செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள் : எண்ணெய்! சுடுநீர்! சட்டி!


கத்தியில்லாமல் யுத்தம் செய்யாமல் எண்ணற்ற பேர்களின் ஈரக்குலையை அறுத்தெறிய முடியுமா? உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை  எண்ணெய்ப் பொருளாதாரமும் பெட்ரோடாலர்களும் சத்தமே இல்லாமல் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதில் நம்பர் ஒன்னாக இருக்கும் சவூதி அரேபியா இந்த முறை  தன்னுடைய அமெரிக்கக் கூட்டாளிகளையும் இதர எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபுநாடுகளையும் மீறி ஒரு சூதாட்டத்தை நடத்திக் கொண்டு வருவதில் சூடு தாங்க முடியாமல் பலநாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. இந்தியப் பங்குச் சந்தை கச்சா எண்ணெய் பாரல் $ 54 இற்கும் கீழே இறங்கியதில் இன்று ஒருநாளில் மட்டும் 855 புள்ளிகள் இறங்கிச் சரிவை சந்தித்திருக்கிறது. முதலீட்டாளர்கள் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை இழந்திருக்கிறார்கள் என்று இன்றைய வணிகச்செய்திகள் சொல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரீஸ் விலகக் கூடும் என்ற செய்தி வேறு மேற்கத்தியப் பங்குச்சந்தைகளை பாதித்திருக்கிறது.    

 “The Saudis are putting the heat on everybody and you don’t need to parse it out and say they are really putting the heat on Iran or they are really putting the heat on shale or Russia,” says Gause. “They have decided that given the current market situation they are not going to cut until others cut and all sorts of players are going to feel the sting on that.” என்கிறது இந்தச்செய்தி 

சவூதி அரேபியாவின் இந்த 750 பில்லியன் டாலர் கையிருப்புச் சூதாட்டம் ரஷ்யாவைக் குறிவைத்தே நடத்தப் படுகிற மாதிரி, அமெரிக்காவும் சேர்ந்தே இதை நடத்துகிற மாதிரியும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மாதத்தில் நெறி கட்டின  மாதிரி என்று கேள்வி தானே பட்டிருக்கிறோம்,  கொஞ்சம் நிஜத்திலும் பாருங்கள் என்று காட்டுகிறார்கள் போல. மாற்று எரிபொருள், சிக்கனம், சுயதேவைப் பூர்த்திக்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சி இருக்கிறது. 
******

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசைத் தூக்கி எறிவதற்கான முக்கியமான காரணங்கள் கட்சியிலும் ஆட்சியிலும் லும்பன்களுடைய ஆதிக்கம் அதிகரித்தது, வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை ஓட்டு வங்கியாகவும் தங்களுடைய செக்குலர் அடையாளமாகவும் ஆக்கினது தான்! மார்க்சிஸ்டுகள் கொட்டத்தை அடக்க மம்தா பானெர்ஜி மாதிரிப் பிடிவாதமுள்ள, சகிப்புத்தன்மையற்ற ஒருவரால் தான் முடிந்தது என்பதென்னவோ உண்மைதான்! ஆனால்  வெள்ளி மூக்கு முளைத்ததும்  கழுதையென்று தெரிந்த மாதிரி திரிணமுல் காங்கிரஸ், மம்தா பானெர்ஜி சாயமும் சீக்கிரமே வெளுத்துப் போய் ஜனங்கள் அடுத்த மாற்றத்துக்குத் தயாராக வேண்டிய நிலைமை உருவாக்கி வருகிறது.

மிதுனாப்பூர் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேச வந்த திரிணமுல் காங்கிரஸ் அமைச்சரும்  மம்தா பானெர்ஜியின் மருமகனுமான  அபிஷேக் பானெர்ஜியின் கன்னத்தில் அறை விட்ட ஒரு இளைஞன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அதே நேரம் அந்த இளைஞனை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நையப் புடைத்ததற்கு தொண்டர்கள் உணர்ச்சி  மேலிட்டு அடித்தார்கள், வேண்டுமென்றே செய்யாததால் தவறே இல்லை என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சி விளக்கமும் கொடுத்திருக்கிறது. செய்தி இங்கே 

அமித்ஷாவுக்கு அதிக வேலை வைக்காமல் பிஜேபி மேற்கு வங்கத்தில் காலூன்ற வாயிற்கதவைத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஜனங்கள் மாறுவதற்கு முன் லும்பன்கள் பிஜேபிக்கு ஏற்கெனெவே மாற ஆரம்பித்து 
விட்டார்களாம்!
 ******

இன்னும் பத்தே நாட்களில் ஓராண்டு நிறைகிற சுனந்தா புஷ்கரின் மரணம், தற்கொலையல்ல விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்டதாக டில்லிப் போலீஸ் அறிவித்திருக்கிறது. வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் 
என்று காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் வருகிற மாதிரியே இந்தப் பெண்மணி வாழ்ந்தபோதும் சரி மரணமடைந்த பிறகும் சரி சசிதரூர் வாழ்க்கையில் தொட்டுத்தொடரும் மர்மமாகவே இருப்பதென்னவோ நிஜம்.

டாக்டர் சுப்ரமணியன்  சுவாமி ஆரம்ப முதலே இந்த விவகாரத்தில் இப்போது போலீசார் சொல்லியிருப்பதைப் பட்டவர்த்தனமாகவே சொல்லி வந்திருக்கிறார். 
*******




No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!