பிரதமர் விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம்! வெளங்கிரும்!!

தினமணி தலையங்கம்: ஜப்பான் உணர்த்தும் பாடம்!

"சரித்திரம் இதுவரை சந்திக்காத சோதனை ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக இயற்கையின் சீற்றமும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அணு உலைகளின் வெடிப்பும், மனித இனத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்ச்சியை எதிர்கொள்ளத் தயாராவதற்குள், உயர்ந்தெழுந்த ஆழிப்பேரலை ஜப்பானின் வட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி அந்த தேசத்தையே நிலைகுலைய வைத்து விட்டிருக்கிறது. 

இத்தோடு விட்டேனா பார் என்று பூகம்பமும், ஆழிப்பேரலையும் அடங்குவதற்குள் கடற்கரை ஓரமாக அமைந்த அணு மின் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அணு மின் உலைகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. அதன் தொடர் விளைவாக, ஜப்பானை மட்டுமல்ல, அந்த நாட்டைச் சுற்றியுள்ள கடல்கடந்த தேசங்களைக் கூட அந்த அணு மின் உலைகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு பாதிக்கக்கூடும் என்கிற செய்தி உலகையே பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

அணு ஆயுதப் போரின் கோர விளைவுகளைச் சந்தித்த ஒரே நாடான ஜப்பான் இப்போது அணுசக்தியின் இன்னொரு கோர முகத்தையும் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கியம். அணுமின் சக்தியை மின் தேவைகளுக்கு ஜப்பான் மிக அதிகமாக நம்பவேண்டிய நிலையில், பல அணு மின் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஜப்பான் மின்சாரம் இல்லாமல் தவிப்பது ஒருபுறம். அணு உலைகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்குப் பயந்து வெளியில் செல்ல முடியாமல் முடங்கிக் கிடப்பது மறுபுறம். இதெல்லாம் போதாதென்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, ஒரு சில மணி நேர ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தால் நடுத் தெருவில் அனாதையாக நிற்க வேண்டிய நிர்பந்தம் மற்றொரு புறம். யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது இப்படி ஓர் அவலம். 

அணு மின் நிலையங்கள் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக வர்ணிக்கப்பட்டு வந்தன. ஆனால் அணுசக்தியின் அபாயங்கள் எத்தகையவை என்பதை ஜப்பானைப் பார்க்கும்போதுதான் உணர முடிகிறது. ஜப்பானியக் கடற்கரை ஓரமாக அமைந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட இரண்டு வெடிப்புகளால் ஏற்கெனவே கதிர்வீச்சுள்ள ஆவி வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

விபத்து ஏற்படும் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அணு உலைகள் தானாகவே நிறுத்தப்படும் வசதிகள் இந்த அணு மின் நிலையங்களில் இருக்கத்தான் செய்தன. ஆனால், அணு மின் நிலையம் நிறுத்தப்பட்டால், புதிதாக அணுப் பிளவு நடைபெறாதே தவிர, ஏற்கெனவே நடைபெற்று வரும் அணுப் பிளவையும் அதன் மூலம் வெளியேறும் கணக்கிலடங்காத எரிசக்தியையும், அணு உலையை நிறுத்தியதால் முற்றுப்புள்ளி வைத்து நிறுத்த முடியாது. அதுதான் பிரச்னை. 

அப்படியே அணு உலையின் இயக்கம் நிறுத்தப்பட்டாலும் அதில் காணப்படும் கணக்கிலடங்காத வெப்பத்தை எப்படிக் கட்டுப்படுத்தித் தணிப்பது? இந்த வெப்பத்தை அவ்வப்போது தணிக்கவும், அணு உலைகள் அளவுக்கு அதிகமாக வெப்பமாகி வெடிக்காமல் பாதுகாக்கவும், குளிர்ந்த நீர் அந்த உலைகளைச் சுற்றிக் குழாய்களின் மூலம் தொடர்ந்து பாய்ச்சப்படும். ஆனால், இந்தக் குளிர்ந்த நீர்க் குழாய்களை இயக்கும் இயந்திரம் மின்சாரத்தில் இயங்குவன. சுனாமியின் வேகத்தில் எல்லா இயந்திரங்களும் பாழாகி, மின்சாரம் நின்றுவிட்ட நிலையில், அணு உலைகளைக் குளிர்ச்சியடையச் செய்யும் குழாய்களும் செயலற்று விட்டன. 

வெடித்துச் சிதறிய அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க இன்னும் பல மாதங்கள் கடல் நீரைப் பாய்ச்சியபடியும், அவ்வப்போது கதிரியக்கத்தைக் காற்று மண்டலத்தில் வெளியிட்டும்தான் நிறுத்த முடியும் என்று கூறுகிறார்கள். அதாவது இத்துடன் முடிந்துவிடவில்லை அணுசக்தியால் ஏற்பட்ட அழிவு என்று அர்த்தம். 

உலக மக்கள் தொகையில் 40% மக்கள் கடற்கரையிலிருந்து 100 கி.மீ. தூரத்துக்குள் தான் வாழ்கிறார்கள். உலகின் பெரு நகரங்கள் என்று வர்ணிக்கப்படும் 19 நகரங்களில் 14 நகரங்கள் கடற்கரை ஓரமாக அமைந்தவைதான். பத்து நாடுகள் முழுக்க முழுக்கக் கடற்கரையை ஒட்டிய 100 கி.மீ.க்குள் மக்கள் வாழும் நாடுகள். அணு மின் நிலையங்கள் கடற்கரை ஓரமாக அமைந்திருப்பதால், எந்தவொரு அணு உலை விபத்தும் அருகிலுள்ள கடற்கரையை ஒட்டிய நாடுகளைத் தாக்கக்கூடும். கதிரியக்கம் கலந்த காற்று வீசும்போது அதைச் சுவாசிப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்படக் கூடும். 

ஜப்பான் தனக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவைத் துணிவுடன் எதிர்கொண்டுள்ளது என்பது உண்மை. ஆனால், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, எல்லோரையும் பயமுறுத்தும் அணுக் கதிர்வீச்சு அபாயம் என்று நிலைகுலைந்து போயிருக்கிறது. தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியேறி 500 மைல்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் பலர். ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை. கடல் கொண்டதா இல்லை மண்ணுக்கடியில் இயற்கை சமாதி கட்டிவிட்டதா தெரியவில்லை.

வாழ்ந்து கெட்டவன் என்று நாம் பரிதாபப்படுவோம். விஞ்ஞானம் தரும் எல்லா சுகத்துக்கும் ஆசைப்பட்டவர்கள் ஜப்பானியர்கள். வசதியான வாழ்வு என்று நாம் கருதும் எல்லாமே அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள். ஒரு ஆழிப்பேரலை அத்தனையையும் அழித்துப் பல ஜப்பானியர்களை நடுத் தெருவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எஞ்சி இருப்பவர்களை கதிர்வீச்சு அபாயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. 

ஒரு விபத்து நேர்ந்துவிட்டது என்பதற்காக அணு மின் சக்தி வேண்டாம் என்று கூறுவது முட்டாள்தனம் என்கிறார்கள் சிலர். அவர்கள் தங்களைப் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களில் ஒருவராகச் சிந்தித்து, இந்தப் பிரச்னையை அணுகிப் பார்க்கட்டும். விடை கிடைக்கும்!"

ஜப்பானில் நடந்த பூகம்பமும் தொடர்ந்த சுனாமியால் விளைந்த கொடூரம், அதைத்தொடர்ந்து அணுஉலைகளில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் வெடிப்புக்கள், கதிரியக்கப் பரவல் என்று அச்சுறுத்திக் கொண்டிருப்பதைப்பற்றி எழுத வேண்டும் என்ற நினைப்பு இருந்தாலும், வேறுவேறு வேலைகள்,உள்ளூர்ச் செய்திகளில் கவனம்  என்று தள்ளிக் கொண்டே போனதில் நண்பர் கக்கு மாணிக்கம் தன்னுடைய பொன்மாலைப் பொழுது பதிவில், அணுஉலை குறித்து விரிவான வீடியோ, விளக்கங்களுடன் நான்கு பதிவுகளாக எழுதி விட்டார். 
அரசியல் சகதியைப் பற்றியே அனலைஸ் செய்து கொண்டிருக்கும் மனோ நிலையில், என்னால் இந்த அளவுக்கு விரிவாகவும், கொஞ்சம் விவரங்கள் புரிகிற மாதிரியும் பதிவு  எழுத முடிந்திருக்குமா  என்பது சந்தேகமே.
இன்றைக்கு  ம.மோ.சிங் நாடாளுமன்றத்தில், தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். மூன்று  வருடங்களுக்கு முன்னால்,ஐமுகுழப்பம் கூட்டணி வெர்ஷன் ஒன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டி வந்த தருணத்தில் உதிரி எம்பிக்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டனர் என்பது கண் முன்னாலேயே நடந்ததுதான். ஆனால், அதைக் கூட ஒரு வெளிநாட்டுக் காரன் தகவல் சொல்லி அதை இறக்குமதி செய்தால் தான் இந்த அளவுக்குப் பரபரப்புக் கிடைக்கிறது  என்பது இந்திய ஜனங்களாகிய நாம் எந்த அளவுக்கு விழிப்போடும் சுரணையோடும் இருக்கிறோம் என்பதற்கான அளவுகோலாக இருக்கிற அவலத்தைப்பார்த்து வெட்கப்பட வேண்டி இருக்கிறது. உறுதிப்படுத்தப்படாத விக்கிலீக்ஸ் செய்தியை வைத்து எடை போடக்கூடாது என்றும், எம்பிக்களை விலைகொடுத்து வாங்கியது குறித்துத் தனக்கும் அரசுக்கும் எதுவும் தெரியாது என்றும் சொல்லி ருக்கிறார். ஆ! ராசா விவகாரத்தில் கூட, தனக்கு ஒன்றுமே தெரியாது, அமைச்சர் ராசா  அவராகத் தான் முடிவு செய்தார் என்று சொன்னவர்தானே இவர்! 

தவிர, இவர் வெறும் டம்மிப்பீஸ்தான், அதிகாரமையம் வேறு இடத்தில் இருக்கிறது, முடிவுகள் அங்கேதான் எடுக்கப்படுகின்றன என்பது கூட விக்கிலீக்ஸ் கேபிள்களில் சொன்னால்தான் நமக்கு உறைக்குமா? தெரிய வருமா?


Prime Minister Manmohan Singh on Friday defended his statement on 'coalition dharma' saying his remarks on the subject should not create the impression that he would not go by the dictates of the constitution."I have taken an oath to defend the constitution and the laws of our country and whatever I may have said about coalition dharma should not in any way convey the impression that I am not in favour of following strictly the dictates of our constitution," Singh said.இப்படிக் கூட்டணிதர்மத்துக்கு விளக்கம் வேறு!


என்ன கொடுமை சரவணா இது?!

 ஜப்பான் நிலைமை கந்தலாகிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமரிடம், செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்று வற்புறுத்திய செய்தி சில நாட்களுக்கு முன் வந்தது. ஜப்பானில் புகுஷிமா அணு உலைகள் யாவும் அமெரிக்க ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பனி நிர்மாணித்தவை. இதே போன்ற நாற்பது அணு உலைகளைத் தான் அமெரிக்கா பெரும்பகுதியும், பிரான்ஸ் மிச்சத்தையும் நமக்கு சப்ளை செய்யப்போகின்றன.

பொறுப்போடு செயல்படும் அரசு ஜப்பானில் இருக்கும்போதே, இந்த அணு உலைகள் ஏற்படுத்தியிருக்கும் அழிவில் இருந்து மீள்வது மிகக்கடினம் என்று செய்திகள் சொல்கின்றன. காங்கிரஸ் மாதிரிப் பொறுப்பில்லாத ஒரு கட்சியின் ஆட்சியில், இதே மாதிரி நடந்தால் என்ன ஆகும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஜப்பானிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் அதுதான்!


2 comments:

 1. எங்களுக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. விசயகாந்து எப்படி கூட்டணி அமைகிறான், அவன் வீட்டுக்காரியும் அவன் மச்சானும் எந்த தொகுதியில் நின்றால் ஜெயிப்பார்கள்,செய லலிதா எந்த தொகுதியில் நிற்கிறாள், கருநாய்நிதி கிழவன் எந்த தொகுதியில் நிற்கிறான், டம்பி பீசு கார்த்திக் ,தறுதலை சரத்து குமாரு எங்கு யாருடன் கூட்டணியில் இருகிறாங்கள், குசுபுக்கு ஏன் ஆயரம் விளக்கு தொகுதியில் சீட்டு கிடைக்கவில்லை, சினிமா காரிகள் அனுஷ்கா யாருடன் நடிக்கிறாள், தமன்னா கார்த்திக்கை காதலிக்கிறாளா இல்லையா இதுகள் போதுமே !

  ReplyDelete
 2. பொதுவெளியில் கருத்தை முன்வைத்து மட்டுமே பேசுவது நலம், மாணிக்கம்! தனிநபர்களைக் குறித்த வசவுகளாகிப் போனால் விவாதம் தடம் புரண்டுவிடும் இல்லையா?

  ஜனநாயகம் என்று நாம் புரிந்துகொண்டிருக்கும் அமைப்புக்கு ஒரு நானூறு நானூற்றைம்பது ஆண்டு கால வரலாறுதான் இருக்கிறது. இந்தியாவில், ஜனங்களுக்கு அறிமுகமான நாளில் இருந்து இன்றுவரை, அதைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை எவரும் கொடுக்கவில்லை,ஜனங்களும் தாங்களாகவே முயற்சி செய்து அறிந்துகொள்ளத்தலைப்படவும் இல்லை.

  கோவில் திருவிழா என்றால் கூத்து அது இது என்று வேடிக்கை பார்ப்பதில் தான் பெரும்பாலான ஜனங்களுக்குப் பிரியம் இருக்கும். தேர்தல் கூட, இந்தியாவில் அந்தமாதிரி வேடிக்கை காட்டுகிற திருவிழாக்களாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

  திருவிழாவின் பிரதான நோக்கம் என்ன என்பதை ஜனங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது, தெரிந்தவர் செய்ய வேண்டிய கடமை.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!