கால் மாறாத கமகமக் கதைகள்! தேடல்! மாக்சிம் ரெட்டி!

தேடல் என்பது என்ன? எதைத் தேடுகிறோம்? தேடுவது எதற்காக? தேடியதை என்ன செய்யப்போகிறோம்?

"என் வலைப்பதிவுக்கு 'பாலியல்' 'காமக் கதை' ஆகிய குறிச் சொற்களைத் தேடி நிறைய பேர் வருவதாக feedjit காட்டுகிறது,  தினமலரில் 'தேவநாதனையும்',  புவனேஸ்வரியை'யும் நிறைய பேர் தேடி இருக்கிறார்கள். தேடல் என்பது இது தானோ !"



பதிவர் கோவி கண்ணன் தன்னுடைய பதிவில் கொஞ்சம் அலுப்போடு  எழுதியிருப்பது இது இரண்டாம் தடவை! அவர் அலுத்துக் கொள்வதிலுமே கொஞ்சம் நியாயம் இருக்கிறது! ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லிவிட்டு, நாம் அந்த நினைவே இல்லாமல் அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம்! ஆனால், நம்முடைய பதிவுகளுக்கு வந்து படிப்பவர்கள், அங்கேயே தேங்கி நின்று விடுவதைப் பார்க்கும் அனுபவம், கோவி கண்ணன் பதிவுகளைப் படிக்கும் வாசகப் பரப்பில் பதினாறில் ஒரு பங்கு கூட இல்லாத எனக்குமே, புவனேஸ்வரியைத் தேடி இங்கே  தினசரி வருகிற வாசகர்களைப் பார்க்கக் கிடைக்கிறது.

இன்றைக்குக் கூட  மதுரை ஐ பி முகவரியில் இருந்து ஒருவர் வேலை மெனக்கெட்டு, தமிலிஷில்  புவனேஸ்வரி குறித்த குறியீட்டுச் சொல்லில் இருக்கும் அத்தனை பதிவுகளையும் தேடி படித்திருக்கிறார், இத்தனைக்கும் அந்தப்பதிவில் புவனேஸ்வரி பெயர் தலைப்பில் மட்டும் தான் இருந்ததே தவிர, வேறு படமோ செய்தியோ இல்லை!
* வெள்ளிக்கிழமை பொழுது விடிந்த நேரத்திலுமே ஆறுமணிக்கே வந்து மறுபடி பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்!

அதில் ஒன்று என்னுடையது அக்டோபர் இருபத்தெட்டாம் தேதி, முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் எழுதிய புத்தகத்தைப் பற்றி எழுதியது.


இவ்வளவு மெனக்கெட்டுப் படம் பார்க்க வருபவர்கள், இணையத்திலேயே இன்னும் அதிகமாகப் பார்க்கலாமே, ஏன் இப்படிப் பதிவுகளில் குறியீட்டுச் சொற்களைத் தேடி வருகிறார்கள் என்று பார்த்தால், தேடல் என்பது இது தானோ என்று கோவி கண்ணன் அலுத்துக் கொண்டிருப்பது எவ்வளவு தவறானதோ, அதே மாதிரி அவர்களுக்கும் என்ன தேடுகிறோம், எதைத் தேடுகிறோம், எங்கே தேடுகிறோம்  என்ற தெளிவில்லாமலேயே தேடிக் கொண்டிருப்பது புரியும்!

அரசியல், கழிசடைகள், அயோக்கியர்களுடைய கடைசிப் புகலிடம் என்று யார் சொன்னது? 

இப்போதெல்லாம், அது தான் முதல் சாய்சாகவே  இருப்பது அம்மிணிக்கு இப்போது தான், காலம் கடந்து தெரிய வந்திருக்கிறது! கழகங்கள் காப்பு!

புவனேஸ்வரியைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் புண்ணியவான்களே! உங்களையும் ஏமாற்றக் கூடாது இல்லையா? புவனேஸ்வரி பாவம், விட்டு விடுங்கள்! அவர் ஒரு வழியாக ஜாமீனில் வெளியே வந்து, மூ. மு. கழகத்தில் சேர்ந்து, அரசியல் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்!



பதிலுக்கு மாக்சிம் ரெட்டி படம்  உங்களுக்காக!

வாரணம் ஆயிரம் படத்தில் அழகாகச் சிரித்து சூரியாவோடு பாட்டுப் பாடி ஆடினாரே அதே சமீரா ரெட்டி தான்! வாரணம் ஆயிரம் பட விமரிசனம் ஒன்றில் படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது-சமீரா ரெட்டியை காமெரா மிக அழகாகக் காட்டிய ஒரே படம்! அம்மிணி தெலுங்கில் என் டி ராமா ராவ் மகன் பால கிருஷ்ணாவோடு பல படங்களில் குத்தாட்டம் போட்டவர் தான்! இங்கே மாக்சிம் என்று ஒரு பத்திரிகையில், வந்த படம் உங்களுக்காக. அட்டைபடம் சொல்வது -Gentlemen, the class is in session!


oooOooo




ஜான் மாக்ஸ்வெல் என்பவர் எழுதிய , The 360° Leader என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை ஒரு வலைப்பதிவில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு தலைவனுக்குரிய குணங்களை, தலைமைப் பண்பைப் பற்றிய புத்தகம், அதில்  இருந்து சுவாரசியமான ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது. சென்ற பதிவில், ஆயிரம் உண்மையான நண்பர்களை, பின்தொடர்ந்துவருபவர்களைப் பற்றி, அப்படிப்பட்ட நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வது வெற்றிக்கான உத்தரவாதமாக எப்படி இருக்கும் என்பதை சேத் கோடின் பதிவைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையாகச் சொல்லியிருந்தேன் இல்லையா!


வெற்றிக்குப் பல படிகள், ஒன்று மட்டுமே போதுமானது அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் இந்த நூலில் ஜான் மாக்ஸ்வெல் சொல்கிறார். அவர் சொல்லும் ஒரு கதை இது.




ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.

எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை."

எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!"

வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச்  சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே  அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது.

உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்! காட்டில் வேட்டையாட வந்த ஒருவன்  கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்..

வான் கோழி பணால்! உசரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழேவந்தாயிற்று!

வான்கோழி படத்தைத் தேடும்போது கிடைத்த ஹோலிஸ்டிக் ஹீலிங் என்ற தலைப்பில் வான்கோழியை பற்றிய இன்னொரு சுவாரசியமான தகவலைப் பார்க்க 


உச்சிக்குப்போவது அவ்வளவு பெரிதான விஷயமில்லை! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். 

கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முடிவது தான்!

இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் ஜான் மாக்ஸ்வெல் சொல்லியிருப்பதாகப் படித்த போது, தலைமைப் பண்பு பற்றிய ஒரு சித்திரம் முழுமையடைந்து வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கே இதை எழுதுவது  தலைவர்களாக எல்லோருமே ஆகிவிட முடியும் என்ற கற்பனையை விதைப்பதற்காக இல்லை.தலைவனாக இருப்பதற்கு, இன்னொரு அடிப்படையான தேவை, ஒரு குறிக்கோளுடன் கூடிய குழுவை உருவாக்குவது தான்! குழுவாகச் செயல்படும் கூட்டுறவுமே மிகவும் அவசியம். 

ஒரு குழுவில், ஒரு தலைவனுக்குக் கீழே இருக்கும் நிலையிலும் தலைவனாவதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்வதே கூட, ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்துக்குச் செய்கிற மிகப்பெரிய உதவிதான்!

எம்ஜியார் பாட்டில் வருவது போல தனக்கொரு பாதையை வகுக்காமல் தன தலைவன் வழியிலே நடப்பான் என்பது கண்மூடித்தனமாகக் கேள்வியே கேட்காமல் பின்பற்றுவது, கொடி பிடிப்பதும், தீக்குளிப்பதும் அல்ல!

ஒரு சாதாரணமான மனிதனாக இருந்து கொண்டே, நம்மால் நம்பிக்கையை விதைக்க முடியும்! நம்மைச் சுற்றி உள்ளவர்களுடைய வாழ்க்கையில் தேவைப் படுகிற உந்து சக்தியாகவும், மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும் இருக்க முடியும்!

ஒரு நல்ல தலைவனுடைய தலைமைப் பண்பு அவன் எத்தனை ஆயிரம், லட்சம், கோடி நபர்களுக்குத் தலைமை தாங்குகிறான் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஜனங்களிடமிருந்து சுரண்டிக் கொழுப்பவன் ஒருபோதும் அவர்களுடைய தலைவனாக முடியாது.

ஒரு நல்ல தலைவன் என்பவன், தன்னிடமிருந்து நம்பிக்கை, எதிர் காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான கனவு, செயல் திட்டம், செயல்படுத்துவதில் உற்சாகம் என்று நல்ல விஷயங்களைக் கொடுக்கிறான். சமூகம் அவனிடமிருந்து ஒரு கனவை, ஆதர்சத்தை, நாளைய பொழுது நம்முடையதே என்ற தெளிவைப் பெறும்போது, அங்கே ஒரு நல்ல தலைவன் மட்டுமல்ல, ஒரு நல்ல சமுதாயமும் கூடவே உருவாகிறது!

3 comments:

  1. படம் பார்த்தவுடன் இடுகை படிக்க உற்சாகம் ஆகிவிட்டது :))))))))

    //உச்சிக்குப்போவது அவ்வளவு பெரிதான விஷயமில்லை! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும்.

    கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முடிவது தான்!//

    தொடர்ந்து (மனம்)உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளீர்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தமிழிஷ் எடுத்து விட்டீர்களா?
    தோற்றம் மாறி உள்ளது..
    நீங்கள் உணர்ந்த நல்ல தலைவர் சொல்லுங்கள்...

    ReplyDelete
  3. இரண்டு நாட்களாக தமிலிஷில் இணைப்பதில் பிரச்சினை! அஞ்சல் அனுப்பியிருக்கிறேன், இன்னமும் பதில் வரவில்லை.மற்றபடி,
    எதையும் எடுக்கவுமில்லை, புதிதாகச் சேர்க்கவுமில்லை. இடுகையிட்டவர், நேரம், கமெண்ட்ஸ் லேபில்களைக் கீழே வருமாறும், எழுத்துக்களை வண்ணம் மாற்றியும் செய்ததில் ஓட்டுப் பட்டை காணாமல் போய் விட்டது. பக்கத்தில் குறியீட்டுச் சொற்களைக் கொஞ்சம் இப்போது தான் ஒழுங்கு படுத்தினேன். Trial and error அடிப்படையில் தான் இது வரை, ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு வருகிறேன்! அதில் ஏற்படும் கோளறு, அவ்வளவு தான்!

    அப்புறம், நான் உணர்ந்த தலைவர் இல்லை! கெட்ட பின்பு ஞானி ரகம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!