கொஞ்சம் தெரிந்து கொள்வோமே! குடியுரிமைச் சட்டத் திருத்தம்!

இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்து இருக்கிறோம்? இங்கே அரசியல்வாதிகள் போட்டுக் குழப்புவதில், எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறோம்?


நரேந்திர மோடி அரசு என்ன செய்தாலும் அதைக் கண் மூடித்தனமாக எதிர்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் NDTV கூடத் தங்களை நியாயவான்களாக காட்டிக் கொள்ள வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயிடம் ஒரு நேர்காணலை நடத்துகிறது. 19 நிமிடம் தானென்றாலும் ஹரீஷ் சால்வே நேற்றைக்கு காசுக்கார காங்கிரஸ் வக்கீல்கள் நாடாளுமன்றத்தில் இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டப்படி செல்லுபடியாகாதது என்றெல்லாம் கொஞ்சம் மிரட்டுகிற மாதிரி விவாதம் செய்ததில் இருந்த மாயைகளை முதலிலேயே உடைத்து விடுகிறார். அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவுக்கு எதிரானது என்பது வெறும் கற்பனையானது. நீதிமன்றத்தில் நிற்குமா நிற்காதா என்ற வாதமும் கூட மிகவும் அசட்டுத் தனமானது. யாருக்கு குடியுரிமை அளிப்பது என்பது கொள்கை முடிவு, நீதிமன்றங்கள் பெரும்பாலும் அதில் தலையிடுவது இல்லை. இதிலும் கூட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் இந்த  மூன்று நாடுகளிலில் இருந்து வந்த persecuted minorities என்று குறிப்பிட்டு, அவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப் படுவது பற்றி மட்டுமே பேசப் படுகிறது. இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடப்படவில்லையே என்பதும் இங்கே இந்தியாவில் ஏற்கெனெவே வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதும் கற்பனையான மத அரசியல் சாயம் பூசும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. இலங்கைத்தமிழர்களுக்கு எதுவும் சொல்லப் படவில்லையே என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனெவே அதற்காக தனி சட்டம் இருக்கிறது என்பதால் அதற்கான அவசியம் இல்லை என்று பதிலளித்திருக்கிறார். ஹரீஷ் சால்வே சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.

                    
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து அஸ்ஸாம்  திரிபுரா மாநிலங்களில் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்திருப்பதில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தின் உதவி கோரப்பட்டிருக்கிறது. இங்கே எதிர்ப்புக்கான காரணம் வேறுவிதம். சேகர் குப்தா இந்த 25 நிமிட வீடியோவில் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் சூழ்நிலையைக் கொஞ்சம் சொல்கிறார். அரசுக்கு எதிரான கருத்தை உடையவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பது அவர்கள் சொல்வதை அப்படியே  ஏற்றுக்கொள்வது என்றல்ல, மாற்றுக்கருத்தை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே.

  
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேற்றைக்கு ராஜ்யசபாவில் பேசியது இன்னும் கொஞ்சம் இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. வீடியோ 10 நிமிடம். ஆர்டிக்கிள் 14 பற்றிப் புரிந்துகொள்ளவேண்டுமானால் A R அந்துலே வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பில் விரிவாக இருக்கிறது என்று சொல்கிறார்.  

காணொளிகளைக் கவனமாகப் பாருங்கள்! மீண்டும் சந்திப்போம். 
   

குடியுரிமைச் சட்டத் திருத்தமும் வாக்குவங்கி அரசியலும்!

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துபேச ஆரம்பித்தபோது பல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அரைகுறை மீறி நடந்து கொண்டதில்  அவைத்தலைவர் உத்தரவின் பேரில் நேரடி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அவை ஒழுங்குக்கு வந்தபிறகு மீண்டும் தொடங்கியது என்ற செய்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் எவரையும் தலைகுனியச் செய்கிற ஒன்று. உளறுவாயர் கபில் சிபல் பேச ஆரம்பித்தவுடன் ராஜ்யசபா நேரலையை நிறுத்திவிட்டு, வேறு செய்திகள், காணொளிகள் என்று பார்க்க ஆரம்பித்ததில் இந்த 38 நிமிட காணொளி கிடைத்தது.


2008 ஜனவரியில் நடந்த துக்ளக் இதழின் 38வது வருடக் கூட்ட நிகழ்வின் முதற்பகுதி இது. இதன் முதல் பத்துப் பன்னிரண்டு நிமிடங்களைக் கவனித்தீர்கள் என்றால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்! இன்றைய நடப்போடு 11 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது எந்த அளவுக்குப் பொருந்திப் போகிறது என்பதைப் பார்க்கும் போது சோ அவர்களுக்கிருந்த தொலைநோக்குப்பார்வை தெளிவான கருத்துக்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்து மிகவும் வியந்து போனேன். #GoBackModi என்ற அசிங்கத்தை 2008 இலேயே இங்கே ஆரம்பித்து விட்ட விஷயம் கூட! சோ அதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்களேன்!  இங்கே சட்ட விரோதமாகக் குடியேறுகிறவர்கள் பற்றி  பிஜேபி, அந்த நாட்களிலேயே என்ன கருத்தை கொண்டிருந்தார்கள் என்பது ஏற்கெனெவே தெரிந்த விஷயம் என்பதால், இன்றைக்கு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் குறித்து எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. தவிர இந்த மசோதா கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப் பட்டபோது எதிர்க்கட்சிகளின் ரகளை காரணமாகத் திரும்பப்பெறப்பட்டது. ஆக இது ஒன்றும் புதிதாகக் கொண்டு வரப்பட்ட விஷயமல்ல. எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் இறங்குவதற்கு வாக்குவங்கி அரசியலைத் தவிர வேறு உண்மையான காரணம் எதுவுமில்லை. 

மக்களை பிரிக்கும் இத்தகைய மசோதா ..இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இதற்கு எதிராக நாங்கள் அனைத்து தளங்களிலும் போராடுவோம் - எச்சூரி
கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய ரத்த வரலாறுகளில் ஒன்றான 1978 மாரீச்சபி படுகொலைகளை..இந்நாட்டின் யெச்சூரிகளுக்கு நினைவூட்ட வேண்டிய தருணம் இது !
பங்களாதேஷிலிருந்து மாற்று மத அடக்குமுறையின் காரணமாக அடைக்கலம் கேட்டு மேற்கு வங்காள மாநிலத்திற்கு தப்பித்து வந்த ஹிந்துக்களை ..தண்டகாருண்ய காட்டுப் பகுதிகளில் அடைத்து வைத்ததும், மாரீச்சபி தீவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு குடிநீர் , உணவு போவதை தடுத்து நிறுத்தி பலரை சாகடித்ததும், அதன் பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தி பல நூறு பேரை கொன்று குவித்ததும்..என்று கம்யுனிஸ்டுகளின் மேற்குவங்காள ஆட்சி அதிகார கொடூரங்கள் மிக மிக அதிகம்.
வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள்..ஆட்சி அதிகாரம் கிடைத்த போதெல்லாம்..கொடும் ஹிட்லர்களாக மாறி.. மக்களை சொல்லொணா துயரத்திற்கும், படுகொலைகளுக்கும், பஞ்சம்- பட்டினி சாவுகளுக்கும் ஆளாக்கியது தான் உலக வரலாறு முழுவதும் பதிந்திருக்கும் உண்மைகள்.


தானே சட்டமும் நீதிபதியாகவும் தீர்ப்பாகவும் இருப்பதான மிதப்பில் பானாசீனா என்னென்னவோ சொல்கிறார் என்கிற ஒன்றே போதாதா இந்தச் சட்டத் திருத்தம் நியாயமானதுதான் என்று முடிவு செய்ய? அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் கலவரம் தூண்டப்  படுவதில் ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபா விவாதத்துக்குப் பதிலளித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார். அடுத்து வாக்கெடுப்பு இன்றே நடந்துவிடும் என்றுதான் தெரிகிறது. 

                                                          நேரடி ஒளிபரப்பு

இந்திய ஜனநாயக நடைமுறைகளில் கோளாறுகள் குறைபாடுகள் இருக்கலாம். ஆனாலும் இன்னமும் கூட நம்பிக்கை இருக்கிறது .

மீண்டும் சந்திப்போம்.