இதைச் சொல்ல இத்தனை நாளா, அர்ஜுன் சிங்....?




""  உலகையே உலுக்கிய, 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவில் போபால் நகரில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த விஷவாயுக் கசிவும், அதனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் இனியும் சர்ச்சைக்குரிய பொருளாகத் தொடர்கிறது என்பதே உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதற்கான எடுத்துக் காட்டு என்றுதான் கூற வேண்டும். 

அரசு 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலப்படி, ஏறத்தாழ பத்து லட்சம் பேருக்கும் அதிகமானோர் போபால் யூனியன் கார்பைடு நிறுவன விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் அளித்திருக்கிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்தபின்னும், அன்றைய விஷவாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் குணமானபாடில்லை. அவர்களது வாரிசுகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூளைவளர்ச்சி இல்லாமலும், கண்பார்வை அற்றவர்களாகவும், நுரையீரல் கோளாறு உடையவர்களாகவும் தலைமுறைகள் கடந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

போபால் நகரில் இவ்வளவு பாதிப்பையும் ஏற்படுத்திய யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை உடனடியாக அன்றைய மத்தியப் பிரதேச அரசு கைது செய்தது. ஆனால், கைது செய்யப்பட்ட வாரன் ஆண்டர்சன் 1984-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் சிங். 

கடந்த ஜூன் மாதம், கால் நூற்றாண்டுக்குப் பிறகு, போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் ஒரு தீர்ப்பு வந்தது. அதன்படி, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட ஏழு பேருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும், தலா 2,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுதான் இந்த வழக்கில் வழங்கப்பட முடிந்த அதிகபட்ச தண்டனையாம். ஏனென்றால், இதற்கு முன்பே வழக்கு நீர்த்துப் போகும்படியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதுதான் காரணம். 

ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பு வெளியானதுமுதல் போபால் விஷவாயு விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வாரன் ஆண்டர்சனைத் தப்பிப் போகவிட்டது யார் என்கிற கேள்வி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை நாளும் பதில் பேசாமல் மௌனம் காத்த முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது திடீரென்று ஒரு தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். 

வாரன் ஆண்டர்சனைத் துணிந்து தான் கைது செய்ததாகப் பீற்றிக் கொள்ளும் அர்ஜுன் சிங், உடனடியாக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகக் கூறுகிறார். நான் தகவல் தெரிவித்தவுடன், ""ராஜீவ் எதுவுமே பேசவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் பிரதமர் ராஜீவிடமிருந்து ஆண்டர்சனுக்கு ஆதரவாகவோ, ஆறுதலாகவோ எதுவுமே கூறப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் குற்றப்படுத்துவது அடாத செயல்'' என்று கூறும் அர்ஜுன் சிங், தன்னை அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பலமுறை தொடர்பு கொண்டு வாரன் ஆண்டர்சனை விடுவிக்க வற்புறுத்தியதாகவும் அதனால்தான், யூனியன் கார்பைடு தலைவரை ஜாமீனில் விடுவித்துத் தப்பிப்போக உதவ நேர்ந்தது என்றும் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் அர்ஜுன் சிங். 

அதுசரி, உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் வற்புறுத்தினார் என்பதால், பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நேரிடையான தொடர்பு வைத்திருந்த முதல்வர் அர்ஜுன் சிங் அவரைக் கலந்தாலோசிக்காமல், ஆண்டர்சன் தப்பிப் போக உதவினாரா? உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக முதல்வர் அர்ஜுன் சிங்கைத் தொந்தரவு செய்து ஆண்டர்சனைத் தப்பிப்போக உதவினார் என்றே வைத்துக் கொள்வோம். ஆண்டர்சன் தப்பிப்போன விவரம்கூடத் தெரியாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி? விவரம் தெரிந்தும் பேசாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி? இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணம் தனது உள்துறை அமைச்சர் என்று தெரிந்தும், நரசிம்ம ராவைப் பதவியில் தொடரவிட்டாரா பிரதமர் ராஜீவ் காந்தி? அவ்வளவு மக்கா? திறமையோ, விவரமோ எதுவுமே இல்லாதவரா ராஜீவ் காந்தி? 

ஆண்டர்சனைத் தப்பிப்போக, உள்துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலால் அனுமதித்தபோதும், அவரது கைதை ஆவணப்படுத்தி, தகுந்த நேரத்தில் மீண்டும் ஆண்டர்சனை விசாரணைக்கு உள்படுத்த வழிகோலியது தான்தான் என்று பெருமை தட்டிக் கொள்ளும் அர்ஜுன் சிங், ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறார். அது என்ன கேள்வி தெரியுமா? மத்தியப் பிரதேச அரசின் தனி விமானத்தைக் கொடுத்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்தது ஏன்? என்பதுதான் அது. 

நரசிம்ம ராவ்மீது அர்ஜுன் சிங்குக்கு இருந்த அரசியல் விரோதம் உலகம் அறிந்த உண்மை. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, என்.டி. திவாரியுடன் கைகோத்து, கட்சியில் பிளவு ஏற்படுத்த அர்ஜுன் சிங் முயன்றதும் ஊரறிந்த ரகசியம்.  


பதில் சொல்ல வர முடியாத இறந்துபோன நரசிம்ம ராவின் மீது பழி சுமத்தி, ராஜீவ் காந்திக்கு, ஆண்டர்சன் விவகாரத்தில் தொடர்பில்லை என்று சப்பைக்கட்டுக் கட்ட முற்பட்டிருக்கும் அர்ஜுன் சிங்கிடம் மேலும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.  

இதைச் சொல்ல இத்தனை நாளா? 
25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும். இத்தனை ஆயிரம் உயிர்களின் உயிரைக் குடித்த, வாழ்க்கையுடனும், வருங்காலச் சந்ததிகளுடனும் விளையாடிய சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஏனென்றால், இறந்துபோன ராஜீவ் காந்தியும், நரசிம்ம ராவும் சாட்சி சொல்ல வரப்போவதில்லையே! "


இந்த மாதம் பதின்மூன்றாம் தேதி தினமணி நாளிதழ்  தலையங்கம் எழுப்பியிருக்கும் கேள்வி இது! 



இன்னொரு போபால் வேண்டவே வேண்டாம்! இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் போபாலை விடக் கொடூரமான அணு உலை விபத்து நஷ்ட ஈட்டை வரையறை செய்யும் மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறதே!

அடுத்தவர் தலையில் பழியைத் தூக்கிப் போடுவதும், தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைத்து பரம்பரை வீரம் பேசி வீணாய்ப் போவதும் காங்கிரசுக்குப் பரம்பரை வியாதி! நேரு காலத்தில் வி கே கிருஷ்ணமேனன், அப்புறம் வரிசையாக நேரு பரம்பரைக்காகத் தியாகம் செயப் பலி கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் இப்போது, நரசிம்ம ராவ் வரை வந்து நிற்கிறது, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!வியாதி காங்கிரசோடு போனால் யாரும் இங்கே கவலைப்படப்போவதில்லை, ஒழிந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடலாம்! இந்த தேசத்து ஜனங்களையும் அல்லவா இந்த வியாதி பிடித்துக் கொண்டு வாட்டிக் கொண்டிருக்கிறது!

என்ன செய்யப் போகிறோம்? உங்கள் கருத்தையும் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்! 


 



8 comments:

  1. இந்தியாவில் உப்பு போட்டு சாப்பிடுபவர்க்ள் இல்லை என்று தெரிகிறது

    ReplyDelete
  2. சுந்தர் என்ற பெயரில் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் எழுதியிருக்கும் அனானி!ப்ரொபைல் -குறைந்தபட்ச விவரங்கள் கூட இல்லாமல் இருப்பது கூட அனானி மாதிரித் தான்!

    கொஞ்சம் அடையாளத்தோடு கருத்து சொல்ல வாருங்களேன்! அப்புறம், இந்தியாவில் உப்புப் போட்டு சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதைப்பற்றிக் கவலைப்படலாம்!

    ReplyDelete
  3. // இதைச் சொல்ல இத்தனை நாளா?
    25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும். //

    உண்மையில் உங்கள் ஆக்கத்தை படிக்க ஆரம்பித்தபோதே எண்ணும் வநத அதே கருத்தை தாங்களும் இறுதியில் சொல்லிவிடீர்கள்.

    எனக்கு இதே தான் தோன்றியது. வீணாக வாரன் ஆண்டர்சனை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது?
    அதுதான் வநத பணத்தை எல்லாமே இந்த காங்கிரஸ் நாதாரிகள் பங்கிட்டு கொண்டார்களே!.
    இவனை இந்த அர்ஜுன் சிங்கை, ஈரானில் தூக்கில் போடுவதுபோல் நடு ரோட்டில் சிக்னல் விளக்கின் வளைந்த பகுதியில் அனைவரின் முன்னிலையிலும் தூக்கில் போட்டே ஆகவேண்டும்.

    இதை இன்னமும் உரக்க சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  4. திரு மாணிக்கம்!

    //25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும்.//

    இந்த வார்த்தைகள் அப்படியே தினமணி தலையங்கத்தில் இருந்து மீள் பிரசுரம் செய்யப்பட்டவை. ஜனங்களுடைய உரத்த குரல் நிச்சயம் ஒரு நாள் இவர்களைத் தண்டிக்கும்!

    ReplyDelete
  5. We can't just blame Congress, Arjun, Rajiv or RAO. BJP during their power didn't take any steps to punish Bhobal culprits or Bofors culprits. Now BJP is siding with Congress in the current Nuclear reactor bill. I think everybody is getting paid by American Govt.

    ReplyDelete
  6. வாருங்கள் திரு.சக்ரபாணி!

    Getting paid நிஜமோ பொய்யோ, அரசியலில் நேர்மை, வெளிப்படையான தன்மை, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான தைரியம் எதுவுமே நேருவிடம் இருந்து ஆரம்பித்து இன்று வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் இருந்ததே இல்லை! ஒரே ஒரு டெர்ம் ஆட்சி செய்த பிஜேபியும், விதிவிலக்கல்ல!

    பிஜேபி ஒன்று வித்தியாசமான கட்சி இல்லை! அப்படி ஜனங்களுக்கும் தெரிய ஆரம்பித்ததால் தானோ என்னவோ, காங்கிரஸ் என்ற தெரிந்த பிசாசையே மறுபடி தேர்ந்தெடுத்தார்கள்!

    இந்த அணு உலை ஒப்பந்தம் நாட்டின் பெருகிவரும் எரிபொருள் தேவைக்கு மிகவும் அவசியம் என்று சொல்கிற பிரபலங்களும், திரு.கலாம் உட்பட, இருக்கத் தான் செய்கிறார்கள். ஆஅனால் என்ன நிபந்தனைகளின் கீழ் அதைப் பெறுகிறோம், அதில் ஆதாயம் அடைகிறவர்கள் யார் என்று பார்த்தால், கதை வேறுவிதமாக இருக்கிறது.

    சந்தடி சாக்கில், பாகிஸ்தான், சீனாவிடமிருந்து எந்தவிதமான கட்டுப்பாடு, நிபந்தனைகளுமின்றி, அமெரிக்க ஆட்சேபனையுமின்றி, இரண்டு அணு உலைகளைப் பெற்றுக் கொண்டு விட்ட செய்தியையும் சேர்த்துப் பாருங்கள்!

    இங்கே முதுகெலும்பில்லாத, தலைமைக்குரிய எந்தப் பண்புமே இல்லாமல் தலைவர்களாகி விடுகிறவர்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சேதம் மிகப் பெரியது.

    ReplyDelete
  7. நரசிம்மராவ் வாரிசு தலைமைப் பொறுப்பில் இருந்திருந்தால்,
    ராஜீவை குற்றவாளியாக்கி இருப்பார், அர்ஜுன்சிங்.
    சோனியா, ராகுல் தலைமையில் இருக்கும் போது,
    நரசிம்மராவ்தான் பலி.
    இவ்வளவு பெரிய தேசிய துக்கத்தில் நாடே அழுது கதற,
    அப்போதைய பிரதமர், அதைப் (ஆண்டர்சன் பயணம்)பற்றி
    அறியவில்லை என்றால் அவ்ர் நாட்டின் பிரதமராக இருக்க
    அருகதை உள்ளவரா?
    காங்கிரஸ்காரர்கள் ப.சி,ஜெயந்தி நடராஜன்,அருண்சிங்,மணிஸ் திவாரி,
    மனுசிங்வி (தற்போதைய டௌ கெமிகல்ஸ் சட்ட ஆலோசகர்),etc
    முதலில் கூறுவது, ராஜீவுக்கு ஒன்னுமே தெரியாது என்பது தான்.
    கிராமங்களில் பழமொழி ஒன்று, மகனிடம் உன் அப்பன்
    எங்கடான்னு கேட்டா "அவரு குதிருக்குள்ள இல்லை”ம்பான்னு.
    குதிர் - தானியங்கள் சேமித்து வைக்கும் 6 அடி உயர மண் பானை.
    சோனியாவோ, ராகுலோ, ராஜீவ் சம்பந்தம் பற்றி இது வரை
    ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.
    நேரு குடும்ப இம்மேஷை காக்க சோனியா/ராகுல் கட்டாயத்தால்
    காங்கிரஸ் மறைக்கும் முழு பூசணிக்காய்.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி திரு.வாசன்!

    //'ப‌டித்த‌வ‌ன் த‌ப்பு செய்தால் "ஐயோன்னு" போவ‌ன்'னு, சீறினான் பார‌‌தி.

    ஆள்ப‌வ‌ர்க‌ளே அநியாய‌ம் செய்தால்?..//

    என்ற கேள்வியை உங்கள் பதிவில் இந்தப் பின்னூட்டத்தையே ஒரு பதிவாக எழுதிக் கேட்டிருக்கிறீர்கள்!


    ......அப்போதும் ஐயோன்னும் அம்போன்னும் தான் போவார்கள்! சில பிரச்சினைகளுக்குக் காலம் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும், அதில் இதுவுமொன்று!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!