தேர்தல் 2011! புள்ளிவிவரங்களும் உண்மை நிலவரமும்!




முந்தைய பதிவுகள் இரண்டிலும், திரு ராஜசூரியன், தாமிரபரணி என்ற பெயரில் இரண்டு நண்பர்கள் தமிழகத் தேர்தல் முடிவுகளை தாங்கள் புரிந்துகொண்ட கோணத்தில் பின்னூட்டங்களாக எழுதி இருந்தார்கள். திரு ராஜசூரியனுக்கு, காங்கிரஸ் போன தேர்தலைவிட அதிக  வாக்குகள் வாங்கியிருக்கிறது என்று சொன்னதில் உடன் பாடில்லை!

2006 தேர்தலில் 27,65,768 வாக்குகள் வாங்கியிருந்த காங்கிரஸ், 2011 தேர்தலில், 34,26,247 வாக்குகள் வாங்கியிருப்பது குறைந்திருக்கிறதா, கூடியிருக்கிறதா?

அவருடைய வாதம் காங்கிரஸ் இந்தத்தரம், அதிகத் தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறது! அந்த வாதப்படியே, காங்கிரஸ், திமுக எதிர்ப்பு அலையை மீறி, திமுகவின் ஆதரவு ஓட்டுக்கள் உண்மையிலேயே விழுந்தது என்று சொல்ல முடியாத நிலையில், தங்கபாலுவுக்கும், இதர கட்சி வேட்பாளர்களுக்கும் கட்சியிலேயே இருந்த எதிர்ப்பையும் மீறி, அப்புறம் ஐந்தாறு வருடங்களாக ஈழத்தமிழருக்கு ஆதரவாகக் காங்கிரசைத் தோற்கடித்தே ஆகவேண்டும் என்ற பிரச்சாரத்தையும் மீறிஇத்தனை வாக்குகள் என்றால் அதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது?

தாமிரபரணி என்ற பெயரில், ப்ரொபைல் விவரம் எதுவும் இல்லாததால் என்னைப் பொறுத்தவரை அனானிதான், அவருக்கு ஈழத்ததமிழர் பிரச்சினை தான் முன்வந்து நிற்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழ்நாட்டில் கொஞ்சம் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டுபண்ணியதைத்  தவிர, தேர்தல் முடிவுகளில் கொஞ்சம் கூடப் பிரதிபலிக்கவில்லை என்பது சென்ற தேர்தலில் நன்றாகவே நிரூபிக்கப்பட்டது. இந்தத்தேர்தலிலுமே கூட, அதுதான் சரி என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்பக்கங்களில் தேர்தல் முடிவுகள் அலசப்படுவது, இந்தத்தேர்தல் முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுவதன் அவசியத்தைக் குறித்து ஏற்கெனெவே எழுதிக் கொண்டிருப்பதை வலியுறுத்தத்தான்! இப்போதுள்ள தேர்தல் முறையில், நல்லவர்கள் தேர்தலில் ஜெயிக்க முடியாது!

கனிமொழி விவகாரம் என்னதிசையில் நகர்கிறது என்பது இன்னும் ஒருமணிநேரத்துக்குள் தெரிந்துவிடும். அதற்குள், தினமணி நாளிதழில், திரு என் முருகன் என்பவர் எழுதிய ஒரு செய்திக் கட்டுரை, இந்தத்  தேர்தல் முடிவுகளைப் பற்றி, சுவாரசியமான சில விஷயங்களைச் சொல்கிறது. அவர் சொல்வது என்னவென்று  கொஞ்சம் பார்த்துவிடுவோமா?


மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றி!

கட்டுரையாளர்: திரு என் முருகன

First Published : 20 May 2011 03:39:25 AM IST


தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எல்லாவிதமான கருத்துக் கணிப்புகளையும் பொய்ப்பித்து விட்டிருக்கிறது. அதிமுக எதிர் பார்த்ததையும்விட அமோகமாக வெற்றிவாகை சூடியுள்ளது. ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பல காரணங்கள் ஆளுங்கட்சியின் தோல்விக்கும் அதிமுகவின் மிகப்பெரிய வெற்றிக்கும் உதவியுள்ளன.

தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய தாக்கங்கள், மூன்று அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளன. தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகியவற்றின் செயல்பாடுகள் இனி எப்படி இருக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முதலாவதாக, திமுகவின் கட்டுக்கோப்பான கட்சி அமைப்பே கலைந்து போய்விடக் கூடும் வகையில், 2ஜி ஊழல் வழக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உருவாக இருக்கும் போட்டிகள் பற்றி பல ஹேஷ்யங்களும் விவாதங்களும் உருவாகியுள்ளன.

எல்லா ஆளுங்கட்சிகளும் செய்வதுபோன்ற ஊழல்களைத்தான் நாமும் செய்கிறோம் என்ற ஒரு மனநிலை திமுகவுக்கு எப்போதுமே உண்டு. ஊழல் செய்தாலும் தங்கள் கட்சி வளர்ச்சி அடையும் என அதன் தலைவர் கருணாநிதி போடும் கணக்கு இருவகைப்படும். ஒன்று ஓட்டு வங்கி அரசியல். மற்றொன்று பத்திரிகைகள், ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் செயற்கையான விளம்பரச் செய்திகளை உருவாக்கி மக்களின் கவனத்தைத் திருப்பி ஆளும் திமுகவுக்கு ஆதரவு திரட்டுவது.

ஓட்டு வங்கி அரசியலால் பொதுநலம், நிர்வாகம், நேர்மை ஆகியன பாதிக்கப்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாத முதல்வராகக் கருணாநிதி இருந்து வந்திருக்கிறார் என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல். அதற்கு உதாரணமாக அரசு ஊழியர்களின் ஆதரவு இருந்தால் தேர்தலில் ஜெயிப்பது சுலபம் என்ற எண்ணத்துடன் தேவைக்கு மேல் அவர்களுக்குச் சம்பள விகிதங்களை வழங்குவதைக் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் அமரும்போதெல்லாம் செய்து வந்திருக்கிறார். ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் விஜிலன்ஸ் துறையில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டிய அதிகாரிகள் பலருக்கும் அவற்றிலிருந்து விடுபட வழிசெய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அவரது அலுவலகம் கடந்த ஆட்சியில் அரங்கேற்றியது.

இதன் பலனாக அரசுத்துறையின் உயர்மட்ட, நடுத்தர அதிகாரிகள் பலரும் தாங்கள் என்ன செய்தாலும் விசாரணைகள் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்துதல், தண்டனைகள் வழங்கப்படுதல் எனும் நடவடிக்கைகள் இனி கிடையாது என்ற முடிவுக்கு வந்து அலுவலகங்களில் சாதாரண வேலைகள்கூட நடப்பது நின்றுவிட்டது.  

இதில் திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் எதிர்பார்க்காத ஒன்று பெருவாரியான அரசு ஊழியர்களும் அதிகாரிகளுமே இந்த நிர்வாக ஒழுங்கீனங்களை விரும்பவில்லை எனும் அம்சமே!

நடந்து முடிந்த தேர்தலில் அரசு ஊழியர்களில் பெரும் பாலானவர்கள் திமுகவின் ஊழலையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் விரும்பாமல் எதிர்த்து ஓட்டளித்துள்ளனர். தேர்தல் முடிவுகளை மகிழ்ச்சியுடன் வரவேற்று சில டி.எஸ்.பி., தாசில்தார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பேசும் போது, ""இனிமேலாவது அரசு அலுவலகங்கள் சரியான நேரத்துக்குத் தொடங்கி, அரசு வேலைகள் ஒழுங்காக நடந்து, நமது மாநில நிர்வாகம் பழைய நிலைமைக்கு வரும்'' என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படும் நடவடிக்கைகளிலும் அரசியல் புகுந்து எது சட்டப்படி குற்றம், எது நியாயம் என்ற நோக்கத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் சட்டத்தை மீறிக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள், எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் எனப் பார்க்கும் கலாசாரத்தை திமுக வளர்த்துவிட்டது. இது சட்டவிதி முறைகளிலான ஆட்சிமுறைக்குச் சாவுமணி அடித்து அடுத்த நிர்வாகச் சீர்கேட்டு அம்சமாகியது.

பத்திரிகைகளுக்கு அளவுக்கு மீறிய விளம்பரங்களை அளித்து, முதல்வரின் புகழ்பாடச் செய்து, ஆளுங்கட்சியின் பல நிர்வாகச் சீர் கேடுகளும் வெளிவராதபடி செய்திகள் இருட்டடிக்கப்பட்டன.  

முதல்வர் மற்றும் ஆளும் கட்சியினரின் விளம்பரங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எரிச்சலை உருவாக்கியது.

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்கிற அடிப்படைப் பாடம்கூடத் தெரியாமல் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் திரும்பும் இடங்களிலெல்லாம் ஃப்ளெக்ஸ் பேனர்களிலும், பத்திரிகைகளிலும் முகம் காட்டியது பொதுமக்களை அவர்கள்மீது அருவருப்புக்கொள்ள வைத்தது. இதுவேகூட முந்தைய திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணி.

இனி திமுகவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

தாங்கள் செய்த தவறுகள் என்ன என்பதை ஆராய்ந்து அவற்றைத் தவிர்த்து மறுபடியும் மக்கள் செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு திமுக வருமா? அல்லது அடுத்துவரும் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்கிற குருட்டு நம்பிக்கையுடன் கட்சியின் நடவடிக்கைகள் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸின் ஓட்டு வங்கி வெகுவாகச் சரிந்துவிட்டது, இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ்.

இது படுதோல்வி என்பதால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கரைந்துவிட்டது எனும் உண்மையை உணர்ந்து உடனடியாகப் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துக் கட்சியை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லுமா தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை எனும் கேள்வி எழுகிறது.  
மற்றைய மாநிலங்களில் காங்கிரஸ் நடந்துகொள்ளும் வழிமுறையைக் கூர்ந்து நோக்கினால், இதுபோல் நடைபெறாது எனப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது ஒரு மாநிலத்தில் ஒரு பிராந்தியக் கட்சி அதிக பலத்துடன் இருந்தால் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அதன் மூலம் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தாலே போதும் என்கிற மனநிலைக்குத் தில்லி தலைமை வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன.  

அந்தப் பாணியில்தான் மாறி மாறி திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்திலிருந்து சுமார் 10 எம்.பி. தொகுதிகளில் வெற்றியடையும் நடைமுறையைப் பின்பற்றுகிறது காங்கிரஸ்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஆசையுடனும், மத்திய அரசின் ஆதரவு மாநில அரசின் நடவடிக்கைகளுக்குத் தேவை என்ற காரணத்துக்காகவும் திமுகவானாலும், அதிமுகவானாலும் தங்களுடன் கூட்டணி அமைக்கும் என காங்கிரஸ் தலைமை நம்புகிறது.

தமிழக காங்கிரசாரில் பெரும்பான்மையானவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைப்பதை வெளிப்படையாகவே விமர்சித்துக் கட்சியின் தலைமைக்குத் தெரிவித்தார்கள். ராகுல் காந்தியின் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கோஷமிட்டு ""திமுகவுடன் கூட்டணி தொடரும்'', எனப் பேசிய ஒரு எம்.பி.யைப் பேசவிடாமல் உட்காரச் செய்தனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடங்கி, ஜி.கே. வாசன், ப. சிதம்பரம் வரை தில்லி தலைமையிடம் திமுகவின் ஊழலும், குடும்ப அரசியலும் தமிழக மக்களிடம் பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது என எடுத்துக் கூறியதையும் மீறித் தில்லி தலைமை சென்ற சட்ட சபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது
.
2013-ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துத் தமிழகத்தில் 10 எம்.பி.க்களை பெற்றால் போதும் என்கிற திட்டத்துடன்தான் ஜெயலலிதாவிடம் சோனியா காந்தி தொலைபேசியில் பாராட்டுதல்களைத் தெரிவித்து தேநீர் விருந்துக்கு வரவேண்டும் என அழைத்திருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதிமுக, தனது மிகப்பெரிய வெற்றியை எப்படிக் கையாளப் போகிறது எனும் கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன்னர் பல பொதுக் கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரத்தின்போதும், வெற்றிக்குப் பின் அளித்த பேட்டியிலும் அதிமுக தலைவர் ஜெயலலிதா, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவேன், தாழ்ந்துபோன மாநில பொருளாதாரத்தைச் சீர்படுத்துவேன் எனவும், சட்ட விதிமுறைகளிலான ஆட்சிமுறையை, அதாவது "அட்மினிஸ்ட்ரேஷன் த்ரூ ரூல் ஆஃப் லா'  நிலைநாட்டுவேன் எனக் கூறியது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி ள்ளது. நிர்வாகம் மிக அதிகமாகச் சீரழிந்து, ஆட்சிமுறை தமிழ்நாட்டில் ஸ்தம்பித்துள்ளது என தன்னைச் சந்தித்த பலரிடம் மனவருத்தத்துடன் ஜெயலலிதா கவலையுடன் தேர்தலுக்குமுன் கூறிவந்தார். எனவே அதைச் சரிசெய்ய முழு முயற்சியை அசுர வேகத்தில் தொடங்குவார் என மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும், மக்கள் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை மிகுந்த கோபத்துடன் எதிர்த்து வாக்களித்துள்ளார்கள். நல்லாட்சியை அதிமுக வழங்கினால் மட்டுமே மீண்டும் மீண்டும் அக்கட்சியே தமிழகத்தில் ஆட்சி செய்யும் சூழ்நிலை உருவாகும்.

தமிழக மக்கள் திருமங்கலம், இடைத்தேர்தல் தொடங்கி திமுகவின் புதிய நடைமுறையான ஓட்டுக்குப் பணப்பட்டுவாடா செய்து பாமர மக்களின் ஓட்டுகளை வாங்கித் தேர்தலில் வெற்றி பெறுவதை ஒழித்துக் கட்டியது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள்கூட பணம் கொடுத்தவர்களை ஏமாற்றிவிட்டு தங்கள் மனசாட்சியின்படி அதிமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இதுவரை திமுக வாக்கு வங்கிகளாகச் செயல்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களான பல லட்சம் பெண்கள், பணம் பெற்றுக் கொண்ட பின்னரும் அதனால் கவரப்படாமல் ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் குடும்ப அரசியலை எதிர்த்து வாக்களித்தது ஜனநாயகத்தின் வளர்ச்சியும் பணநாயகத்தின் வீழ்ச்சியும் தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்டது என்பதைக் காட்டுகின்றன.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் எனப் பகுதிவாரியாக ஜாதி சார்ந்த வாக்கு வங்கிகளை உருவாக்கித் தேர்தலில் வெற்றிபெற்று பின் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் மட்டும் வளமாக்கிக் கொண்ட அரசியல் தலைவர்கள் பலரும் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது நமது மாநிலத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களை வழிநடத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்களை மக்கள் வழிநடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.  

யோசித்து வாக்களித்து அரசியல் தலைவர்களை யோசிக்க வைத்திருக்கும் தமிழக மக்களைப் பற்றியும் அவர்கள் நலனைப் பற்றியும் இனிமேலாவது நமது அரசியல் கட்சிகள் யோசிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்ப்போமாக!




 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!