பொறுப்பில்லாத பிரதமர்! வெட்கம் கெட்ட காங்கிரஸ்!


பொறுப்பில்லாத பிரதமர்! --தினமணி நாளிதழ் தலையங்கம் 



தான் செய்த தவறுக்கான பழியை அடுத்தவர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வது என்பது அதிகார வர்க்கத்துக்கே உரித்தான "உயரிய' பண்புகளில் ஒன்று. இந்தியாவின் இந்நாள் பிரதமரான மன்மோகன் சிங், ஒரு முன்னாள் அரசு உயரதிகாரி என்பதால், அவரது அடிப்படை மனோபாவம் மாறாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.


பிரதமரின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதலே பிரதமரின் முடிவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. நமது தலையங்கத்தில் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, ஒரு பிரதமர் தனக்கு எதுவுமே தெரியாது என்றோ, தனக்குத் தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்றோ குறிப்பிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது, கூடாது. நூறு கோடி இந்தியர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பதவியில் இருப்பவர், அந்தப் பதவிக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டபோதே ஊடகங்களில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தவண்ணம் இருந்தன. கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாமாயில் இறக்குமதி ஊழலில் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதும் அநேகமாக இந்தியாவிலுள்ள அத்தனை தினசரி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக வெளியானது. தாமஸ் மீது அப்படி ஒரு விசாரணை இருப்பது பற்றியே தெரியாமல் இருந்திருப்பதாகப் பிரதமர் கூறுவது உண்மையானால், நமது பிரதமர் இந்தியப் பத்திரிகைகளைப் படிக்கிற, தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கிற பழக்கமில்லாதவர் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. ஒருவேளை, லண்டன் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற மேலைநாட்டுப் பத்திரிகைகளைத்தான் படிக்கிறாரோ என்னவோ, யார் கண்டது?"

"தாமஸ் நியமனத்தில் ஏற்பட்ட தவறுக்கு உயர்மட்டத் தேர்வுக் குழுவின் தலைவர் என்பதாலும், பிரதமர் என்ற முறையிலும் நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என்று பவ்யமாக ஒத்துக்கொள்வதுடன் பிரதமர் நிறுத்தியிருந்தால், "மறப்போம், மன்னிப்போம்' என்று விட்டு விட்டிருக்கலாம். அடுத்தாற்போல அவர் அவிழ்த்து விட்டிருக்கும் அண்டப்புளுகுகளைத்தான் நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.செப்டம்பர் 3-ம் தேதி நடந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்கு வருவதுவரை, அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த மூன்று நபர்களில் ஒருவரான பி.ஜே. தாமஸ் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பது பற்றித் தனக்குத் தெரியாது என்று நா கூசாமல் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் பிரதமர்.

இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா? "பி.ஜே. தாமஸ் கேரள மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்தவர். மத்திய அரசின் செயலராகப் பணியாற்றியவர். இந்தப் பணி நியமனங்களுக்கு முன்னால் அவரது பின்னணி கண்காணிப்புத் துறையால் பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில், மூன்று உறுப்பினர்களில் ஒருவரான எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பி.ஜே. தாமûஸ நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதுதான், தாமஸ் மீது ஊழல் விசாரணை நடைபெறுவது பற்றிய விவரமே எனக்குத் தெரியும்'' - இது மாநிலங்களவையில் நேற்று பிரதமர் அளித்திருக்கும் தன்னிலை விளக்கம்.அது உண்மை என்றே நம்புவோம்.

இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவியும், மூன்று பேர் குழுவில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் முன்வைத்தவுடன், பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும்? கூட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே. தாமஸின் பின்னணியைப் பற்றித் தீர விசாரித்த பிறகு, நியமனத்தை உறுதிப் படுத்துவதுதானே நியாயம்? ஏன் செய்யவில்லை?

தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒரு "மெகா' ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்தத் துறையின் செயலராக இருந்தவர் பி.ஜே. தாமஸ். தனது துறையில் நடந்த ஊழலைப் பற்றி விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று அறிவித்தவர் பி.ஜே. தாமஸ். அவசர அவசரமாக அதே பி.ஜே.
தாமசை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? 

இதுகூடப் பிரதமருக்குத் தெரியாது என்று நம்மை நம்பச் சொன்னால் எப்படி?

அதையெல்லாம்விட மிகப்பெரிய வேடிக்கை பிரதமர் மன்மோகன் சிங், பழியைத் தனது பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருந்து இப்போது மராட்டிய மாநில முதல்வராக இருக்கும் பிருதிவிராஜ் சவாண் மீது போடுவதுதான். ""இதுபோன்ற கூட்டங்களுக்கான குறிப்புகளைத் தயார் செய்வது, பணியாளர் நியமனத் துறையின் இணையமைச்சர்தான். அவர் தயாரித்துத் தந்த குறிப்பில் தாமஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பற்றி எதுவும் இருக்கவில்லை'' என்கிறார் பிரதமர்.

அப்படியானால் நமது பிரதமர் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர் அல்லவா? தனக்கு யாரோ தரும் குறிப்புகளின் அடிப்படையிலும் வேறு யாரோ வழங்கும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்படுபவரா? வேறு யாராவது கூறியிருந்தால், ""இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கலாம். பிரதமரை எப்படிக் கேட்பது?

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிக் கேட்டால், அது அமைச்சர் ஆ. ராசாவின் முடிவு, தனக்கு எதுவும் தெரியாது என்று கை விரிக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல கோடி கொள்ளை போயிருக்கிறதே என்றால், "அப்படியா? தவறு செய்தவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டோம்'' என்றுகூறித் தனக்குத் தொடர்பே இல்லை என்று நழுவப் பார்க்கிறார். தாமஸ் நியமனம் பற்றிக் கேட்டால் அவர் மீது விசாரணை இருப்பதே தெரியாது என்று மாநிலங்களவையில் வாக்குமூலம் அளிக்கிறார். அப்படியானால், நமது பிரதமருக்குப் பதவி சுகத்தை அனுபவிப்பதைத் தவிர, வேறு ஒன்றுமே தெரியாதா?

கடைசியாக ஒரு கேள்வி. இன்றைய இந்தியாவைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய கேடு என்று கருதப்படும் ஊழலைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற பொறுப்பான அரசியல் சட்ட நியமனப் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கோப்புகளைப் படித்து, பட்டியலிலுள்ள நபர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதுதானே முறை! அதைக்கூடச் செய்யாத பொறுப்பற்றதனம் ஒரு பிரதமருக்கு இருக்கலாமா?
------------------------------------
இந்தப்பதிவுகளைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்திய ஜனநாயகம் எங்கே தொடர்ந்து சறுக்கிக் கொண்டிருக்கிறது என்பது ஒரு அளவிற்காவது புரிந்திருக்கும்.சரிக்கப்பட்ட,ஜனநாயக நடைமுறைகளைத் தற்போதுள்ள அரசியல் கூட்டணிகளால் சரி செய்ய முடியுமா என்பது முதல் கேள்வியாக எழுந்தால்,சுயநலத்துக்காக ஜனநாயக நெறி முறைகளைச் சரித்தவர்களிடமே அதை சரிசெய்யும்பொறுப்பைக் கொடுக்க முடியாது என்பது தெரியும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக கம்பல்சரி ரிடைர்மென்ட்  கொடுக்கிற மாதிரி வருகிற தேர்தல்களில் பாடம் கற்றுக் கொடுத்தாக வேண்டும்! நோய்க்கான காரணிகளை ஆண்டி பயாடிக்ஸ் கொடுத்து அழிக்கிற மாதிரித் தான் இது.

அதுமட்டுமே போதுமா?

சீரழிந்துபோன உறுப்புக்கள் நோய் எதிர்ப்புச் சக்தி பெறவும், தெம்பு பெறவும் ஏதாவது செய்ய வேண்டாமா?

அடுத்ததாக,சீரழிக்கப்பட்ட நடைமுறைகள்,அரசு இயந்திரத்தை செம்மை செய்யும் பணி ஆரம்பித்தாக வேண்டும்.

எங்கிருந்து தொடங்குவது?எப்படித் தொடங்குவது?

முதலில், இத்தனைக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தேர்தல் முறைகளில் இருந்து தான் சீர்திருத்தங்கள் ஆரம்பித்தாக வேண்டும்!

கொஞ்சம் யோசித்துவிட்டு என்னென்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.
 
ஜனநாயகம் நல்ல நடைமுறைதான்! அதைக்காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத ஜனங்களுக்கு உதவாது, அவ்வளவுதான்!


3 comments:

  1. இவ்வளவு கேவலப்பட பிரதமருக்கு என்ன ஒரு கடமை இருக்கிறது? ஏன் எவரும் அதை பற்றி சொல்வதில்? அணைத்து ஊடகங்களும் மண் மோகன் சிங்கை விமர்சிகிறார்கள் சரிதான். ஆனால் அவருக்கு இந்த நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது? அதுவல்லவோ மூலகாரணம்! சோனியா காண்டிதான் இதன் பின்னணியில் இருக்கும் நபர் என்றால் அதனை வெளியே கொண்டு வந்து உண்மையை சொல்லவேண்டும்.சகலமும் இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பம். அணைத்து இந்திய மக்களும் முதலில் காங்கிரஸ் (என்ன பெயரில் வந்தாலும் ) எனும் நோயை புரிந்துகொண்ட தக்க சிகிச்சை செய்துகொள்ளவேண்டும்.

    /// ஜனநாயகம் நல்ல நடைமுறைதான்! அதைக்காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத ஜனங்களுக்கு உதவாது, அவ்வளவுதான்///

    இன்னமும் உறக்கசொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. காங்கிரசைத் தூக்கி எறியுங்கள்! இந்த முழக்கத்தை இந்தப்பக்கங்களில் அடிக்கடி கேட்டிருக்கிறோம் இல்லையா?

    உரத்த சிந்தனையாகத்தான் இந்தப்பக்கங்களில் பல பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது மாணிக்கம்!

    மன்மோகன் சிங் மீது ஆரம்பகாலத்தில் ஏன் இந்த நல்ல மனிதர் நேரு குடும்பத்து வாரிசுகளுக்கு முகமூடியாக மாட்டிக் கொண்டார் என்ற பரிதாபம் எனக்கும் இருந்தது. இப்போது நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, மனிதன் பதவிக்காக வேண்டுமெண்டே இந்த இழிநிலையைத் தானே விருப்பப் பட்டுத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.

    முன்பு வாஜ்பாயியை, தவறான கட்சியில் சிக்கிக் கொண்ட நல்ல மனிதர் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்வார்கள். மன்மோகன் சிங்.....?

    காங்கிரஸ் கள்ளனுக்கேத்த குள்ளன்! அம்புட்டுதேன்!

    ReplyDelete
  3. // உரத்த சிந்தனையாகத்தான் இந்தப்பக்கங்களில் பல பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது மாணிக்கம்!//

    இதனை இன்னும் பிறரும் ,அனைவரும் உரத்த குரலில் சொல்லவேண்டும் என்ற கருத்தில் சொன்னேன். தங்களில் குரல் ஓங்கி ஒலிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!