இலவசங்களில் கருகும் விட்டில் பூச்சிகளாகவே இருந்துவிட சம்மதமா....?


ன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. தேர்தல் ஆணையம் எதிர்க்க முடியாதபடி எவ்வாறு மக்கள் வரிப் பணத்தை இலவச நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கலாம் என்பதை மட்டுமே திமுக யோசிக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை. 

தேர்தலுக்கு முன்பாக வீடு வீடாக, அவர்களது வாக்காளர் வரிசைஎண் சீட்டுடன் பணக்கட்டுகளை இணைத்து வீசிச் செல்வதற்கும், தேர்தலுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பொருள்களைக் கொடுப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்?

தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை வெறும் இலவச ஆசைகளில் தள்ளி, காரியம் சாதிப்பதாக இருத்தல் கூடாது. 


வர்களது எளிய பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஆட்சியைப் பிடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுமே தவிர, ஒரு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும்?

த்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது.  தற்போது திமுக இவ்வாறாக இலவசங்களை அறிவித்துள்ளதால், அதிமுகவும் போட்டிக்குச் சில இலவசங்களை அறிவிக்கக்கூடும். இதன் முடிவுதான் என்ன?

குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டது.

சதி படைத்தவர்களும் இதை ஒரு விளையாட்டாக வாங்கி, குறைந்த விலையில் விற்றார்கள். தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் சிறிய தங்கும் விடுதிகளில் தமிழக அரசின் இலவச டிவி இருப்பதே இதற்கு சாட்சி. மேலும் இந்த டிவியைப் பெற ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த டிவிக்களில் பல உயர்மின்அழுத்தம் தாளாமல் வெடித்தபோது, இந்த டிவி பார்க்கும் வழக்கத்துக்குப் பழகிப்போன ஏழைத் தொழிலாளி புதிதாக பல ஆயிரம் செலவில் மாதத் தவணையில் டிவி வாங்க வேண்டிய குடும்ப நெருக்கடிக்கு ஆளானார். மேலும் மாதம்தோறும் கேபிள் கட்டணம் ரூ.150 (அவருடைய ஒருநாள் கூலி) வழங்க வேண்டியிருந்தது. 

லவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை?
 

லவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடு தானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்? 
தேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்?

குடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

ரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல், கலைஞர்  காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் சிகிச்சைகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டன. மேலும், நோய் கண்டறிதலுக்கான மருத்துவ சோதனைச் செலவுகளும், சிகிச்சைக்குப் பிந்தைய மருந்து மாத்திரைகளும் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை செலவு வைத்தது. இந்த மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வாங்கவும் வழியில்லாமல் போனது.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையைக்கொண்டு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தினால், அனைவருக்கும் அங்கே இலவச சிகிச்சை அளிக்க முடியும். 

மிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை.

னைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இலவசக் கல்வி என்று அரசால் அறிவிக்க இயலுமா?

னென்றால் அத்தனை தனியார் கல்லூரிகளும் அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே தமிழக அரசால் முடியவில்லை என்பதுதான் கடந்த இரு ஆண்டுகளாக எல்லோரும் கண்ட காட்சி.  


லவசங்களையும் கடன் பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது.

ந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப் பட்டிருந்தது.

க்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி? 

ந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  நவராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப்  படுவதைப் போல, அரியணையில் கொலுவீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பாவம், வெறும் விட்டில்பூச்சிகள்தானா மக்கள்?

******
எம்ஜியார் சத்துணவுத் திட்டத்தை அறிவித்த நேரம்!

"அப்பனுக்கு சாராயம்!பிள்ளைக்கு சத்துணவா?" என்று திமுக அந்தநாட்களில் எழுப்பிய முழக்கத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது!அன்று திமுக எழுப்பிய இந்தக் கேள்வியில் நியாயம் இருந்தது. அன்றைய நாட்களை விட இப்போது இந்தக் கேள்வியின் அவசியம் மிக மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
 
மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!  
 

லிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

யேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு  திரும்புகிறான்!

தே மாதிரித் தான்!

மூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!

 

ப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

ப்போதாவது........  

லவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு........ !

லகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல், எங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா! 


காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தலைஎடுக்க விடாமல், வருகிற தேர்தல்களில் பாடம் புகட்டுவதில் இருந்து அந்த விழிப்பும், முயற்சியும் தொடங்குகிறது!

 **படங்கள் நன்றியுடன் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை. உரிமை அவைகளை உருவாக்கியவர்களுக்கே!




4 comments:

  1. //"அப்பனுக்கு சாராயம்!பிள்ளைக்கு சத்துணவா?" என்று திமுக அந்தநாட்களில் எழுப்பிய முழக்கத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது!//

    அட்ட‌காச‌ம்

    உங்க‌ளின் இந்த‌ ப‌திவிற்கு ஒரு ராய‌ல் ச‌ல்யூட்

    ReplyDelete
  2. //**படங்கள் நன்றியுடன் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை. உரிமை அவைகளை உருவாக்கியவர்களுக்கே!//

    ச்சே, இந்த‌ மாதிரி நல்ல‌ ப‌ழ‌க்க‌மெல்லாம் ஏன் என‌க்கு வ‌ர‌மாட்டீங்கிது??

    ReplyDelete
  3. இலவசம் என்பது அப்பட்டமான லஞ்சம். தேர்தல் கமிஷன் இதை தடை செய்ய வேண்டும். மக்களும் திருந்த மாட்டார்கள். அரசியல்வாதிகளும் திருந்த விட மாட்டார்கள்.

    ReplyDelete
  4. திரு ஜோதி!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாருங்கள் ஸ்ரீராம்!

    இலவசங்கள் என்பது பழைய சோஷலிசம் தேய்ந்து கட்டெறும்பாக ஆனவை! இலவசங்களில் உள்ள இரண்டு பெரிய இடைஞ்சல்களில் முதலாவதாக, இது ஏழை மக்களை அவர்கள் அறியாமையைப் பயன்படுத்திச் சோம்பேறிகளாகவும், ஏழைகளாகவும் வைத்திருக்கவே பயன்படுகிறது! இரண்டாவதாக, இலவசங்கள் என்று கடைத்தேங்காய் சூறையாடப்படுவதில் பெரும்பகுதி, இலவசங்களை வாரி வழங்குகிற வள்ளல்களுடைய பாக்கெட்டுக்குள் போய்விடுவதுதான்!

    உதாரணமாக வரிப்பணத்தில் இலவச டிவி! ஆனால் கேபிள் இணைப்புக்குக் காசு அழுதாகவேண்டும்! கேபிள் தொழில் அவர்களிடம்! இலவசங்கள் என்பதே வெறும் மாயை தான் என்பதை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!