வாக்களிக்காத பெருமக்களே.......! தினமணியில் வெளியான ஒரு கட்டுரை!
திரு ஆர்.ராமலிங்கம் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று இன்றைய தினமணி நாளிதழின் வலைப்பக்கங்களில் படிக்கக் கிடைத்தது. மேலோட்டமாக அரசியலை ஆராய்ச்சி செய்தால் எப்படி இருக்கும் என்பதற்கு, இந்தக் கட்டுரையே ஒரு உதாரணம். கட்டுரையாளர் எந்தெந்த இடங்களில் இந்திய அரசியலைத்தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்,பரிகாரம் சொல்வது கூட எப்படி ஏனோதானோ என்று இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், தினமணியில் வெளியான இந்தக் கட்டுரையைப் பார்த்துவிடலாம்!
"இன்னும் சில நாள்களில் வீதிகளில் "வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை, முத்தான வாக்குகளை எங்கள் சின்னத்துக்குச் சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்' எனக் கட்சிகள் பலவும் போட்டி போட்டுப் பிரசாரம் செய்யவுள்ளன.என்னதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்தாலும், கண்காணித்தாலும், அவற்றையெல்லாம் மீறி, வறுமையில் வாடுவோரையும், அத்தனைக்கும் ஆசைப்படுவோரையும் நாடிப் பரிசுப் பொருள்கள், ரூபாய் நோட்டுகள் வந்துசேரும் காலமிது.கனவிலும் கண்டிராத வாக்குறுதிகளோடு, முன்பின் தெரியாதவர்கள், அண்ணன், தம்பி, அக்கா, அம்மா, அண்ணி, மாமா என உறவுமுறைகளைக் கூறி ஓட்டு வேட்டை நடத்தும் நேரமிது.
இன்றைக்கு அரசியல் பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளதை மறுக்க முடியாது.தேநீர் கடையானாலும், முடிதிருத்தும் நிலையம் ஆனாலும், 4 பேர் உட்கார்ந்து பேசுகிறார்கள் என்றால் அது நிச்சயம் இன்றைய அரசியல்தான் என்று ஆணித்தரமாகக் கூறலாம். அரசியலைப் பற்றி அலசும் இன்றைய நடுத்தர, ஏழை சமுதாயத்தினர் பெரும்பாலோர், அந்த அரசியலால் லாபம் அடையாதவர்கள்தான். குறிப்பிட்ட கட்சியின் மீதான அபிமானம் அல்லது வெறுப்பு, அரசு, அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளால் சந்திக்கும் இடர்ப்பாடுகள் இன்றைக்கு எல்லோரையும் அரசியல் பேச வைத்து விட்டது.
இன்றைக்கு அரசியலில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவோரும், கோடிக்கணக்கில் சொத்துக் குவிப்பதற்காக அரசியலில் தஞ்சம் அடைவோரும் மக்கள் பிரதிநிதிகளாகஉலா வருவதற்கு, வேதாந்தம் பேசிவிட்டு வாக்களிக்காமல் இருப்பவர்களும் காரணமாகி விடுகின்றனர்.1951-ல் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்களின் சதவீதம் 45.25. அடுத்த தேர்தலில் அது 53.44 சதவீதமாக உயர்ந்தது.
பிறகு ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு வாக்களிக்காதவர்களின் சதவீதத்தைக் குறைத்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை. இதனால் 2006 தேர்தலில்கூட வாக்காளிக்காதவர் சதவீதம் 29.18-ஆக இருந்தது.
ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும், வாக்கு அளிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட, குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை வாக்களிக்கத் தவறுவோர் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.இவர்களுக்கு, நம்முடைய ஒரு வாக்குக்கூட, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவும் என்ற மனப்போக்கு என்றைக்கு உதிக்கிறதோ, அப்போதுதான், ஓரளவு நேர்மையாளர்களை மக்கள் பிரதிநிதிகளாக சட்டப் பேரவைக்கோ, மக்களவைக்கோ அனுப்ப முடியும்.
அதுவரை பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும்."
-------------------------------------------
இந்தக் கட்டுரையாளர் எனக்கு அறிமுகமில்லாதவர், அதாவது இதற்கு முன்னால் இவர் எழுதிய அரசியல், செய்தி விமரிசனக் கட்டுரை எதையுமே நான் படித்ததில்லை! மிக மேம்போக்காக, தேர்தல்களைப் பற்றி, வேதாந்தம் பேசிவிட்டுப் போய்விடுகிறவர்களாக சிலரை (யாரை அப்படி சொல்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்) கையைக் காட்டிவிட்டு, தப்பும் தவறுமாக சில புள்ளி விவரங்களைக் கொடுத்துத்தான் சொல்ல வருவதுதான் சரி என்ற மாதிரிக் கட்டுரையை முடித்திருக்கிறார்.
சில வெளிச்சக் கீற்றுக்கள் தெரிந்தபோதிலும் கூட, அவர் அதன் வழியாக எதையும் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.
வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் பட்டியலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விடுபட்டுப் போனவர்கள்,வாக்களிக்கும் உரிமையை எப்படிப்பயன்படுத்துவது என்பதே தெரியாத மக்களும் இருக்கிறார்கள்.
அறுபத்துமூன்று ஆண்டுகளைக் கடந்து வந்த பிறகும், இந்திய ஜன நாயகம், வாக்காளர் பட்டியலைக்கூடத்தவறுகள் இல்லாமல், விடுதல் இல்லாமல், திருத்தங்கள் தேவைப்படாமல் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவில்லை.தலைவர்கள், ஓட்டுப் பெட்டியின் வழியாக ஜனநாயகம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கவுமில்லை!ஜனங்களும், தலைவர்களுடைய யோக்கியதை என்ன என்பதை அவப்போது உரசிப்பார்த்து, சோதனை செய்து பார்ப்பதுமில்லை. ஓட்டுப் போடுகிற ஒரு சுகத்தைத் தவிர, ஒரு தேசத்தின் குடிமகன் என்ற உணர்வு, கடமைகள் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறோமா?
வாக்குச் சீட்டு என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருகிற லாட்டரி மாதிரித்தானா? அந்த ஒருநாளைத் தவிர, அரசியலில் பங்கு கொள்கிற வாய்ப்பு, அபிப்பிராயங்களை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிற வாய்ப்பே இல்லையா?
கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!
//அறுபத்துமூன்று ஆண்டுகளைக் கடந்து வந்த பிறகும், இந்திய ஜன நாயகம், வாக்காளர் பட்டியலைக்கூடத்தவறுகள் இல்லாமல், விடுதல் இல்லாமல், திருத்தங்கள் தேவைப்படாமல் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவில்லை//
ReplyDeleteஇன்றைய செய்தியில் அறிந்தபடி வாக்காளர்களின் அட்டையில்/பட்டியலில் பிழைகள், தவறுகள் மிக அதிகமாம். "இந்தியார்கள் ஆளப்படவேண்டும் " என்பதில் இன்னமும் சந்தேகம் வேண்டாம். மற்றதெல்லாம் வெறும் பம்மாத்துதான். வெறும் ரோஷத்தால் பயனில்லை.