மண்டேன்னா ஒண்ணு! புத்தகக் கண்காட்சியும், புத்தகம் படிப்பதும்!


மண்டேன்னா ஒண்ணு என்ற தலைப்பில் இங்கே எழுதிக் கொண்டிருந்தது இடையில் விடுபட்டுப் போனது. முக்கியமான அரசியல்பொருளாதாரம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை எடுத்துக் கொண்டு மறுபடி ஆரம்பித்தால் என்ன என்று சில வாரங்களாகவே ஒரு யோசனை! இப்படி இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனவரிமுதல் வாரத்தில் எழுதியதற்குப் பின்னால் உடல் நலக் குறைவினால் பதிவுகள் எழுதுவதே இயலாமல் போனது 



புத்தகக் கண்காட்சியும், புத்தகம் படிப்பதும்!  என்று இந்தப்பக்கங்களில் எழுதியதை, அதில் பின்னோக்கி என்ற பதிவருடன் நடத்திய பின்னூட்ட விவாதங்களை நினைவுபடுத்திக்கொள்கிற மாதிரி கூகிள் ப்ளஸ் 

விவாதம் ஒன்றைப் பார்க்க, பின்னூட்டமிடுகிற மாதிரி ஆனது. இந்தவருட சென்னைப்புத்தகக் கண்காட்சியில் சிலபல அசௌகரியங்களைப் பற்றிக் குறை சொல்லி வந்திருந்த பகிர்வு அது. 


      

முகநூலில் பிவி ராமசாமி என்பவர் மேலே உள்ள படத்தைப் ப்கிர்ந்திருந்ததை அப்புறமாகத்தான் பார்த்தேன். இங்கே மலினமான உத்திகளில் புத்தகங்களைவ வாங்குபவர் தலையில் கட்டிவிடுகிற திருவிழா வியாபாரிகளாக மட்டுமே பதிப்பகங்களும் பதிப்பாளர்கள் சங்கமும் இருக்கிறார்களே தவிர நேர்மையான, வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுகிற சமூக அக்கறை, பொறுப்புள்ளவர்களாக இருந்ததில்லை.

தமிழ்ப்பதிப்புத் துறைக்கு மதிப்புக் கிட்டுமா?  என்ற இந்தப்பதிவில் 


வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தி, திருவிழாக் கூட்டத்திற்கு வருகிற கூட்டம் கலர் அப்பளம், ரிப்பன் போலத் தேவை இல்லாததெல்லாம் வங்கி வருவதைப் போலப் புத்தகங்களை விற்பனை செய்வதை விடுத்து, இந்த மாதிரிக் கண்காட்சிகளில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தும் நிகழ்ச்சிகளாகவும், எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களைப் பற்றி  வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிற மாதிரியான நிகழ்வுகளாகவும் நடத்த பபாசி போன்ற புத்தக வெளியீட்டாளர்கள் அமைப்பு யோசிக்கத் தயாராயிருக்கிறதா? கண்காட்சி நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வித்தியாசமான தீம், வரலாற்றுப் புதினங்களுக்கு ஒரு நாள், அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு நாள் இப்படி வித்தியாசமாக சிந்திக்கவும் செயல் படுத்தவும் இங்கே கண்காட்சி ஏற்பாடு செய்பவர்களுக்கு மனமிருக்கிறதா?

காசு கொடுத்து வாங்கிப் படிக்கத் தயாராக இருக்கும் வாசகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட வாசகர்களை ஏமாற்றாமல், நேர்மையாக தங்களுடைய படைப்புக்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளப் பதிப்பாளர்கள் முன்வரும் போது, வாசகர்களுடைய ஆதரவு நிச்சயமாகப் பதிப்பகங்களுக்குக் கிடைக்கும். 

  என்று சொல்லியிருந்ததில் இப்போதும் எந்த மாற்றமுமில்லை.

பதிப்பகங்களே! எழுத்தாளர்களே! ஓசியில் அனுப்பி வைத்தாலும் கொஞ்சம் கவரோடு அனுப்பி வைத்தாலும் உங்களுடைய எழுத்துக்களை, புத்தகங்களை  எனக்கு அனுப்பி வைக்க வேண்டாமென்று  மிக்க அன்போடு வேண்டிக் கொள்கிறேன். எனக்கு வேண்டிய புத்தகங்களை எப்பாடு பட்டாவது காசு கொடுத்தே வாங்குகிறவன் நான் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் இப்போது அதைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதென்றே எண்ணுகிறேன். கிழக்குமேற்கென்று எட்டுத்திசைகளிலும் குப்பை கொட்டுகிறவர்கள் வெளியீடுகளை வாங்குவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறேன். ஓசியில் கொடுத்து மதிப்புரை கேட்கிறவர்கள் பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை. மதிப்புரை என்பது மதிப்பு உள்ள புத்தகங்களுக்கு மட்டுமே! வெறும்பேச்சு, வெட்டி மதிப்புரைகளை விட நான் படித்த நல்ல விஷயங்களை, புத்தகங்களை, எழுத்தாளர்களை என்னுடைய நண்பர்களுக்குப் பரிந்துரை செய்வதுடன், பரிசாகவும் அளிப்பது என்னுடைய பழக்கம். கண்காட்சிக்! இந்த குப் போனேன் இத்தனை புத்தகங்கள் வாங்கினேன் காரபோண்டா சாப்பிட்டேன் கண்ணில் பட்டவர்களுடன் எல்லாம் கை குலுக்கினேன் ஆட்டோகிராப் போட்டேன் என்றெல்லாம் கதைத்து விட்டு  படிக்காமல் இருப்பதையே பெருமையாகப் பீற்றிக் கொள்ள விருப்பமில்லை.

#டிஸ்கி  : இது  யாருக்கும் போட்டியாக எழுதப்பட்டது  அல்ல. ஏற்கெனெவே என் பதிவுகளிலும், பகிர்வுகளிலும் நிறையத்தரம் பேசி அலுத்துப்போனது தான்!   
மண்டேன்னா ஒண்ணு! இந்த ஒண்ணு ;போதுமா? இன்னும் கொஞ்சம் வோணுமா? கொஞ்சம் சொல்லுங்க பாஸ்!

7 comments:

  1. வாசிப்பு ஆர்வமே குறைந்தே போய்விட்ட காலம் இது. அதற்கான காரணங்கள் நேர்மையான அலசலுக்கு உட்பட்டது.

    அந்த வாசிப்பு ஆர்வம் கொஞ்சம் நஞ்சம் இருப்பவர்கள், எல்லாப் புத்தகங்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் பார்க்கலாமே அதில் எந்தக் காலத்திலோ தெரிந்து வாசிக்கத் தவற விட்டது கண்ணுக்குத் தட்டுப்பட்டால் வாங்கிப் படிக்கலாம் என்கிற எண்ணத்தில் வருகிறவர்களே அதிகம்.

    எந்தக் காலத்திலோ பிரசுரமான மறந்தே போய்விட்ட உள்ளடக்கங்கள் தாம் இப்பொழுதும் சுறுசுறுப்பான விற்பனையில் அதிகமிருக்கும். மற்றபடி சிறுவர்களுக்கானவை, மருத்துவம், ஜோதிடம், சுய முன்னேற்றம், மலிவு விலை வெளியீடுகள், தனி மனித நம்பிக்கைகள் சார்ந்தவை என்கிற எல்லைக்குள்ளேயே இன்றைய வெகுஜன புத்தக விற்பனை அடங்கி விடும். பொதுவாக உருவாகியிருக்கும் இந்த கருத்து தவறாகவும் இருக்கலாம்.

    ஒவ்வொரு புத்தகச் சந்தை முடிவிலும் எந்த மாதிரியான புத்தகங்கள் அதிகம் விற்பனையாயின என்கிற ஒரு
    கணக்கெடுப்பு தகவலை வெளியிட்டால் குறைந்தபட்சம் இனி பதிப்புக்கு உள்ளாகப்போகும் உள்ளடங்களிலாவது ஒரு மாற்றத்தை அல்லது மாற்றமின்மையை எதிர்பார்க்கலாம்.

    உதாரணமாக இன்றைய தேதியில் நாவல் என்றாலே அது ஒதுக்கப்பட்ட ஒரு பொருளாக இருக்கிறது. 'இப்போலாம் யார் சார் நாவல் படிக்கிறாங்க?' என்பது பதிப்புலகின் உணர்வாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒதுக்கல் இலக்கியத்தின் ஒரு பகுதியையே எதிர்காலத்தில் இல்லாமல் ஆக்கிவிடும் அபாயமும் இருந்து கொண்டே இருக்கிறது.

    உண்மை நிலவரமும் அது தானா என்று தெரிந்து கொள்ள இந்த மாதிரியான புத்தக சந்தைகள் உரைகல்லாக உதவும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜீவி சார்!

      ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி முடிந்ததும் இத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆயிற்று என்ற விவரமும், அந்தந்த ஊர்க் கண்காட்சிகளில் அதிகம் பேசப்பட்ட புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றியும் கொஞ்சம் செய்திகள் வரும். ஆனால் உண்மையான நிலவரம் இங்கே வணிக வரி,வருமானவரிக்குக் கணக்குக் காண்பிக்கிற மாதிரித் தான் இருக்கும். எழுத்தாளனுக்கு இவ்வளவு ராயல்டி கொடுத்திருக்கிறோம் என்று எந்தப் பதிப்பகத்தாராவது எப்போதாவது வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?

      அதே நேரம், இப்போது பதிப்பகங்கள் நூலகத்துறை ஆர்டரை மட்டுமே நம்பியிருந்த காலம் மாறி, நிறையப்பேர் காசு கொடுத்துப் புத்தகங்கள் வாங்குவது அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் இந்தப் புத்தகக் கண்காட்சிகள் ஓரளவுக்கு உதவிகரமாகவே இருந்துவருகின்றன என்பது உண்மை. பதிப்புத்தொழிலை தினத்தந்தி ஆதித்தனார் மாதிரி நிறையப் பரபரப்பை ஏற்படுத்துகிற வித்தை தெரிந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மட்டுமே இந்தக் கண்காட்சிகளால் பயனடைகிறார்கள்.

      வாசகன் எப்போதும்போல எதைத் தேர்ந்தெடுப்பது, எதைப் படிப்பது என்பதில் தெளிவில்லாத ஏமாளியாகவே இருப்பது தொடர்கிறது.

      Delete
  2. நவீன இலக்கியம், நவீன எழுத்து என்று சொல்லப்படுகின்ற ஆக்கங்களின் விற்பனை நிலவரங்கள் எந்தளவுக்கு
    இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள ஆர்வம். பதிவுகளில் கலந்து உரையாடுகையில் இவற்றை வாசிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, பத்து பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்கிற கருத்து
    வெளிப்பட்டதினால் இந்த ஆர்வம்..

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருபதிப்பகமும் ஒவ்வொருதுறையில் தனிக்கவனம், வெளியீடு, விற்பனை என்று போய்க் கொண்டிருப்பதில் எவரும் உண்மையான விவரங்களைத் தொகுத்து வழங்கத் தயாராக இல்லை. கண்ணதாசன் பதிப்பகத்தை எடுத்துக் கொண்டால் கண்ணதாசன் படப்புக்களைத்தவிர சுயமுன்னேற்றம் குறித்த மொழிபெயர்ப்புப் புத்தகங்களில் சிலகாலம் முன்பு வரை முன்னணியில் இருந்தார்கள். சமையல் குறிப்புக்கள் எப்போதுமே விற்பனையில் சோடைபோனதில்லை. அடுத்துக் கவிதைப் புத்தகங்கள்.புனைவிலக்கியங்கள் எப்போதுமே கொஞ்சம் பின்வரிசைதான்! சரியான மார்கெடிங் உத்தியைக் கையாள்கிற கிழக்கு மட்டுமே அநேகமாகத் தன்னுடைய வெளியீடுகளை வெற்றிகரமாகத்தள்ளி விடுகிறது. ஜெமோ மாதிரித்தனி வாசகர் வட்டத்தைக் கையில் வைத்திருக்கிறவர்கள் தங்கள் புத்தகங்களை இரண்டாவது பதிப்பு வரை கொண்டு வர முடிகிறது. ஆனால், உண்மை நிலவரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிற நிலைதான் தொடர்கிறது.

      Delete
  3. தள்ளி விடுகிறது வேறே. நம் வாசிப்பு சுகானுபவத்தின் உந்து சக்தியில் விற்பனையில் சாதிப்பது என்பது வேறே. இல்லையா?
    சரி. இந்த (சென்னை) புத்தகச் சந்தையில் வாங்குவதென்றால் உங்கள் புத்தகப் பட்டியல் என்னவாக இருக்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. முதலில் நான் சென்னைவாசி இல்லை! :-)))

      இதுவரை புத்தகக் கண்காட்சிக்குப் போனதே இல்லை. புத்தகக் கடைகளுக்குப் போய் நேரடியாகவே புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து ஒருபக்கம் அல்லது கொஞ்சம் கூட, என்ன விஷயம்,எப்படி எழுதியிருக்கிறார் என்பதைக் கொஞ்சம் பார்த்து விட்டு எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடில்லாத சப்ஜெக்ட் என்றுகூடப் பேதமில்லாமல், பார்த்துப் பார்த்து வாங்கும் வழக்கம் என்னுடையது. சப்ஜெக்ட் பிடித்திருந்தால் வெறுமனே சிபாரிசு மட்டும் செய்யாமல் கொஞ்சம் கூடுதல் பிரதிகள் வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்பதும் உண்டு. இந்த வருட வெளியீடுகள் என்னென்ன சப்ஜெக்ட்களில் வந்திருக்கிறது என்பதை நிதானமாகப் பார்த்துவிட்டு, அப்புறம் தான் முடிவு செய்ய வேண்டும். இப்போது உடல்நலக்குறைவினால் புத்தகக் கடைகளுக்கு நேரடியாகப் போய்ப் பார்க்க முடியவில்லை என்பதால் ஆன்லைனிலேயே வாங்கிவிடுகிறேன்.

      Delete
    2. வாங்குவதென்றால் என்று தான் கேட்டிருந்தேன். வாங்கணும்ன்னு அவசியம் இல்லே.

      இப்பொழுதெல்லாம் அவரவர் எழுதிய புத்தகங்களுக்கு அவரவர்களே தான் ஏதோ ஒரு வகையில் பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாமாகப் பார்த்து சில புத்தகங்களை வெகுஜனப் பார்வைக்கு அறிமுகப்படுத்தலாமே என்பதற்காகத் தான் கேட்டேன். தங்கள் பதிலுக்கு நன்றி சார்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!