"கடவுளின் சாபமும்" திரு.டோண்டு ராகவனின் 'யோம் கிப்பூர்' பதிவுகளும்!


"இஸ்ரேலே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது, அவசரமாக தனது வீட்டில் கூட்டப் படும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் கோல்டா மெயர் அமைதியாக அதே நேரத்தில் குமுறும் கொந்தளிப்புடனும் கோபத்துடனும் மிகத் தெளிவாக, தீர்மானமாக அவர் பேசும் வசனங்கள்தான். அந்த இடத்தை பல முறை ரீ வைண் செய்து பார்த்திருப்பேன்.

சுய மரியாதையும், தேச நலனில் அக்கறையின்மையும், ஓட்டுப் பொறுக்கி அரசியலும், ஊழலும், கையாலாகத்தனமும், பேடித்தனமும், போலித்தனமும், போலி மதச்சார்பின்மையும், ஒழுங்கீனமும், பேராசையும், லஞ்ச லாவண்யமும், ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளைத் தலைவர்களாக, பிரதமராக, ஜனாதிபதிகளாக, முதலமைச்சர்களாக, அதிகாரிகளாக, அமைச்சர்களாக, பெறப்பற்ற ஒரு சபிக்கப் பட்ட தேசத்தின் குடிமகன் என்ற முறையில் , எனக்கு கோல்டா மெயர் பேசுவதாக வரும் அந்தக் காட்சிகள் கடுமையான பொறாமை உணர்வையும்., கழிவிரக்கத்தையும், சுய வெறுப்பையும், ஆத்திரத்தையும், கோபத்தையும், ஆற்றாமையும், விரக்தியையும் ஒருங்கே ஏற்படுத்தின.

நாம் என்ன பாவம் செய்தோம் கீழ்த்தரமான பிறவிகளை நம் தலைவர்களாகப் பெற ? இந்தியாவுக்கு ஏன் இந்த சாபம் ?
சதிகாரர்களையும், தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களையும், வெளிநாட்டினரையும் நம் தலைவர்களாகப் பெற்றிருப்பது யார் போட்ட சாபம் ? “

26/11 மும்பை நகரின் மீது பாகிஸ்தானி தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப் பற்றி இணையத்தில் செய்திகளை, வலைப் பதிவர்களின் கோபத்துடன் வெளிப்பட்ட குமுறல்களைப் படித்து வந்த போது தான் வஜ்ரா என்கிற புனைபெயரில் எழுதி வரும் வலைப்பதிவரின் இந்த பதிவு February 4, 2007இல் வெளியான ஒரு திரைப்பட விமரிசனத்தைப் படிக்க நேர்ந்தது.

கடவுளின் கோபம்

தீவீரவாதிகள் ஏற்படுத்திய சேதத்தை விட முதுகெலும்பில்லாத இந்திய அரசியல் வியாதிகளும். அவர்களுக்கு சலாம் போட்டே தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்ளும் அதிகார வர்கமும் ஏற்படுத்தியிருக்கிற சேதம் மிக அதிகம்.

மிகுந்த வருத்தத்தோடும், ஆற்றாமையோடும் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், தமிழில் வலைப்பதிவர்கள் சிலர் மும்பை சம்பவங்களுக்கு இந்து தீவீர வாதிகள் தான் காரணம் என்று கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்-தேசத்தின் தலைவிதியை நொந்து கொண்டே செய்திகளை, வலைப் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது தான், மேலே சொன்ன வலைப்பதிவு கண்ணில் பட்டது.

இந்த வலைப்பதிவர் யூதர்களின் சில சமய சடங்குகளைப் பற்றியும் சில பதிவுகள் இட்டிருப்பதை திரு டோண்டு ராகவன் அவர்களின் யோம் கிப்பூர் என்ற தலைப்பிலான பதிவுகளில் தெரிந்து கொண்டு அவற்றையும் படித்ததில், எழுந்த எண்ணங்கள் இவை.

யோம் கிப்பூர்- யூதர்களின் சடங்கு பற்றி வஜ்ரா வின் வலைப்பதிவு இங்கே

"....In the seventh month, on the tenth day of the month, you shall afflict your souls, and you shall not do any work ... For on that day he shall provide atonement for you to cleanse you from all your sins before the LORD.
-Leviticus 16:29-30

யோம் கிப்பூர் என்பது மன்னிப்புக் கேட்கும் நாள் (day of attonement) என்று ஹீப்ரூவில் அர்த்தம். அது ஒவ்வொறு ஆண்டும் செப்டம்பர் அக்டோபர் மாத காலத்தில் (ஹீப்ரூ நாட்காட்டியில் டிஷிரி 10 ம் நாள்) வரும்.
இது யூதர்களின் மிக முக்கிய மத விடுமுறை நாளாகும்"

குற்ற உணர்வு, தவறுகளுக்குப் பரிகாரம் தேடுதல், இவையெல்லாம் குரங்கிலிருந்து மனிதன் ஆன பின்பு ஏற்படுகிற பரிணாம மாற்றங்கள். பொத்தாம்பொதுவாக மனம் என்றும், கொஞ்சம் வேதங்கள் உபநிஷத்கள் துணையோடு பார்த்தோமேயானால் வெறுமனே மனம் என்று சொல்வது பல படித்தரங்களுடையதாக இருப்பதை அறிய முடியும்.

யோம் கிப்பூர் மாதிரியே, வெவ்வேறு மத நம்பிக்கைகளில், இப்படி தன்னுடைய குற்றங்களை உணர்ந்து, தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சிகள், சடங்குகளாக இருப்பதைப் பார்க்க முடியும். இந்தியாவில், அந்தணர்கள் ஆவணி அவிட்டம் என்று பூணூல் அணிகிற சடங்கில் ஒரு பகுதியாக காமோகார்ஷீத் மந்திர ஜபம் இருக்கும்.
.
வேதம் விதித்த சடங்குகளைச் செய்வதற்குத் தகுதியுள்ளவனாக பூணூல் அணியும் சடங்கு இருக்கிறது. அதற்கும் பூர்வாங்கமாக, தன்னுடைய தவறுகளை உணர்ந்து, காமம் என்னை இந்த தவறைச் செய்யத் தூண்டியது, குரோதம் இந்த தவறைச் செய்யத் தூண்டியது என்ற பொருளில் வரும் இந்த மந்திர ஜபம், வெறும் சடங்காக மட்டும் செய்யாமல் பொருளுணர்ந்து செய்தால், உள்ளார்ந்த அனுபவத்தைப் பெறுவதற்குத் துணையாக இருக்கும். இல்லையென்றால், வஜ்ரா அவர்கள் தன் வலைப் பதிவில் சொல்லுகிற மாதிரி வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். இங்கே தமிழ் நாட்டில், ஏதாவது ஒரு பண்டிகை, விடுமுறை என்று வந்து விட்டால், தொலைக்காட்சியின் முன் அமர்ந்து, "நாள் முழுவதும் எங்கள் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்....பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்" என்று கூவிக் கூவி முட்டாளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களே அது போல ஆகி விடும்.

முந்தைய பதிவில் கிழக்கு பதிப்பகம் திரு பத்ரியின் வலைப் பதிவைத் தொட்டு எழுதியதன் தொடர்ச்சியாகப் பார்த்தோமானால், உயிர் தோன்றியது ஒரு தற்செயலான விபத்து அல்ல.மனம் என்பதும் குற்ற உணர்வும் மிருக நிலையில் இல்லை. தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும், இன விருத்திக்காகவும் சில அடிப்படை உணர்வுகள் மட்டுமே மனிதனுக்குக் கீழ் நிலையிலுள்ள உயிரினங்களுக்கு இருக்கின்றன. மனிதனாகப் பரிணமித்த பிறகும் கூட, மிருகங்களிலிருந்து சுவீகரித்துக் கொண்ட மிருகவுணர்வுகளில் இருந்து விடுபடுவதில்லை. அங்கே தான் மனம் என்பது, அகங்காரமாக, மிருகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிற கருவியாக, தன்னை ஒரு அடையாளத்தோடு காட்ட ஆரம்பிக்கிறது.

இப்படி மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற "நான்" என்கிற தன்முனைப்பு ஒரு கால கட்டம் வரையில் அவசியமாகத்தான் இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், அதுவே வளர்ச்சிக்குத் தடையாகி விடுகிறது. இதை நாத்திகத் தன்மையோடு கூடிய அறிவியல் சிந்தனை புரிந்து கொள்வதே இல்லை.

"மனிதன் தன் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு முரண்பாடும், ஒவ்வொரு துயரமும் ஒரு பெரிய ஒருமைக்கான முன்னேற்பாடாகவே அமைவது இறைவனது சித்தம். சடமாக இருந்த நிலையிலிருந்து உயிர் தோன்றியது. உயிரிலிருந்து மனம் தோன்றியது. சடமாக இருந்த நிலையில் உயிர்மை மறைக்கப்பட்டதாக இருந்தது போலவே உயிர்மை என்பது மனத்தின் மறைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. மனத்தையும் மிஞ்சிய பெருநிலையை அடைவதற்கே கேள்விகள் எழுந்தன.

தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதில் மனிதனுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வம் அல்லது விழைவு, அதை ஒட்டி எழுகிற தடைகள், அதையும் மீறி அடுத்து என்ன, அடுத்தது என்ன என்கிற தேடல் மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே தொடங்கி விட்டது.”

Evolution என்கிற தலைப்பின் கீழ் ஏற்கெனெவே ஸ்ரீ அரவிந்தர் அருளிய நூலின் சுருக்கமாக
இந்தப் பதிவுகளில் evolution என்கிற தலைப்பில், முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

யோம் கிப்பூர் - இந்தப் பதிவின் தலைப்புக்குப் பொருத்தமாக --
தன் தவறுகளை உணர்தல், மன்னிப்புக் கோருதல், பரிகாரம் செய்ய முனைதல், திரும்ப அதே தவறைச் செய்யாதிருத்தல் இப்படிப் படிப்படியாக உள்ளொளியைக் காண முயலும் ஒரு பிரார்த்தனையை நீண்ட நாட்களுக்கு முன் யாஹூ! 360 பதிவுகளில் குறிப்பிட்டதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

My whole life has been spent practicing this and practicing that
With nothing in my hands to show for it,
No attainment.
From now on, avoiding the miserable path of knowing much,
And missing the one thing I need
Why not go on the path of knowing the one thing that frees all?


மிகுந்த நன்றியோடு இங்கே

முழுமையடைகிற வரை, ஒவ்வொரு நாளுமே யோம் கிப்பூர் தான்! அதன் உண்மையான பொருளில்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!