தேர்தல் வரும் பின்னே! கருத்துக் கணிப்பு வரும் முன்னே!

இந்தத்தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும்?


நண்பர்களே!

ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 2010 ஆம் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ஊழலாக வெடித்துக் கிளம்பிக் கொண்டு, ஊழல்கள் வெளிவரும் ஆண்டாக இருந்தது, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஐந்து மாநில தேர்தல்கள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

கேரளத்தைப் பொறுத்தவரை, மலையாளிகள் ஒரு நிரந்தரமான பார்முலாவைப் பயன்படுத்தி வருகிறார்கள், ஒரு தரம் ஆளும் கட்சியாக இருக்கும் கூட்டணிக்கு ஒய்வு கொடுத்து அடுத்த கூட்டணிக்கு வாய்ப்பளிப்பது! இந்த முறை அந்த பார்முலா மாறும் என்பதற்கான அடையாளம் கொஞ்சம் கூட இல்லை என்பதால் கேரளத்தேர்தல் சுவாரசியமாக இல்லை.


அசாம் கதை கூட காங்கிரசுக்கு அங்கே மாற்று இல்லை என்பதால், அது கூட சுவாரசியம் இல்லை.காங்கிரஸ் அங்கே மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் 31 % வாக்குகளைப் பெற்று, 55 இடங்களை வென்றது. அசாம் கண  பரிஷத் 20% உம், பிஜேபி 12% உமாகக் கடந்த தேர்தலில் இருந்த வாக்குகள், கூட்டணிகள் மாறினால் காங்கிரசுக்குப் பின்னடைவு என்ற அளவில் இருக்கிறது.  

புதுச்சேரி தேர்தல் களம் இனிமேல்தான் சூடுபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணிகள், பங்கீட்டுப் பிரச்சினைகள் ஓய்ந்த பிறகுதான் இங்கேயும் ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கும்.


அந்த வகையில், மேற்கு வங்கமும், தமிழ்நாடும் மட்டும்தான் இன்னும் கொஞ்சம் வித்தியாசமான விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.


மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் 149 பேர் முற்றிலும் புதியவர்கள் என்பது தவிர, ஐந்து முக்கியமான அமைச்சர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இடது சாரி வேட்பாளர் பட்டியலைப் பார்க்க இங்கே

பழைய வேட்பாளர்களை நிறுத்தினால் கூண்டோடு காலியாகிவிடுவோம் என்ற அச்சம், மார்க்சிஸ்ட் கட்சியை இந்த முடிவெடுக்கக் காரணமாக இருந்திருக்கிறது. சித்தார்த்த சங்கர் ரே போன்ற காங்கிரஸ் ஜாம்பவான்களால் அசைக்கக் கூட முடியாத இடது சாரிகளின் ஆட்சியை, மம்தா பானெர்ஜி என்ற  பெயரே கலகலக்கச்செய்து கொண்டிருக்கிறது.


மம்தா பானெர்ஜி  மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்த, மாவோயிஸ்டுகளின் ஆதரவைப் பெறுவதற்குக்கூடத்தயங்கவில்லை என்று செய்திகள் சொல்கின்றன. மாவோயிஸ்டுகளுடைய கொட்டத்தை அடக்குவோம் என்று வீர வசனம் பேசி, மாநில அரசு தான் பொறுப்பேற்கவேண்டும் என்று பொறுப்பைத்தட்டிக் கழித்த கண்டனூர் பானா சீனாவோ, காங்கிரஸ் கட்சியோ மம்தாவின் இந்த அரசியல் நிலைபாடைக் கண்டிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை என்பது காங்கிரஸ் கட்சிக்கே உண்டான விசித்திரமான மாலைக் கண் நோய்!


இங்கே தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி பலவிதமான சோதனைகளை இந்தத்தேர்தலில் சந்திக்க வேண்டியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நடந்த மாதிரி, முழுக்க முழுக்கப் புதுமுகங்களுக்கு வாய்ப்புக்கிடைக்குமா, செயல்திறனற்ற அமைச்சர்கள் கழற்றி விடப்படுவார்களா இல்லையா என்பதெல்லாம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.கடந்த தேர்தலில் காணப்படாத உள்குத்துக்கள், திமுக கூட்டணியை மிகவும் பலவீனமாகத்தான் வைத்திருக்கிறது என்பது வெளிப்படை. மேலோட்டமாகத் தெரிய வரும் தகவல்களில், அதிமுக கூட்டணி  எந்தப் பிரயாசையும் செய்யாமலேயே முதல் ரவுண்டில் முன்னியில் நிற்கிறது.


Anti-incumbency  factor என்று சொல்லப்படும் ஆளும் கட்சிக்கு  எதிரான அதிருப்தி அலை இந்தத்தேர்தல்களில் எந்த அளவுக்கு ஆளும் தரப்புக்கு எதிராக செயல்படப் போகிறது?


இதைப் படிக்கும்போது தேர்தல் வைத்தால் உங்கள் வாக்கு யாருக்கு? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன் !
 
  
 

 

 
       

 •        
             
 •    

 •        
             
 •    

 •        
             
 •    

 •        
             
 •    

 •        
             
 •    

 •        
             
 •      


தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தத்தேர்தல் முடிவுகள் இப்போது ஒரு மாதிரியாகவும், பிரச்சாரம் சூடு பிடித்த பிறகு ஒரு மாதிரியாகவும், வாக்களித்து விட்டு வரும்போது ஒரு மாதிரியாகவும் இருக்கும் என்பதை தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன! 

இந்த மாதிரி வலைப்பக்கங்களில் வைத்துத்திரட்டப்படும் தகவல்கள்  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற மாதிரி இருக்கவேண்டிய அவசியமே இல்லை!!

.

3 comments:

 1. தேர்தல் சூடு பிடித்ததோ இல்லையோ. நீங்கள் ரொம்பவும் உற்ச்சாக மாக இருப்பதாய் உணர்கிறோம்.
  இன்றைய தேர்தல் கணிப்பில் ஒட்டு போடா போவதில்லை என்ற புள்ளியில் குத்தும் முன்பு அது 20% தான் இருந்தது.
  நான் அதிலே ஒரு குத்து குத்தியவுடன் வந்த விடைகளில் , மற்றதெல்லாம் அப்படியே இருக்க //ஒட்டு போடா போவதில்லை//
  என்பது 25% ஆக உயர்ந்து விட்டதே! விரக்தியாளர்கள் அதிகம் போலும்! :))
  ஆனால் இது நல்லதில்லை.

  ReplyDelete
 2. வாருங்கள் மாணிக்கம்!

  தேர்தலுக்காகத் தனி உற்சாகமோ அல்லது அலுப்போ எனக்கு எப்போதும் இருந்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், இந்தத்தேர்தல் முறையே உள்ளது உள்ளபடி சொல்வதற்கு லாயக்கில்லாதது, உடனடியாக சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது என்பதைத் தான் நான் நீண்ட நாட்களாகச்சொல்லிக் கொண்டே வருகிறேன்.

  ஆதரவு வோட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் என்றால், ஆதரிக்காத அல்லது பதிவாகாத வோட்டுக்கள் இன்னொரு முக்கியமான, கவனிக்கப்படாமலேயே உள்ள பகுதி. அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தான், வாக்களிக்கத்தகுதி உள்ளவர்களில் குறைந்த பட்சம் இவ்வளவு சதவீதமாவது ஆதரித்து வாக்களித்தால் தான் தேர்ந்தெடுக்கப் பட முடியும் என்ற நிலை உருவாக வேண்டும்.

  ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வெகுஜன ஆதரவை, இப்போதிருக்கும் தேர்தல் முறை சரியாகச் சொல்வதில்லை. உதாரணமாக,கம்யூனிஸ்டுகள், பாமக அல்லது தேதிமுக இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஜனங்கள் எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் அல்லது அசட்டை செய்கிறார்கள் என்பதை, ஒரு கூட்டணியாக நின்று அவர்கள் வாங்கும் ஓட்டுக்கள் சொல்வதில்லை. இதையும் சேர்த்துப் பார்த்து, குறைந்தபட்ச வெகுஜன ஆதரவு இல்லாத கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதை நிறுத்தவேண்டும். வடிகட்டிக் கொண்டே வந்தால், முக்கியமாக, மூன்று அல்லது நான்கு கட்சிகளுக்கு மேல் தேறாது.

  அப்புறம், இந்தப் புள்ளி விவரம்.....!

  அது மாறிக் கொண்டே இருக்கும்! அதை அர்த்தப்படுத்திக் கொள்வது கூட அவரவர் சௌகரியத்துக்கேற்றபடி தான் இருக்கும். முக ஜெயித்தபோது ஒரு மாதிரியும், தோற்றபோது வேறு ஒரு மாதிரியும் இதே வாக்குப் பதிவுப் புள்ளிவிவரங்களைக் கையாண்டது நினைவிருக்கிறதா? இப்போது, நிலவரம், ஏழாண்டுகளாக அவர் மறந்து போன அந்தக் கலையைத் திரும்பப் படிக்க வேண்டும் என்று தான் சொல்வதாகத்தோன்றுகிறது!!

  ReplyDelete
 3. //ஏழாண்டுகளாக அவர் மறந்து போன அந்தக் கலையைத் திரும்பப் படிக்க வேண்டும் என்று தான் சொல்வதாகத்தோன்றுகிறது!!//

  என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எழுபது ஆண்டுகள் ஆனாலும் கூட அந்த சந்தர்பங்களில் அதனை தான் மட்டுமே கண்டு பிடித்ததாக செல்லும் குணம்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!