"யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லுய்யா "
முன்கதைச் சுருக்கம்:
"ஒரு விவாதத்தில் இன்று எனக்கேற்பட்ட ஒரு அனுபவத்தைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையில், இந்தக் கதை பொருந்திப் போகவே, மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். கதையின் முடிவில் ஆங்கிலத்தில் கதையின் கருத்தாகச் சொன்னது அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு, இதில் உடன்பாடு இல்லை.
விவாதக்களத்தை நிர்வகிப்பவர் வருத்தப்பட்டு, கைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, குறியீட்டுச் சொல்லும் [tag], இன்னும் ஒரு சொல்லும் 28/03/2009 இரவு 8.14 க்கு நீக்கப்பட்டது."
இப்படிப் போன பதிவில் எழுதி, அதை முன் கதைச் சுருக்கமாகப் போட்டது, கொஞ்சம் புரியவில்லையோ? அதனால் ஒன்றும் இல்லை. அலைச்சல் கொஞ்சம் மிச்சம்!
"மின்மடலாடல் என்பது ஒரு கலை. இங்கு தோன்றும் ஒவ்வொரு எழுத்தும் நம்மைநேரடியாக தாக்குபவை என்று கொண்டால் நிற்கவே முடியாது. அவைமினெழுத்துக்கள். மிக மெல்லியவை. அது போல உங்கள் இதயத்தையும் பஞ்சு போல் வைத்திருந்தால் தாக்கமே தெரியாது. ஈகோவை கல்லாக்கி வைத்திருப்பவர்களின் பதில்கள்தான் கல்லில் எறிந்த பந்து போல் வீரியமாக திரும்பிவரும். அதன்வேகத்திலிருந்து குணாதிசயம் புலப்படும். இதைக்கூட எதற்கு சொல்கிறேன் என்றால் இணையம் மனிதக் கண்ணாடி என்று காட்டத்தான். நீங்கள் கவிஞர் புரியும் என்று எண்ணுகிறேன்.”
.........................
“தி.வா, கண்ணன் நடராஜன் சொல்வதை நானும் வழிமொழிகிறேன். நாம் வீசும் சொல் எங்கு போய் எப்படித்திரும்பும் என்று சொல்லவே முடியாது. நாம் ஏதோ சத்தோரி அடைந்துவிட்டது போல் எழுதுவோம். ஒரு சின்ன :-) குறிகூட தோன்றாது. சும்மா எழுதின 'ஏதோ', பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். புயல், டொர்னேடோ இவைகளை ஆராயும் விஞ்ஞானிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். ஏதோ சின்ன தூசு எங்கோ, ஒரு சூபர் நோவாவிற்குக் கருவாக இருக்கும்.”
முனைவர் நா.கண்ணன், சமீபத்தில், ஒரு விவாதக் களத்தில் வருத்தப்பட்ட ஒருவருக்கு எழுதிய பண்பட்ட வார்த்தைகள் இவை. காயத்திற்கு மருந்தாகவும், அதே சமயம் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்து கொள்வதாகவும் இருக்கும் இந்த வார்த்தைகள், அண்மையில் நான் படித்தவற்றுள், மிக நளினமானவை. நாகரீகமாகவும், பயன் படுவதாகவும் உள்ள எழுத்து.
அலைச்சல் என்றால் என்ன, பயணம் என்றால் என்ன, இதை ஆன்மீக அடிப்படையில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் இப்படி ஒரு தலைப்பில் ஒரு விவாதக் களம். விவாதம் என்பது, பட்டிமண்டபமாகிப் போனது. பட்டி மன்றத்தை விட்டு விலகி, ஒரு மின்னிதழில் படித்த கதையைத் தமிழிலே மொழிபெயர்த்துப் பதிவிலும் இட்டு விட்டேன். கைபேசியில் அழைப்பு வந்தது
"என்ன இப்படி எழுதி விட்டீர்கள், நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்..............."
என்னுடைய தரப்பைக் காத்து கொடுத்துக் கேட்க அவர் தயாராகவே இல்லை. சொல்லப் பட்ட கதையோ, அதன் கருத்தோ அவருக்குப் பொருட்டில்லை. அதை அவர் படிக்கவும் இல்லை. ஆனால், அவர் நடத்துகிற களத்தின் பெயர், tag ஆக இருந்தது ஒன்று தான் அவரைக் காயப் படுத்திய விஷயமாம்.
"என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? அந்த பதிவை நீக்கி விடவா? உடனே செய்து விடுகிறேன்."
அதற்கும் நேரடியான பதில் இல்லை. "நேத்துதான் நாப்பது நிமிஷம் பேசியிருக்கோம்......எனக்கு வேறு ஒரு கால் வருது." வைத்து விட்டார்.
பேசிக் கொண்டே tag இல் இருந்த ஒரு சொல்லையும், வலைக் குழுமம் என்கிற சொல்லையும் நீக்கி விட்டு, அவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். இந்த உரையாடலில் ஒன்று தெளிவாகப் புரிந்தது. நான் எழுதிய எதையுமே அவர் முழுதுமாகப் படிக்கவில்லை, என்ன சொல்லப்பட்டது, அதில் தவறு என்ன, அதை எப்படி சரி செய்வது என்ற பிரக்ஞை இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து இருந்தோமேயானால், "தடங்கலுக்கு வருந்துகிறோம்"னு, தொலைக்காட்சிகளில் வருமே அப்படி, தொடர்ந்து வருந்திக்கொண்டே அல்லது வருததிக்கோண்டே தான் காலம் போய்க்கொண்டிருக்குமே தவிர, வேறு உருப்படியான எதுவும் நடக்காது, என்று unsubscribe பட்டனை அமுக்கி, அப்பாடா என்று வெளியே வந்தாயிற்று.
கதவு திறந்திருந்தால் காற்று வரும், வெளிச்சமும் வரும். திறந்த மனதோடு பார்க்க முடிந்தால், மாறுபட்ட கருத்தையும் பக்குவமாக எதிர் கொள்ள முடியும் என்பது அந்த நண்பருக்கு ஏன் புரியவில்லை?
அப்புறம் தான் ராஜநாயகம் சார் நெத்தியடியா ஒரு பதிவு எழுதியிருந்ததைப் படிச்சேன். ஆஹா, உள்ளத விட்டுப்பிட்டு, ஒருகேள்வி 73 பின்னூட்டங்கள், விட்டா அனுமார் வால் மாதிரி இன்னமும் போய்க் கொண்டே இருந்திருக்கும்...கடைசியில, எங்க ஆரம்பிச்சோம் எங்க முடிச்சோம்னு யாருக்குமே தெரிஞ்சிருக்காது., இங்க பாத்தா ரெண்டே பத்தி தான், செம செம நெத்தியடி!
அலைச்சல்'னா என்ன, பயணம்'னா என்ன அப்படீங்கிறதை ராஜநாயகம் சார் எப்படிச் சொல்றாருன்னு தான் பாப்போமே!
ஓவர் டு ராஜநாயகம் சார்
'சித்தி ' என்று ஒரு கதை .
சின்னம்மா என நினைத்து விடக்கூடாது .
ஆத்மசித்தி ! புதுமைப்பித்தன் எழுதியது .
சந்நியாசம் பற்றிய கதை தான் . சந்நியாசத்திற்கான பக்குவம் இல்லாமல் தவிப்பது பற்றி .
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியவர் ஒருவர் தீப்பெட்டி ஆபிஸ் அதிபர் .ரொம்ப கீழே ஏழையாய் இருந்து பின் பெரிய பணக்காரர் ஆனவர் . வயது அப்போது பதினைந்து வருடம் முன் எண்பத்திஒன்று . ரொம்ப ஆன்மீக தேடல் . நிறைய சுவாமியார்களை தேடியவர் . ஒரு சாமியாரிடம் கடைசியில் ஐக்கியமாகி அவரே தெய்வம் என சம்சார,வியாபார வாழ்வு வாழ்ந்தார் . எப்போதும் என்னிடம் ' விரைவில் நான் சந்நியாசம் வாங்க வேண்டும் . இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி .முடித்தவுடன் கிளம்பி விடுவேன் . நீங்க சொல்லுங்க . .. நான் எப்ப சந்நியாசி ஆவேன் ' என பார்க்கும் போது எல்லாம் ' நான் சந்நியாசி ஆகணும் ' என்ற திரும்ப திரும்ப சொல்வார் .
அப்போது அவர் மனைவி இறந்து விட்டார் ! இவர் வடநாடு போயிருந்தார் . அவசரமாக திரும்பினார் . அவர் வந்த வுடன் காட்டுக்கு பிணம் கிளம்பியது . அறுபது வருடம் அந்த அம்மாவோடு வாழ்ந்தவர் . சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் . அந்த நேரத்தில் இவர் காட்டில் தன் தீப்பெட்டி ஆபிஸ் கணக்கு பிள்ளை யை கூப்பிட்டு " சேட்டு சரக்குக்கு பணம் எவ்வளவு அனுப்பினான் " என்றார் . ' ஏப்பா மெழுகு வந்திடிச்சா " என்றார் . மகனை கூப்பிட்டார் " சேட்டு லேபிளை மாத்த சொன்னான் . நான் முடியாதுன்னுட்டேன் . " " தீப்பட்டி ஆபிஸ் வேன் நான்கும் ஆர் டி ஒ ஆப்பிஸ் எப்ப ரெனியூவல் " மெக்கானிக் ரிப்பேர் வேலை பார்த்தாச்சா .'" ஏப்பா !கொத்தனார் காசி என்ன ரொம்ப காசு கேட்கிறான்"
மனைவி பிணம் எரியூட்டப்படும் போது கூட பல வியாபார, வீட்டு விஷயங்களை அலசி கொண்டிருந்தார் .
.....
சில நாள் கழித்து பஜாரில் ஒரு கடையில் என்னை பார்த்தார் ." சொல்லுங்க ! நான் எப்ப சந்நியாசம் வாங்கணும் . இன்னும் தொழில் ,வீட்டு விஷயம் சில முடித்துவிட்டால் நான் கிளம்பிடுவேன் ." என்றார் .
எனக்கு தி ஜானகிராமன் "மலர் மஞ்சம்" நாவலில் சொன்ன சிரகாரி கதை ஞாபகம் வந்தது . அதை என் பாணியில் சொன்னேன் .
" சிரகாரி ,சிரகாரி ன்னு ஒருத்தன் . அவன் பெண்டாட்டி அவனை கோபம் வரும் போது அடி வெளுத்து விடுவாள் . புருஷன் பொஞ்சாதி சண்டையில் புருஷனை உரித்து விடுவாள் .
இவன் வீட்டில் அடி வாங்கி வெளியே வந்து விழுந்து (தலையில் முடியில் நான்கைந்து ஈர்க்குச்சி) எழுந்து பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து " யோவ் ! உம்மகிட்ட சன்னாசம் எப்படி வாங்குறது ன்னு நூறு தடவை கேட்டுட்டேன் . என்னை இந்த சண்டாளி கொலை செய்யுறதுக்கு முன்ன சொல்லி தொலையும் .இல்லேன்னா கொலை பழி உம்மேலே தான் . என் பாவம் உம்மை சும்மா விடாது "
பக்கத்து வீட்டுக்காரன் பதிலே சொல்லாமல் " வீட்டுக்குள்ள போ " என சமாதானமாக சொல்வான் . அடிக்கடி இப்படி அவன் அடி வாங்கும்போதெல்லாம் " யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லு " என்று பக்கத்து வீட்டுக்காரனிடம் புலம்புவான் .
ஒரு நாள் வீட்டுக்குள்ளிருந்து விளக்குமாறு அடி வாங்கி வெளியே வந்து விழுந்தவுடன் "யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லுய்யா " என்றான் .
பக்கத்து வீட்டுக்காரன் எழுந்தான் . தான் கட்டியிருந்த நாலு முழ வேட்டியை கிழித்து கோமணமாக கட்டினான் . " இப்படி தாண்டா ! " என சொல்லி விட்டு அவன் விறு விறு என நடந்து விட்டான் . அவன் சந்நியாசி ஆகி கிளம்பி போயே விட்டான் !
இந்த சிரகாரி அடுத்த தடவை பொண்டாட்டி இடம் அடி வாங்கியவுடன் எதிர்த்த வீட்டுக்காரனிடம் கேட்க ஆரம்பித்து விட்டான் " யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லுயா "
இந்த கதையை சொன்னவுடன் அங்கிருந்தவர்கள் எல்லாம் தீப்பெட்டி தொழில் அதிபரை பார்த்து சிரித்து விட்டார்கள் ! அவரும் சிரித்து விட்டார் .
நான் சொன்னேன் " நீங்க சந்நியாசி ஆகவே மாட்டிங்க ! நிறைய பேரை இன்னும் நீங்கள் சாமியாரா ஆக்க வேண்டியிருக்கு !"
சம்சாரியாகவே,வியாபாரியாகவே தான் இறந்தார் !”
நன்றியோடு இங்கிருந்து பகிர்ந்து கொள்ளப் பட்டது:
சாதுக்கள், சந்யாசிகளிடமிருந்து கிடைக்காத ஞானம், வேறு வகையிலும் கூடக் கிடைத்து விடும்.என்ன, நமக்கு அது வேண்டும் என்கிற ஆர்வம் கொஞ்சம் கொழுந்து விட்டு எரிய வேண்டும், அவ்வளவு தான்! இங்கே இதைச் சொல்வது கூட, முனைவர் நா.கண்ணன் சொன்ன ஒரு வார்த்தையை, மறுபடி மறுபடி எனக்கு நினைவு படுத்திக் கொள்வதற்காகத் தான்.
"நாம் வீசும் சொல் எங்கு போய் எப்படித்திரும்பும் என்று சொல்லவே முடியாது. நாம் ஏதோ சத்தோரி அடைந்துவிட்டது போல் எழுதுவோம். ஒரு சின்ன :-) குறிகூட தோன்றாது. சும்மா எழுதின 'ஏதோ', பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். புயல், டொர்னேடோ இவைகளை ஆராயும் விஞ்ஞானிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். ஏதோ சின்ன தூசு எங்கோ, ஒரு சூபர் நோவாவிற்குக் கருவாக இருக்கும்.”
ஆசை உடையோர்க்கெல்லாம், ஆரியர்காள் கூறுமென்று...!
ஒரு ஊரில் ஒரு பெரும் தனக்காரன்.
பிரமுகர்கள் யார் வந்தாலும், அவனது பண்ணை வீட்டில் தான் தங்குவார்கள். சாமியாரானாலும், பெரிய அதிகாரிகளானாலும் சரி, இப்படிப் பிரமுகர்களை வரவேற்பதிலும், அவர்களை தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்து உபசரிப்பதிலும், அந்தப் பெரும் தனக்காரனுக்கு ஆர்வம் அதிகம். இப்படித்தான் ஒரு யோகியும் பெரும் தனக்காரனுடைய பண்ணைவீட்டில் ஒரு சமயம் தங்கி, ஆன்மீக நாட்டம் கொண்ட சிலபேர்களுடைய சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.
" நீங்கள் எல்லோரும் உங்களுக்கென்று சில அடையாளங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இந்த அடையாளங்கள்எல்லாம் உங்கள் மீது திணிக்கப் பட்டிருப்பது புரியும். முதலில், உங்கள்பெயர்-அதை நீங்களா தேர்ந்தெடுத்தீர்கள்? இல்லையே, உங்கள்பெற்றோர்களோ.அல்லது நெருங்கிய உறவினர்களோ தானே உங்களுடையபெயரை வைக்க, நீங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அதே மாதிரி, உங்களுடைய பெற்றோர்கள், அதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லையே! இப்படியே உங்களுக்கு இருக்கிற அடையாளங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே போனால், உங்களுடைய தேசம், மொழி, மத நம்பிக்கை, எதையுமேநீங்களாகச்சிந்தித்து, சுதந்திரமாகவோ, விழிப்புணர்வுடனோதேர்ந்தெடுக்கவில்லையே!"
"இப்படியே சிந்திக்க ஆரம்பித்தீர்களேயானால், அப்பொழுது நான் யார் என்கிற கேள்வி தானாகவே வரும். கேள்விக்கு ஒவ்வொரு பதிலாகக் கிடைக்க ஆரம்பிக்கும். நான் என்பது என் உடலா, என்னுடைய ஆசைகளா, எண்ணங்களா, பழக்கங்களா இப்படி வரிசையாக இதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ என்று போய்க்கொண்டே இருக்கும். சலித்துப் போய் நின்று விடாமல், இன்னும் ஆழமாக இந்தக் கேள்விக்குள்ளேயே போய்க் கொண்டிருந்தீர்களென்றால், நிச்சயம் உண்மையான விடை கிடைக்கும். குறைந்தபட்சம், இந்த மாதிரிக் கேள்விக்கெல்லாம் விடை வெளியில் இருந்து இல்லை, உங்களுக்கு உள்ளேயே தான் இருக்கிறது என்பது புரியவாவது ஆரம்பிக்கும்."
கேட்டுக் கொண்டிருந்த சிலபேர், மிகக் கவனத்துடன் யோகி சொன்னதைக் கேட்டுக் கொண்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை, சந்தித்த சில அனுபவங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
பெரும் தனக்காரனுடைய மனைவி, கதவருகே நின்று யோகியார் அளித்த விளக்கங்களை கேட்டுக் கொண்டிருந்தாள். வந்தவர்கள் எல்லாம் போன பிறகு, யோகியிடம் வந்தாள்." ஐயா, நாளைக்கு என் சினேகிதிகள் சில பேரை அழைத்திருக்கிறேன். எல்லோரும் பெரிய, வசதி படைத்த வீட்டுப் பெண்கள். அவர்களுக்கும் இந்த தத்துவ முத்துக்களை அளிக்க வேண்டும்." என்றாள்.
"அவர்களுக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம், ஆர்வம் இருக்கிறதா என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார் யோகி.
"அவசியம் என்றெல்லாம் கிடையாது. சும்மா, செக்கு மாடு மாதிரி ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்வதிலிருந்து, ஒரு இடைவேளை, ஒரு மாற்றம் அவ்வளவு தான். ஒருத்தி ஒரு நீதிபதியின் மனைவி, ஒருத்தி இந்த ஊர்த் தலைவரின் மனைவி..இவர்கள் எல்லோருக்குமே சமூகத்தில் பெரிய அந்தஸ்து, மரியாதை இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் அது இது என்று எதையாவது இழுத்துப் போட்டுக் கொண்டு அலைவதால், இப்படிப்பட்ட விஷயங்களுக்கெல்லாம் நேரமே கிடைப்பதில்லை, அது தான்."
மறுநாளைக்கு, அந்த சினேகிதிகள் எல்லோரும் வந்து விட்டார்கள். அவர்களுக்காக, வேறு யாரையும் யோகியைச் சந்திக்க விடவில்லை. வந்தவர்களும், யோகியை வணங்கி விட்டு, வரிசையாக அமர்ந்து கொண்டார்கள், கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.
"சாமி, கடவுள் ஏன் இந்த உலகத்தை படைத்தார்?" இது நீதிபதியின் மனைவி.
"சாமி, மரணத்துக்குப் பின்னாலும், ஆத்மா வாழ்கிறது என்கிறார்களே, உண்மையா?" இது ஊர்த்தலைவரின் மனைவியின் கேள்வி.
"மிக அருமையான கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்." என்றார் யோகி. கேட்ட பெண்களின் முகத்தில் பூரிப்பு, அத்தனை சந்தோஷம்.
"இன்றைக்குக் கொஞ்சம் வெய்யில் அதிகமாக இருக்கிறது இல்லையா?"
என்று யோகி பொதுவாக வந்தவர்களிடம் ஒரே கேள்வியைத் தான் கேட்டார். அவ்வளவுதான், ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, வெய்யில் நிலவரம், காடுகள் அழிந்து வருவது, ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பது என்று ஆரம்பித்து, கொசு, எலித் தொல்லை, வீட்டில் பிள்ளைகள் அட்டகாசம் இப்படி நிறைய தகவல்களை ஆர்வத்தோடு சொன்னார்கள். சாப்பாட்டு நேரமும் வந்தது. வந்தவர்கள் எல்லாம், விருந்து சாப்பிட்டு விட்டு, கிளம்பும் நேரமும் வந்தது. ஒருத்திக்கு மட்டும், கேட்ட கேள்விக்கு, யோகி நேரடியான பதில் சொல்லவில்லையே என்கிற நினைப்பு வர, "நாங்க சில கேள்விகள் கேட்டோமே...." என்று ஆரம்பித்தாள்.
"பதில் தானே! கேள்வியைத் தொடர்ந்து உங்களுக்குள்ளேயே இடைவிடாது கேட்டுக் கொண்டிருங்கள். விடை நிச்சயமாகக் கிடைக்கும்." என்று சொன்னார் யோகி.
"எப்போது கிடைக்கும்?" என்றாள் ஒருத்தி.
"இன்றைக்கே கூடக் கிடைக்கலாம். அல்லது நாளைக்கு. கேள்வியை நீங்கள் விடாமல் கேட்டுக் கொண்டிருப்பது முக்கியம்." யோகியின் இந்த பதிலைக் கேட்டு, எல்லோரும் அவரவர் வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார்கள்.
பெரும் தனக்காரனுடைய மனைவி, அவர்கள் போன பிறகு, யோகியிடம் மெதுவாக,"ஐயா, தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு ஒரு சந்தேகம் கேட்கட்டுமா? எனக்கென்னமோ, நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்ல இஷ்டப்படாதது மாதிரி இருந்தது."
யோகி அமைதியாகச் சிரித்து விட்டு, அமைதியாக இருந்து விட்டார். அவளும், அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
மாலைப் பொழுதாயிற்று. யோகியைப் பார்க்க வருபவர்களை வரவேற்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய, பெரும் தனக்காரனின் மனைவி, பண்ணைவீட்டில் நின்று கொண்டிருந்தாள். ஊரிலேயே, மிகப் பெரிய பொய்யன், சூதாடி என்று பெயரெடுத்திருந்த ஒருவன் அவளிடம் வந்தான். கையெடுத்துக் கும்பிட்டான்.
"அம்மா, உன் கையில் அணிந்திருக்கிற சிவப்புக் கல் மோதிரத்தை, இன்றைக்கு ஒரு ராத்திரிக்கு மட்டும் இரவல் கொடு. நாளைப் பொழுது விடிந்தவுடன், பத்திரமாக உன்னிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்." மிகவும் பணிவாக வேண்டினான்.
அவளுக்குக் கோபம் வந்தது, "என்ன தைரியம்? இங்கேயிருந்து ஓடிப்போய் விடு..உனக்காவது.... மோதிரம் இரவல் கொடுப்பதாவது..." அவள் போட்ட சத்தத்தில், கேட்டவன் பயந்து ஓடிப்போய் விட்டான்.
அவன் ஓடிப்போன பிறகு, யோகி அவளிடத்தில் வந்தார்."அம்மா, உன் கழுத்தில் அணிந்திருக்கிறாயே, அந்த காசுமாலையை, இன்று ஒரு இரவு மட்டும் எனக்கு இரவல் கொடு " என்று கேட்டார்.
அவளும் கொஞ்சம் கூடத் தயங்காமல், கழுத்தில் அணிந்திருந்த காசுமாலையைக் கழற்றி, யோகியிடம் நீட்டினாள். "இது மட்டும் போதுமா, இல்லை இன்னும் நகைகள் வேண்டுமா?"
யோகி சிரித்துக் கொண்டே சொன்னார்: "நல்லது அம்மா! கேட்டதும் கழற்றிக் கொடுத்து விட்டாயே! எனக்கு நகைகள் வேண்டாம். ஆமாம், அப்போது வந்தவன், ஒரு சிறு மோதிரம் தானே கேட்டான், ஏனம்மா, கொடுக்க மறுத்தாய்?"
"அவனுக்கா? அந்த பித்தலாட்டகாரனுக்குக் கொடுப்பதும், பாழும் கிணற்றில் வீசி எறிவதுமொன்று தான்! அவன் பெரும் பொய்யன்!"
"இப்போது புரிகிறதா அம்மா, உன் சிநேகிதிகளுக்கு ஏன் நேரடியான பதில் சொல்லாமல் தவிர்த்தேனென்று? அவர்களுக்குச் சொல்லியிருந்தால், அது அவர்கள் காதுகளில் ஏறாது அம்மா. நீ சொன்னாயே, அது போல அக்கறை இல்லாதவர்களுக்குச் சொல்வது கூட, மதிப்புள்ள பொருளைப் பாழும் கிணற்றுக்குள் வீசி எறிவது போலத்தான். புரிகிறதா, அம்மா? உன்னிடத்தில் மோதிரம் கேட்டு வந்தானே, அவனை அப்படி கேட்கும்படி தூண்டியவன் நான் தான். உனக்குப் புரிய வைப்பதற்காகவே, இதைச் செய்தேன்."
யோகியின் வார்த்தைகள், அவள் மனதில் ஏதோ வெளிச்சக் கீற்றுக்களைக் காண்பிப்பது போல இருந்தது.
அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
ஒரு விவாதத்தில் இன்று எனக்கேற்பட்ட ஒரு அனுபவத்தைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையில், இந்தக் கதை பொருந்திப் போகவே, மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். கதையின் முடிவில் ஆங்கிலத்தில் கதையின் கருத்தாகச் சொன்னது அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு, இதில் உடன்பாடு இல்லை.
விவாதக்களத்தை நிர்வகிப்பவர் வருத்தப்பட்டு, கைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, குறியீட்டுச் சொல்லும் [tag], இன்னும் ஒரு சொல்லும் 28/03/2009 இரவு 8.14 க்கு நீக்கப்பட்டது.
(One must have the adhikara, or right, not only to speak on spiritual matters, but also to seek answers to profound questions. In the second case, the right is earned by a sustained thirst for knowledge. Short of that, no knowledge, even when received, has any effect).
உடன்பாடு ஏன் இல்லை என்றால்,
"ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் *
ஏரார் எதிராசர் இன்னருளால் * - பாருலகில்
ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று*
பேசி வரம்பு அறுத்தார் பின்."
உபதேச ரத்தின மாலையில், ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளியது.
காரேய் பெரும் கருணைஇராமானுசன், ஒளித்து வைப்பதற்கு ஏதுமில்லை.வேண்டும் என்று ஆசை கொண்டவர்க்கெல்லாம் மறைக்காமல், நுண் பொருளைச் சொல்லுங்கள் என்று வாரி வாரி, வந்தவர்க்கெல்லாம் ஆன்மீக ரகசியங்களைத் தந்தார்
எனும் மணவாள மாமுனிகள் வாக்கில் தெரிகிற சத்தியத்தினாலே!
மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை, மிலேச்சரும் கூடத் தெரிந்து கொள்வது போல வெளிப்படையாகச் சொன்னார், ஞான சிம்மம் சுவாமி விவேகானந்தர்,அவருடைய வாக்கைப் படித்ததனாலே!
நன்றி.
Next Future, an e-zine published by Sri Aurobindo Society, Pondicherry India, March 2009 issue
http://nextfuture.sriaurobindosociety.org.in/mar09/nf_home.htm
ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடு மார்ச் 2009 இதழில் திரு மனோஜ் தாஸ் எழுதிய சிறுகதையின் தமிழாக்கம், சின்ன சின்ன மாறுதல்களோடு.
எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?
இது தமிழுக்கு வந்த சோதனை, தலை குனிய வைக்கும் வேதனை.
காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
அது 1980 ஆம் ஆண்டு.
உலகத் தமிழ் மாநாடு நடக்கிறது.
எம்.ஜி..ஆர் 1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி கலந்து கொள்வதற்காக, நட்சத்திர ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து, அழைப்பிதழும் அனுப்பியிருந்தார். ஆனால், அரசியல் சாணக்கியர்கள், "அட சாமியார் எங்கே வரப்போறாரு!" என்று, அறை ஏற்பாட்டையோ, இல்லை அழைப்பிதழ் அனுப்பியது பற்றியோ, கவியோகிக்கு செய்தி அனுப்பாமல், அவர்களே அந்த அறையில் கும்மாளமடித்துள்ளனர்!
ஆனால், சுத்தானந்தரோ, " என் தாய் தமிழுக்கு விழா! நான் போகவேண்டும்!! என்று சொல்லி விழாவுக்குச் சென்றுவிட்டார்! பழ.நெடுமாறன் கவியோகி மேடையை நோக்கி வருவதைப் பார்த்ததும், ஓடோடிச் சென்று மேடைக்கு அழைத்து வந்தார். மேலே அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துவிட்டது!
அவர் தாமே, கவியோகியை அருகில் அழைத்து, முதல் நாள் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்! கவியோகி கணீர் குரலில் தான் எழுதிய தமிழ் தாய் வாழ்த்தான, " காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்.." எனும் பாட்டை பாடி வணங்கிவிட்டு, வணங்கி, கீழே இறங்கிச் சென்றுவிட்டார்!! பதைத்துப் போன எம்.ஜி.ஆர், திரு.பில்லப்பனை அழைத்து, "சுத்தானந்த பாரதியாரை எப்படியேனும் 5ஆம் நாள் விழாவில் பங்கு பெறச்செய்யுங்கள்." என்று கூறினார். மாநாட்டின் கடைசி நாளான 5ஆம் நாள் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால், 5 தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட இருந்தது! தான் தந்த பெயர் இல்லாததைக் கண்ட எம்.ஜி.ஆர், தனது கையாலேயே ஒரு பெயரை நீக்கிவிட்டு, கவியோகியின் பெயரை எழுதினார்! அவர் செய்ததை அடித்தெழுத யாருக்குத் தைரியம் வரும்? கடைசியில், எங்கோ திருச்சி வானொலி நிலையத்தில், தமிழ் கவிதை வாசிக்கச் சென்றிருந்த கவியோகியை, தனிக் காரில் அழைத்து வந்து அன்னை இந்திரா காந்தியால் கெளரவித்தார்கள், உலகத்தமிழ் மாநாட்டினர்!”
இப்படிப் புறக்கணிக்கப் பட்ட, தமிழ் கூறும் 'நல்லுலகம்' அனேகமாக மறந்தே போன கவியோகி சுத்தானந்த பாரதியைப் பற்றி தனது வலைப் பதிவில் குமுறியிருந்தார் மரபூர் J சந்திர சேகரன்.
காதல் மன்னனுக்குத் தபால் தலை! தமிழறிந்த கவிஞனுக்கு மரியாதை இல்லை என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தவரை, கவியோகியாரது அண்ணன் மகள் வயிற்றுப் பேரன் என அறிந்து தொடர்பு கொண்டேன்.
“1987 ஆம் ஆண்டு சோழபுரத்தில் கவியோகியாரைச் சந்தித்தது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. பாரத சக்தி காவியத்தை மறுபடி வெளியிட வேண்டும் என்ற அவரது வார்த்தைகள் இன்னமும் எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. சிறுவயதில் கவியோகியாரின் ஆத்மசோதனையையும், ஸ்ரீ ரமண சரிதத்தையும் படித்து மகிழ்ந்தவர்களில் அடியேனும் ஒருவன்.
ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னை சாதகர்களுக்குத் தன் கையாலேயே சூப் வழங்குவது, ஒரு பெரிய ஆன்மீக அனுபவமாகவே பேசப்பட்டதைப் படித்திருக்கிறேன். கவியோகியார் ஆசிரமத்தில் இருந்த அந்த நாட்களில், தினமொரு பாமாலையை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்வார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், இந்த செய்திகளை, பாடல்களைத் தெரிந்துகொள்ளவும் ஆசைப் பட்டிருக்கிறேன்.
இப்போது, மின்தமிழில் திரு. சுகுமாரன் சொல்கிறபடி, புதுச்சேரி நண்பரைச் சந்தித்தால், ஆசிரம நிர்வாகிகளுடனும், குறிப்பாக திரு சீதாராமன் ஆசிரம காலாண்டு வெளியீடாக வரும் வைகறை என்ற தமிழ் இதழின் ஆசிரியராக இன்னமும் அவர் தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன், இவர்களிடமிருந்து கோர்வையாக ஒரு இருபத்து மூன்றாண்டு காலப் பொக்கிஷங்கள் கிடைக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
இப்படி என் ஆதங்கத்தை இந்தப் பக்கங்களிலும் பதிந்திருக்கிறேன்
//வேறு பல மொழிகளில் காட்டிய ஆர்வத்தை, தமிழில் ஆசிரம நிர்வாகிகளோ, ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பயிலும் தமிழறிந்த அன்பர்களோ காட்டவில்லை என்ற மனக் குறை எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது.
ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்த புதிதில், குள்ளச்சாமியோடு பழகிய அனுபவங்கள் [பாரதியின் கவிதைகளில், குள்ளச்சாமியைப் பற்றிப் படிக்கலாம்], பாரதியோடு ரிக் வேத ஆராய்ச்சி செய்தது இப்படிப் பல விஷயங்கள், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்த போது, ஒவ்வொரு நாளும் ஒரு பாமாலையைத் தொடுத்து, ஸ்ரீ அன்னையிடத்தில் சமர்ப்பித்தது, இப்படிப் பல தேடல்கள் இன்னமும் இவனுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருளால், இவனது தேடல்களுக்கு உதவியாக இந்த வலைத்தளம் வளர வேண்டும் என்பது வெறும் ஆசை மட்டும் அல்ல, ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பிக்கப் படும் இன்றைய பிரார்த்தனையும் கூட.//
கிடைத்திருக்கிற புத்தகங்களை scan செய்து வலைத்தளங்களில் தேடுவோற்குக் கிடைக்க உதவ முடியுமே.”
திரு சந்திர சேகரன் உடனடியாகப் பதிலும் அனுப்பி வைத்தார்:
"தங்கள் மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி. அரவிந்த விஜயம் முதலில் தமிழ், ஆங்கிலம் தெலுங்கு ஆகியவற்றில் அரவிந்த விஜயம் எழுதியது சுத்தானந்தர். அங்கே வங்காளர்கள், வங்காளர்கள் அல்லாதவர் என்ற மவுன யுத்தத்தில், எங்கே அன்னையும் அரவிந்தரும், அன்பிற்கருளான சுத்தானந்தன் பிரதான சீடம் ஆகிவிடுவானோ என்று விஷம் வைத்ததையும், ஆலகாலனை தியானித்து விஷத்தை கழுத்தௌவரை நிற்கச் செய்ததையும், சுத்தானந்தர் தமதி, pilgrim's soulல் நகைச்சுவையாக எழுதியுள்ளார். அதோடு புதுச்சேரியை விட்டுவந்தவர்தான், மீண்டும் அங்கே போகவில்லை.
பாரத சக்தி மகாகாவியம் மறு பிரசுரம் ஆகிவிட்டது. சுத்தானந்தர் நூலகம் நடத்தும் நண்பர் நாகராஜன் மூலமாக. அவரது கீர்த்தனாஞ்சலியை சந்தங்களோடு புத்தகமாகவும், பெரும்பாலான பாடல்களை ஒலிப்பேழைகளாகவும் வெளிக்கொணர ஆசை. பார்க்கலாம். எல்லாம் அவன் சித்தம்.
//கிடைத்திருக்கிற புத்தகங்களை scan செய்து வலைத்தளங்களில் தேடுவோற்குக் கிடைக்க உதவ முடியுமே.//
இவை காப்புரிமை பெற்றவை: சுத்தானந்த யோக சமாஜம், சிவகங்கை.
வெளியிட விரும்புவோர், மூல நூலை பெற்றுக் கொண்டு, பதிப்புரிமை பெற்றுக் கொண்டு, சமாஜ சட்ட திட்டங்களுக்குட்பட்டு, அச்சிடலாம்.”
மின்தமிழ் வலைக் குழுமத்தில் இந்த பரிமாற்றம் வெளியானது. எனது பதிலையும் மறுபடி அனுப்பி வைத்தேன்:
"தங்களுடைய பதிலைப் படித்துப் பார்த்தேன். வங்காளிகள்-மற்றவர்கள் எனும்
பேதம் நிலவியதைக் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்படிப்பட்ட குறுகிய
மனப்பான்மை, அனேகமாக ஆன்மீக நாட்டத்தோடு வருகிற எல்லா நம்பிக்கைகளிலும்,
இருப்பதைக் காண முடியும். அரவிந்தர் ஆசிரமம் ஆனாலும், காஞ்சி சங்கர மடம்
ஆனாலும் சரி, இத்தகைய குறுகிய பார்வை தான் ஆன்மீக ஒளியை மறைத்துக்
கொண்டிருக்கிறது என்பது கசப்பான, ஆனால் நாம் காணும் நிதரிசனம்.
திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய சுவாமி
சித்பவானந்தர் கூட இதே மாதிரி வங்காளிகளுடைய பிரபுத்வ மனப்பான்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான், ராமகிருஷ்ணா மிஷனில் இருந்து வெளியேறி, தனியொரு அமைப்பை நிறுவினார் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி, நமக்குத் தெரிந்த நிறுவனப்படுத்தப் பட்ட எந்த ஒரு அமைப்பிலும் கூட, இதே மாதிரி அல்லது இதையும் விடக் கொடுமையான நிகழ்வுகளைப் பார்க்க முடியும்.
என்னுடைய சகோதரன் [பெரியம்மா மகன்] திரு தேவராஜன் சிவகங்கையில் தான் வசிக்கிறார். கவியோகியாரிடம் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர். நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றவர்.ஆனால், இவரிடமிருந்து சின்ன சின்ன விஷயங்களைக் கூடப் பெற முடியவில்லை. பள்ளிப் பருவத்தில், என் வீட்டில் இருந்த ஆத்மசோதனை புத்தகத்தின் வழியாகத்தான், கவியோகியைப் பற்றி அறிந்துகொண்டேன். நேரில் தரிசிக்கிற வாய்ப்பு 1987 இல் தான் கிடைத்தது. அதற்குப் பின் 1992 ஆம் ஆண்டு, சோழபுரம் சென்று சமாதியை வணங்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அப்போதும் கூட, அங்கிருந்தவர்களிடம் சரியான விவரங்களைப் பெற முடியவில்லை.விற்பனைக்காகக் கைவசம் இருக்கும் புத்தகங்களைக் கூட அப்போது தெரிந்து கொள்ள முடியவில்லை.
பதிப்புரிமை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த ஒரு
வார்த்தையின் கீழ், குன்றின் மேல் இட்ட விளக்காகப் பிரகாசிக்க வேண்டியவரை, குடத்திற்குள் இட்ட விளக்காகக் குறுக்கி விடுகிறோம் இல்லையா?ஸ்ரீ ரமண ஆசிரமம் கூட, பதிப்புரிமை பெற்ற தங்களுடைய வெளியீடுகளை, இணையத்தில் வேண்டுவோர்க்கு pdf கோப்புக்களாக, இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியைத் தந்திருக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள் தானே?
அது தவிர, நீங்கள் அறிந்த செய்திகளை, கேள்விப்பட்ட அனுபவங்களை
வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ள என்ன தடை?
ஏதோ தெய்வ சங்கல்பத்தின்படியே, சுத்தானந்த பாரதியாரைப் பற்றிப் பேச,
இப்படி ஒரு தனி இழை தொடங்கியிருப்பதாகவே கருதுகிறேன்.
புதுவை A.சுகுமாரனும், நீங்களும், இந்த இழையைப் படிக்கிற ஒவ்வொருவரும் [என்னையும் உள்ளிட்டு], கவியோகியாரைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல்களைத் தேடிக் கொடுக்கவும், ஆரம்பித்தோமேயானால், இங்கேயே ஒரு தகவல் களஞ்சியமாக மட்டும் அல்ல, கவியோகியாரின் ஆன்மீகக் கருவூலமாகவும், ஆக்க முடியும்.
நம்பிக்கையோடு தொடங்குவோமா? “
"இங்கே நாம் எடுத்துக் கொண்ட விஷயம், கவியோகியாரைப் பற்றியது.
ஏறத்தாழ 250 புத்தகங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார். அதில் 173 தமிழில்.”
தெரிந்தோ தெரியாமலோ, தமிழ் நாடு அரசு, அவருடைய படைப்புக்களை நாட்டுடைமையாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கவியோகியாரின் உறவினர்களின் நிர்வாகத்தில் இருக்கும் அறக்கட்டளை, என்ன முடிவெடுத்திருக்கிறது என்பது தெரியவில்லை.
அழகுதமிழில் கவியோகியார் தொடுத்த பாமாலைகளையும், அவருடைய யோக விளக்கங்களையும் தமிழ் மரபில் மறந்துவிடாமல் பாதுகாத்து வைக்க என்ன செய்யப் போகிறோம்?
தமிழக அரசின் நாட்டுடைமை வேண்டுகோளைஅறக்கட்டளை நிராகரித்துவிட்டதாக திரு சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். சோழபுரத்தில் சுத்தானந்தர் நிறுவிய ஒரு உயர் நிலைப் பள்ளி, இன்றும் அவரது உறவினர்களால், பராமரிக்கப்பட்டு வருகிறது.
கூகிள் தேடலில் சுத்தானந்தரைத் தேடினால், அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிப் புகழ் பெற்றவர்கள் விவரம், படம் கிடைக்கிறது. சினிமாக் காரர்களைப் பற்றி விவரம் கிடைக்கிறது. நிறைய தகவல்கள் மறக்கடிக்கப் பட்டு வருகின்றன என்ற நிலையில், அவருடைய படைப்புக்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் தடைகளை நீக்க அவரது உறவினர்களும் முன்வர வேண்டும்.
இசை இன்பம் என்ற வலைப்பதிவில், கவியோகியாரது பாடல்கள் D K பட்டம்மாள், நித்யஸ்ரீ பாடக் கேட்க முடிகிறது. அங்கேயும் இங்கேயுமாக இணையத்தில் கவியோகியாரது பேரைப் பார்க்க முடிகிறது. ஆனால், அவரைப் பற்றிய ஒரு முழுமையான வடிவம், அவரது பன்முகத்திறமை, பல மொழித்தேர்ச்சி, ஆன்மீக சாதனை, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு, மகாகவி பாரதி, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ரமணர், சுவாமி சிவானந்தர் இப்படிப் பல பெரியோர்களுடனான நெருக்கம், இவைகளை விரிவாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ள முடியவில்லை என்பது பெரும் மனக்குறையாக இன்னமும் இருக்கிறது.
பன்முகத் திறமை கொண்ட கவியோகியாரது இலக்கியப் பணியின் ஒரு சிறு துளியை இங்கே சொடுக்கிக் காணலாம்!
இப்படிப்பட்ட மக்களுக்குத் தான் சுவாமி விவேகானந்தர் ஒரு தாரக மந்திரத்தை அளித்தார்:
"எழுமின்! விழிமின்! இலக்கை அடையும் வரை ஓயுதலின்றி உழைமின்!"
எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?Open yourself to the New Light and walk with a joyful step!
ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்றவுடனேயே நம்மில் நிறையப் பேருக்கு உடனே நினைவுக்கு வருவது, Blessing Packet உம், பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியும் தான்.ஆசிரமத்திற்குச் செல்லும் பொழுதோ, ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வைக்கும் பொழுதோ, ஆசிரமத்தில் இருந்து, ஒரு Message Card-ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை உருவப்படமோ, சின்னமோ, அவர்களுடைய அமுதமொழிகளில் ஏதோ ஒரு பகுதியைத் தாங்கி, அப்புறம், ஒரு குட்டி பாக்கட், சமாதி மேல் அலங்காரம் செய்யப் பட்டிருந்த பூக்களின் காய வைத்த இதழ்கள் பெரும்பாலும் ரோஜா இதழ்கள் தான், பெறுவதைப் பலர் அறிந்திருக்கக் கூடும்.
மலர்களைப் பிரசாதமாக அருளுவது அனேகமாக, எல்லாக் கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வரும் பழக்கம் தான். இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா?
இருக்கிறது!
மலர்கள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை, அருளைத்தாங்கி வருகின்றன என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை. மலர்களும் அவைகளின் சேதியும் என்ற தலைப்பில் ஏறத்தாழ எண்ணூறு மலர்களுக்கும் மேலாக, அவை தாங்கி வரும் செய்தியை, அவ்வப்போது அன்பர்களுக்கு சொன்னதைத் தொகுத்து ஒரு நூலே வெளி வந்திருக்கிறது.
தன்னைப் பார்க்க வருகிற குழந்தைகளுக்கு ஒரு மலரைத் தருவது ஸ்ரீ அன்னையின் பழக்கமாக இருந்தது. அதுவே, அவர்களது பிறந்த நாள் என்றால், இரண்டு மலர்கள் கிடைக்கும்ரோஜா மலரைத் தருவதும் ஆரம்பமாயிற்று. 1927 ஆம் அண்டு முதலே தொடங்கிய இந்த முறை,எப்போது பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளோடு மாறியது என்பதை நினைவு கூற முடியவில்லை என்கிறார் சம்பக்லால் என்கிற அடியவர்.
மலர்களோடு, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை உரையாடல்களில் இருந்து, சிறு பகுதிகள், படங்களோடு கூடிய மடல்களும், மலர்களோடு சேர்ந்து கொண்டன. அன்னையிடம் ஆர்வத்தோடு வருகிற குழந்தைகளுக்கு இன்னும் ஏதாவது தரவேண்டும் என்கிற ஆர்வத்தோடு சம்பக்லால் தன் கைகளினாலேயே தயார் செய்த வாழ்த்து மடல்கள் தான் இவற்றுக்கு முன்னோடி.
மலர்களைத் தரும் அன்னை, இன்னொன்றும் சொல்கிறார். மனிதனுக்கு, அலை பாய்கிற மனத்தை உடையவனாய் இருப்பதால் தேடி வருகிற இறையருளை உணரவோ, இறையருளுக்கு இசைந்து நடக்கவோ முடிவதில்லை. மலர்களோ, ஒளியை,அருளை முழுதுமாக ஏற்கிற தன்மை உடையனவாய் இருக்கின்றன. அதனால் தான், எனது அருளையும், ஆசீர்வாதத்தையும் மலர்கள் வழியாகத் தருகிறேன் என்கிறார் ஸ்ரீ அன்னை.
அப்படி வரும் ஒரு செய்தியை, அருள் ஒளியைப் பார்க்கலாமா?
A Birthday message and blessings given to a devotee...!
Let this day of your birth be for you an occasion to give yourself a little more, a little better to the Divine. Let your consecration be more total, your devotion more ardent, your aspiration more intense.
Open yourself to the New Light and walk with a joyful step on the path.
Resolve on this day that it may be thus and the day will not have passed in vain.
Blessings.
ஒரு கதை! ஒரு பாடம்!
முனிவருக்குத் தாள முடியாத துக்கம், எவ்வளவு ஜபம், எவ்வளவு நியமத்தோடு காரியங்கள் ......கடைசியில் பன்றியாகப் பிறப்பதற்குத் தானா? மகனைக் கூப்பிட்டார்.
"மகனே, சாபத்தினால் பன்றியாகப் பிறக்க வேண்டியுள்ளது.அப்படிப் பிறந்தவுடன், தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொன்று விடு."
மகனும் தந்தைக்கு அப்படியே செய்வதாக வாக்களித்தான்.முனிவரும் பன்றியாகப் பிறந்தார். மகன், வாளை எடுத்துக் கொண்டு கொல்லப் போனான். புதிதாகப் பிறந்த குட்டிப் பன்றி சொன்னது, "மகனே, இப்போது தான் பிறந்திருக்கிறேன். ஆறு மாதம் கழித்து வா." மகனும் வாளை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனான்.
ஆறு மாதம் முடிந்தது. மகனும் வாளை எடுத்துக் கொண்டு பன்றியை வெட்டுவதற்காக வந்தான். பன்றி வளர்ந்து, பெண்பன்றி, குட்டிகள்எனப் பெருகி, குடும்பமாய் வாழ்வதைக் கண்டான். "நில்லடா, இப்போது தான் பன்றியாய் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டிருக்கிறேன், சிறிது காலம் கழித்து வா."
மகனுக்குத் தாள முடியாத துக்கம். வேதம் படித்தவர். கல்வி, கேள்விகளில் சிறந்தவர்.ஏதோ, முன் வினை, இப்படி இழிபிறப்பாய்ப் பிறந்து, உழன்று கொண்டிருக்கிறாரே என்று வாளை ஓங்கி வெட்ட முனைந்தான்.
அவ்வளவுதான், முற்பிறப்பில் அவனுக்குத் தந்தையாய் இருந்த அப்பன்றி வெகுண்டெழுந்தது. கோபத்தோடு சொன்னது, "முட்டாளே, என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? பன்றி வாழ்க்கை என்றால் கேவலமா? இதில் எத்தனை சுகம் இருக்கிறது தெரியுமா உனக்கு? உனக்குத் தெரியவில்லை என்றால் ஒதுங்கிப்போய் விடு. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா, அதைக் கெடுக்காதே, போய்விடு.வேண்டுமானால், வாளை உன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போ "
ஆக்ரோஷமாய் உறுமிவிட்டு, பன்றி தன் பெண்டு பிள்ளை குட்டிகளோடு ஓடி மறைந்தது. மகன் இந்த விநோதத்தைக் கண்டு விக்கித்து நின்றான்.
எனக்கிவ் வாழ்க்கை இன்பமுடைத் தேயாம்;
நினைக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக"
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தோடும் ஓடி இன்னுயிர் காத்தது.
பாரதி கவிதை வரிகளில் இந்தக் கதையைக் கேட்டதுண்டு. கேட்ட பொழுதில், ஒரு வினோதமான கதை என்ற அளவிற்கு மேல் யோசிக்கத் தெரிந்ததில்லை.
நம்முடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிற்கும் நாமே எஜமானர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விருப்பமாக, ஆசையாக எழுபவை எல்லாம் நம்முடையவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், எதுவெல்லாம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அத்தனையும் வெளியில் இருந்து வருவது, புலன்கள் வழி மனம் போகும் போது, ஏற்படுகிற மயக்கம், ஒரு விகாரம் அவ்வளவு தான்.
பழக்கம் எப்படி ஆரம்பிக்கிறது? முதலில், கொஞ்சம் சுகமாக, சௌகரியமாக இருப்பதாக நம்ப வைத்து, சமையல் அறைச் சுவற்றில், எண்ணைப் புகை அழுத்தமாகப் படிந்து போவது போல, நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றன. ஆரம்பத்தில், நாம் அதற்கு எஜமானர்களாக இருக்கிறோம். அல்லது அப்படி நம்மை நம்ப வைத்து, நம்மை அதனதன் போக்கில் அலைக்கழித்து, ஆட்டிவைக்கும் எதிரிகளாக ஆகி விடுகின்றன.
காலையில் எழுந்தவுடன் சிலருக்கு காபி அல்லது டீ உடனே குடித்தாக வேண்டும். அப்புறம் செய்தித்தாள் படிக்கிற வேலை, வெண்குழல் வத்தியைப் பற்ற வைத்துக் கொண்டு சிந்தனை வருகிறதோ இல்லையோ, புகையை விட்டுக்கொண்டு, பெரிய சிந்தனாவாதி போல, ஒரு லுக்கு விட வேண்டியது. இப்படி ஒவ்வொருவரும், நம்மையே கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், நம்முடைய வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து கழிப்பதை, உணர முடியும்.
நமக்குக் கற்பிக்கப் பட்டிருக்கிற பழக்கங்கள், நம்முடைய ஒவ்வொரு சிந்தனை இழையையும், செயலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருப்பதைக் கூட நம்மால் உணர முடிவது இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு, செயல்களுக்கு, நாம் எஜமானனாக இருப்பதற்குப் பதிலாக, பழக்கங்கள், மிக சாமர்த்தியமாக நம்மை அடிமையாக வைத்திருக்கின்றன.
ஸ்ரீ அரவிந்தர், தாயகத்திற்குத்திரும்பிய புதிதில் மும்பையில் சந்தித்த ஒரு யோகி, விஷ்ணு பாஸ்கர லீலே சொன்னபடி, எண்ணங்கள் ஆசைகள் எல்லாம் எங்கிருந்து வருக்கின்றன என்று ஆராய்ந்து, வெளியிலிருந்து என்றால், அவற்றைத் திருப்பி அனுப்பிவிடும் பயிற்சியில். மூன்றே நாட்களில், சித்தி பெற்றதை முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.
ஸ்ரீ ரமண மஹரிஷி காட்டிய "நான் யார்" என்ற விசார மார்க்கமும் இதுவே.
Emptying the cup என்பதாக ஜென் கதைகளில் படிக்கும் போது, வடிவேலு மாதிரி 'அட, ஆமா இல்லே' என்று நம்மைப் பற்றிய ஞானம் கிடைத்து விட்டதாகத் தோன்றும்.ஆனால் அது அவ்வளவு எளியது இல்லை.
Karikal, April 13, 1914
" EVERYTHING works together to prevent me from remaining a creature of habits, and in this new state, in the midst of these circumstances, so complex and unstable, I have never before so completely lived Thy immutable peace or rather the “I” has never before disappeared so completely that Thy divine peace alone is alive there.
All is beautiful, harmonious and calm, all is full of Thee. Thou shinest in the dazzling sun, Thou art felt in the gentle passing breeze, Thou dost manifest Thyself in all hearts and live in all beings.
There is not an animal, a plant that does not speak to me of Thee and Thy name is written upon everything I see.
O my sweet Lord, hast Thou at last granted that I may belong entirely to Thee and that my consciousness may be definitively united with Thine?
What have I done to be worthy of so glorious a happiness? Nothing except to desire it, to want it with constancy — that is very little.
But, O Lord, since now it is Thy will and not mine that lives in me, Thou wilt be able to make this happiness profitable to all; and its very purpose will be to enable the greatest possible number of beings to perceive Thee.
Oh, may all know Thee, love Thee, serve Thee; may all receive the supreme consecration!
O Love, divine Love, spread abroad in the world, regenerate life, enlighten the intelligence, break the barriers of egoism, scatter the obstacles of ignorance, shine resplendent as sovereign Master of the earth."
The Mother,
Prayers and Meditations
April 13, 1914
ஸ்ரீ அரவிந்த அன்னையின் இந்த பிரார்த்தனை மலர், பலமுறை படித்தபோதும், விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. பழக்கங்கள் தீயவை என்று தெரிகிறது, ஆனாலும் அவற்றை விட முடியவில்லை என்று மட்டுமே நினைக்கிறோம். ஆனால், பழக்கங்கள், நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை, பின்வழியாக நம்முடைய எஜமானர்களாகவே ஆகி விட்டன என்பது காலம் கடந்து தான் தெரிகிறது.
பழக்கங்களின் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையும் ஸ்ரீ அரவிந்த அன்னை இந்த பிரார்த்தனை மலரிலே சொல்லியிருக்கிறார் என்பதும் இப்போது தான் புரிகிறது. இரண்டு பகுதிகளாகப் பாருங்கள்-
1. Nothing except to desire it, to want it with constancy — that is very little.
2. It is Thy will and not mine that lives in me.
ஸ்ரீ அன்னை சொல்கிறார்:
The true path is surrender, complete, absolute, unconditioned surrender to the Divine.
. . .If you give yourself entirely to the Divine without asking for anything in exchange, if you merge your consciousness in the Divine, it will put an end to your sufferings - but the surrender must be total, unconditional, unbargaining and absolute, including all desires, your needs, your likings, your dislikings, your wishes, your wants, your wills, everything, everything that constitutes your small person and then you will find peace and your torments will come to an end.”
The Mother,
White Roses, Sixth Edition, 1999, pp.7
பழக்கங்களின் அடிமையாகவே இருந்துவிடாமல், என்னை மீட்பாய் தாயே!
ஸ்ரீ அரவிந்த அன்னையே உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
Ides of March - வரலாற்றில் இன்று !
வரலாற்றில் இன்று மார்ச் 15 - கி.மு.44
ரோமாபுரி சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசரை, அவனதுநண்பனும் நம்பிக்கைக்குரியவனுமாக இருந்த ப்ரூட்டஸ் படுகொலை செய்த நாள்.
"நீயுமா ப்ரூட்டஸ்?"
என்று நண்பனது துரோகத்தை நம்பமுடியாமல், கேட்டுக் கொண்டே இருக்கையில், செனேட் உறுப்பினர்கள் பலரும் சீசரைக் கத்தியால் குத்துவதை கவித்துவத்துடன் ஷேக்ஸ்பியர் வர்ணித்திருப்பதை, நம்மில் பலர் படித்திருக்கக் கூடும். ஷேக்ஸ்பியருடைய கவிதையில், ஒரு சர்வாதிகாரி கதாநாயகன் ஆனான். கல்லூரி நாட்களில்ஆங்கில விரிவுரையாளர்கள் உருகி உருகி ஷேக்ஸ்பியர் நாடகப் பாத்திரங்களின் வசனங்களைப் பாடம் நடத்தியது வாழ்க்கைக்கு எந்த விதத்தில் உதவியது என்று கேட்டால் ஒருவருக்கும் சொல்லத் தெரியாது.
போகட்டும்.
கண் போன போக்கிலே மனமும், மனம் போன போக்கில் கால்களும் போகும் போது, இப்படித்தான், நம்முடையது, நாம் மிகவும் நம்புவது என்றிருக்கிற புலன்கள் எல்லாம் ப்ரூடசாக மாறி நம்மைக் குத்திக் குதறுவதை, அதன் வலியை அனுபவிக்கும் போது கூட, நமக்கு புலன்வழி நுகர்வில் இருக்கிற சுகத்தை மறக்க முடிவதில்லை.
அடுத்தவன் வயலில் பச்சைப்புல்லை மேயப்போகிறமாடு--வயலுக்குச் சொந்தக்காரன் நீண்ட கழியால் மாட்டின் முகத்தில் ஓங்கி அடிக்கிறான். அடிவிழும் வேகத்திற்கு மாடு கொஞ்சம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். பச்சைப்புல்லின் வாசனை ஈர்க்க, அடிவிழுந்து வாய்க்கடையில் ரத்தம் வழிவதையும் மறந்து, மறுபடியும் புல்லை மேயப் போகும். பார்த்திருப்பீர்கள்தானே?
இது தான், நாம் நம்முடையது, நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிற புலன்கள், நம்மைப் பழக்கத்தின் அடிமையாகவே வைத்திருக்கச் செய்யும் துரோகம். ஆனால், நமக்கு அது தெரிவதே இல்லை.
தெரிந்தால் தானே, "நீயுமா ப்ரூட்டஸ்?" என்று அதிர்ச்சியோடு கேட்பதற்கு?!
சோதனைகள், கஷ்டங்கள், நோய்களென்று பல விதத்திலும் அடி விழுந்து கொண்டே தான் இருக்கிறது. மாட்டைத் துன்புறுத்தும் நோக்கத்தோடு, வயல்காரன் அதை அடிப்பதில்லை. அதுபோல, வரம்புமீறக் கூடாது என்பதைப் படிப்பிப்பதற்காகவே அந்த அனுபவம் நேரிடுகிறது.
தங்கத்தோடு சேருகிற அசுத்தத்தை, கலந்திருக்கிற அழுக்கை, மிகச் சிறிய அளவிலான நெருப்பிலேயே புடம் போட்டு எடுத்து விட முடியும். மிகக் குறைந்த சூட்டிலேயே அதை விரும்புகிறபடி ஆபரணமாகவோ, அழகுப் பொருளாகவோ மாற்றிவிட முடியும். அதுவே இரும்பாக இருந்தால், அதைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கு எவ்வளவு கடுமையான வழிமுறைகள்? அதை ஒரு பொருளாக, தகடாகவோ, கம்பியாகவோ மாற்றுவதற்குப் பழுக்கக் காய்ச்சி, சம்மட்டியால் அடித்து நெளித்து, தண்ணீரில் முக்கி, மறுபடி காய்ச்சி, அடித்து....? எத்தனை வேலை?
தங்கமோ, இரும்போ, தனியாக அதன் இயல்பு நிலையில் இருக்கும் போது எந்த உபயோகமும் இல்லை. அதையே, உருக்கிச் செதுக்கி ஒரு பொருளாக மாற்றும் போது, அந்த வடிவத்திற்குமே ஒரு பயன் இருக்கிறது அல்லவா?
உயிரும் உணர்வுமற்ற ஜடப்பொருளே, ஒரு பயன் தரும் பொருளாக மாற முடியும் என்றால், பரிணாம வளர்ச்சியில், மனிதனாகப் பிறந்த நாமும் அப்படி மாற முடியும் அல்லவா?
ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் அமுத வாக்கைக் கொஞ்சம் கவனிப்போமா?
“The way is long and difficult for everybody; and to change the physical nature is a big job - but it has to be done. The only way to make it quicker is to keep an unshaken faith in the Divine and a great intensity in aspiration - the rest is done for you.”
The Mother
[p-167, White Roses, Sixth Edition, 1999]
“Physical troubles always come as lessons to teach equality and to reveal what in us is pure and luminous enough to remain unaffected. It is in equality that one finds the remedy. An important point: equality does not mean indifference.”
The Mother
[CWMCE, 15:149]
எந்த நிலையில் இருந்தாலும்,
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிவகளைச் சரண் அடைகிறேன்.ஒவ்வொரு அனுபவத்திற்குள்ளும், நீயே என்னை வழிநடத்திச் செல்கிறாய்.நான், எனது என்று அறியாமையால், அகந்தையால் சொல்லப் பட்டாலும், நீயே இவனது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்.
"எனது கேவலமான ஆசைகளின் படியல்ல- உனது தெய்வீகச் சித்தத்தின்படியே ஆகட்டும் "
இதுவே இவனுள் முழுமையாக வேண்டுகிற வரம். இன்றைய பிரார்த்தனையும் கூட.