Sunday, May 16, 2010

சண்டேன்னா மூணு!கதை ஒண்ணு !அரங்கேற்றம் ஒண்ணு ! படம் ஒண்ணு !

பீர்பால் கதைகள் - 6


டில்லிப் பாதுஷாக்கள் என்றாலே கொஞ்சம் வித்தியாசமான, கேணத்தனமான, விபரீதமான சந்தேகங்கள், அறிவிப்புக்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.பாதுஷா அக்பருக்கும் அப்படி ஒரு கேணத்தனமான சந்தேகம் எப்போதும் போல ஒரு நாளைக்கு வந்தது. இந்த மாதிரி  சந்தேகம் வரும்போதெல்லாம், சாமர்த்தியமான விடையைக் கண்டு பிடிப்பதற்கு பீர் பாலை விட்டால் வேறு எவர் இருக்கிறார்கள்!

"பீர்பால்! எனக்கு ஒரு சந்தேகம்!" என்று மெதுவாக ஆரம்பித்தார் அக்பர்.

"ஹூசூர்! சொல்லுங்கள்! எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன்" என்றார் பீர்பால்.

"உமக்க்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகின்றன?"

"இருபது வருடங்களுக்கும் மேலாக ஆகி விட்டன ஹூசூர்!"

"அப்படியானால், உம்முடைய மனைவியைப் பற்றி உமக்கு எல்லா விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா?"

"அனேகமாக அப்படித்தான் ஹூசூர்!"

"அப்படியானால், உம்முடைய மனைவி இன்றைக்குக் கைகளில் எத்தனை வளையல்கள் அணிந்திருப்பார் என்று உமக்குத் தெரியுமா?"

கேணத்தனமான இந்தக் கேள்விக்கு இன்னொரு கேள்வி மூலமாகவே பதில் சொல்ல வேண்டும் என்று பீர்பால் தீர்மானித்துக் கொண்டார்.
"பாதுஷா! அரண்மனையில் இருந்து தர்பாருக்கு தினசரி படிக்கட்டுக்களில் ஏறி இறங்கித் தான் வந்து கொண்டிருக்கிறீர்கள், இல்லையா?"

அக்பருக்கு பீர்பால் எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்பது புரியவில்லை. ஆனாலும், உப்பரிகையில் இருந்து தினசரி தர்பாருக்கு வருவதற்குப் படிகளில் தினசரி ஏறி இறங்குவது வாடிக்கைதானே! "ஆமாம் பீர்பால்! என்ன புதிதாகக் கேட்கிறாய்?"

"நீங்கள் சிறுவராக இளவரசுப் பட்டத்தில் இருந்த காலத்தில் இருந்தே இந்தப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர்  தான். தினசரி எத்தனை படிகளில் ஏறி இறங்குகிறீர்கள்  என்று சொல்ல முடியுமா?" என்று மிகப் பணிவுடன் கேட்டார் பீர்பால்.

கணக்கு என்றாலே பாதுஷாக்களுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விடும்! இந்த லட்சணத்தில் கணக்கைக் கேட்டு அதற்கு பதில் சொல்வதென்றால்...!

கழகங்களாக இருந்தால் பிளந்து விடும்! அக்பர் வெறும் பாதுஷா தானே!பாதுஷாவுக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது!

"பீர்பால்! கணக்கு என்றால் எனக்கு நிறையவே உதைக்கும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு விளையாடாதே. எனக்கு இப்போதே கண்கள் பனித்து, மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்குகிறது! நுரையீரலையும் கனக்கச்செய்து விடாதே!என் கேள்விக்கென்ன பதில்? அப்படியே உன் கேள்விக்கும் என்ன பதில் என்று சொல்லி விடு! உனக்குப் புண்ணியமாகப் போகும்!"

"இரண்டுக்கும் பதில் பிரமாதமில்லை ஹூசூர்! தினசரி எத்தனை தரம் ஏறி இறங்கினாலும்  படிகளின் எண்ணிக்கை மாறுவதே இல்லை.ஆனால் அதைக் கூட நாம் கவனிப்பதில்லை. எண்ணுவதுமில்லை.அப்படியிருக்க, நினைத்து நினைத்து  அலங்காரங்களை மாற்றிக் கொண்டு, அணிகலன்களைக் கூட்டியோ குறைத்தோ அணிந்துகொள்கிற பெண்கள் என்ன செய்வார்கள், எத்தனை வளையலை அணிவார்கள், கழற்றுவார்கள் என்பதை மட்டும் சொல்லி விட முடியுமா என்ன! அது தான்! இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா ஹூசூர்!"

சந்தேகம் தீர்ந்தது என்ற மாதிரித் தலையை ஆட்டினார் அக்பர் பாதுஷா!


வேறு வழி? தீரவில்லை என்று சொல்லி, மறுபடியும் ஏடாகூடமாக ஒரு கணக்குக்கு பதில்  சொல்ல வேண்டிய சோதனை வந்து விட்டால்.....!

oooOooo
இன்றைய அரங்கேற்றம் !

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

பாரதியின் கோபாவேசமான இந்தக் கவிதை வரிதான் இந்திய அரசியல்வாதிகள் ஒவ்வொருநாளும் அரங்கேற்றி வரும் கேணத்தனமான கொடுமைகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.அரசியலில் திமிர்பிடித்து  ஆடும் இந்தப் பேய்களை விரட்ட வழியிருந்தும், எங்கோ என்னவோ நடக்கிறது என்று கைகளைக் கட்டிக் கொண்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டோ, அல்லது இலவசங்களில் மதியிழந்து மானாட, மயிலாட மங்கையர்கள் மார்பாடக் குதித்துக் குதித்து  ஆடும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளித்த வாயர்களான  இந்த ஜனங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!

ஜனங்களுக்கு அடி முட்டாள் பட்டம் கட்டுவதில் இன்றைய அரங்கேற்றம் மம்தா பானெர்ஜியின் உபயம்!

டில்லி ரயில்வே ஸ்டேஷனில், இன்று மதியம் பிளாட்பாரம் எண் பன்னிரண்டு, பதின்மூன்றில் கடைசி நேரத்தில் ரயில்கள் புறப்படுகிற விதத்தில் செய்த மாற்றம், அவசரப்பட்டு ஓடிய ஜனங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண்ணும், ஒருசிறுவனும்
உயிர் ழந்திருக்கிறார்கள். ஒன்பது பேர் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.இதைஒன்றும் நடக்காத மாதிரியே நிர்வாகம் மூடி மறைக்கப் பார்த்தும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில்  செய்தி வெளியே வந்து விட்டது.அதை விடக் கொடுமை, போதிய அவகாசம், முன்னறிவிப்பு இல்லாமல் ரயில்கள் புறப்படும் பிளாட்பாரத்த்தைக் கடைசி நேரத்தில் மாற்றி இந்த விபத்துக்குக் காரணமாக இருந்த நிர்வாக அலட்சியத்தைக் கண்டிப்பதற்குப் பதிலாக ரயில்வே அமைச்சர் மம்தா பானெர்ஜி ஜனங்களின் மீது தான் குற்றம் என்று தீர்ப்பு வழங்கிப் பேசியிருக்கிறார். இப்படிக் கூட்டமாக எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் ஜனங்கள் ஓடியதில் தான் தவறு இருந்ததாம். அவர்களை அப்படி அதறப் பதற ஓட வைத்த பொறுப்பில்லாத கடைசி நேர மாற்ற அறிவிப்பு காரணமில்லையாம்! 

பாரதீய ஜனதாக் கட்சி, இப்படித் தன்னுடைய அமைச்சரவைப் பொறுப்பிலிருந்து எப்போதும் ஆப்செண்டீயாகவே இருந்து கொண்டு லோகல் பாலிடிக்ஸில் மட்டும் கவனம் செலுத்தும் மம்தா பானெர்ஜி  குறித்து பிரதம மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இங்கே மதுரைக்கார அமைச்சர் கூட அப்படித்தானே!  பாவம் மன்மோகன் சிங்! டம்மிப் பீசாக இருந்து கொண்டு எத்தனை கோளாறுகளுக்கு விளக்கம் கொடுத்தே ஓய்ந்து போக வேண்டியிருக்கிறது!!பிரதமர் மன்மோகன் சிங் ஒரு டம்மிப் பீஸ்! அமைச்சர்கள் எல்லாம் வெறும் காமெடிப் பீஸ் என்று ஒதுக்கித்தள்ளிவிட்டுப் போய்விட முடியாதபடி, இவர்கள் அடிக்கும் கூத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய துயரத்தை ஜனங்களின் தலைமேல் சுமையாக ஏற்றிக் கொண்டிருக்கிறது.

இறந்தவர்களுக்கு இரண்டு லட்சம், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம்,  அப்புறம் கண்துடைப்புக்காக ஒரு விசாரணை அறிவித்து விட்டால் போதும்! அதற்குமேல் ஒரு மக்கள் நல அரசு என்ன செய்துவிட முடியும்?

இவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை! எங்கே எதன் மேலோ மழை பெய்கிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் பாருங்கள், உண்மையில் நம் மீது தான் குற்றம் இருக்கிறது!


அரியலூர் அளகேசா! ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?

மெய்யாலுமே ஒரு விபத்து நடந்தபோது, சம்பந்தமே இல்லாத ரயில்வே அமைச்சரைப் பார்த்து அன்றைக்கு இப்படிப் பாட்டுப் பாடியவர்கள் இப்போது ஆளும் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். இப்போது அந்தப் பாட்டைப் பாடுவார்களா? ஆ! ராசா! ஆ! ராசா!


oooOooo
அடிக்கிற வெய்யிலுக்கு, இப்படியெல்லாம் ஐஸ்ப்ரூட் சாப்பிட ஆசைதான்!ஒத்துக் கொள்ளாதே, படம் பார்த்து  சந்தோஷப் படவேண்டியது தான்!

இங்கே அரசியல் வாதிகள் அடிக்கிற கூத்துக்கள், செய்கிற ஊழல்கள், எல்லாவறையும் பார்த்துக் கொண்டு உங்களால் சந்தோஷப் பட முடியுமா? முடிகிறதா?
 

2 comments:

  1. /*இலவசங்களில் மதியிழந்து மானாட, மயிலாட மங்கையர்கள் மார்பாடக் குதித்துக் குதித்து ஆடும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளித்த வாயர்களான இந்த ஜனங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!*/

    இந்திய அரசியல்வாதிகள் இந்த மக்களை பாடாய் படுத்த காரணம் இந்திய மக்கள் தான். இந்திய மக்கள் கெட்டவர்கள். இவர்கள் ஒழுக்கமாய் இருந்தால் அரசியல்வாதிகளும் நல்லவர்களாய் இருப்பார்கள்.

    ReplyDelete
  2. வாருங்கள் அமர்!
    சாக்கடையில் இருந்து வியாதியைப் பரப்பும் கொசுக்களும், புழுக்களும் இன்ன பிறவும் தான் உருவாகும்! அதில் இருந்து சந்தன வாசத்தை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான்! ஒரு சமுதாயத்தின் தகுதி, தன்மையை பொறுத்துத் தான் அரசியல், மற்ற விஷயங்கள் இருக்கும். ஆனால், இயற்கைவிதி, அதையும் மீறி, அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் தலைவர்களையும் உருவாக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails