வைகோ முடிவு--ஒரு அரசியல் தற்கொலை.....?


ட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என்ற மதிமுகவின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோவுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது."உங்கள் கட்சியின் செயல்பாட்டை முடிவு செய்யும் அனைத்து உரிமையும் உங்களுக்குத்தான் உள்ளது. எனினும், உங்கள் சகோதரி என்ற முறையில் உங்கள் மீதான மதிப்பு அப்படியே உள்ளது. கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் நீங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க இயலவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி என்ற முறையில் இச்சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்." என்று ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படித் தினமணிச் செய்தியைப் பார்த்த பிறகு தோன்றியவை இவை!

ஹரகிரி என்றொரு ஜப்பானிய வார்த்தை! தற்கொலை செய்து கொள்வது என்று அர்த்தம். செப்புக்கு என்று சொல்லப்படும்போது ஒரு மதநம்பிக்கையில் தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்வது என்ற அர்த்தத்தில் வரும்.




அதிமுகவின் இடப்பங்கீட்டை ஏற்றுக் கொள்வதில்லை, வருகிற தேர்தலில் போட்டியிடப் போவதுமில்லை என்று வைகோவும், மதிமுகவும் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவு, "ஒரு அரசியல் தற்கொலை" தான் என்று தோன்றுகிறது.செப்புக்கு என்றபடி, ஒரு  கொள்கைக்காகத் தியாகம் செய்கிற வகையில் இதைப் பார்க்க முடியவில்லை. கையாலாகாத்தனம், ஆற்றமாட்டாமையின் வெளிப்பாடாகவே இந்த முடிவு இருக்கிறது.

அவர் சொல்லியிருக்கிற காரணங்கள்,
ஒன்று கூடப் புதிது அல்ல! ஏற்கெனெவே திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டது தான்....  

அப்படியானால் உண்மையான காரணங்கள்........?

சென்ற தேர்தலில், இரண்டு சீட்டுக்களுக்காக திமுகவுடன் உறவை முறித்துக் கொண்டு, சிறையில் அடைத்த ஜெயலலிதாவை அன்பு சகோதரியாக வர்ணித்து அதிமுக கூட்டணியில் இணைந்ததை ஜனங்கள் நினைவு வைத்துக் கொண்டிருக்கப்போகிறார்களா என்ன என்று நினைக்கலாம்.

முப்பத்தைந்து இடங்களில் போட்டியிட்டு, வெல்ல முடிந்தது வெறும் ஆறே இடங்கள்! அப்படி வெற்றி பெற்றவர்களில் மூன்று பேர் உடனடி ஆதாயங்களுக்காகத் திமுகவுக்கு ஓடிப்போனதைத்தடுக்க, தவிர்க்க முடியாத தலைவராக வைகோ மறுகி நின்றது அவருக்கே மறந்து போயிருக்கலாம்!


சீனியாரிட்டி அடிப்படையில் தான் சீட்டு பேரம் இருக்கும், வாங்குகிற ஓட்டுக்களைப் பொறுத்து அல்ல என்று நம்புகிற,அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத "அரசியல் அப்பாவியாக"  வைகோ இருப்பதால் கூட இருக்கலாம்! இங்கே வலைப்பதிவுகளில் ஐந்து நாட்களாக, வைகோவை அரசியல் அனாதை என்று பச்சையாகச் சொன்னது போலச் சொல்ல எனக்கு மனம் வரவில்லை!

பொதுவாக உணர்ச்சிவசப்படுகிற, உணர்ச்சி ததும்ப உரையாற்றுகிற அரசியல்வாதிகள் கடைசியில் அரசியல் தற்கொலைக்குத் தூண்டப் படுவது தவிர்க்க முடியாதது காலம் காட்டுகிற பெரும் சோகம். 


திமுகவில் இருந்து பிரிந்து வந்து, உணர்ச்சி வசப்பட்டுப் பல தருணங்களில் அழுது, எதற்காக என்னைக் கட்சியில் இருந்து நீக்கினீர்கள் என்று உரையாற்றிய வைகோவை ஆரம்ப காலங்களில் இருந்தே கவனித்து வருகிறேன். கரூர் கே சி பழனிச்சாமி மதிமுகவில் இருந்தபோது, வைகோவுக்குப் பரிசளித்த காண்டிசா  காரை, திரு கே சி பழனிச்சாமி, தன்னுடைய சொந்தக் காரணங்களுக்காக  மறுபடி திமுகவில் இணைந்தபோது, நன்றி சொல்லித் திருப்பிய கண்ணியமான அரசியல்வாதியாகவும் வைகோவைப் பார்த்திருக்கிறேன். 

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்ட ஒரு நல்ல பிரதிநிதியாகவும் வைகோவைப் பார்த்திருக்கிறேன். இங்கே தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அந்த அளவுக்கு, தங்களுடைய கடமையைச் செய்தவர்கள் அதிகப் பேர் இல்லை விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் தான், அதில் வைகோவும் ஒருவர் என்பதைச் சேர்த்துப் பார்க்கும்போது, வைகோ இப்போது எடுத்திருக்கும் தேர்தலைப் புறக்கணிப்பதான முடிவு மிகவும் தவறானது, இதைத்திமுக மிக சாமர்த்தியமாகப் பயன் படுத்திக் கொள்ளும் என்பதோடு, மதிமுக என்ற கட்சியையே விழுங்கி விடுவதற்கான வாய்ப்பை வலியத் தேடிக் கொண்டிருக்கிறார் வைகோ என்று சொல்லத்தோன்றுகிறது.

எல்லாவற்றையும் விட, மதிமுகவின் இழப்பு அதிமுகவை அதிகமாகப் பாதிக்கப்போவதில்லை என்பதும் நிதர்சனமாகத் தெரிகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிற ஏராளமான இலவசங்கள், சாமர்த்தியமான பணப்பட்டுவாடா, தேர்தல் கமிஷன் எச்ச்சரிக்கைஎல்லாம் நிஜமாகவா அல்லது உளா உளாகாட்டிக்குத் தானா, ஆளும் காங்கிரஸ் சிபிஐ, வருமானவரித்துறை இவைகளை வைத்துக் குற்றவாளிகளைப் பிடிக்கப்போகிறதா அல்லது தன்னுடைய சுயனலத்துக்குத் தகுந்த மாதிரிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறதா இது மாதிரியான விஷயங்கள் தான் அதிமுக கூட்டணி எதிர் கொள்ள வேண்டிய சவால்களாக இருக்குமே தவிர, மதிமுகவின் இழப்பு, தேர்தல் புறக்கணிப்பு அல்ல!

வைகோ இதைப்புரிந்துகொள்ளாமல் போனது இப்போதும் கூட எனக்கு மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!


வெள்ளையனே வெளியேறு! இது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சமாக மகாத்மா காந்தி எழுப்பிய போர்க்குரல்!

காங்கிரஸ் கொள்ளையனே வெளியேறு! இது வருகிற தேர்தல்களில் ஜனங்கள் எழுப்பவேண்டிய போர்க்குரலாகவும் இருக்கிறது!  

காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் மீண்டும் தலை எடுக்க விடாமல் தேர்தல்களில் தகுந்தபாடம் புகட்டுவது இப்போது நமக்கு இருக்கும் ஜன நாயகக் கடமை! மறந்துவிடாதீர்கள்!




No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!