தேர்தல் வினோதங்கள்!புரிந்தும் புரியாத தமிழக அரசியல் கூட்டணிகள்!

வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்த கதையாக...!


இப்படித்தான் அதிமுக தன்னிச்சையாகத்தான் போட்டியிடுகிற 160 தொகுதிகளை அறிவித்தது! கூட்டணியில் விசுவாசமாக இருந்த மதிமுகவைப் புறக்கணித்தது! சில்லறைக் கட்சிகளாக இருந்தாலும், அவைகளால் ஏற்படுகிற ஓட்டையை அடைக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் அவைகள் கேட்கிற தொகுதிகளைக் கண்டிப்பாக விட்டுக் கொடுத்தே தீரவேண்டும் என்ற "கூட்டணி தர்மத்தை" உடைத்தது! அம்மா தன்னுடைய கொழுப்பைக் கொஞ்சம் கூடக் குறைத்துக் கொள்ளவில்லை என்ற  ரீதியிலான கண்டனங்கள், அதே நேரம் அதிமுக தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் இல்லாமல் அமைதிகாத்தது!

திமுக முகாம் கூட இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்பி, "அடுத்தவர் சிக்கலில் மகிழ்ச்சி கொள்கிறவர்கள் நாங்கள் இல்லை"என்று அறிவித்தது!அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மருத்துவர் ஐயா அறிவித்திருப்பது! வெறும் பகற்கனவுதான் என்று தெரிந்துமே மூன்றாவது அணி என்று பேசிக் கொண்டு அதேநேரம், எப்படியாவது அம்மாவுடன் பேசி ஒரு சமரசத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற தவிப்புடன் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிற அதிமுகவின் "கூட்டாளிகள்"

-----இப்படி அரசியல் குழப்பங்கள், தமிழகத் தேர்தல் திருப்பங்களில் இன்றைய சுவாரசியமான செய்தியாக......!

ஆனால் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய செய்தி இதுதானா? இந்தப்பக்கங்களில், இப்போதுள்ள தேர்தல் முறையில் ஏதோ ஒரு அயோக்கியனைத்தேர்ந்தேடுக்கிற வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச்சொல்லிக் கொண்டிருக்கிறோம்! நல்லவர்களைத்  தேர்ந்தெடுக்க நமக்கும் தெரியவில்லை, நல்லவர்கள் இந்தத்தேர்தல் முறையில் தாக்குப் பிடிக்க முடிவதும் இல்லை.


தொகுதிக்கு நாலாயிரம் ஐந்தாயிரம் ஓட்டுக்களைப் பிரிக்க முடியும் என்ற நிலையில், நான் கேட்டதைத்தரவில்லை என்றால், உன் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பேன் என்று ப்ளாக்மெயில் செய்கிற சில்லறைக் கட்சிகளின்வளர்ச்சி, இந்திய அரசியலை ஊழல்மயமாக்கியதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைத் தான் இந்தமாதிரிப் பேரங்கள், எடுத்துக் காட்டுகின்றன.

இந்திய அரசியலில் ஒரு குறிப்பிடத் தகுந்த மாற்றம் வரவேண்டுமானால், இந்தமாதிரி சின்னக் கட்சிகள், சில்லறைக் கட்சிகளை தேர்தல் களத்தில் இருந்தே அடியோடு புறக்கணித்ததாக வேண்டும். இப்போது தேர்தல் ஆணையம் வைத்திருக்கிற நடைமுறைகளில் இது சாத்தியமில்லை. நல்ல தலைவர்கள் இல்லாத இது மாதிரித் தருணங்களில்,, காக்கைப் பொன்னையே பொன் என்று நம்பி ஏமாறாமல் இருப்பதில், வாக்களிக்கும் ஜனங்களாகிய நாம் தான், ஒவ்வொரு கட்டத்திலும் எது மிகவும் முக்கியமானது என்பதில் கவனமாக இருந்தாக வேண்டும்.

இந்திய அரசியல் எப்படிக் கிரிமினல் மயமாகிவருகிறது என்பதை அவ்வப்போது செய்திகளாகப்படித்துவிட்டு, அதைக் குறித்து செய்ய வேண்டியதை, செய்யவேண்டிய நேரத்தில் செய்யத் தவறி விடுகிறோம் இல்லையா! இப்போது தேர்தல் நேரம்!

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்? கிரிமினல்,ஊழல் பின்னணி உள்ளவரா? சொந்த லாபத்துக்காகக் கொள்கை கத்தரிக்காய் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, அங்குமிங்கும் ஆதாயத்துக்காகத் தாவிக் கொண்டிருப்பவரா? சாதி அரசியல் செய்பவரா?

ஒரு சட்டை பேன்ட், புடவை எடுப்பதற்கே ஆயிரம் கேள்விகள், ஒப்பீடுகள் செய்கிற ஜனங்கள், அடுத்த ஐந்தாண்டுகள் தங்கள் தலையில் தூக்கிச்சுமக்கவேண்டிய பிரதிநிதிகள் யோக்கியதை என்னவென்று தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?கேள்விகள் கேட்க வேண்டாமா?

ஒரு முன்னோட்டமாக........!

மக்கள் பிரதிநிதிகளின் லட்சணம்...!


தினமணி  நாளிதழில் திரு அ.நாராயணன் எழுதிய கட்டுரை.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தேர்தல் ஆணையத்திடம் 2007-ம் ஆண்டு அளித்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது சொத்து மதிப்பு ரூ.8.56 கோடியாகும். இதில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் தனக்குள்ள 20 சதவீதப் பங்குகள் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்பற்றி யார் கேட்பது? 

பேருந்து ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, அரசியலுக்குள் இறங்கி, பல கட்சி கரைவேஷ்டிகளை மாறிமாறி அணிந்து, முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், இன்றைய தி.மு.க.வில் உணவுத்துறை அமைச்சராகவும் உள்ளவர் எ.வ. வேலு. முழுவதும் குளிரூட்டப்பட்ட ஏ.சி. அறைகளைக் கொண்ட இன்டர்நேஷனல் பள்ளி உள்பட பல பொறியியல் கல்லூரிகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை அவரும், அவரது குடும்பத்தாரும் நடத்தி வருகிறார்கள்.  ஆயினும், தமிழக அமைச்சர்களிலேயே அவர் மிக ஏழ்மையானவர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், 2006-ம் ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது சொத்து மொத்தமே வெறும் ரூ.1.25 லட்சம்தான். மனைவி, மக்கள் உள்ளிட்ட உறவினர்கள் வேறு, தான் வேறு என்று கூறிக்கொள்ள அவரென்ன முற்றும் துறந்த முனிவரா? 

இப்படி, நம்மிடம் ஓட்டு வாங்குவதற்காக வரும் வேட்பாளர்களின் ஜாதகத்தை நாம் இன்றைக்குத் தெரிந்துகொள்ள முடிவதற்கு நன்றி சொல்ல வேண்டிய அமைப்புகள் தில்லியைத் தலைமையகமாகவும், பல மாநிலங்களில் உறுப்பினர்களையும் கொண்டுள்ள ஜனநாயக சீர்திருத்த இயக்கமும் தேசிய தேர்தல் கண்காணிப்பகமும்தான்.  தேர்தல் என்பதே நாடாளுமன்ற, சட்டமன்ற ஜனநாயக அமைப்புக்கு ஆணிவேர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியும், வெற்றி பெறும் பிரதிநிதிகள் பற்றியும் புள்ளிவிவரங்களைச் சேகரித்து வெளியிடுவதன் மூலம், பொது வாழ்வின் அரசியல் மற்றும் விழுமியக் கூறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன இவ்வமைப்புகள்.  இதைக் கருத்தில்கொண்டே, 1999-ம் ஆண்டு, ஜனநாயகச் சீர்திருத்தத்துக்கான இயக்கம் என்ற அமைப்பு, சமூக அக்கறையுள்ள கல்வியாளர்கள் சிலரால் தொடங்கப்பட்டது. 2002-ம் ஆண்டு, தேசியத் தேர்தல் கண்காணிப்பகமும் இவர்களால் அமைக்கப்பட்டது. 

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்களது பிரமாணப் பத்திரத்தில், தங்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், சொத்து விவரங்கள் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என்று 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வெற்றியும் பெற்றன இந்த அமைப்புகள். உச்ச நீதிமன்றத்தின் முற்போக்கான தீர்ப்பை முறியடிக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்டம் ஒன்றை அவசர அவசரமாகத் தயாரித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது மத்திய அரசு.  ஜனநாயகச் சீர் திருத்தத்துக்கான இயக்கத்தின் தலைமையில் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாமைச் சந்தித்து, அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான இந்த அவசரச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று கோரினர். அவரும் கையெழுத்திட மறுத்து, 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதைத் திருப்பி அனுப்பிவிட்டார். 

இந்தச் சரித்திர வெற்றிக்குப் பின்னர், தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் எல்லா வேட்பாளர்களும், பிரமாணப் பத்திரத்தில் தங்களது சொத்துக் கணக்கு, கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானது. இந்த விவரங்களைத் தேர்தல் ஆணையமும், தங்களது இணையதளத்திலும், குறுந்தகடு வடிவிலும் வெளியிடத் தொடங்கியது.  தேசியத் தேர்தல் கண்காணிப்பகம், வேட்பாளர்களின் "அபிடவிட்டு'களின் விவரங்களை எல்லாம் தொகுத்து, சிறந்த தகவல் மென்பொருளைக் கொண்டு, அறிக்கைகளைத் தயாரித்து மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்கிறது.  பல பேராசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன் தேர்தல் கண்காணிப்பகத்தின் தமிழகப் பிரிவு, 2006-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றி சமீபத்தில் வெளியிடப்பட்ட 94 பக்க ஆய்வறிக்கையில் உள்ள முக்கிய புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். 

நான்குநேரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார், தமிழகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட வசந்த் அன் கோ நிறுவனத்தின் அதிபர். தன்னிடம் அசையாச் சொத்து ரூ.28.58 கோடி என்றும், அசையும் சொத்து ரூ.7.58 கோடி என்றும், மொத்தமாக ரூ. 36.17 கோடி சொத்து இருப்பதாகவும், ரூ.13.38 கோடி கடன் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தான் ஒரு வியாபார நிறுவனத்தின் அதிபர் என்பதையோ, தனக்கு இவ்வளவு கோடி ரூபாய் கடன் இருப்பதையோ மறைக்காமல் வெளியிட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும். 

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், முதல்வர் கருணாநிதி (ரூ.26.57 கோடி). மூன்றாவது இடத்தில் இருப்பவர், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா (ரூ.24.65 கோடி).  அமைச்சர்களில் கருணாநிதிக்கு அடுத்து, பொங்கலூர் பழனிச்சாமி ரூ.12.23 கோடி சொத்து காண்பித்துள்ளர். தமிழகத்தின் 30 அமைச்சர்களில், 17 பேர் கோடிகளில் சொத்து மதிப்பைக் காண்பித்துள்ளனர். மிக ஏழ்மையான எ.வ.வேலுவுக்கு அடுத்து, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனும் (சொத்து ரூ.2.8 லட்சம்), அமைச்சர் தமிழரசியும் (சொத்து ரூ.3.6 லட்சம்) ஏழை அமைச்சர்கள் பட்டியலில் உள்ளவர்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கம்பம் ராமகிருஷ்ணன், திருவள்ளூர் சிவாஜி, மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர், வி.பி.துரைசாமி, தூத்துக்குடி பி.கீதாஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் ஆகிய ஒன்பது கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் வருமான வரி அட்டை எண் விவரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் தரவில்லை. மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில், 114 பேர் வருமான வரி அட்டை எண் விவரங்களைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூ.2.41 கோடியும், தி.மு.க. ரூ.1.40 கோடியும், விடுதலைச் சிறுத்தைகள் ரூ.1.06 கோடியும், அ.தி.மு.க. ரூ. 93 லட்சமும், ம.தி.மு.க. ரூ. 93 லட்சமும், பா.ம.க. ரூ. 64 லட்சமும் சாராசரி சொத்து மதிப்பு காண்பித்துள்ளனர். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களோ ரூ.7.5 லட்சம்தான் சொத்து மதிப்பு காட்டியுள்ளனர்.  தமிழக அமைச்சர்கள் உள்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எதிர் பார்ப்பதைவிட மிகக்குறைவாகவே சொத்து மதிப்பு காண்பித்துள்ளனர். தொடக்கத்தில் குறிப்பிட்ட எ.வ.வேலு உள்பட பெரும்பாலானோர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும், சுயநிதிக் கல்லூரிகளையும் நடத்தி வந்தாலும், அவற்றை அறக்கட்டளைகளாகவே வைத்து, அறங்காவலர்களாக மட்டுமே இருந்து தியாகம் செய்துள்ளனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 தமிழகத்தின் 39 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில், 25 பேர் கோடீஸ்வரர்கள். 7 எம்.பி.க்கள் வருமானவரிக் கணக்கு எண் கொடுக்கவில்லை. மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ. 27.4 கோடி. தேனியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.எம்.ஹாரூண் ரஷீத்தின் சொத்து மதிப்பு ரூ. 24.9 கோடி. மு.க.அழகிரியின் சொத்து மதிப்பு ரூ.19.34 கோடி. அதேபோல, நடிகரும், பல நிறுவனங்களை நிர்வகிப்பவருமான நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ. 13 கோடி. மத்திய அமைச்சரும், மறைந்த கருப்பையா மூப்பனாரின் புதல்வருமான ஜி.கே.வாசனின் சொத்து மதிப்பு ரூ.3.78 கோடிதான்.

(இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் சாய்ஸ்! அந்தச்சாய்சில் தான் உங்கள் தலைவிதி இருக்கிறது என்பது மட்டும் பதிவரின் எச்சரிக்கையாக இங்கே !)

இப்பொழுது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ள உறுப்பினர்கள் பற்றி ஆய்வு செய்வோம். 234 சட்டமன்ற உறுப்பினர்களில், 77 பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்கள் முறையே தி.மு.க. 39, பா.ம.க. 15, காங்கிரஸ் 9, அ.தி.மு.க. 8, ம.தி.மு.க. 2, சிபிஐ 1. இந்த 176 கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் தவிர மற்ற பல்வேறு இபிகோ வழக்குகளும் உள்ளன. இவற்றில் சில பொய்வழக்குகளாகவும் இருக்கக்கூடும்.

இந்தக் கிரிமினல் வழக்குகள் உள்ள 77 பேரில், 23 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டிப் பணம் பறித்தல், அடைத்து வைத்தல் உள்பட 52 கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடும் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களில் முதல் இடத்தைப் பிடித்தவர் வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க. உறுப்பினர் பி.ரங்கநாதன். இவர் மீது, மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடைத்து வைத்தல் உள்பட 9 வழக்குகள் உள்ளன. இவற்றில் 7 வழக்குகள், மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பானவை. இவைபோக, பல்வேறு இபிகோ சட்டங்களின்படி, 39 குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. 

அடுத்த இடத்தில் உள்ள ஜி.கே.மணி மீது, போலியான அரசு முத்திரை விற்றது உள்பட 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன. பா.ம.க.வின் 18 சட்டமன்ற உறுப்பினர்களில், 15 பேர் மீது 83 கிரிமினல் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வின் 96 உறுப்பினர்களில், 39 பேர் மீது வழக்குகள் உள்ளன.  காங்கிரஸின் 34 உறுப்பினர்களில் 9 பேர் மீதும், அ.தி.மு.க.வின் 61 உறுப்பினர்களில் 8 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. எம்.எல்.ஏ.க்கள் மீதான கடுமையான கிரிமினல் வழக்குகளில், இபிகோ 234 மற்றும் இபிகோ 307 ஆகியவைதான் மிகப் பெரும் பாலானவை. 

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 மக்களவை உறுப்பினர்களில், 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 6 பேர் மீதுள்ள வழக்குகள் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடர்பானவை. மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி மீது உள்ள 5 கிரிமினல் குற்ற வழக்குகளில், மிகக் கடுமையான குற்றங்களுக்கான வழக்குகள் மூன்று. 

ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிற தேர்தலுக்கான வேட்புமனுக்களுடன், வேட்பாளர்கள் தங்களது விவரங்கள் மட்டுமல்லாது நெருங்கிய உறவினர்களின் சொத்து விவரங்கள் பற்றிய சான்றுகளையும் அளிப்பதை, தேர்தல் ஆணையம் இப்பொழுது கட்டாயமாக்கி உள்ளது.  ஆகையால், இனி தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பற்றி ஓரளவு கூடுதல் தகவல்கள் மக்களின் கவனத்துக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆயினும், பினாமி சொத்துகள், பினாமி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் பெயரில் நடக்கும் சொத்துக்குவிப்புகள் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையமும் வருமான வரித் துறையும் கேள்விக்கு உள்படுத்தினால் மட்டுமே, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சொத்துக் குவிப்பவர்களுக்கு எதிரான போரில் சிறிதளவாவது முன்னேற்றம் கிட்டும். 

மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கும் கதையாக, தமது வாழ்வை வளமாக்கவும், மக்களின் வறுமையைப் போக்கவும் இந்த "திடீர்' ஊழல் கோடீஸ்வரர்களை நம்புகிற வாக்காளப் பெருமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டும்தான், நாடும் செழிக்கும், நாமும் உயர்வோம்!

...............................

இப்போதும் விழித்துக் கொள்ளவில்லை என்றால்.............?

என்ன செய்யப்போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!




2 comments:

  1. உண்டாக்கும், அமல் படுத்தும் அனைத்து சட்டங்களும் நடைமுறைகளும் என்றும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள்
    என்னதான் சட்டங்க தீவிரமாக , வலிமையாக இருந்தாலும் அதன் தீவிரம் வலிமை இவையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கி தாங்கள் நினைப்பதை சாதிக்கவே அரசியல் சட்டங்கள், நடைமுறைகள் இங்கு.
    நமக்கும் இப்படி பட்ட ஆட்கள் தானே வேண்டும் நம்ம ஆளுவதற்கு.

    ReplyDelete
  2. //நமக்கும் இப்படி பட்ட ஆட்கள் தானே வேண்டும் நம்ம ஆளுவதற்கு....//

    இந்தப்பக்கங்களில் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்வியே, இது இப்படித்தான் இருந்தாகவேண்டுமா, வேறு வழி இருக்கிறதே அதைத் தேடவேண்டாமா என்பது தான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!