Wednesday, April 13, 2011

சிறு பொறிதான், பெரு நெருப்பாகும்! தேர்தல் களம் 2011

சிறுபொறிதான்! இன்றோ அதுவே பெரு நெருப்பாகும்!

இன்றைய தினமணி நாளிதழில்  பழ நெடுமாறன் எழுதிய கட்டுரை இது.

அண்ணா ஹஸாரே: பெருநெருப்பான சிறு பொறி

First Published : 13 Apr 2011 01:26:26 AM IST

Last Updated :

இந்தியவாதியான அண்ணா ஹசாரே மேற்கொண்ட 98 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் சிறு பொறியாகக் கிளம்பி பெரு நெருப்பாக வளர்ந்து இமயம் முதல் குமரி வரை பற்றி எரிந்தது.

எதற்காக அவர் போராடினார்? கடுமையான ஊழல் எதிர்ப்பு விதி முறைகள் அடங்கிய லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இச்சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசு மற்றும் மக்கள் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியக் கூட்டுக்குழு அமைக்கப் பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் போராடினார்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அண்ணா ஹசாரே மேற் கொண்ட இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடெங்கும் அனைத்துத் தரப்பு மக்களும் கிளர்ந்தெழுந்தது இதுவரை வரலாறு காணாத ஒன்றாகும். இதன் விளைவாக, மத்திய அரசு பணிந்தது; லோக்பால் சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. இந்தச் சட்டத்தைக் கொண்டு வராமலும் போதுமான அதிகாரங்களை அதற்கு அளிக்காமலும் ஏமாற்று நாடகம் நடத்தி வந்த மத்திய அரசைத் தனது அறப்போராட்டத்தின் விளைவாக அடிபணிய வைத்த அண்ணா ஹசாரே நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பாராட்டுதலுக்கும் உரியவராவார்.

அவரைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் உறுதியாக அவரைப் பின் பற்றவும் மக்கள் உறுதி பூண வேண்டும். அதன் மூலம் மட்டுமே நாடெங்கும் பரவிக்கிடக்கிற ஊழல் கள்ளிச்செடிகளை வெட்டி எறிய முடியும். அவ்வாறு நாம் செய்வதற்குரிய வழியை அண்ணா ஹசாரே தனது போராட்டத்தின் மூலம் காட்டியுள்ளார்.


லஞ்சத்தையும், ஊழலையும் அரசாங்கத்தின் நெறி முறையாக்கி அதை இந்தியா முழுமைக்குமே வழிகாட்டியாகக் கொள்ளும் வகையில் இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழலைப் புரிந்து தமிழகத்தின் பெருமையைச் சீரழித்த விதம் கண்டு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டவும் ஊழலை ஒழித்துக்கட்டவும் அண்ணா ஹசாரே நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.
தமிழகத்தில் அதிகார பலத்தின் உதவியால் ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடுகின்றன. இதன் உச்சகட்டமாக ஜனநாயகத்தின் குரல் வளையையே நெரிக்கும் முயற்சிகள் பகிரங்கமாக நடைபெறுகின்றன. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி இதைச் சுட்டிக் காட்டிப் பகிரங்கமாக பின்வருமாறு சாடி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் பெருமளவு முறைகேடுகள் நடக்கும்போது தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியுமா? என அவர் எழுப்பி இருக்கும் கேள்வி, எல்லோரின் உள்ளங்களையும் சுடுகிறது. ஆனால், சுடப்பட வேண்டியவர்களுக்கு அதன் சூடு உரைக்கவே இல்லை.

இந்தக் கேள்வியை அவர் எழுப்பியதோடு நிற்கவில்லை. தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தமிழகத்தில் மட்டுமே பெரும் சவாலாக உள்ளது என்று கூறி இருக்கிறார்.

அரசு நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் தடையாக இருப்பதால் ஆளும் கட்சி கோபம் அடைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டவும் அவர் தயங்கவில்லை.
மேலும், அவர் தனது கூற்றுகளுக்கு ஆதாரமாகப் பின்கண்டவற்றைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்:

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் முறைகேடாகக் கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ. 53 கோடியாகும். ஆனால், இதில் தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பரிசுப் பொருள்களின் மதிப்பு ரூ. 41 கோடியாகும் (12.4.11 வரை)
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தமிழகத்தில் 61,000 வழக்குகள் பதிவாகி உள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த விவரங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கின்றன. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் சிறு முனை மட்டுமே வெளியே தெரியும், அதைப் போல முறைகேடாகப் பிடிபட்ட பணமும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் சிறு பகுதியே ஆகும். பிடிபடாத பணமும், பதிவு செய்யப்படாத வழக்குகளும் பல மடங்கு அதிகமானவை ஆகும்.

இந்தியா விடுதலைபெற்ற பிறகு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இத்தகைய பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதே இல்லை. அங்குமிங்குமாகத் தனிப்பட்ட சில வேட்பாளர்கள் சிறிய அளவில் முறைகேடுகளைச் செய்திருக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையமே திடுக்கிட்டுச் செயல் இழந்து நிற்கும் வகையில் திருமங்கலம் திருவிளையாடல்கள் நடைபெற்றதில்லை.

தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைச் சீர்குலைக்கவும், முடக்கவும் இடைவிடாத முயற்சிகளை ஆளும் கட்சியான திமுக மேற்கொண்டிருக்கிறது. நேர்மையான தேர்தல் அதிகாரிகள் மீது பொய்யான புகார்களையும், வழக்குகளையும் முதலமைச்சரின் மகனும் மத்திய அமைச்சருமான அழகிரி தொடுக்கிறார்.

அவரது அடியாள்கள் அதிகாரிகளைத் தாக்குகிறார்கள், பொய்யான வாக்குமூலங்கள் கொடுக்கும்படி அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். நல்லவேளையாக உயர் நீதிமன்றம் தலையிட்டுத் தேர்தல் அதிகாரிகளைப் பாதுகாக்க முன்வந்தது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தனது கட்சிக்காரர்கள் கையாளும் முறைகேடுகளுக்கு எதிராக இருப்பதால் அவற்றை அவசர கால நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு, அதற்கு எதிராகத் தனது கட்சிக் காரர்களைத் தூண்டிவிடும் வகையில் முதலமைச்சர் கருணாநிதியே பேசி வருகிறார்.

நேர்மையாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மறைமுகமாக கருணாநிதி மிரட்டுகிறார். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் டி.ஜி.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டதாக வரலாறே கிடையாது. கூச்சநாச்சமின்றி தங்களது முறைகேடுகளுக்கு உயர் அதிகாரிகளையும் பயன்படுத்த திமுக தயங்கவில்லை என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.

தனது அரசில் பணிபுரியும் அதிகாரிகள்தான் தேர்தல் காலத்தில் தேர்தல் அதிகாரிகளாகவும் பணியாற்ற நேரிடுகிறது என்பதையும், அதே அதிகாரிகள் தேர்தல் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவது ஏன் என்பதையும் முதலமைச்சர் கருணாநிதி சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார். இவரது ஊழல் மலிந்த ஆட்சிக்கு எதிராக, அதிகாரிகளும் மனசாட்சியோடு கிளர்ந்தெழுந்து விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

அதிகாரிகளுக்கு மட்டும் மனசாட்சிப்படி நடக்கும் துணிவு இருந்தால் போதாது. அவர்களுக்குத் துணை நின்று ஊழலையும், முறை கேடுகளையும் தடுத்து நிறுத்தவும் எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு உணர்வு இருக்க வேண்டும்.

காந்தியத் தொண்டர் அ ண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகத் தேசமெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்தது, புதிய நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது.

தமிழகத்தில் ஊழல் ஆட்சியை ஜனநாயக முறையில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு இந்தத் தேர்தல் மூலம் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை நல்ல முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும். தேர்தல் முறை கேடுகளை ஆங்காங்கே மக்களே தடுக்க முன்வருவார்களானால் அதிகாரிகள் இன்னும் முனைப்போடு செயல்படுவார்கள்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முற்படுபவர்களை அந்தந்தத் தெரு மக்களே பிடித்துக் கொடுக்க வேண்டும். தேர்தல் சாவடிகளில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய கடமையும் வாக்காளர்களுக்கு உண்டு.

ஊழலின் மூலம் குவித்துள்ள கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்து குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தவும், பாசிச வன்முறைப் போக்கைத் தொடர்ந்து பின்பற்றவும் முடிவுசெய்து களத்தில் இறங்கி ள்ளவர்களை முறியடித்து ஜனநாயகப் பயிரை அழிய விடாமல் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் மக்களையே சார்ந்தாகும்.

ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டும் அல்ல, இது பரம்பரை ஆட்சியா அல்லது மக்களாட்சியா என்பதை முடிவு செய்யும் தேர்தலும் ஆகும்.

களத்தில் இறங்க மக்களே முன் வாருங்கள். சிறு பொறிகள் இணைந்து பெருநெருப்பாக மூண்டு ஊழல் கள்ளிக்காட்டைச் சுட்டெரிக்கட்டும். ஊழல் காட்டில் வைக்கப்பட்ட அக்னிக்குஞ்சாக மாறுவோம்.

தேர்தல் கமிஷன் கெடுபிடி, அறிவிக்கப்படாத நெருக்கடி என்று ஆளும் தரப்பே பிரகடனம் செய்தது, வரலாறு காணாத அளவுக்குத் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள், பணப்பட்டுவாடா, பறிமுதல் இத்தனையையும் மீறி இன்றைக்குத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.இந்தச் செய்திகளை எல்லாம் அப்படியே நம்பி,தேர்தல்கள் நியாயமான முறையில் நடந்துவிடும் என்று நம்புகிறவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்! அலை எதையும் காணோமே,கருத்துக் கணிப்புகள் பொய்யாகி விடுமோ அல்லது பலித்தே விடுமோ என்று பயப்படுகிறவர்கள் இன்னும் முப்பது நாளைக்கு, வேப்பிலை அடித்து  மந்திரித்துக் கொள்ள வேண்டும்!

தேர்தல் கமிஷன் மிரட்டல்களைஎல்லாம் மீறி, அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இறந்தவர் தேர்தல் நேரத்தில் மட்டும் உயிருடன் வந்து ஓட்டுப்போடுவது முதல், ஆள்மாறாட்டம், அப்புறம் பேசிவைத்துக் கொண்டு பதிவாகாத ஓட்டுக்களைப் பங்கிட்டுக் கொண்டு போடுவது போன்ற திருவிளையாடல்கள் மதியத்துக்கு மேல் ஆரம்பமாகும். 

எவ்வளவு வாக்குப் பதிவானது என்று இன்று மாலை சொல்லப் படுவதற்கும், நாளை அறிவிக்கப்படுவதற்குமே சுமார் பத்து சதவீத வித்தியாசம் காண்பிக்கிற ஜனநாயகம், தேர்தல் முறை நம்முடையது! சிவகங்கை சின்னப்பையன்களுடைய சாமர்த்தியம் இருந்தால், தோற்றாலுமே கூட வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படக் கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கும்!

வாயுள்ள பிள்ளை பொழச்சுக்கும் என்பதுபோல தில்லு முல்லு செய்வதில் தேர்ந்தவர்கள் புகுந்துவிளையாடும் தேர்தல் இது!

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்!

 


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails