கறுப்பு எம்ஜியார்! கூட்டணி தர்மம்! அரசியல் கூத்துக்கள்!

வருகிற சட்ட மன்றத் தேர்தல்களில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள்? தனி மெஜாரிட்டி எந்த அணிக்கும் கிடைக்காதாமே?

இந்த கேள்விகளுக்குப் போவதற்கு முன்னால்.பாமக நிறுவனர் மருத்துவர் ஐயா சிரிக்காமல், ஒரு ஜோக்கை உதிர்த்திருக்கிறார்! அதைப் பார்த்து விடுவோம் 
 

சென்னை, மார்ச் 21: தி.மு.க.வுடன் ஏற்பட்டிருப்பது தொகுதி உடன்பாடு மட்டுமே, கொள்கை அளவிலான கூட்டணி அல்ல என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டுள்ளோம். உங்கள் ஓட்டு எங்களுக்கு, எங்கள் ஓட்டு உங்களுக்கு என்ற அளவில்தான் உடன்பாடு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் தி.மு.க.வுடன் கொள்கை அளவிலான கூட்டணி  அமைக்கவில்லை.
 

பா.ம.க. ஆட்சி அமைக்கப் போவதில்லை. அதனால் இலவசங்களை நாங்கள் அறிவிக்கவில்லை. செய்தி/ஜோக்கை  முழுவதும் படிக்க

இப்படி பலவிதமான ஹேஷ்யங்கள் உலவிக் கொண்டிருந்தாலும்,2011 தேர்தல் எல்லாவகையிலும் வித்தியாசமானதாகவே இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி!முதன் முதலாக, கூட்டணிகளுக்குள் குழப்பம் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று கூட முடிந்துவிடாது போலத்தான்  இருக்கிறது! அடுத்ததாக, கூட்டணிக்குள் இருந்தாலும், சீட்டுப் பேரங்களில் ஏற்பட்ட காயங்களின் வஞ்சங்களைத் தீர்த்துக் கொள்ள ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக இந்த ஒரு அம்சத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுபோலத் தெரிகிறது. டாக்டர் சுப்ரமணிய சாமி சொல்வதுபோல தேர்தலுக்கு முன் இருக்கிற எந்தக் கூட்டணியும், தேர்தலுக்குப் பின் இருக்காது என்ற சந்தேகத்தையும் இந்தத்தேர்தல் எழுப்பியிருக்கிறது.கடந்த ஐந்தாறு நாட்களாக அதிமுக கூட்டணியில் இடப்பங்கீடு முடியாமல் இழுத்துக் கொண்டே போனதும், மதிமுக மட்டும் தனித்து விடப்பட்டு, தேர்தலில் பங்குகொள்ளப்போவதில்லை என்ற முடிவை வைகோ எடுத்ததும் பரபரப்பான செய்தியாக, ஜெயலலிதாவின் ஆணவம் இன்னும் அடங்கவில்லை, எவரையும் அவர் மதிப்பதில்லை, சுயமரியாதை உள்ளவர் எவரும் அவருடன் சேர்ந்து இருக்க முடியாது என்ற கண்டுபிடிப்புக்களை திமுகவை விட ஊடகங்களும், பதிவுலகமும் ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது பழங்கதையாய், ஆறி அவலாகிப் போன செய்தியாகிப் போனது.


""திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத், தங்கபாலு ஆகியோர் பரிந்துரைப் பட்டியலை ஆய்வுசெய்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. லண்டனில் இருந்து தில்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இந்தப் பட்டியலை அவர்கள் திங்கள்கிழமை இரவு வழங்கியதாகவும், அதனை நிராகரித்த அவர், இரண்டு முறைக்கு மேல் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும் புதியவர்களுக்குதான் வாய்ப்பு என்று கூறியதாகவும் தெரிகிறது.

புதிய பட்டியல் தயாரித்துக் கொண்டுவருமாறு சோனியா கேட்டுக் கொண்டதாகவும், செவ்வாய்க்கிழமை காலை புதிய பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவைச் சந்திப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சோனியாவின் நிபந்தனையின்படி பார்த்தால், இப்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் டி. யசோதா (ஸ்ரீபெரும்புதூர்), பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்), ஞானசேகரன் (வேலூர்), டி. அமரமூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), எஸ். சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால்பாறை), ஜெயக்குமார் (நாமக்கல்), ஆர். ராம்பிரபு (பரமக்குடி), கே.ஆர். ராமசாமி (திருவாடனை), சுந்தரம் (காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 

இவர்களில் நாமக்கல் ஜெயக்குமார், திமுகவுடனான பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ளார். வாய்ப்பு பறிபோகும் என்ற தகவலால் இவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.  இதுதவிர இரண்டு முறைக்கு மேல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பி.வி. ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார், ராம்பிரபு உள்ளிட்டோரும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது, இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள்.  சோனியா காந்தியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது."
   இப்படி தினமணி செய்தி சொல்கிறது

(பரபரப்பு என்ற இடத்தில் கலவரம், பீதி என்று மாற்றிக் கொண்டால் இன்னமும் பொருத்தமாக இருக்குமோ!)


ஆக, தேர்தல் கூத்தில் மறுபடியும் சிக்கித் திண்டாடுவது, இப்போது திமுக கூட்டணியின் முறை!

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை சோனியாவும் ராகுல் காந்தியும் நிராகரித்து விட்டதாக வந்திருக்கும் செய்தி, இங்கே உள்ள காங்கிரஸ் காரர்கள் அடிவயிற்றில் அமிலத்தை லிட்டர் லிட்டராகச் சுரக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் தப்பித் தவறி ஜெயித்து விட்டால், இப்போதிருக்கிற மாதிரி, திமுக தலைமைக்கோ, அல்லது அதிமுக தலைமைக்கோ அடிபணிந்து ஆதாயங்களைத் தேடுகிற மாதிரி ஆகிவிடாமல் இருக்க, ஒரு புதிய பார்முலாவைக் காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுமட்டும்
உண்மையாக மட்டும் இருந்து விடுமானால், இந்தப் பக்கமோ அல்லது அந்தப்பக்கமோ சாய்ந்து, சொந்த ஆதாயங்களில் மட்டுமே குறியாக இருக்கும் பெருச்சாளிகள் பலதும் காணாமல் போய்விடுகிற நல்ல காலம் கூடப் பிறந்துவிடுமோ?!


*******

கூட்டணி தர்மம்!
 
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, வரும் மார்ச் 31ம் தேதி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, பல்வா, சண்டோலியா பெகுரா மற்றும் கலைஞர் டி.வி சரத்குமார் ரெட்டி ஆகிய 5 பேர் மீது சி.பி.ஐ., குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளது.  

மேலும் இப்பட்டியலில் கனிமொழி பெயரும் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வெளியான செய்திகளைப் பார்க்கும்போது, அதிமுக-தேதிமுக கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணியாகவே கடைசி வரை இருந்துவிடும் போலத் தான் தெரிகிறது. ஒரு கூட்டணியில் சேர்ந்து செயல்படுகிற பக்குவம் தேதிமுகவுக்கு இல்லை என்பதும் அரவணைத்துப் போகும் தெளிவு அதிமுகவுக்கு இல்லை என்பதும் நன்றாகவே தெரிகிறது.  

இப்படிப் பொருந்தாக் கூட்டணி கூட ஒருவகையில் இருதரப்பும் செய்துகொள்கிற அரசியல் தற்கொலைதான்! கருப்பு எம்ஜியார் என்று அழைத்துக் கொள்வதனாலேயே முதலமைச்சராகி விடுகிற கனவு ஒருவருக்கு வந்துவிடுமானால், இதை என்ன சொல்வது? இந்த மாதிரி, விபரீதக் கனவுகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுவது அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வதில் ஒரு பகுதிதான்! 
 

வலைப்பதிவர்களுடைய, குறிப்பாக சென்னை வலைப் பதிவர்களுடைய கணிப்புக்களைக் கவனித்துப் பார்க்கையில்,திமுக அணியே மறுபடி ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர்களில் பெரும் பாலானோர் நம்புவதாகத் தெரிகிறது! 

தேர்தல் முடிவுகள், சென்னை வலைப்பதிவர்களுடைய கணிப்புகளுக்கு எதிர் மாறாகத் தான் இருக்கும் என்பதை சென்ற தேர்தலிலேயே பார்த்து விட்டபடியால், இந்தத்தேர்தல் முடிவுகளும் அப்படித்தான் இருக்குமா இல்லையா என்பது கொஞ்சம் சுவாரசியமான ஆட்டமாகத்தான் இருக்கும்!

ஆமாமா? இல்லையா? 


 

6 comments:

 1. நல்ல கருத்து..எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படுபவர்யாரும் முதல்வராகி விட முடியாது..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இப்படிப் பாருங்களேன்!

  கருப்பு எம்ஜியார் என்றுதன்னை சொல்லிக் கொள்வதாலோ, அல்லது எவனோ நாடி ஜோதிடம் பார்த்து நீ தான் வருங்கால முதல்வர் என்று ஜோசியம் சொன்னதைக் கேட்டு தலைகால் புரியாமல் ஆடுவதனாலோ முதலமைச்சர் ஆகிவிட முடியாது. சினிமாக்காரன் என்று வேடிக்கை பார்க்க வருகிற கூட்டம் வேறு, தங்களை வழிநடத்தத் தகுதி உள்ள தலைவன் என்று பின்னால் தொடர்கிற ஜனங்கள் வேறு!

  திமுக அதிமுகவை விட இந்தமாதிரி நேற்று முளைத்த காளான்களை அப்புறப்படுத்துவது எளிது, உடனே செய்யப்படவேண்டியதும் கூட!

  ReplyDelete
 3. \\திமுக அதிமுகவை விட இந்தமாதிரி நேற்று முளைத்த காளான்களை அப்புறப்படுத்துவது எளிது, உடனே செய்யப்படவேண்டியதும் கூட! \\

  எப்படி அப்புறப்படுத்துவது, கூப்பிட்டு 41 சீட்டு கொடுக்கறாங்க..சரி இது போன்ற காளான்களால் வரும் ஆபத்தை அப்புறம் பார்ப்போம்.

  திமுக,அதிமுக என வளர்ந்த சுயநல அரசியல் பண்ணும் விஷ விருட்சங்களை எப்படித்தான் அழிப்பது அல்லது அடக்குவது?


  அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு ’சேவை’ ஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))

  ReplyDelete
 4. மிகவும் எளிது சிவா! ஸ்டெப் பை ஸ்டெப்பாகத் தான் இப்போதுள்ள தேர்தல் முறையில், இதை செய்ய முடியும்!

  கொஞ்சம் பொறுமை, ஒரு தெளிவான பார்வை இருந்தால், இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே, இந்த விஷ விருட்சங்களை வேரோடு சாய்க்கலாம்.

  Process of elimination! ஒரு மருத்துவர் கையாளுகிற மாதிரித் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஒரு மனிதனுக்கு வியாதி! ஒரே நேரத்தில், மூன்று நான்கு கோளாறுகள். தேர்ந்த மருத்துவன் செய்வது ஒரே நேரத்தில் அத்தனை கோளாறுக்கும் மருந்து கொடுப்பதல்ல. இருப்பதிலேயே அதிகமான கோளாறுக்கு மருந்து, நோய் எதிர்ப்புச் சக்தி பெறக் கொஞ்சம் டானிக் மாதிரி வைத்தியம். பிரதானமான கோளாறை குணப்படுத்திவிட்டால், மிச்சமிருப்பதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மாதிரி மருத்துவம் இருக்கும்.

  இப்போது அகற்றப்பட வேண்டிய பிரதானமான விஷ விருட்சம் எது என்று நினைக்கிறீர்கள்? என் பார்வையில், திமுக, அதிமுக இரண்டுமே இல்லை! அது காங்கிரஸ் தான்! இந்த நாட்டில், ஜனநாயக நெறிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்து, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது காங்கிரஸ் தான்.ஆக, முதலில் அகற்றப்பட வேண்டியது காங்கிரஸ் தான்!

  காங்கிரஸ், இங்கே தமிழக சட்ட மன்றத் தேர்தல்களில் பிரதானம் இல்லையே என்கிறீர்களா? காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்! இப்போது ஒரு வழி கிடைப்பது தெரிகிறதா? இதை செய்கிற அதே நேரம், களையெடுக்கும் வேலையும் தொடங்குகிறது! பாமக, தேதிமுக, விசி, ஜாதிக்கொரு சங்கம் என்பதுபோய், அதிலும் ஏகப்பட்ட பிரிவுகள் இவை அத்தனையையும் ஆரம்ப நிலையிலேயே கில்லி எறிவது தான் அது! விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டதை முற்றிலும் வெட்ட நாளாகலாம்!ஆனால், விஷ விருட்சங்களை வெட்டவே விடாமல் அதைப் பாதுகாத்து நிற்கும் சந்தர்ப்பவாதக் காளான்களை அகற்றுவதில் என்ன தடை, தயக்கம் இருக்க முடியும்?

  அடுத்து முக்கியமான உங்கள் சந்தேகம்....!

  //அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு ’சேவை’ ஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))//

  ஸ்மைலி போட்டுக் கேட்டாலும், இல்லை என்பதுதான் என்னுடைய பதில். இவர்கள் இதுவரை என்ன சேவை செய்து கிழித்துவிட்டார்கள்?

  ReplyDelete
 5. ஸ்ரீராம்!

  நேரடியாக ஆமாம் என்று பதில் சொன்னதற்கு நன்றி! அந்த ஆமாமுக்குப் பின்னால் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஒரு பட்டியலே (மேலே கொஞ்சம் விவரிக்கப்பட்டிருக்கிறது) இருக்கிறதே!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!