திமுகவும் கூட்டணி தர்மமும்....! தேர்தல் 2011
கூட்டணி தர்மம், கூட்டணி தர்மம் என்று காங்கிரசும், திமுகவும் சில நாட்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? அது இப்படித் தான் இருக்கும் போல இருக்கிறது! சென்னை திமுகவின் கோட்டை என்றே இதுவரை சொல்லப்பட்டு வந்தது. சென்னையில் ஐந்து இடங்களிலும், சுற்றுப்புறங்களில் மூன்றிலுமாக, ஆக மொத்தம் பதினாறில் எட்டுத்தொகுதிகள் காங்கிரசுக்குக் "கூட்டணி தர்மமாக" வழங்கப் பட்டிருக்கிறதாம்!
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே!
இப்படி இந்தப்பக்கங்களில் சொல்வது போல, தான் ஜெயிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிகிற தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்துவிடுவதில் திமுகவின் சாதனையை இதுவரை தமிழ்நாட்டில் எவரும் முறியடித்தது இல்லை! 2 G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெடித்துக் கிளம்பியதில் நகர்ப் புறங்களில் ஜனங்களுடைய ஆதரவு இருக்காது என்பதைப் புரிந்து கொண்டதாலேயே, திமுக இவ்வளவு வள்ளல்தன்மையுடன் நகர்ப் புறத் தொகுதிகளை தாரைவார்த்துக் கொடுக்க வேண்டியதாகிப் போனது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சொல்கிறது.
கிராமப்புறங்களில்இலவசங்களாகக் கொடுத்ததில் உண்டான மாயை, மகளிர் சுய உதவிக் குழுக்கள். விலை பேசுகிற சாமர்த்தியம் உட்படப் பலப்பல "நலத் திட்டங்கள்" கை கொடுக்கும் என்று திமுக இன்னமும் நம்புகிறது. அங்கேயும் கூட, இலவசத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வாங்கிய மக்கள் காசுகொடுத்துக் கேபிள் இணைப்பைப் பெற்றிருக்கிறார்கள், மானாட மயிலாடவும் பார்த்திருப்பார்கள், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ!ராசா மாட்டியதையும், காங்கிரசோடு கூட்டணி வைப்பதில் திமுக முறுக்கோ முறுக்கென்று முறுக்கித் தளர்ந்துபோன கதையையும் பார்த்திருப்பார்கள் என்பதையும் மீறி, "ஏதோ ஒன்றின் மீது" இன்னமும் நம்பிக்கைவைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை சரிதானா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஆரம்பம் என்ற ஒன்றிருந்தால் முடிவும் இயற்கைதான்! உதயமானது எதுவும் ஒரு நாள் அஸ்தமித்துத் தானே தீர வேண்டும்! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று எந்த நேரத்தில் சர்ச்சில் திருவாய் மலர்ந்தருளினாரோ அதே முகூர்த்தத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே சுருங்கி இல்லாமல் போனது மிகச்சமீப கால வரலாறு தான்!
இங்கே நம்முடைய அரசியல் வாதிகள், அரசு இயந்திரம் எதுவானாலும் சரி, ஓங்கி ஒரு கொட்டு வைத்தால் ஒழிய, எந்த ஒரு விஷயத்திலும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதில்லை. இப்படி ஒவ்வொரு விஷயமாக எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்காகவும் கொட்டுவதை விட, வருகிற தேர்தலில் வைக்கிற கொட்டு கொஞ்சம் பலமாக, இன்னும் கொஞ்ச நாள் நீடித்திருப்பதாக இருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
எல்லோருமே அயோக்கியன் தான், அதனால் எவனுக்கும் என் ஒட்டு இல்லை என்று சொல்ல வேண்டாம்! இப்போது தவறு செய்து கொண்டிருக்கும் தரப்புக்கு ஓங்கி ஒரு கொட்டு வையுங்கள்!
தவறுகளைத் தொடர்ந்து செய்ய, நீங்கள் அளிக்கும் லைசன்சாக உங்கள் வாக்குகளை அரசியல்வாதிகள் எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்காதீர்கள்!
அடுத்ததாக, இந்திய அரசியலில் எந்த ஒரு தேர்தலிலுமே பிரதானமாக இரண்டே அணிகள் தான் மோதுகின்றன. மூன்றாவதாக, நான்காவதாக என்று நீங்கள் உங்கள் சாய்சைத் தேர்ந்தெடுத்தால், அது இப்போது ஆளும் தரப்புக்கு சாதகமாக மட்டுமே ஆகிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.
அதனால், மூன்றாவது அணி, சாய்ஸ் என்று இல்லாத பிள்ளைக்குப் பெயர் வைத்து உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள்!
இந்தப்பக்கங்களில் தனியாக இந்தக் கட்சி அல்லது எந்தக்கட்சி என்று பிரித்துப் பார்த்து, எரிகிற இத்தனை கொள்ளிகளிலும் எது நல்ல கொள்ளி என்று சர்டிபிகேட் கொடுக்க முனையவில்லை என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நம்புகிறேன். சுரம் அதிகமாகும்போது, முதல் வேலை சுரத்தைத் தணிப்பதுதான்! மருத்துவம் அதோடு நின்றுவிடக்கூடாது, நோய்க்கான காரணத்தை அறிந்து, அது மீண்டும் தாக்காமல் இருக்க நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கித் தருவதும் தான்! அது குறைபாடுள்ள இந்தியத் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக்கொண்டுவருவதில் ஆரம்பிக்கிறது.
காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தூக்கி எறிவதில் தான் இந்த தேசத்தின்விடிவுகாலம் இருக்கிறது!
என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!
என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!
தமிழ் நாட்டைப் பொருத்தவரை, அதிகம் படித்தவர்கள், அதிக மாத சம்பளம் பெறுபவர்கள் யாரும் பெரும்பாலும் வாக்குச் சாவடிப் பக்கம் போவதில்லை; கியூவில் நின்று வோட்டுப் போடுவதில்லை. வாங்கிய பணத்திற்கு வஞ்சனை செய்யாமல் வோட்டுப் போடுகின்ற சாதாரண மக்கள்தான் அதிகம். அப்படிப் போடுகின்ற மக்கள், கொள்கை ரீதியாகவோ, கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பற்றியோ சிந்திப்பவர்கள் கிடையாது. இந்தத் தேர்தலில் வெகுஜன மக்களின் கருத்தைக் கவரும் வகையில் 'அலை' எதுவும் வீசவில்லை. அறுபது சதவிகித வோட்டுப் பதிவும், கூட்டணிக் கட்சிகளின் இழு பறி நிலையம், தேர்தலுக்குப் பிறகு குதிரை பேரங்களும் நிகழ அதிக வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது.
ReplyDeleteஓட்டுப் போடும் கடைசித்தருணம் வரை trend எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்றாலும், இப்போது நிலைமை மாறிக் கொண்டு வருவதாகத்தான், கிடைக்கிற தகவல்களை அனலைஸ் செய்யும் போது தெரிய வருவது.
ReplyDeleteஅப்புறம் இந்த கழுதை பேரம்....?காங்கிரசும் அப்படித்தான் தேர்தல் முடிவுகள் ஸ்ப்ளிட் வெர்டிக்ட் ஆக இருக்கும் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. மனப்பால், எட்டிக்காய் கலந்ததாகக் கசந்துவிடுகிற வாய்ப்பும் இருக்கிறதே!
எந்த அலையும் இல்லை என்று உறுதியாகச்சொல்ல முடியுமா சார்?
இந்தத்தேர்தல், கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கப்போகிறது!
// எந்த அலையும் இல்லை என்று உறுதியாகச்சொல்ல முடியுமா சார்?//
ReplyDeleteஏதாவது அலை இருக்கின்றதா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.
இந்தப் பதிவுக்காக ஸ்பெஷலாக ஒரு படம் மேலே இருக்கிறது பாருங்கள், அதிலேயே குறிப்பு இருக்கிறது சார்! அலை, நாம் கற்பனை செய்து கொண்டிருப்பது மாதிரியாகத்தான் வரவேண்டுமா என்ன!
ReplyDeleteமெழுகுவர்த்தி தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொள்ளும் படமா? அதான் நான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே - இதெல்லாம் என்னைப் போன்ற பாமர மக்களுக்குப் புரியாது, எனவே, அலைகள் எதுவும் வீசவில்லை என்று!
ReplyDelete//வாங்கிய பணத்திற்கு வஞ்சனை செய்யாமல் வோட்டுப் போடுகின்ற சாதாரண மக்கள்தான் அதிகம்.//
ReplyDeleteஇப்போது காசு கொடுத்தாலும், அதற்குத் தகுந்தபடி ஓட்டுப் போடுவார்களா என்ற கேள்வி எழ ஆரம்பித்திருக்கிறது பாருங்கள், அது தான் கண்ணுக்குப் புலப்படாத அலை!