொகுதி அமைப்பு, சமூக அமைப்பைக் கருத்தில் கொள்ளாது, வேட்பாளர்களை தி.மு.க., தேர்வு செய்தது. மாவட்டச் செயலர்களோ, மாவட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஈடாக எவரும் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். அதனால், பல தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளி விட்டனர் அல்லது தங்கள் ஆட்களை நிறுத்தினர். வெற்றிக்காக வேட்பாளர் என்பது தான், தி.மு.க.,வின் முந்தைய தாரக மந்திரம். குறிப்பிட்ட நபருக்காக சீட்டு என்ற காங்கிரஸ் வியாதி, இந்தத் தேர்தலில், தி.மு.க.,வையும் லேசாக தொற்றிக் கொண்டதைக் காண முடிந்தது."

கடுமையான தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று மட்டுமல்லாமல்,எங்கும் எதிலும் ஊழல், அரசு இயந்திரத்தின் மெத்தனம் எல்லாவற்றையும் தேர்தல் நேரங்களில் அளிக்கிற வாக்குறுதிகள், இலவசங்களில் மறக்க வைத்து விட முடியும் என்பது ஒன்றே திமுகவின் நினைப்பாக இருந்தது. போதாக்குறைக்கு திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தல்களில் வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்க்கப் பட்ட அ"னா பார்முலா வேறு! நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பது திமுக விஷயத்தில் உண்மையாகிப் போனது.

ஆனால், திமுக ஒன்றை மறந்து விட்டது மட்டும் நிச்சயமாக இந்தத் தேர்தல்களில் பிரதிபலித்தது. முந்தைய தேர்தல்களில் எந்த அளவக்கு அரசு இயந்திரத்தை துஷ்ப்ரயோகம் செய்யப்பட்டதோ, பணத்தை வீசி இறைத்து தேர்தல்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டதோ அந்த அளவுக்கு, இந்தத் தேர்தல்களில்,அதுமாதிரி நடந்து விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக இருக்கும் என்பது தான் அது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த அளவுக்கு ஜனங்களுடைய ஆதரவைப் பெறும் என்பதோ, மதுரை இளவரசரே முடக்கி வைக்கப் படுவார் என்பதோ திமுக எதிர்பார்க்காத விஷயங்கள். திமுக தலைவரே அறிவிக்கப் படாத எமெர்ஜென்சி என்றெல்லாம் புலம்புகிற மாதிரியாகிப் போனது!

அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் மீதான தனது அதிருப்தியை முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.அதே நியாயம் அரசியல் வாதிகளுக்கு  மட்டும் கிடையாது  போல!

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கைமாறியதில் தயாளு அம்மாள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாததற்கு அவருக்குத்  தமிழ் தெரியாது, சரத்துக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து விட்டார் என்று காரணம் கூறும் சிபிஐ, ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.

இந்த மினிட்ஸே பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் தயாளு அம்மாளை வழக்கில் சேர்க்காமல் தப்புவிப்பதற்காக தயாரிக்கப்பட்டது என்றும் கருதப்படும் நிலையில், மே மாதம் 6 ஆம் தேதி சரத்குமாரும் கனிமொழியும் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அதுபற்றி விவாதிப்பதற்காக கூடிய தி.மு.க உயர் நிலை கூட்டத்தில் கலைஞர் பேசும்போது, "நான் எப்போதும் கட்சியைக் காட்டிக்கொடுப்பவனல்ல. என்னைக் கைது செய்தபோதெல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றவன்" என்று கூறியுள்ளது, கனிமொழியின் கைது தவிர்க்கமுடியாதது என்று கலைஞரே நம்புவதாகத்தான் கருதமுடிகிறது. அவ்வாறு கைதுசெய்யப்பட்டால், கட்சிக்கு எதிராக காட்டிக்கொடுக்காதே என தன் மகளுக்குக் கலைஞர் தெரிவித்த செய்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் மனம் விட்டு பேச நிறைய இருக்கிறது" என கனிமொழி கூறிய பூடக கருத்தும் இதையே உறுதிபடுத்துவதாக உள்ளது.

இது போக, அமலாக்கத்  துறை விசாரணைக்கு நாளை (5/5/11)  ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. நாளை மறுநாள் ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதி மன்றம் முன்னால் ஆஜராகும்படி சம்மன்! கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்றே செய்திகள்  கசிந்து கொண்டிருக்கின்றன. நேற்றிலிருந்து திமுக அமைச்சர்கள் டில்லியில் முகாமிட்டு, கைது நடவடிக்கையைத் தவிர்க்க அல்லது ஜாமீன் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதும், சி ஐ டி  நகர் வீட்டில் மகள், வீரமணி உட்படப்பலருடன் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தியதும், கருத்துக் கணிப்புக்களை விட, கனிமொழி கைது என்றாகிவிடக் கூடாது என்பதில் மட்டும் தான் திமுக அதிக கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

திமுகவின் நினைப்பு சரியா ,கருத்துக் கணிப்புக்கள் இவைகளை எல்லாம் பிரதிபலிக்கிறதா இல்லையா என்பது இன்றைக்குப் பத்தாம் நாள் தெரிந்துவிடும்!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்!

இத்தனை கூத்துக்களைப் பார்த்த பிறகும், இப்போதுள்ள தேர்தல் முறையில் ஜனநாயகம் பிழைத்திருக்கும் என்று நம்புகிறீர்களா?

தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? ஒவ்வொரு கட்சிக்கும் அது பெறுகிற அதரவு வாக்குகளின்  அடிப்படையில் மட்டும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்கிற முறைக்கு மாறவேண்டிய அவசியம் புரிகிறதா? ஊழல் குற்றச்சாட்டு, அல்லது சரிவர செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை வேண்டுமே!

இதையெல்லாம் குறித்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

சொல்வதைக் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



 

1 comment:

  1. இத்தனை கூத்துக்களைப் பார்த்த பிறகும், இப்போதுள்ள தேர்தல் முறையில் ஜனநாயகம் பிழைத்திருக்கும் என்று நம்புகிறீர்களா? என்னுடைய கேள்வியும் இதுவே .......

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!