Showing posts sorted by relevance for query அரசியல். Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query அரசியல். Sort by date Show all posts

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! குறட்டை விட்டோரெல்லாம்....?



இன்றைய ஜூனியர் விகடனில், வைகோவை ஒரு மாற்று அரசியல் சக்தியாக அடையாளம்காட்டி, தமிழருவி மணியன் நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிய செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.மாற்று அரசியல் தீர்வாக வைகோ தமிழக முதல்வராவது ஒன்று தான் வழி என்று தமிழருவி மணியன் முழங்கியிருக்கிறார். கூட்டத்தில், மதிமுக தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும்  கலந்து கொண்டிருக்கிறார்கள்

ஜெயலலிதாவிடம் கெஞ்சிப் பார்த்து கேட்ட சீட் கிடைக்கவில்லை என்றதும் விசயகாந்திடம் ஓடிப்போய்  மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி  தமிழருவி மணியன் எந்த தைரியத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு ஒப்புக் கொண்டனவா என்பது கூட கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. ஏற்கெனெவே மதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதும் மார்க்சிஸ்டுகளின் அரசியல் கணக்கே வேறு என்பதும் கட்டுரையாளருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போகட்டும்!

வைகோ மீது ஒரு தனிமனிதராக, ஒருதிறமையான நாடாளுமன்றவாதியாக, எனக்கு மட்டுமல்ல, இங்கே நிறையப்பேருக்கு  மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்துவதில் வைகோவுக்கு சாமர்த்தியமில்லை! குறிப்பாக தனக்கு அடுத்த படியாக ஒரு நம்பிக்கையான ஆதரவாளர்களை இரண்டாவது மட்டத் தலைவர்களாக உருவாக்குவதில் கூட வெற்றி பெற முடியாதவர் அவர்.. அதுவும் கருணாநிதி விரிக்கும் வலைக்குள் சிக்குகிறவர்களாகவே அவரைச் சுற்றி உள்ளவர்கள் இருப்பது வைகோவின் தலைமை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அடையாளம்.

ஆளை மாற்றினால் அரசியல் சூழலும் மாறிவிடுமா? தனி ஒரு நபரால் இத்தனை சீரழிவையும் மாற்றி விட முடியுமா?தமிழருவி மணியன் சொல்கிற தீர்வு உண்மையிலேயே, சரியான தீர்வு தானா? நடைமுறை சாத்தியம் தானா? முதலில் அந்த செய்திக் கட்டுரையைப் படித்து விடுவோம்.

''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

தகதகக்கும் தமிழருவி மணியன்


தமிழக அரசியல் வெளியில் தமிழருவி மணியனால் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி இருக்கிறது. 'மாற்று அரசியல்’ எனும் மேடையில் வேறு பட்ட அரசியல் தலைவர்கள் சிலரை ஒருசேர நிறுத்தி நெடிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார்!

தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்’ கடந்த 7-ம் தேதியன்று தனது இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம். மேடையில்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்து மணியன் அமர்த்த, மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ப்ளஸ் ஆச்சரியங்கள். '

'இது காந்தியச் சிந்தனைகளை விளக்குவதற்கான மேடை மட்டும் அல்ல. இது ஒரு போராட்டக் களம். நம்மை ஆள வேண்டியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல ஜனநாயகம். அவர்கள் தவறிழைக்கும் போது அதை எதிர்த்துப் போராடுவதும்தான் ஜனநாயகம்...'' என்று ஒரு பொறியைப் பற்றவைத்து விட்டு அமர்ந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி.

'இன உணர்வாளர்’ என்ற முறையில் இந்தக் கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டு இருந்தார் இயக்கு நர் தங்கர்பச்சான். ''தயவுசெஞ்சு என்னோட பேச்சுக்கு யாரும் கை தட்டாதீங்க. கை தட்டி, விசிலடிச்சே நாசமாப் போயிட்டிருக்கோம் நாம...'' என்று ஆவேசப்பட்டவர், ''இந்த மேடையில் அச்சப்படாமல் பேசலாம். காரணம், இங்கு அமர்ந்திருப்பவர்கள் நேர்மையானவர்களே தவிர, அரசியல் பிழைப்புவாதிகள் அல்ல. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இதுதான். ஓட்டுப் போடுற மக்கள் பிச்சைக்கார மனநிலையில் இருப்பதுதான் அரசியலைப் பிழைப்புக்குப் பயன்படுத்தும் பேர் வழிகளுக்கு வசதி யாகிவிட்டது. கொடுக்கின்ற இலவசத்தை வாங்கி இனி அவன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள். அதன் பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும்'' என்றார் குரல் உயர்த்தி.

மைக்கைப் பற்றிய தமிழருவி மணியன் ரௌத் திரமும், ஆதங்கமும் ஒரு சேர வீசிய பேச்சு தமிழக அரசியல் மேடைகளுக்கு விதிவிலக்கு.

''இந்த நிகழ்ச்சியை 'மூன்றாவது அணி’ அமைப்புக்கான வேலை என்று சிலர் மிகத்தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். இல்லை... இது, 'மாற்று அரசியல்’ அமைவுக்கான தளம். மேடையில் இருக்கும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் கருணாநிதிக்குப் பின்னும், ஜெயலலிதாவுக்குப்  பின்னும் மறைந்தே அரசியலை நடத்துவது? தேர்தல் முடியும் வரை உங்களைப் பயன் படுத்திவிட்டு, பிறகு தூக்கி எறியப்படும் நிலை எத்தனை நாளைக்கு வேண்டும்? எங்களுக்குத் தேவை ஊழலின் நிழல் படாத அரசியல். 

நேர்மையான அரசியலைத் தேடி நான் அறிவாலயமா செல்ல முடியும்?
போயஸ் தோட்டம்தான் செல்ல முடியுமா? 

ஊழலைப் பொதுப்புத்தி ஆக்கிவிட்டார் கருணாநிதி. அரசு அதிகாரிகளை சசிகலா கூட்டம் ஆட்டுவித்தபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, பொதுப் பணத்தை அந்த மன்னார்குடி குடும்பம் வாரிச் சுருட்டியபோது ஆத்திரப் படாத ஜெயலலிதா, எப்போது ஆத்திரப்பட்டார்? பெங்களூருவில் இருந்தபடி தனக்கு எதிராக அவர்கள் சதியாலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும்தானே? இந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பொது நலனை எதிர்பார்க்க முடியும்? 

காங்கிரஸும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை. அதனால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பொது நலனுக்காக உருகும் நீங்கள் கைகோக்க வேண்டும். நீங்கள் மாற்று அரசியலைக் காண்பித்தால், மக்கள் உங்களை விரும்புவார்கள். அதில் எனக்குத் தெரிந்த மாற்று வழி, வைகோ முதல்வர் ஆவதுதான். அதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்தை உருவாக்க நாங்கள் தயார். மற்றபடி உங்கள் விருப்பம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

எதிர்பார்ப்புகளுக்கிடையில் தன் உரையைத் துவங்கிய வைகோ, ''தமிழகம் கட்டுக்கடங்காத பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளை யில் இப்படி ஒரு தளத்தில் கூடியிருக்கிறோம். தமிழருவி... நீங்கள் உங்கள் விருப்பத்தை வெளியிட் டிருக்கிறீர்கள். தியாக இயக்கமாம் ம.தி.மு.க. தேர்தல் அரசியலில் இயங்குவதுதான். நாங்கள் சில கால கட்டங்களில் சிலரோடு கூட்டணி வைத்திருந் தோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் என்றுமே தமிழர்நலன் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்ததும் இல்லை, சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது பொறுத்துக்கொண்டதும் இல்லை. அதனால் பதவி, அதிகாரம் இதை எல்லாம் நாங்கள் என்றுமே எதிர்பார்த்ததும் இல்லை. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள். விஷச் சூழலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எரிமலை, அறிவித்துவிட்டு வெடிப்பது இல்லை, புயல் சொல்லிக்கொண்டு அடிப்பது இல்லை. அது போல் மக்கள் புரட்சி வரும்... கூடவே மாற்றமும் வரும்'' என்று ஒரு புள்ளி வைத்தார்.


விடை தெரியாத கேள்வியோடு கூட்டம் விடை பெற்றது!

(கட்டுரையாளர் ஒரே ஒரு உண்மையைத் தன்னையறியாமலேயே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை தான்!) 
 (அதிமுக நாடாளுமன்றத் தேர்தல்களில் மதிமுகவை அரவணைத்துக் கொள்ள தயாராகிவிட்டதாகவே இப்போதைய செய்திகள் சொல்கின்றன).


-------------------------------------------------------------------------------------------------------------

இங்கே அரசியல், நிர்வாகம் நீதித்துறை, ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் என்று எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்ட நிலையில் மாற்றம் என்பது ஒரு கட்சியை அகற்றி விட்டு இன்னொரு கட்சியைக் கொண்டுவருவதாலோ வராது.

ஒரு நபரைக் குற்றம் சொல்லி அகற்றி விட்டு, வேறொரு நபரை மாற்றுவதால் மட்டுமே இங்கே கோளாறுகளுக்குத் தீர்வாகி விடாது.

மூன்றாவது அணி, மாற்று அணி என்பதெல்லாம் இன்றைய நிலையில் வெறும் கற்பனை தான். தானே உச்சாணிக் கொம்பில்  தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மட்டுமே நிறைந்த சூழலில் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

அப்படியானால் தீர்வே இல்லையா? வேறு வழியே இல்லையா?

நிச்சயமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமை வேண்டும். விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்படும் சக்தியாக மக்களுடைய குரலை எதிரொலிக்கும் இயக்கமாக உருமாற்றம் காண்பதற்கு---

முதலில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தவேண்டும்! இப்போதிருக்கும் வெஸ்ட்மினிஸ்டர்  முறையிலான ஜெயித்தவனே எல்லாற்றையும் சுருட்டிக் கொண்டு போக அனுமதிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்கும் வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தேர்தல் முறை மாற்றப்படவேண்டும்.

ஆபீஸ் பையன் உத்தியோகத்துக்குக் கூட குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசம் அரசியல் வாதிக்குத் தகுதி கேட்கக் கூடாதா? அரசியலில் இறங்குவதற்குக் குறைந்தபட்ச வயது இருக்கிற மாதிரியே, குறைந்தபட்சக் கல்வித் தகுதி தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள்  இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்ட மன்றம், நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, நம்முடைய அரசியல் சாசன, சட்டம் இயற்றும் முறைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். அதில் ஒரு பட்டயப்படிப்பாவது பெற்றிருக்க வேண்டும்!

குறைந்த பட்ச வயது இருப்பது போலவே போட்டியிட அதிகபட்ச வயது வரம்பும் வேண்டும். அறுபது வயது என்று வைத்துக் கொள்ளலாம். சரியான உடல் நலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அறுபத்தைந்து வயது வரை வேண்டுமானால் தளர்த்திக் கொள்ளலாம்.

கேபினெட் அமைச்சர், முதல்வர், பிரதமர்  ஜனாதிபதி பதவிகளுக்கு,ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.

மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது போலவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அரசியல் சாசனத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, மக்களுடைய பிரதிநிதிகள்  பொறுப்பேற்கத் தயாராகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆகிற வரை உச்சநீதி மன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கொம்ஞ்சம் விரிவாகவே பேசலாம்! இதெல்லாம் நடைமுறைக்கு வருகிற சாத்தியம் உண்டா என்று சந்தேகம் எழுகிறதா? தூக்கத்தில் கனவு காண்பது மட்டுமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை.

மாற்றங்களை வேண்டு
ம் மக்கள் குரல் உரத்து ஒலிக்கும் நாளில், எல்லாம் நிறைவேறும்.

சண்டேன்னா மூணு! கமல் காசர்! The Hindu! நெகடிவ் அரசியல்!

கமல் காசர் ஒன்று  டிவியை உடைப்பது இரண்டு தெர்மோகோல் சீண்டல் என  இப்படி பிக் பாஸ் ப்ரொமோ மாதிரி விளம்பரங்களை இரண்டோடு நிறுத்திக் கொண்டு விட்டாரா? மூன்றாவதாக இன்று எதையும் காணோம்! இந்த விளம்பர ஸ்டன்ட் எந்த அளவுக்கு ஜனங்களிடம் எடுபட்டிருக்கிறது?

   
முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மத்தியில் கமல் காசருக்கு ஆதரவு இருப்பதாக இந்த வீடியோ சொல்வதில் ஒருபகுதி உண்மை என வைத்துக் கொண்டாலும் எந்த அளவுக்கு வாக்குகளாய் விழும், என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னமும் ஊகங்களாய் மட்டுமே இருக்கின்றன.


ரங்கராஜ் பாண்டே இந்தப் பேட்டியில் டிடிவி தினகரன். கமல் காசர், சீமான் இந்த மூவரில் எவரும் ஒரு இடம் கூட வெல்லப்போவதில்லை என்றாலும், வாக்குகள் பெறும் அடிப்படையில் மூவரையும் வரிசைப்படுத்திச் சொல்வதும் கூட ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது.   

Banu Gomes 
தமிழ் புத்தாண்டைக் கூட அரசியல் கட்சியும், அரசியல் வாதியும் தீர்மானிக்கும் அவல நிலை உள்ள தமிழகத்தில்..தமிழகத்தின் 'மதசார்பற்ற' என்னும் அரசியல் குறித்து இன்று பேசுவதே சரியாக இருக்கும்.
இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது, இந்து கடவுள்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவது, கடவுள் படங்களை செருப்பால் அடிப்பது, கடவுள் சிலைகள் மீது சிறுநீர் கழிப்பது, பகுத்தறிவு என்கிற பெயரில்..எந்தக் கல்லூரியில் படித்தான் ராமன் ? என்று கேட்பது, இந்து என்றால் திருடன் என்று சொல்வது, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களை விபசார நூல் என்று கேலி செய்வது, உலகத்திற்கே படியளக்கிற திருப்பதி வெங்கடாசலபதி.. தன்னுடைய உண்டியலுக்கு காவல் போட்டிருப்பது ஏன்? என்று கிண்டலடிப்பது..என்று எந்த வித கட்டுப்பாடும் இன்றி 50களில் இருந்து பரவலாக தொடர்ந்து கொண்டிருக்கும் ''அரசியல் ரீதியாக திட்டமிட்ட இழிவுகளை '' உலகளவு பொறுமையுடன் சகித்துக் கொண்ட இந்துக்கள்...பகவான் கிருஷ்ணனை ..பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளைப் போன்ற ரேப்பிஸ்ட் என்று ஒப்பிட்டு பேசிய போது..
அது..இந்துக்களின் நீண்ட பொறுமையை தகர்க்கும் trigger point -ஆக ஆகிவிட்டிருக்கிறது!
இந்து மக்கள் பெரும் மன வேதனைக்கும், பெரும் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள் ! அதை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏனெனில்..இங்கு ..பகுத்தறிவு என்கிற பெயரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதன் பின்னணியில் இருப்பது பகுத்தறிவு அல்ல.. மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களை..மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்கு சேகரிக்கும் சுய நல அரசியல் என்பதை மக்களும் உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.
கிருஷ்ணனை அவதூறாக பேசிய விவகாரத்தில் வீரமணியை மட்டும் குற்றவாளியாக்குவது..இன்னொரு அரசியல் தந்திரம்! வீரமணி தேர்தல் அரசியலில் இருப்பவர் அல்ல. அவர் பேச்சு சமூக அளவில் கண்டிக்கத்தக்கது. அவ்வளவு தான்!
ஆனால்...தேர்தல் அரசியலில் இருக்கும் அரசியல் கட்சிகள் இந்து மதத்தை மேற்கூறிய பல வகைகளில் எள்ளி நகையாடுவதும், இழிவுபடுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
'அரசியல் இந்து'வாக மாறவேண்டியதில்லை. அதே நேரம்..இழிவுகளை / அவதூறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இல்லை. அதற்கு ஒரே வழி..வாக்கு என்னும் ஆயுதம்.
மக்களை பெரும் மன வேதனைக்கு உள்ளாக்கும் இக் கட்சிகளை..தேர்தலில் தோற்கடித்தால் மட்டுமே, இழிவுபடுத்துவதை & மக்களை பிளவுபடுத்துவதை நிறுத்துவார்கள்.
''மதசார்பற்ற'' என்னும் வார்த்தையின் உண்மையான பொருளையும் அப்போது தான் அரசியல் களத்தில் காண முடியும்! என்று முகநூலில் சொல்லியிருப்பதைக் கூட அப்படியே ஏற்றுக்கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது!     


இந்த புரட்சி புண்ணாக்கையெல்லாம் செயற்கையாக உண்டாக்க முடியாதென்பது திமுக மேதாவிகளுக்குத் தெரியாததில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை! சன் டிவி கூட மகஇக கோவனின் பாடல்களை இன்னமும் ஒளி பரப்புவதன் பின்னணி தான்  மெரினா புரட்சிக்கு பின்னாலும் இருந்தது என்று The Hindu செய்தி எக்ஸ்போஸ் செய்திருக்கிறது. தூத்துக்குடியை கலவர பூமியாக ஆக்கியதன் முன்னணியாக மகஇக இருந்தாலும், பின்னணியில் இருந்து இயக்கியது திமுக தான் என்பதும் தெரிந்த விஷயம்தான், இல்லையா? 

இப்போதைய கேள்வி இன்னும் எத்தனை நாளைக்கு இதுமாதிரி  நெகடிவ் அரசியல் செய்கிறவர்களை, திமுகவை சகித்துக் கொள்ளப்போகிறோம்? 

திமுகவும் கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைக் காட்டவேண்டியதினம் ஏப்ரல் 18! இதுவே தமிழ்ப்புத்தாண்டில் நாம் ஏற்கிற உறுதியும் கடமையும்!   

      

ஊருக்கும் வெட்கமில்லை! அட, யாருக்கும் வெட்கமில்லை!



இடையில் சில நாட்கள் இணையத் தொடர்பு இல்லாததால், இந்தப் பக்கங்களில் எழுதுவது பன்னிரண்டு நாட்கள் தள்ளிப் போய்விட்டது!

அதனால் ஒரு குறைவும் இல்லையே! பூமிப் பந்து எப்போதும் போல தன்னுடைய இயல்பான அச்சில் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறீர்களா! அதுவும் சரிதான்!!

இந்தப்பக்கங்களில் அரசியல் செய்திகளை ஒரு விமரிசனத்தோடு எழுதி வருவதில்,மிக முக்கியமான தேவையாக தேர்தல் சீர்திருத்தங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் இவற்றை வலியுறுத்திக் கொண்டிருப்பதைக் கவனித்திருக்கக் கூடும். மேலோட்டமாகப் பதிவுகளைப் படித்தால், என்னவோ காங்கிரஸ்,  திமுக மீது நான் அளவுக்கு மீறிய வெறி, வெறுப்போடு எழுதிக் கொண்டிருப்பதுபோலத் தோன்றலாம்! உண்மையில், இந்த இரண்டையும் விமரிசித்துக் கொண்டிருப்பதே, அதனதன் இடத்தில் ஒரு மோசமான போக்குக்கு வித்திட்டு, அடக்க முடியாத அளவுக்கு அதை வளர்த்துக் கொண்டே போகும் விபரீதத்துக்காகத் தான்! இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் எத்தனை மோசமான பக்க விளைவுகளை  உருவாக்கி இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!


புராணக் கதைகளில், ரக்த பீஜன் என்ற அசுரன், அவன் வெட்டுப்பட்டு சிந்துகிற ஒவ்வொரு ரத்தத் துளியிலும் இன்னொரு ரக்தபீஜன் உருவாகும் விதம் சொல்லப் படுகிற மாதிரி, மோசமான அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் இன்னும் இன்னும் பல ரக்த பீஜர்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை, கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமானால் புரியும்.சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களாகப் படு முடிச்சாகப் போட்டுக் கொண்டே போனால் அதற்கு என்ன தீர்வு இருக்க முடியும்?

பழைய ஏற்பாட்டில் புத்திசாலியான அரசன் சாலமன் செய்த மாதிரி, ஒரே வெட்டு! சீர்திருத்தம் செய்யவே முடியாமல் போகிற நிலையில், பழைய கட்டுமானங்களை ஒட்டுமொத்தமாகத் தகர்த்துவிட்டு, மறுபடியும் அஸ்திவாரத்தில் இருந்து ஆரம்பிப்பது தான் ஒரே தீர்வு!

எங்கே போகிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு எழும் மிக அடிப்படையான கேள்விகள். அந்த வகையில் பதினைந்து நாட்கள் இடைவெளியில், வெவ்வேறு விஷயங்களைத் தொட்டு, அதே நேரம் சொல்ல முனைகிற விஷயம் ஒன்றாயிருக்கிற இரண்டு செய்திக் கட்டுரைகள், தினமணி நாளிதழில் வெளியானவை, 
தினமணிக்கு நன்றி சொல்லி, என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?
யாருக்கும் வெட்கமில்லை!!


First Published : 26 Sep 2011 02:41:41 AM IST


தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி என்பது பெரும்பாலும் கொள்கை, கோட்பாடு, செயல்திட்டம், கருத்தொற்றுமை என ஆக்கப்பூர்வமான பல காரணிகளின் அடிப்படையில் அமையும்.(??)

அந்தக் கூட்டணியானது தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அடுத்த தேர்தல் வரும் வரையில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டும், சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டும், சரியோ, தவறோ கொண்ட கூட்டணிக்காக ஒருவரை ஒருவர் ஏந்திக் கொண்டும் மக்கள் மன்றத்தில் காட்சி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அது ஒரு காலம்.

அரசியல் பரிணாம வளர்ச்சியோ என்னவோ, அண்மைக் காலமாக "அரசியல் கூட்டணி' என்ற அந்த ஆக்கப்பூர்வ, ஆத்மார்த்தமான உறவு மாறி "தேர்தல் உடன்பாடு' என்ற ஒரு வர்த்தக ரீதியிலான சொல்லாடல் மூலம் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கி, மக்களைச் சந்தித்து வருகின்றன.

இந்த "உடன்பாடு' என்பது கொண்ட கொள்கையின் அடிப்படையில் அல்லாமல் "பரஸ்பர ஆதாயம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் கையெழுத்தாகிறது. அதில் அரசியல் சார்ந்த சுயலாபக் கணக்கு மட்டுமே பிரதானம். இந்த "உடன்பாடு" எப்போது ஏற்படும், எப்போது முறியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதுதான் தமிழக மக்கள் இதுவரையில் கண்டு வரும் அரசியல் காட்சிகள்.

 "தேர்தல் உடன்பாடு' மூலம் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அவரவர் விருப்பங்கள் நிறைவேறாவிட்டாலோ அல்லது "உடன்பாடு" மூலம் நஷ்டம் ஏற்பட்டாலோ அடுத்த கணமே அந்த "உடன்பாடு” முறிந்து விட்டதாக இரு தரப்பினருமே வெட்கத்தை விட்டு அறிவித்து விடுகின்றனர். அடுத்த "உடன்பாட்டு"க்கும் தயாராகி விடுகின்றனர்.


இதையும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டவர்களே அடுத்த ஆறு மாதத்தில் "புதிய உடன்பாடு" செய்து கொண்டு ஜனநாயக மேடையில் ஏறி, எதிரில் இருப்பவர்கள் ஏமாளிகள் என நினைத்துக் கொண்டு காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இப்போது அதையும் தாண்டி "தேர்தல் உடன்பாடு" என்பது அந்தத் தேர்தல் வரையாவது நீடிக்குமா? என ஐயம் கொள்ளும் அளவுக்குத் தமிழக அரசியல் களத்தில் நாள்தோறும் புதிய புதிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

ஆம்! நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக, இடது சாரிக் கட்சிகள் என சில கட்சிகள் "தேர்தல் உடன்பாடு" செய்து கொண்டன. அந்த உடன்பாடு தேர்தல் முடியும் வரையாவது நீடிக்குமா என்ற கேள்வி எழும் வகையில் நிகழ்வுகள் இருந்தன. அதிமுகவுடன் "தேர்தல் உடன்பாடு" செய்து கொண்ட கட்சிகள் எல்லாம் வேறு ஓர் இடத்தில் ஒன்றுகூடி "புதிய உடன்பாடு" காண முயற்சித்தன. வெளியில் வீர முழக்கமிடும் கட்சிகள், தனி அறையில் அமர்ந்து சிந்திக்கும் போது தான் அவர்களது நோக்கம் என்ன? பலம் என்ன? பலவீனம் என்ன என்பது உறைக்கும் போலும்.

தலைதெறிக்க வெளியே ஓடிவந்து கேட்டதை விட்டுவிட்டு "அம்மா" கொடுத்ததை வாங்கிக் கொண்டு அரிதாரம் பூசிக் கொண்டார்கள். யார் செய்த புண்ணியமோ, ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது. இந்த நவீன காலத்து அதிரடி அரசியல் அத்துடன் முடிந்தது என்று பார்த்தால் இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த கையோடு உள்ளாட்சித் தேர்தல் வந்துள்ளது. பழைய கூட்டாளிகள் தொடருவார்கள் என பார்த்தால், திமுக கூட்டாளிகள் ஒட்டிக் கொண்டது போதும் எனக் கூறிவிட்டு வெட்டிக் கொண்டனர்.

அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து "சாதனை" படைத்துள்ளது.

அந்த "சாதனை" கூட்டணிக் கட்சிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது!அது ஒருபுறம் இருக்கட்டும்!!

தங்களை அசைக்க முடியாது, அழிக்க முடியாது என வலிமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தில் மக்களைத் தனியாகச் சந்திக்கத் திராணியற்றுத்தான் கூட்டணி, தேர்தல் உடன்பாடு என்ற மாய்மால வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுகின்றன. அந்தக் கூட்டணி அல்லது தேர்தல் உடன்பாடு என்று வந்த பிறகாவது அவர்கள் ஒருவகைப்பாட்டில் நிற்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. "மாற்றம்” வரும் என்று எண்ணி வாக்களித்த மக்களுக்கு மயக்கம் வரும் நிலையைத் தான் அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆபத்தான அசிங்கத்தைச் செய்வதில் பெரிய பங்குதாரருக்கும் வெட்கமில்லை, சிறிய பங்குதாரருக்கும் வெட்கமில்லை. 

மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை!



உடனடித் தேவை - நிர்வாகச்சீர் திருத்தங்கள்!!

First Published : 15 Sep 2011 01:22:54 AM IST


அண்ணா ஹசாரே தலைமையில் நடந்த போராட்டத்துக்குக் கிடைத்த பேராதரவுக்குக் காரணம் தெளிவாகத் தெரிகிறது. உயர்மட்ட ஊழல்கள் படித்தவர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், கீழ்மட்ட அரசுத்துறைகளில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்களும், சேவைகளைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களும் தடைகளும், சாதாரண மக்களை வெறுப்படையச் செய்துள்ளது.

ஆக, இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதித்துவ ஜன நாயகக் குடியரசு முறை உண்மையாகவே மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்றால் நமது ஆளுகையில் உடனடியாகச் சில மாற்றங்கள் தேவைப் படுகின்றன.

நாட்டில் கரை புரண்டோடும் லஞ்ச ஊழல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு,(முதலாதாக) அரசுப் பணிகளில் அதிகபட்ச வெளிப்படைத் தன்மையும், தகவல் தொழில்நுட்ப உதவியும் அவசியமாகிறது.

அடுத்தது, அரசு அமைத்துள்ள பல்வேறு கண்காணிக்கும், முறைப் படுத்தும் அமைப்புகள் முழுமையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்.

மூன்றாவதாக, முடிவெடுக்கும் அதிகாரம், மக்கள் வரை (அதாவது கிராம சபைகள் வரை) பரவலாக்கப்பட வேண்டும்.

இவையெல்லாமும் சாத்தியமாக வேண்டுமென்றால், மேலிருந்து கீழ்வரை எல்லாத் துறைகளிலும் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆட்சிக்குத் தலைமை வகிப்பவர்கள், நிர்வாகச் சீர்திருத்தம் வேண்டும் என்று தணியாத ஆர்வமும், அதீத முனைப்பும் கொண்டால் மட்டுமே இந்த மாற்றம் ஏற்படும்.

இன்றைய அரசியல்வாதிகள் எல்லோருமே மோசமானவர்கள் என்று மேம்போக்காகப் பேசுபவர்கள், இன்று சில மாநிலங்களிலாவது, தொலை நோக்குப் பார்வையுடன், மக்கள்நலன் சார்ந்த, சிறந்த நிர்வாகத்தைக் கொடுத்துவரும் ஆட்சிகளைக் கவனித்தால், தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.

அண்ணா ஹசாரே உண்ணாவிரதமிருந்து போராடிய ஜன லோக்பால் மசோதாவில் மிக விரும்பத்தக்க அம்சம் ஒன்று உண்டென்றால், அது வலுவான மக்கள் சாசனம் என்பதுதான்.

ஆனால், ஜன லோக்பால் மசோதாவுக்கு முன்னோடியாக, கடந்த ஆண்டே, மத்தியப் பிரதேச மாநில அரசு, இந்த வலுவான மக்கள் சாசனத்தின் சாராம்சமான, "அரசு சேவை உத்தரவாத உரிமைச்சட்டம்" என்ற புதிய சட்டத்தை முதன்முதலாக இயற்றிப் புரட்சிக்கு வித்திட்டது.

இச்சட்டத்தின்படி, எல்லா அரசு அலுவலகங்களும், அவர்களது செயல்படும் நடைமுறைகள், சட்டதிட்டங்கள், அலுவலர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ரேஷன் அட்டை, ஜாதிச்சான்றிதழ், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்பட எல்லாவிதமான அரசு சேவைகளுக்கும் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்க வேண்டும். ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கெடுவுக்குள் சேவையை அளிக்க வேண்டும். காரணமின்றித் தாமதமானால், குறைந்தபட்ச அபராதமும், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதல் அபராதமும் விதித்து, அலுவலக ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம்செய்து, பாதிக்கப்பட்ட குடி மகனுக்கு அளிப்பதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. அலுவலர்கள் மட்டுமல்லாது, அமைச்சர்களும், முதலமைச்சரும்கூட, இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேச அரசைத் தொடர்ந்து, பிகார், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், கோவா மாநில அரசுகளும் இந்த "அரசு சேவை உத்தரவாத உரிமைச் சட்டத்தை" இயற்றியுள்ளன. கேரள அரசும் இதற்கான மசோதாவைக் கொண்டுவந்துள்ளது.

1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட "ஊழல் தடுப்புச் சட்டத்'தின்கீழ், இன்றைக்கு அரசு ஊழியர்களை விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்கு மிகக் கால தாமதமாவதால், ஊழல்பேர்வழிகள் தப்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும்கூட, அதிகபட்சமாக ஓராண்டுக்குள் விசாரித்து, குற்றம் நிரூபிக்கப் பட்டாலோ அல்லது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருந்தாலோ, அந்த ஊழியரின் சொத்துகளை, தீர்ப்பு வழங்கப் பட்ட 30 நாள்களிலேயே பறிமுதல் செய்து, அரசுடைமை ஆக்குவதற்கான மற்றொரு புரட்சிகரமான புதிய மசோதாவை, பிகார் அரசு 2009-ம் ஆண்டு வடிவமைத்தது.

"பிகார் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் சட்டம் 2009" என்று பெயரிட்டு, ஓராண்டு போராடி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள இந்தச் சட்டத்திலிருந்து, பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழல் பேர்வழிகளும் தப்பிக்க முடியாது என்பது மற்றொரு சிறப்பு. இந்த சிறப்பு விரைவு நீதி மன்றங்கள், நன்றாகச் செயல்படத் தொடங்கி ஊழல் பெருச்சாளிகளின் சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதுடன், அவர்களது பங்களாக்கள், அரசுப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

பிகாரைப் பின்பற்றி, சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகளாலும், இதே மசோதா அம்மாநிலச் சட்ட மன்றங்களில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல், ம.பி., பிகார், ராஜஸ்தான் ஆகிய அரசுகள் வெளிப்படையான பல நிர்வாகச் சீர் திருத்தங்களை அடுத்தடுத்துக் கொண்டுவந்து, மக்களை அதிகாரப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளன. மத்தியப் பிரதேச அரசு, சுயாட்சியுடன் செயல்படும் நல்லாட்சி மற்றும் கொள்கை ஆய்வு மையம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த மையம் அளிக்கும் பல ஆலோசனைகளை அமல்படுத்தி வருகிறது.


வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தும் உலகளாவிய அமைப்பான "டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல்' இந்த மூன்று மாநில அரசுகளின் முன்மாதிரி நிர்வாக நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளது. சொல்லப் போனால், இந்த மாநில அரசுகளுக்குள், சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதில் ஓர் ஆரோக்கியமான போட்டியே நிலவுகிறது.

அதேபோல, 15-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட "கல்வி உரிமைச் சட்டத்'தை அமல் படுத்தவும், அது தொடர்பான விதிகளை இயற்றவும் தொடங்கியுள்ளன. ம.பி. அரசு, ஆசிரியர்கள் நியமனத்தில், பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது. கேரள அரசு, அம்மாநில பாடத்திட்டக் குழுவை சுயஅதிகாரம் கொண்ட, அரசியல் குறுக்கீடுகள் இல்லாத சுதந்திர அமைப்பாகச் செயல்பட அனுமதித்து, பள்ளிக் கல்வித்துறையில் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.


பல மாநில அரசுகள், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்தும், அதன்படி உள்ளாட்சித் தேர்தல்களை முறையாக நடத்தியும், அடிப்படை ஜனநாயகத்துக்கு வலுசேர்த்து வருகின்றன. இது மட்டுமல்லாது, பல மாநில அரசுகள், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மாநில லோக்ஆயுக்த நீதிமன்றங்களை அமைத்துள்ளன.

இவையெல்லாம், மக்களை மதிக்கிற, பங்குதாரராகப் பார்க்கிற, ஆரோக்கியமான அணுகுமுறை இந்த மாநிலத் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது. பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் மத்தியப் பிரதேசம், பிகார் ஆகியவற்றின் முதல்வர்கள், மாநிலங்களின் விடிவெள்ளியாக, காமராஜைப் போன்று எளிமையாக மக்கள் அணுகமுடியும் விதத்திலும், ஆரவாரமின்றியும், தீர்க்க தரிசனத்துடனும் செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்த மாநிலங்களில் ஏற்பட்டு வரும் வெளிப்படைத்தன்மையும், ஊழல் ஒழிப்புச் சட்டங்களும், நிர்வாகச் சீர்திருத்தங்களும், தொலைநோக்குப் பார்வையும், மக்களை அதிகாரப்படுத்தும் நடவடிக்கைகளும் நம் மாநிலத்தில் அறவே இல்லை. 

முந்தைய திமுக அரசும் சரி, இன்றைய அதிமுக அரசும் சரி, மக்களை அதிகாரப்படுத்தும் வகையாக இல்லாமல், நுகர்வோராக, பயனாளியாக, மனு போடுபவராக மட்டுமே வைத்துக்கொள்ள விரும்புகின்றன.


மக்கள் நலத்திட்டங்கள் இரு வகைப்படும், ஒன்று இலவச மதிய உணவு, தரமான இலவசக் கட்டாயக் கல்வி, தரமான இலவச மருத்துவம், மானிய விலையில் தரமான உணவுப்பொருள்கள், ஆதரவற்றோருக்கு உதவித் தொகை போன்ற மேம்படுத்தும் திட்டங்கள். மற்றவை, இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவச வேட்டி சேலை, இலவச அரிசி, இலவச மிக்சி, லேப்டாப், இலவச தாலி போன்ற பிற்போக்கு வகையறாக்கள்.


வாக்கு வங்கியை நிலைநிறுத்த நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மக்களிடம் பல்வேறு இலவச நுகர்வுப் பொருள்களைத் திணித்து, சலுகைகளை அளித்து, அவர்களை வளர்ச்சி அரசியல் ஈடுபாட்டிலிருந்து அன்னியப்படுத்தும் செயல்பாடுகளை ஆள்பவர்கள் துரிதப்படுத்துகிறார்கள். இது தமிழக மக்களின் அரசியல் ஈடுபாட்டை அழித்தொழிக்கும் ஆபத்து கொண்டது.

இரு கழக ஆட்சியிலுமே, சட்டமன்றத்தில் ஆரோக்கிய விவாதங்கள் குறைந்து, எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகக் கருதி தூற்றுவதும், ஆளும் கட்சித் தலைவரை உச்சகட்ட செயற்கைத்தன்மையுடன் வானளாவப் புகழ்ந்து குளிர்விப்பதுமே புளித்துப்போன வாடிக்கையாகிவிட்டது.

ஆளும் கட்சி, கூட்டணிக்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின், குறிப்பாக இக்கட்சித் தலைவர்களின் இத்தகைய பிற்போக்கான சந்தர்ப்பவாத அணுகுமுறையானது, தமிழக ஜனநாயகத்தளத்தைப் படிப்படியாக அரித்து வரும் கரையான்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர், ஜனநாயக முகமூடி அணிந்துகொண்டு, யதேச்சாதிகாரம்தான் மீண்டும் மீண்டும் தலைதூக்கும். கடந்த ஆட்சி, நமக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்கிறது.

இப்படிப்பட்ட பின்னணியில், மக்களுக்குப் பயனளிக்கும் சட்டங்களை இயற்றி அமல்படுத்தும்படியும், மக்களை அதிகாரப்படுத்தும் வகையான, வெளிப்படைத்தன்மையில் ஊறிய நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும்படியும், அரசை வலியுறுத்துவது நமது வரலாற்றுக் கடமையாகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!