பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் காங்கிரஸ்..!



ஏதோ ஒரு காலணா அரையணாப் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தால் கூடப்போதும், இந்தக் காங்கிரஸ்காரர்களுக்கு வரும் லொள்ளு, குசும்புக்கு அளவே கிடையாது என்பதுபோலத் தான் தோன்றுகிறது! தேர்தல் முடிவு வருவதற்கு முன்னால், வரிசையாகக் காங்கிரஸ் காமெடிப் பீசுகள் கருணாநிதியை அவரது வீட்டுக்கே போய்ச் சந்தித்து, திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்! ரிசல்ட் வந்த நிமிடத்தில் இருந்து ஒரு ஈ, காக்காய் கூட அறிவாலயம், கோபாலபுரம் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை!

 
தோல்விக்கு சால்ஜாப்பு, புள்ளிவிவரம் சொல்லி சமாளிக்க முடியாத படிக்கு, திமுகவுடன் சேர்ந்ததால் தான் தோற்றோம் என்பதைக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் கூடத் தெரிந்து கொள்கிற மாதிரி ஆனதில், வாயைத் திறக்க முடியாத படிக்குக் கூனிக் குறுகி நின்று கொண்டிருக்கும் நேரத்தில்  கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு திஹார் சிறைக்குப் போக நேரிட்டது.
 குவத்ரோச்சிக்கு இருந்த கொடுப்பினை கனிமொழிக்குக் கிடைக்குமா?
ரெண்டுபெண்டாட்டிக்காரனாக இருப்பது எவ்வளவு கொடுமை என்பது, எவரும் சொல்லாமலேயே எல்லோருக்கும் புரிந்தது! இருபது வச்சிருந்ததுக்கே உள்ளே என்றால் அறுபதை மட்டும் வெளியே விட்டு வைப்பேனா  என்று கொஞ்சம் மிரட்டலாகவே கொஞ்சினால் நீங்கள் தான் என்ன செய்வீர்கள்!!மனம் விட்டுப் பேச நிறைய இருக்கிறது என்று உள் வயணம் அத்தனையையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டால் என்னாகிறது?
Karunanithi sulks, Congress reaches out இப்படி கருணாநிதி  மனம் நொந்து அமைதியாக வெதும்பினாராம், காங்கிரஸ் கட்சி ஆறுதல் சொன்னதாம்! குலாம் நபி ஆசாத் சொல்லி இருக்கும் ஆறுதலை இந்த லிங்கில் பாருங்கள்! காங்கிரஸ்காரனுக்கு இருக்கும் குசும்பு, லொள்ளு எத்தனை என்று உங்களுக்கே புரியும்!
 

இடுக்கண் களைகிற நட்பு இல்லை காங்கிரசுடையது! இடுப்பில் இருப்பதையும் உருவிக் கொண்டு  ஓட விரட்டுகிற கட்சி காங்கிரஸ் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டது கிடக்கட்டும், இதை வாசிக்கிற உங்களுக்காவது புரிகிறதா?

 
நேற்று காங்கிரஸ் மேலிடம், டில்லியிலேயே இல்லை. காஷ்மீருக்கு ஒரு அவசரப் பயணமாகப் போய்விட்டதாக செய்திகள் கசிந்தன. வியாழக் கிழமை வரை காத்திருந்து பார்த்துவிட்டுப் போகலாம் என்று பானா சீனா சொன்னதாகவும் தகவல். இன்றைக்கு, டில்லி உயர்நீதி மன்றம், சிபிஐக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துவிட்டு, ஜாமீன் மனு மீதானசுப்ரீம் கோர்ட்டின்  விசாரணையை வருகிற முப்பதாம் தேதிக்குத்தள்ளி வைத்து விட்டது.


 
"சுப்ரீம் கோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடக்கும் வழக்கு  இது;ஒரு சிறப்பு நீதிமன்றமும் இயங்கிவருகிறது.சுரேஷ் கல்மாடி வழக்கு உட்பட இதில் எந்தவிதத்திலும் தலையிடுவதில்லை என்ற எங்கள் நிலையை கருணாநிதியும் புரிந்து கொண்டிருக்கிறார். ஆகையால், காங்கிரஸ்-திமுக உறவில் கனிமொழி விவகாரம் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று குலாம் நபி ஆசாத் பேசியதை, பேரன்கள் டிவியும், கலைஞர் டிவியும் போட்டிபோட்டுக் கொண்டு மாலை ஒளிபரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது பரிதாபம் தான் ஏற்பட்டது.

 
உள்ளூர்க் காங்கிரஸ்காரர் ஒருவர் இன்றைக்கு தினமணியில் எழுதியிருக்கிற இந்தக் கட்டுரையையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்!

தேர்தல் முடிவு ஓய்வல்ல... தண்டனை!  
நெல்லை கண்ணன் கட்டுரை

First Published : 24 May 2011 03:55:53 AM IST

தேர்தல் தெளிவான முடிவைத் தந்துள்ளது. முதல் பெருமை தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தால், அடுத்த பெருமை தமிழக மக்களைச் சேர்ந்தது. ஆமாம், குழப்பமில்லாத தெளிவான முடிவு. ஜனநாயகத்தை மதிக்காமல் ஒரு குடும்பத்தினர் செய்த கொடுமையான தவறுகளுக்குச் சரியான தண்டனையைத் தந்துள்ளனர்.

தொண்டர்களே இல்லாத தலைவர்களால் நிறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் பெற்றிருக்கும் கேவலமான தண்டனை தமிழினம் அறிவாற்றலில் சிறந்தது, உயர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறது.

மக்கள் தனக்கு ஓய்வளித்திருப்பதாகப் பெரியவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தம் மக்களைக் குறித்துத்தான் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்க முடியும். ஏனென்றால், தமிழக மக்கள் தந்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. அரச பரம்பரைபோல கருணாநிதியுடைய மொத்தக் குடும்பமும் அவரது கட்சியினரின் குடும்பங்களும் தமிழ் நாட்டில் நடத்திய அத்து மீறல்களுக்குத் தண்டனை.

சகோதரி குஷ்பு தமிழக மக்களுக்குத்தான் தோல்வி என்கிறார். இது நமது தலைவிதி. கருணாநிதிக்கு அடுத்து கருத்துச் சொல்லும் உரிமை திமுகவில் அவருக்குத்தான் இருக்கிறது. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா திஹார் சிறைச்சாலையில் இருப்பதால், அந்தப் பதவிக்குத் தாற்காலிகமாக நடிகை குஷ்புவை நியமித்திருக்கிறார்களோ என்னவோ. இவர்தான் தேசியத் தொலைக் காட்சிகளில் திமுகவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமே இல்லை என்று வக்காலத்து வாங்குகிறார்.

தமிழ்ப் பண்பாடு பற்றியும், தமிழர்களின் தன்மானம் பற்றியும், கற்பு பற்றிப் புதியதொரு வியாக்யானத்தை முன்மொழிந்த "தமிழச்சி' குஷ்பு பேசுவதை யார் ரசிக்கிறார்களோ இல்லையோ, தமிழினத் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் ரசிக்கிறார். வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது... இந்தியாவில் அல்ல, திமுகவில்...!

இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியோ வாய்திறக்க மறுக்கிறார். அறிவான பலர்கூட இவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் முடிவு குறித்துக் குழம்பிப் போயிருந்தனர். என்னிடம் பலர் கேட்டனர். எப்படி நீங்கள் மட்டும் 200 இடங்களில் வெற்றி கிட்டும் என்று சொன்னீர்கள் என்று.

 மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மக்கள் தமிழக மக்கள். அமைதியாகப் பதற்றம் காட்டாமல், பணம் வாங்கிக் கொள்ளாவிட்டால் சந்தேகப் படுவார்கள் என்று, கொடுத்த பணத்தையும் பல கிராமங்களில் வாங்கிக் கொண்டு, நமது பணத்தைத்தானே நமக்குத் தருகிறார்கள் என்று தெளிந்து, தேர்தல் ஆணையத்தின் நல உதவியோடு (வாக்காளர் அடையாளச் சீட்டோடு) ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர்.

 தமது குடும்பத்தினரின் அத்து மீறல்களைஎல்லாம் நியாயப்படுத்த முயன்றார் கருணாநிதி. அதில் ஒழுக்கமாக உழைத்து முன்னேறிய எத்தனை பெரியவர்களைஎல்லாம் அசிங்கப் படுத்த முயன்றார்.
 ஏவி.எம். செட்டியார் காரைக்குடியில் படப்பிடிப்புத் தளத்தைத் தொடங்கி பின்னர் சென்னைக்கு வந்து படிப்படியாக முன்னேறி இன்றும் அவரது பிள்ளைகள் அடக்கமாக இத்தனை பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற ஆணவம் இல்லாமல் "அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற குறளின் இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சூப்பர் ஸ்டார்களையும், சூப்பர் ஸ்டாரினிகளையும் தங்கள் விரலசைப்புக்கு ஆடவைத்த கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அகம்பாவத்தோடு, உழைப்பே உயர்வுதரும் என்று வாழ்ந்து காட்டும் ஏவி.எம். குடும்பத்தை உதாரணம் காட்டக் கருணாநிதிக்குத்தான் மனம் துணியும்.

 தங்கள் உழைப்பால் முன்னேறிய பலரைத் தனது முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு எல்லை மீறிய தங்கள் பேரப்பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிக்கை தந்தாரே. அதைப் பார்த்த தமிழக மக்கள் ஓய்வல்ல, தண்டனை தந்துள்ளார்கள்.

ஒரு தலித் வழக்கறிஞர் ராசாவை திகார் சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டு தனது மகள் கனிமொழிக்காக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீதிமன்றத்துக்கே அனுப்பிவிட்டு வழக்கறிஞர் பெரியவர் ராம் ஜேட்மலானியைவிட்டு எல்லா ஊழல்களையும் ராசாதான் திட்டமிட்டுச் செய்துள்ளார் என்று நீதிமன்றத்திலேயே சொல்லவைத்து எப்படியேனும் கனிமொழியைக் காப்பாற்ற முயன்ற அசிங்கமான அநியாயத்துக்காகத் தலித்துகள் கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள். இன்னும் ராசா திமுக நாடாளுமன்ற உறுப்பினர்தானே?

ஒரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்திலேயே மகளுக்காகக் காட்டிக் கொடுத்த உங்கள் துரோகத்துக்காக உண்மையான திமுக உடன்பிறப்புகளும் சேர்ந்து கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள்.
 உங்கள் இலவசங்கள் சிறு குழந்தைகளிடம் தோடு கம்மலைத் திருடுகிற திருடர்கள் அவர்களுக்கு வாங்கித் தருகிற மிட்டாய் போன்றது என்று மக்கள் புரிந்து கொண்டதன் தண்டனை இது.

பல இடங்களிலே தாங்கள் வழங்கிய இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் குப்பைக்கு வந்துவிட்டன என்பதைச் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மக்களுக்குக் காட்டிக்கொடுத்தன.

இந்திரா காந்தியை மட்டும் மேடைதோறும் அவசர நிலைத் தவறுகளுக்கு அவர் சென்னை கடற்கரைக் கூட்டத்திலே மன்னிப்புக் கேட்டார் என்று தேர்தல் கூட்டங்களிலேகூட நல்ல மானமுள்ள காங்கிரஸ் நண்பர்கள் இளங்கோவன் போன்றோரை வைத்துக்கொண்டு சொன்னீர்களே. அப்போதாவது இந்திரா காந்தியே மன்னிப்புக் கேட்டுள்ளாரே, நமது குடும்பத்தினர் செய்த தவறுகளுக்கு நாமும் மன்னிப்பு கேட்போம் என்று தங்களுக்குத் தோன்றவே இல்லையே, ஏன்?

கனிமொழி ஒரு பெண் என்கிறார் அவரது வழக்குரைஞர் ராம் ஜேட்மலானி. இப்போது தனது மகளுக்காக வாய்தா வாங்குவதிலும் ஜாமீன் வாங்குவதிலும் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறார் பெரியவர் கருணாநிதி. ஜெயலலிதா நீதிமன்ற விதிமுறைகள்படி வழக்கில் வாய்தா வாங்குவதைக் கண்டித்து நாடு பூராவும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறை என்று உணரவில்லை. இன்று அதே நீதிமன்றத்தில் கனிமொழி பெண் என்கிறீர்கள்.

 நீதிமன்றத்திலே ராசாத்தி அம்மாள் காலில் தலித் இளைஞர் ராசா விழுந்து வணங்குகின்றாரே, அதுவும் ஒரு வழக்கறிஞர் ஏன்? ஜெயலலிதா காலில் கழகத் தோழர்கள் விழுந்தால் மேடைக்கு மேடை அவரைக் கேலி செய்வீர்களே. ராசா ஏன் ராசாத்தி அம்மையார் கால்களிலே விழுந்தார்? அவருக்கு ராசாத்தி அம்மாள் என்ன உறவு? ஓர் அமைச்சர் அல்லது கட்சிக்காரர் முதல்வரின் காலில் அல்லது கட்சித் தலைவரின் காலில் விழுந்து ஆசிபெறுவது தமிழனின் தன்மானத்துக்கு இழுக்கு என்று வாய் கிழியப் பேசியவர்கள் "இப்போது தனது துணைவியின் காலில் முன்னாள் அமைச்சர் விழும்போது வாய்மூடி மௌனியாக இருக்கிறாரே, ஏன்?

கடைசியாக ஒன்று, நீங்கள் யாரையும் ஏசியது இல்லை என்கிறீர்கள். அரசியல் நாகரிகம் பற்றி உபந்நியாசம் செய்கிறீர்கள். மதுரை மாநகராட்சித் தேர்தல். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சொன்னார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மக்கள் பணிகளில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். அதற்கு நீங்கள் மேலமாசி வீதிப் பொதுக் கூட்டத்தில் சொன்ன பதில் அரசியல் அநாகரிகத்தின் உச்சம். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் நீங்கள் நெடுமாறன் அண்ணாச்சிக்கு அரசியல் நாகரிகம் பற்றி எழுதுகிறீர்கள்.

அந்த மாநகராட்சித் தேர்தலிலே பணியாற்றிக் கொண்டிருந்த நாங்கள் மேலமாசி வீதியில் தாங்கள் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றைக் கேட்டோம். நான் கேட்ட உங்களின் ஒரே பொதுக்கூட்டம் அதுதான். அதில் சொன்னீர்கள் எம்.ஜி.ஆர். முதல்வராக இருப்பாராம் நான் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமாம்.

அடுத்துச் சொன்னீர்களே அதுதான் பண்பாட்டின் உச்சம். அவர் கல்யாணம் செய்வாராம். நான்... ..என்று இடைவெளி விட்டீர்களே. அந்தத் தரக்குறைவான கருணாநிதியை மக்கள் மறந்துவிடவில்லை.
 மக்கள் உங்களுக்கு அளித்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. உங்களது அநாகரிக அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கிடைத்திருக்கும் தண்டனை இது!


தேர்தலில் தோற்றால் தண்டனை, ஜெயித்தால் சாதனை, ஜெயித்தவன் செய்யும் மொள்ளமாரித்தனம் அத்தனைக்குமே மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டதாகக் கதைப்பது காங்கிரஸ்காரனுக்கும் கழகங்களுக்கும் உண்டான தனிப்பெரும் வியாக்கியான வியாதி! இந்த மனிதரையும் விட்டு வைக்கவில்லை!
நெல்லை கண்ணன் காங்கிரசில் பொறுப்பான பதவியில் இருந்தவர். கவிஞர், மேடைப் பேச்சாளர், வலைப்பதிவரும் கூட! 2006 தேர்தல் சமயத்தில் நெல்லை கண்ணன்  பேசியதும் கூட சில சில்லரைத் தவறுகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் கொஞ்சம் நயமாக இருப்பதாகத் தான் தோன்றுகிறது!


முந்தின பதிவுகளில் ராஜசூரியன் என்ற நண்பர் வந்து காங்கிரஸ் ஒட்டு கூடவே இல்லை என்று வாதம் செய்து கொண்டிருந்தார். இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் வாங்கிய ஓட்டுக்களை ஒப்பிடும்போது, இந்தத்தேர்தலில் காங்கிரஸ் வாங்கியது கொஞ்சம் கூடத்தான்! ஆனால் இன்னொரு வினோதமான விஷயமும் இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது! ராஜசூரியன் தன காலரைத்  தூக்கிவிட்டுக் கொள்ளலாம்!

காங்கிரஸ் கட்சியில் எழுபது லட்சம் பேர் உறுப்பினர்களாம்! இளைஞர் காங்கிரசில் பதினாலு லட்சம்! சமீபத்தில் சேர்த்தது மூன்று லட்சம் ஆக மொத்தம் எண்பத்தேழு லட்சம் பேர்! இத்தனை ஓட்டு, தேர்தலில் கிடைக்கவில்லையே என்று காங்கிரஸ் மேலிடம் தங்கபாலுவிடம் கேட்டதாம்!

காங்கிரசுக்குக் கணக்குப் பார்க்கக் கூடத் தெரியுமா என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் அடங்கவில்லை. 

2 comments:

  1. அதுசரி.......கழகத்தில் உள்ள எவரும் அல்லது காங்கிரசில் உள்ள எவருமாவது இவைகளை படிப்பார்கள்தானே? படித்தும் ஆகப்போவது ஒன்றுமில்லை அவர்களுக்கு ஆனால்......................உணர்ந்துகொள்வார்கள் அல்லவா?

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    எவர் படிப்பார், அவரது அரசியல் சார்பு என்ன என்பதைக் கண்டுபிடிக்கும், அல்லது அறிந்து கொள்ளும் அனுவவ ஞானம் இன்னும் கைவரவில்லை! ஆனால் இங்கே ஒரு விழிப்புணர்வு, இதெல்லாம் சரிதானா என்ற கேள்வியுடன் ஆரம்பித்து வைக்கப்படுகிறது என்பதற்கு மேல் யோசித்ததில்லை

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!