ஒரு புதன் கிழமை: புள்ளிராசா!கர்நாடக பல்டி! ராகுல் டிராமா!

நேற்றைக்கு, நாம் தமிழர் இயக்கத்தை ஆதரிக்கும் வழக்கறிஞர் ஒருவரிடம் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்!

"திமுக தோற்றது எதிர்பார்த்தது தான்! ஆனாலும், அவங்க (காங்கிரஸ்) அஞ்சு சீட் ஜெயிச்சது தான் ரொம்பக் கொடுமை!" என்றார்!  
உண்மையைச் சொல்லப்போனால்,சென்ற சட்ட மன்றத் தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை விட காங்கிரஸ், இந்தத்தேர்தலில் அதிக வாக்கு வாங்கியிருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்! கண்முன்னால் இருக்கும் விவரங்களைக் கூடப் பார்க்க நம்மால் முடிவதில்லை. புள்ளி  விவரங்களை  எடுத்துக் காட்டினாலும் பயனிருக்காது என்பதால்,விவாதத்தைத் தொடரவில்லை.

நடந்து முடிந்த தமிழக சட்ட மன்றத்  தேர்தல் இதற்கு முந்தைய தேர்தல்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் என்பது ஆரம்பத்தில் இருந்தே  எல்லோருக்கும் தெரிகிற மாதிரித்தான் இருந்தது.அந்த வகையில் இந்தத் தேர்தல்களில், சில கற்பிதங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன!

முதலில், காங்கிரசோடு கூட்டணி வைக்கிற கட்சி ஜெயிக்கும் என்பது! அதெல்லாம், கனவாய்ப் பழங்கதையாய்ப் போய் நீண்ட நாட்களாகிறது. திராவிடக் கட்சிகள் 28, 26 சதவீதம் வாக்கு வங்கிகளை வைத்திருந்த காலங்களில், காங்கிரசுக்கென்று 17-19 சதவீதம் வாக்கு வங்கி இருந்த காலம் ஒன்று  இருந்தது.அப்போதிருந்த கற்பிதம் இப்போதும் சரியாக இருக்குமா என்று எவரும் யோசிக்கவில்லை, அதை அப்படியே நம்பிக் கொண்டிருந்தார்கள். 

ஏனென்றால், இதுவரை ஜெயிக்கிற தரப்போடு காங்கிரஸ் இருந்தது, முதல் தடவையாக இன்றைக்குத் தலைகீழாக மாறியிருக்கிறது!

அப்படியானால், காங்கிரஸ் வாக்குவங்கி குறையவில்லையா?  

நிச்சயமாகக் குறைந்திருக்கிறது. சுமார் இருபது சதவீதத்தைக் ஒட்டி, தனித்து வாக்குவங்கியை வைத்திருந்த ஒரு தேசீயக் கட்சி, மாநிலக் கட்சிகளோடு  மாறிமாறிக் கூட்டு வைத்துக் கொண்டே வந்ததில் படிப் படியாகத் தன்னுடைய சொந்த வலுவை இழந்து, நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த விஜயகாந்தை விடக் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது என்பது பெருமைதரக் கூடிய விஷயமா? 

சென்ற 2006 தேர்தலில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளின் சதவீதம் 8.38, இப்போது 9.30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இதே மாதிரித்தான், பாட்டாளி மக்கள் கட்சி! மருத்துவர், பாமகவுடன் கூட்டணி வைக்கிற கட்சிதான் ஜெயிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்! போன தேர்தலிலேயே இந்தக் கற்பிதம் பொய்யாக்கப் பட்டது, ஏதோ தற்செயலானதல்ல,இப்போதும் அப்படித்தான் என்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. ஆனாலும், வாக்குசதவீதம் என்று பார்த்தால், சென்ற சட்ட மன்றத்தேர்தலில் 5.65% வாங்கிய கட்சி இந்தத் தேர்தலில் 5.23% தான் வாங்கியிருக்கிறது. வித்தியாசம் அதிகமில்லை. 
சென்ற சட்டமன்றத் தேர்தல்களிலேயே, வன்னியர் ஒட்டு அன்னியருக்கு ல்லை என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு, தேதிமுக ஆப்பு வைத்து, அதை இந்தத்  தேர்தலிலும் தக்க வைத்துக் கொண்டது என்பதுதான் உண்மை.

அப்படியானால் இந்தத்தேர்தலில் என்ன தான் நடந்தது?

உதயசூரியனாகத் தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் அஸ்தமன சூரியனாகிப் போனதைப் போனதேர்தலில் இருந்தே காண முடிந்ததைத் தான், இந்தத்தேர்தல் இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. 
சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகள் 26.46% தான், அப்போதே அதிமுக திமுகவை விட   ஆறு சதவீத வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடு மட்டுமே தன்னை பயில்வான் மாதிரிக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் முதல் முதலாகத் திமுகவுக்கு, சென்ற சட்டமன்றத் தேர்தல்களில் தான் எழுந்தது.

இந்தத்  தேர்தல்களில் இன்னும் நான்கு சதவீதத்தை இழந்து திமுக வெறும் 22.38% என்று சுருங்கியதில், திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் பரிதாபமாகத் தோற்க வேண்டியதாகிப் போய்விட்டது  என்று கூட, ந்தப் புள்ளிவிவரங்களை வைத்து சொல்ல முடியும்!

 
காகித ஓடம் கடல் அலை மீது ...........
போவது போலே மூவரும் போவோம்!

பாட்டு ரெடியாக இருக்கிறது!
மானம் கெட்ட தமிழன், சுரணை கெட்ட தமிழன் என்று தான் தோற்ற போதெல்லாம் தூற்றி வாரிய வார்த்தைகள் இருக்கின்றன! 
புள்ளிவிவரங்களைத்  திரித்து, தோற்றதற்கு சப்பைக்கட்டு சொல்வதற்கு ஏற்கெனெவே அனுபவம் நிறைய இருக்கிறது!


அப்புறம் என்ன, காங்கிரஸ் திமுக கூட்டணிக்குக் கம்பல்சரி ஓய்வு கொடுத்து விட வேண்டியதுதானே! என்று ஏப்ரல் முதல் தேதியன்று இந்தப்பதிவில் எழுதியது கூடக் கொஞ்சம் மாறிப் போய்விட்டது!

இரண்டு கூட்டணிகளிலும் மற்றக் கட்சிகளுடைய வாக்குவங்கியும் கிட்டத்தட்ட அப்படியே இருக்க, திமுகவின் வாக்குவங்கி மட்டும் 16.70% குறைந்து, இது உதயசூரியனில்லை, அஸ்தமித்து விட்ட சூரியன் தான் என்பதை சொல்வதாக இருக்கிறது.

அதைப் புரிந்துகொண்டதால் தான் முந்தைய காலங்களில், புள்ளி விவரங்களைக் காட்டி திமுகவின் தோல்விக்கு சப்பைக்கட்டுக் கட்ட முடிந்த கருணாநிதி, மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்து விட்டார்கள் மக்களுக்கு நன்றி என்றி குத்தலாகச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதாகிவிட்டது போல!!


ooOoo 
 

கர்நாடக அரசியலில், பாச்சா பலிக்கவில்லை என்றவுடன் பரத்வாஜ் இறங்கி வந்திருக்கிறார்! ஆக இந்த ரவுண்டில், எடியூரப்பா ஜெயித்திருக்கிறார்! சரி!

இன்னும் எத்தனை நாளைக்கு, எடியூரப்பாவுடன் தழைந்து போய்ச் சமாதானம் செய்து கொண்ட பரத்வாஜ் சும்மா இருப்பார்?

சரியாக ஊகிக்க முடிகிறவர்களுக்கு ஒரு அட்வான்ஸ் சபாஷ்!
ooOoo 
 
காங்கிரஸ் இளவரசர், உத்தர பிரதேச விவசாயிகளோடு சேர்ந்து கொண்டு தர்ணா செய்தது, கைதானது மிகப் பரபரப்பாக செய்திகளில் அடிபட்டதும், பிரதமரிடம் விவசாயிகளுக்காக ராகுல் உருகியதும்  அரசியல் டிராமாவில் நேற்றைய சீன்கள்! 

இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி அரசியலில் அனுபவமே இல்லாதவர் என்ற அளவுக்கு ராகுல் நடத்திய கூத்து ஆண்டி கிளைமாக்ஸாக இன்றைய செய்தியாகத் தொலைக் காட்சி செய்திகளில் ஆகிப் போனதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

கழகங்களிடம் மாறி மாறிக் கூட்டணி வைத்தும் கூட, ஒரு தப்பை எப்படி சூப்பராக செய்வது, அசடு  வழிவதைக் கூடப் பெரும் சாதனையாகக் காட்டிக் கொள்வது என்பதைக் கூடக் கற்றுக் கொள்ளவில்லையே!என்ன காங்கிரஸ், என்ன கூட்டணி தர்மம்!

சூனா பானா வடிவேலுவிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்ளச் சொல்லலாமோ?!


திஸ்கி ஒன்று:

இந்தப் புள்ளிவிவரங்கள்  வெளிப்படையாக சொல்லாத இன்னொரு விஷயமும் இருக்கிறது.

பிஜேபிக்கு, சென்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட இந்தத் தேர்தலில் கொஞ்சம் கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதைவிட, காங்கிரஸ் வென்ற ஐந்து தொகுதிகளில், அவர்கள் வென்ற வாக்கு வித்தியாசம், அங்கே பிஜேபி வாங்கிய வாக்குகளைவிடக் குறைவு என்பதுதான்.ஆக, சில இடங்களில் காங்கிரஸ் வென்றது கூட, பிஜேபி கூட நினைத்துப் பார்க்காத, வாக்குகளைப் பிரித்ததனால் வந்ததுதான்!
 

10 comments:

 1. காங்கிரஸ்சின் வாக்கு சதவிதம் அதிகரித்திருக்கிறதா :)))))))

  நீங்கள் கொடுத்துள்ள புள்ளிவிவரத்திலேயே தே.மு.தி.க வின் வாக்கு சதவிதம் குறைந்திருப்பதற்கு கூறப்பட்டிருக்கும் காரணத்தையே இதற்கும் பொறுத்திப்பார்ப்பதே சரியாக இருக்கும்.

  ReplyDelete
 2. அஸ்தமன சூரியப் பாசத்தோடு வந்திருக்கிறீர்கள் போல! இருந்தாலும், முதல் வருகைக்கு, கருத்துக்கு நன்றி!

  எது சரியாக இருக்கும் என்பது, புள்ளிவிவரங்களை,அதனதன் இடத்தில் சரியாகப் பார்க்கத்தெரிந்தால் மட்டுமே சாத்தியம்! இதே லாஜிக்கை திமுகவுக்கும் பொருத்தி, சென்ற தேர்தலில் போட்டியிட்டதை விடக் குறைவான இடங்களில் போட்டியிட்டதாலேயே, அதற்கு வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது என்று வாதாடவும் முடியும்!ஆனால், அது உண்மையாக இருக்குமா?

  காங்கிரஸ் தேய்ந்து, நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த விஜயகாந்துக்குக் கிடைத்ததை விடக் கொஞ்சம் கூடுதலாக வாங்கியிருக்கிறது என்பதைத் தவிர,தேதிமுகவைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லையே!

  நீங்கள் சௌகரியத்துக்கு எடுத்துக் கொண்டிருப்பது, அந்த தினமலர் புள்ளிவிவரம் குறித்தான செய்திப் படத்தில் உள்ள வார்த்தைகளை!

  நான் சொல்லியிருப்பதோ அதே புள்ளிவிவரம் எப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்பது.இரண்டும் வேறு வேறு அல்லவா! இந்தத் தேர்தலில் உடைக்கப் பட்டிருக்கும் இன்னொரு தவறான கற்பிதம், திமுக அமைத்த வலுவான கூட்டணி! வடிவேலு காமெடியில் வருகிற மாதிரி, பேஸ்மென்ட் வீக் ஆகிப்போன திமுகவால் தான் கூட்டணிக் கட்சிகளே தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று கூட இதே புள்ளிவிவரத்தை வைத்து சொல்ல முடியுமென்பதுதான் இந்தப்பதிவின் மையக் கருத்தே!

  ReplyDelete
 3. //அஸ்தமன சூரியப் பாசத்தோடு வந்திருக்கிறீர்கள் போல//
  ??????????????

  //முதல் வருகைக்கு, கருத்துக்கு நன்றி!//
  நன்றிக்கு என் நன்றி

  //இதே லாஜிக்கை திமுகவுக்கும் பொருத்தி, சென்ற தேர்தலில் போட்டியிட்டதை விடக் குறைவான இடங்களில் போட்டியிட்டதாலேயே, அதற்கு வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது என்று வாதாடவும் முடியும்!ஆனால், அது உண்மையாக இருக்குமா//
  அதுவும் காரணம் அது மட்டுமே அல்ல. குறிப்பாக அது முக்கிய காரணம் அல்ல

  //காங்கிரஸ் தேய்ந்து, நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த விஜயகாந்துக்குக் கிடைத்ததை விடக் கொஞ்சம் கூடுதலாக வாங்கியிருக்கிறது என்பதைத் தவிர,தேதிமுகவைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லையே!//
  நானும் சொல்ல வந்ததும் அக்கட்சியை பற்றி அல்ல :))))))

  //பேஸ்மென்ட் வீக் ஆகிப்போன திமுகவால் தான் கூட்டணிக் கட்சிகளே தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று கூட இதே புள்ளிவிவரத்தை வைத்து சொல்ல முடியுமென்பதுதான் இந்தப்பதிவின் மையக் கருத்தே! //
  இக்கருத்தோடு எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இதை நிறுவ //உண்மையைச் சொல்லப்போனால்,சென்ற சட்ட மன்றத் தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை விட காங்கிரஸ், இந்தத்தேர்தலில் அதிக வாக்கு வாங்கியிருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்//
  என்று சொன்னதில்தான் எனக்கு உடன்பாடில்லை. 2ஜி, ஈழம் என்று காங்கிரஸ் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டது(ஆதர்ஷ், காமன்வெல்த், பெட்ரோல் விலை உயர்வு என சொல்லிக்கொண்டே போகலாம். இவை மாநில தேர்தலில் பெரிதாய் எதிரொளிப்பதில்லை என்றாலும்) கூடுதலாய் மக்களின் வெறுப்புக்கு ஆளான திமுகவுடன் கூட்டணியும் அமைத்தது. ஆனால் மக்களின் ஆதரவு அதிகரிக்க என்ன செய்தது. தமிழகத்தில் காங்கிரசின் வாக்கு அதிகரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதே
  //காங்கிரஸ்சின் வாக்கு சதவிதம் அதிகரித்திருக்கிறதா :)))))))
  நீங்கள் கொடுத்துள்ள புள்ளிவிவரத்திலேயே தே.மு.தி.க வின் வாக்கு சதவிதம் குறைந்திருப்பதற்கு கூறப்பட்டிருக்கும் காரணத்தையே இதற்கும் பொறுத்திப்பார்ப்பதே சரியாக இருக்கும்.//
  என்று கூற காரணம்

  ReplyDelete
 4. தங்கள் கவனத்திற்கு
  http://thatstamil.oneindia.in/news/2011/05/19/sonia-holds-dicussion-with-tn-congress-leaders-aid0091.html

  நேரக்குறைவென்றால் கீழே உள்ள பத்தியை மட்டுமாவது படிக்கவும்

  காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள இந்த அடி, அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது தெரியவில்லை. காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை எந்த வெற்றிவந்தாலும் அது ஓசிதான். எனவே இந்த தோல்வியால் காங்கிரஸார் யாரும் மனம் உடைந்து போனதாக தகவல் இல்லை. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை அடித்து தரைமட்டமாக்கி விட்ட இந்த தோல்வியால் காங்கிரஸ் மேலிடம் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளது.

  ReplyDelete
 5. திரு ராஜசூரியன்!

  புள்ளிவிவரங்களை எப்படிவேண்டுமானாலும் வியாக்கியானம் செய்யலாம். ஆனால் உண்மையைக் கண்டறிய அது ஒருபோதும் உதவாது என்பது என்னுடைய அனுபவம். ஈழப்பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாக நீங்கள் சொல்வது சென்ற தேர்தலிலேயே நிராகரிக்கப்பட்ட விஷயம். திமுகவே தோற்றுவிடும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தது. ஆக, இந்தத் தேர்தலிலும் கூட அது எந்த அளவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கும், முக்கியத்துவம் இருந்திருக்கும் என்பது வெறும் ஊகமே.

  பதிவின் ஆரம்ப வரிகளைப் படியுங்கள், தினமலர் செய்திப்படத்தில் இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் வாங்கிய வாக்குகளைப் பாருங்கள், எது அதிகம் குறைவு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

  வார்த்தைக்கு வார்த்தை பின்னூட்டம் எழுதத் தெரிந்த உங்களுக்கு, "நானும் ஏதாவது எழுதுவேன்னு நம்பி வந்த உங்கள பாக்கும்போது பெருமையாதான் இருக்கு.....ஆனா எனக்கு எழுத வராதுங்கரத நினைக்கும்போதுதான்" என்று ஒரே ஒரு பதிவுடன் அதற்கு மேல் எழுதத் தோன்றவில்லை என்பது ஆச்சரியம் தான்!

  ReplyDelete
 6. ராஜ சூரியன்!

  அரசியல் ஆனா ஆவன்னா கொஞ்சமாவது தெரிந்திருந்தால், தட்ஸ்தமிழ் செய்தியில் புதிதாகத்தெரிந்து கொள்ள ஒன்றுமே இல்லை! காங்கிரசுக்கு தெற்கே மாநில ஆட்சியைப் பிடிப்பதை விட, அங்கே உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் மீதுதான் அதிக அக்கறை.காரணம் ஹிந்தி பெல்டில் இழந்த தொகுதிகளை சமன் செய்ய இது மிக முக்கியம். அந்த ஒருகாரணத்தால் தான் மாநிலக் கட்சிகளோடு சேர்ந்துகொண்டு, சட்டசபைத் தேர்தல்களில் ஒதுக்கப்படும் சீட்டுகளில் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும், நாடாளுமன்ற சீட்டுக்களில் அதிக கவனம்!

  செய்தியை மறுபடி வாசித்து, அதில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை உள்வாங்கிக் கொண்டு அப்புறம் பின்னூட்டத்தில் உங்கள் கேள்வி கருத்து எதுவானாலும் எழுப்புங்கள்.

  ReplyDelete
 7. //புள்ளிவிவரங்களை எப்படிவேண்டுமானாலும் வியாக்கியானம் செய்யலாம். ஆனால் உண்மையைக் கண்டறிய அது ஒருபோதும் உதவாது என்பது என்னுடைய அனுபவம். ஈழப்பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாக நீங்கள் சொல்வது சென்ற தேர்தலிலேயே நிராகரிக்கப்பட்ட விஷயம். திமுகவே தோற்றுவிடும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தது. ஆக, இந்தத் தேர்தலிலும் கூட அது எந்த அளவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கும், முக்கியத்துவம் இருந்திருக்கும் என்பது வெறும் ஊகமே.//
  நீங்கள் சொல்வதுபோல் ஈழம் முக்கியத்துவம் குறைவான ஒன்று என்றே வைத்துக்கொண்டாலும் அதன் குறைந்தபட்ச முக்கியத்துவத்திலும் அது காங்கிரஸ்சுக்கு ஒட்டு இழப்பை தருமே தவிர ஓட்டை அதிகரிக்காது. இன்னும் மக்கள் வெறுப்பை பெற்ற திமுக கூட்டணி, மீனவர் பிரச்சனையில் பாராமுகம், அவர்களின் தமிழ் மாநில தலைவர் தங்கபாலு புறவாசல் வழி நுழைந்து போட்டிஇட்டது என ஓட்டை இழக்க ஏகப்பட்ட காரணிகள் உண்டு (ஏற்கனவே சொன்ன ஆதர்ஷ், காமன்வெல்த், பெட்ரோல் விலை உயர்வு உடபட). இவை ஒவ்வொன்றும் குறைந்தபட்ச அளவிலாவது ஓட்டை குறைக்குமே தவிர கூட்டாது.
  திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் என கூட்டணியில் அனைவருமே மோசமாய் தோற்கும்போது காங்கிரசுக்கு மட்டும் வாக்கு கூடியிருக்கிறது என்றால் அது சென்ற தேர்தலை விட அதிக இடங்களில் போட்டிஇட்டது மட்டுமே காரணம் என்கிறேன் நான். நீங்கள் அதை மறுக்கிறீர்கள் ஆனால் ஒட்டு அதிகரிக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

  //அரசியல் ஆனா ஆவன்னா கொஞ்சமாவது தெரிந்திருந்தால், தட்ஸ்தமிழ் செய்தியில் புதிதாகத்தெரிந்து கொள்ள ஒன்றுமே இல்லை! காங்கிரசுக்கு தெற்கே மாநில ஆட்சியைப் பிடிப்பதை விட, அங்கே உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் மீதுதான் அதிக அக்கறை.காரணம் ஹிந்தி பெல்டில் இழந்த தொகுதிகளை சமன் செய்ய இது மிக முக்கியம். அந்த ஒருகாரணத்தால் தான் மாநிலக் கட்சிகளோடு சேர்ந்துகொண்டு, சட்டசபைத் தேர்தல்களில் ஒதுக்கப்படும் சீட்டுகளில் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும், நாடாளுமன்ற சீட்டுக்களில் அதிக கவனம்!
  செய்தியை மறுபடி வாசித்து, அதில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை உள்வாங்கிக் கொண்டு அப்புறம் பின்னூட்டத்தில் உங்கள் கேள்வி கருத்து எதுவானாலும் எழுப்புங்கள். //
  காங்கிரசின் கவனம் எதில் என்பதல்ல நடந்த தேர்தலில் ஒட்டு எண்ணிக்கை கூடிவிட்டது என மகிழ்கிறதா இதை படுதோல்வி என கருதுகிறதா என்பதுதான் நம் வாதத்தோடு தொடர்புடையது.
  நான் உள்வாங்கிக் கொண்ட வகையில் காங்கிரஸ்கூட இதை படுதோல்வி என்றே கருதுகிறது. ஒட்டு எண்ணிக்கை கூடிவிட்டது என எண்ணி மகிழவில்லை.

  திமுக ஒட்டு குறைவு என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை
  //சென்ற சட்ட மன்றத் தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை விட காங்கிரஸ், இந்தத்தேர்தலில் அதிக வாக்கு வாங்கியிருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்//
  //நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த விஜயகாந்தை விடக் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது என்பது பெருமைதரக் கூடிய விஷயமா? //
  இதுதான் நான் முரண்படும் இடம். விஜயகாந்தை விடக் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்குகூட காங்கிரஸ் வொர்த் இல்லை. இது போட்டியிட்ட இடங்களில் உள்ள வித்தியாசத்தின் பிரதிபலிப்பே.

  ReplyDelete
 8. திரு ராஜசூரியன்!

  ஒவ்வொரு வார்த்தை வரிக்காகப்பதில் சொல்வதில் வாக்குவாதம் தான் வளருமே தவிர, உண்மையைக் காணப்பயன்படாது. உங்களுடைய கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதையும் தாண்டிப்போகவே என்னுடைய முயற்சி இருக்கும். ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுவதல்ல.

  இந்தப்பக்கங்களில் முந்தைய பதிவுகளைக் கொஞ்சம் பொறுமையாக நேரமிருக்கும்போது பார்க்க முடியுமானால், இங்கே தேர்தல் முடிவுகளை அலசுவதே கூட, தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் உடனடியாக அவசியப்படுவதை எடுத்துக்காட்டவே! Winner takes all என்ற முறையில் ஒரு ஒட்டு அதிகம் வாங்கியிருந்தால் கூட அவன் தான் ஜெயித்தவன், தோற்றவன் வாங்கிய வாக்குகளும் அவனுடையதாகிவிடுகிறது என்ற தேர்தல் முறை மாறி, ஒவ்வொரு கட்சியும் அது அது வாங்கும் வாக்குகளுக்கு ஏற்பத்தான் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பதில் ஆரம்பித்து, ஒரே நபர் இரண்டுமுரைக்கு மேல் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கியமான பதவிகளில் இருக்க அனுமதிக்கக் கூடாது, அரசியல்வாதிகள் தேர்தலில் பங்கு கொள்ளும் வயது அறுபத்தைந்து-எழுபதுக்கு மேல் இருக்கக் கூடாது, வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்களால் அந்தந்த தொகுதி அளவில் தேர்தலுக்கு மிக முன்னதாகவே தெரிவு செய்யப்படவேண்டும் இப்படி நிறையத்தேவைப்படுவதைப் பேசுவதற்காக மட்டுமே இத்தனை அலசலும்!

  இன்னும் கூர்ந்து கவனிக்கக் கூட வேண்டாம், மேலோட்டமாகப் பார்த்தீர்கள் என்றால் கூட முந்தைய பதிவுகள் பலவற்றில், முதலில் ஒழிக்கப்பட வேண்டியது காங்கிரஸ்தான் என்று சொல்லியிருப்பதையும் பார்க்க முடியும்.அதற்கான காரணங்கள் என்னவென்றும் பேசப்பட்டிருப்பதையும் பார்க்க முடியும்.

  அதுவேறு! அந்தப்படத்தில் இருக்கும் புள்ளிவிவரங்களை வைத்து, காங்கிரஸ் போனதேர்தலில் வாங்கிய வாக்குகளை விடக் கூடுதலாக வாங்கியிருப்பதை சிறு குழந்தை கூட சொல்லிவிடும்! புள்ளிவிவரங்களைப் பரிசீலிப்பதில், அதை என்னென்ன விதத்ததில் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்பதைப் பதிவிலும் உங்களுக்கு முன் சொன்ன பதில்களிலும் கோடி காட்டியிருக்கிறேன்.

  இந்தச் சின்ன விஷயத்தைத் தாண்டி வெளியே வாருங்கள்.

  ReplyDelete
 9. புள்ளிவிவரங்களைப் பரிசீலிப்பதில், அதை என்ன விதத்ததில் அர்த்தப்படுத்திக் கொள்வது என்பதில்தான் இருவரும் முரண்படுகிறோம்

  //நீங்கள் சொல்வதுபோல் ஈழம் முக்கியத்துவம் குறைவான ஒன்று என்றே வைத்துக்கொண்டாலும் அதன் குறைந்தபட்ச முக்கியத்துவத்திலும் அது காங்கிரஸ்சுக்கு ஒட்டு இழப்பை தருமே தவிர ஓட்டை அதிகரிக்காது. இன்னும் மக்கள் வெறுப்பை பெற்ற திமுக கூட்டணி, மீனவர் பிரச்சனையில் பாராமுகம், அவர்களின் தமிழ் மாநில தலைவர் தங்கபாலு புறவாசல் வழி நுழைந்து போட்டிஇட்டது என ஓட்டை இழக்க ஏகப்பட்ட காரணிகள் உண்டு (ஏற்கனவே சொன்ன ஆதர்ஷ், காமன்வெல்த், பெட்ரோல் விலை உயர்வு உடபட). இவை ஒவ்வொன்றும் குறைந்தபட்ச அளவிலாவது ஓட்டை குறைக்குமே தவிர கூட்டாது. திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் என கூட்டணியில் அனைவருமே மோசமாய் தோற்கும்போது காங்கிரசுக்கு மட்டும் வாக்கு கூடியிருக்கிறது என்றால் அது சென்ற தேர்தலை விட அதிக இடங்களில் போட்டிஇட்டது மட்டுமே காரணம் என்கிறேன் நான். நீங்கள் அதை மறுக்கிறீர்கள் ஆனால் ஒட்டு அதிகரிக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்//

  இதற்கு நேரடியாய் பதிலளித்திருக்கலாமே :)

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!