அடிக்கிற மாதிரி அடிப்பேனாம்... நீயும் அழுகிற மாதிரி அழுது தொலை!

 குற்றப்பத்திரிகை அல்ல! இது வெற்றுப் பத்திரிகை!


2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) முறை கேட்டுக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் வேறு ஏதாவது பரபரப்பான செய்தி வெளிவந்து ஸ்பெக்ட்ரம் பிரச்னை ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாமல் பின்னுக்குத் தள்ளிவிடும். 

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்திலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் திமுகவின் தலைமையிடமான சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் ருந்து இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியைச் சென்றடைந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணைக்காக மத்தியப் புலனாய்வுத் துறையினர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும், மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் விசாரித்தனர்.  

பாருங்கள் அதிர்ஷ்டத்தை, எந்தப் பத்திரிகையும் விசாரணை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் தர முடியாமல் ஜப்பானை சுனாமி தாக்கிய செய்தி தடுத்துவிட்டது!.

முக்கிய ஊடகங்களான சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக் காட்சியும் அவர்கள் குடும்ப நிறுவனங்கள் என்பதால் அடக்கி வாசித்து விசாரணை நடந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தவிர்த்து விட்டன.  


ப்போதும் பாருங்கள், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிபிஐயின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று, அந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது!

சுமார் 80,000 பக்கங்களுக்கும் அதிகமான அந்தக் குற்றப்பத்திரிகை 654 ஆவணங்களையும், 125 சாட்சிகளையும் முன்வைத்திருக்கிறது. ஒன்பது நபர்களையும், மூன்று நிறுவனங்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டி
ருக்கிறது.  கைது செய்யப்பட்டுள்ள முக்கிய எதிரிகளான முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் தனிச் செயலர் ஆர்கே. சந்தோலியா இப்போது எட்டிசலாட் டி.வி. என்று வழங்கப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் உஸ்மான் பால்வா ஆகிய நால்வருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப் பட்டிருக்கிறது.


ஸ்வான் டெலிகாம், யூனிடெக், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கலைஞர் தொலைக்காட்சி போன்றவை குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன, அவ்வளவே.  

டந்த 2-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், ஆ. ராசாவின் காவல் 60 நாளைக் கடந்திருக்கும் என்பதால் அவரைக் கட்டாயமாகப் பிணையில் விடுவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். ஏற்கெனவே, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளால் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராசாவின் விடுதலை மேலும் தலை வலியை ஏற்படுத்திவிடும் என்பதாலோ என்னவோ அவசரக் கோலத்தில் ஒரு குற்றப்பத்திரிகையைப் புலன் விசாரணைத்துறை தாக்கல் செய்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. 

சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை 80,000 பக்கங்கள் கொண்டது என்கிற பிரமிப்பை ஏற்படுத்துகிறதே தவிர, முறையாகக் குற்றங்களைப் பட்டியலிட்டுத் தகுந்த சாட்சிகளுடனும், ஆதாரங்களுடனும் தாக்கல் செய்திருக்கிறதா என்றால் இல்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும், அரசியல் நிர்பந்தங்களை மீறி நமது புலனாய்வுத் துறையால் செயல்பட முடியவில்லையோ என்கிற தோற்றத்தைத்தான் குற்றப்பத்திரிகை ஏற்படுத்துகிறது. 

60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டிருப்பவர்கள் பிணையில் விடுதலையாகி விடுவார்கள் என்பது, அரைகுறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குக் காரணமாக இருக்க முடியாது. குற்றம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் எதிரிகள் அனைவரும் ஐயம் திரிபறக் கண்டறியப்பட்டு, தகுந்த ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகைகளில் அடையாளம் காட்டப்பட்டிருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?  சிபிஐ கைது செய்திருப்பதும்கூட தேர்ந்தெடுத்த சிலரைத்தானே தவிர, குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப் படவில்லையே, ஏன்?


லைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் போயிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியில் விசாரணை நடத்தப்பட்டு அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், கலைஞர் தொலைக்காட்சி முதல்வரின் குடும்பத்தினருடன் தொடர்புடையது என்பதால், சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா? அரசியல் காரணங்கள் சிபிஐயின் கையை ஏன் கட்டிப்போட வேண்டும்? 

லைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக எடுத்துக்கொண்டுதான் மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளால் ஏற்பட்டிருக்கும் உத்தேச இழப்பு ரூ. 57,666 கோடியிலிருந்து ரூ. 1,76,645 கோடிவரை. ஆனால், குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ. 22,000 கோடி மட்டும்தானே, ஏன் அப்படி?

முறைகேடு நடக்கிறது என்று மன்மோகன் சிங்குக்குத் தெரிந்தும், தனக்குப் பலர் தகவல்கள் தந்தார்கள் என்று பிரதமரே வாக்குமூலம் அளித்தும் அவரைப் பற்றிக் குற்றப்பத்திரிகையில் ஒரு வார்த்தைகூட இல்லையே, ஏன்? பிரதமர் மத்தியப் புலன் விசாரணைத் துறையின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டவரா?   


னில் அம்பானியில் தொடங்கி ரத்தன் டாடா வரை பல பெரு முதலாளிகள், கார்ப்பரேட் முதலைகள் சம்பந்தப் பட்டிருக்கிறார்களே, அவர்களை நெருங்க மத்தியப் புலனாய்வுத் துறை பயப்படுகிறதே, ஏன்?

னோ தானோ என்று வழக்கை ஜோடித்து, கார்ப்பரேட் முதலாளிகளும், அவர்களது இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்களும் தப்பித்துப்போக வழி வகுத்து விடுமோ மத்தியப் புலன் விசாரணைத் துறை என்கிற அச்சம் மேலிடுகிறது. 


குற்றப்பத்திரிகையில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல் தொடர்புள்ள குடும்பத்தினரும் ஏன் இடம்பெறவில்லை என்கிற கேள்விக்கு இடமாகிவிட்டது. 

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இது.


ம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இனம் காணப்பட்டுத் தகுந்த ஆதாரங்களுடன் சட்டத்தின்முன் நிறுத்தப்படா விட்டால், மக்களாட்சியின் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிடும் என்பதை மத்தியப் புலன்விசாரணைத் துறை புரிந்துகொள்ள வேண்டும்!


இன்றைய தினமணி தலையங்கம் இது!  இதற்குமேலும் விளக்கம் தேவையா என்ன?

என்ன செய்யப்போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!





3 comments:

  1. //"என்ன செய்யப்போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்! "//

    வேறு என்ன செய்யப் போகிறோம்...வயிறெரிந்து விட்டு, மனதுக்குள் மறுகி வேறு ஒன்றும் செய்ய முடியாமல் கை கட்டி உட்கார வேண்டியாதுதான். முடிந்தால் இரண்டொரு இடங்களில் இரண்டு வரி எழுதி ஆற்றிக் கொள்ளலாம். புலம்பலாம். நம்மைப் பொறுத்தவரை எதிர்த்து வாக்களிக்கலாம். சினிமாக் கதாநாயகன் மாதிரி கண்கள் சிவக்க எழுத்து "ஏய்.." என்று பெருங்குரலில் கத்தி பழிவாங்கவா புறப்படமுடியும்?

    ReplyDelete
  2. ......அல்லது இதோ புறப் பட்டிருக்கிறார் அன்னா ஹசாரே...அவருக்கு ஆதரவளித்து மாற்றத்துக்கு வழி இருக்கிறதா என்று ஆராயலாம். மக்கள் சக்தி ஒன்றுபட இப்படி ஒரு ஆரம்பம் கட்டாயம் தேவை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்!

    ஒரு நல்லவிஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

    இத்தனை வருடப்பொது வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒன்று-இன்றைய இளைஞர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்,ஊழல் முதல் செயல்திறனற்ற அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது.இவர்களை ஏமாற்றுவது மிகக் கடினம். சரியான தலைமை எது என்பதிலும் இன்றைய இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள். காங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்று அவர்கள் பார்ப்பதில்லை. இரண்டும்,புரையோடிப்போய்ச் சீரழிந்தவை தான் என்பதை அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

    அன்னா ஹசாரே மாதிரி,ஒரு காந்தீயவாதி முன்கைஎடுத்ததும், எவர் தூண்டுதலும் இல்லாமல், அவர் பின்னால் அணிதிரளத்துவங்கி விட்டார்கள்.மற்ற மாநிலங்களை விட, இங்கே தமிழகத்தில் இந்த முயற்சிக்கு மாநில அரசின் தடைகள் அதிகம் என்பதையும் இன்று காலை செய்திகளில் பார்த்தேன்.

    பொங்கியெழும் புதுவெள்ளத்திற்குஅணைபோட எவராலும் முடியாது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!