செவ்வாய்க் கிழமைக் கலாய்த்தல்கள்....!



"எப்பவுமே சீரியசாவே பேசிக்கிட்டிருந்தா எப்பூடி? கொஞ்சம் லைட்டாவும் பேசோணும் , மன இறுக்கம் இல்லாமயும் பாத்துக்கோணும்  இல்லையா?" என்றபடியே புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவர சிங்கம், எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அண்ணாச்சி உள்ளே வந்தார். சரிதான், இன்னைக்கு அண்ணாச்சிபுதுசா எதையோ கிளப்பி விட்டுறப் போறாரு என்ற பீதியுடனேயே நான் "வாங்க அண்ணாச்சி! என்ன  இந்தப் பக்கம் ரொம்ப நாளாவே காணோம்?" என்றேன்.

அண்ணாச்சி என்னுடைய வரவேற்பையோ, அதில் தொனித்த பயத்தையோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மனிதர், ஒரு நாற்காலியில் சௌகரியமாக சாய்ந்து கொண்டபடியே, தன்னுடைய லேப்டாப்பைத் திறந்து "புள்ளி விவரம் பேசுவதற்கு" தயாராகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.  'இன்னைக்கு கிளிஞ்சது கிருஷ்ணகிரி மட்டுமில்லே...நானுந்தேன்' என்று மனதுக்குள் முனகிக் கொண்டு, "அண்ணாச்சி! என்ன சாப்பிடறீங்க? காபி? டீ ?" என்று உபசாரம் செய்தேன்.

அண்ணாச்சி என் உபசாரங்களுக்கெல்லாம்  அசருகிற ஆளாக இல்லை! "நீயும் தான் ஒரு பேங்குல வேலை பாத்தே! பேங்கைப் பத்தி எதுனாச்சும் புதுசா எழுதுனியா?" என்றார். சுமார் முப்பது வருஷம் எனக்கு வாழ்க்கையாகவும், சோறு போடுவதாகவும் இருந்த தொழிலை மறந்துவிட்டேனென்று குற்றம் சாட்டுகிற தொனி அதில் இருந்ததைக் கவனித்தும் கவனியாத மாதிரி அமைதியாக இருந்தேன். நான் என்னதான்  சொன்னாலும் அண்ணாச்சி தான் சொல்ல வந்ததை "நச்சென்று புள்ளிவிவரங்களுடன்" என் தலையில் குட்டிச் சொல்லாமல்  இன்றைக்கு விடப்போவதில்லை! அப்புறம் எதற்காக நான் வேறு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்?

வங்கிகளைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்து சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு  டயர் டூ காபிடலாக, அடுத்து வரும் வருடங்களில் இந்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இருக்கும் செய்தி, பேஸ் ரேட்  என்று ஒவ்வொரு வங்கியும் தான் நிர்ணயிக்கும்  அடிப்படை வட்டி விகிதத்தைப் பற்றி,  நடந்து முடிந்த ஊதிய ஒப்பந்தம், அனைவருக்கும் பென்ஷன் இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. இதை விலாவரியாகச் சொல்வது கொஞ்சம் போரடிக்கும்! அண்ணாச்சி கூட வரும்போதே கொஞ்சம் லைட்டாகச் சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்துக் கொண்டு தான் வந்தாரில்லையா? விலாவாரியாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு பால பாடமாகத் தெரிந்து கொள்ள மட்டும் இங்கே!
 
முடிந்தால் கட்டுரையின் கீழே கொடுத்திருக்கும் வேறு பதிவுகளுக்கும் போய்ப் பார்க்கலாம்!



கொஞ்சம் சுருக்கமாக ஆனால் அடிப்படையை புரிந்து கொள்வதற்கு, அரசாங்கங்களும் வங்கிகளும் எப்படி உன்னாலே உன்னாலே நான் கெட்டேன், என்னாலே என்னாலே எப்படி நீ கெட்டாய் என்று ஒன்றை ஒன்று தாங்குவதாக நினைத்துக் கொண்டு செய்கிற வேலையை இந்தப் படம் ஒன்றே அநேகமாகச் சொல்லி விடும்! சொன்னது புரியவில்லை என்றால், பின்னூட்டத்தில் வரலாம், கேட்கலாம்!
  
******


"வடகொரியாவுக்குப் போகவேணாம்! அது ஆபத்தான பயணம்னு" சொல்றதோட நிறுத்தியிருந்தாப் பரவாயில்லே! எங்களிடம் முன்னாள் அதிபர்கள், (அதாவது வேலை வெட்டி இல்லாதவர்கள்) எண்ணிக்கை கம்மியாத்தான் இருக்கிறார்கள் என்று டிவிட்டியிருக்கிறார் இந்தப் புண்ணியவான்!

இவர் மெய்யாலுமே, அமெரிக்க ராஜாங்கத் துறையில், ஸ்டேட் டிபார்ட்மெண்டில் வேலை செய்யறவராம்! இதைப் பாத்தவுடனேயே ஒரு யோசனை வந்தது!


"தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள், எமெர்ஜென்சி காலத்தை ஒட்டி, கணக்கன் என்ற‌ புனைபெயரில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி, ஜனநாயக முறையில் வெவ்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் தேர்தல் முறைகள், அதில் உள்ள‌ சாதக,பாதக‌ங்களைப் பற்றி, தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தது, பின்னால் தினமணி கதிர்வெளீயீடாகப் புத்தக வடிவிலும் வந்தது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாகவும், அவசியமாகவும் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

வெஸ்ட்மின்ஸ்டெர் மெதட் எனப்படும் பிரிடிஷ் பாராளுமன்ற தேர்தல் அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய குறையே, ஜெயித்தவன் தோற்றவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறான் என்பது தான்.

இந்த முறையை மாற்றி, கட்சிகள் தனித் தனியாக வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது என்று வந்தாலொழிய, தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு வயது உச்சவரம்பு, அறுபது அல்லது அறுபத்தைந்து தான் அதிகபட்சம் என்று வைத்துக் கொள்ளலாமே, ஒரே நபர் இரண்டு தடவைக்குமேல், மந்திரியாகவோ, அதற்கு உயர்ந்த பதவியிலோ இருக்க முடியாது என்று மாற்றிப் பார்த்தாலே, அரசியல் வியாதிகளை முழுவதுமாகத் தடுக்க முடியாது தான், தொற்றுநோயாகப் பெருகுவதையாவது தவிர்க்க முடியும்!

கல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்!

அவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே!"

இப்படி இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் கடினம் தான்!அமெரிக்காவிலோ, முன்னாள் பஞ்சம்! பேசாமல்  இந்த முன்னாள், முடிந்தால் இந்நாள்களையும் டெபுடேஷனில் அனுப்பி வைத்தால் என்ன! மன்மோகன் சிங் மனசு வச்சா, நடக்காமலேயா போயிடும்?!



****** 


ஆனாலும் இது கொஞ்சம் ஓவர், லொள்ளு தான் என்று பதிவைப் பற்றிச் சொல்பவர்களுக்காக! இது கொஞ்சம் ஒரிஜினல் லொள்ளு!
 
******


வெறும்  பதினாலு சென்ட் கொடுத்தால், இப்படிப் பிராண்டும், கடிக்கும் பூனையை நீங்கள் தடுக்கலாம்! இப்படிச் சொல்கிற இந்தப் படம் கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கல்லறைக்குப் போகிற நாள், நேரம் வரும் வரை, ஏமாற்றிக் கொண்டே இருக்கும் இந்திய அரசியல்வாதிகளிடம் இப்படிக் கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது கூடப் புரியும்!

விடுதலை, சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வது, நம்முடைய கைகளில் தான் இருக்கிறது!

என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



இந்தப் போலித்தனம் யாருக்காக... எதற்காக?

சிறுவயது முதலே நாளிதழ்களைப்  படிப்பது, குறிப்பாக அந்த நாளிதழின் அன்றைய தலையங்கம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டு சிந்திக்கும் வழக்கம் எப்படியோ இன்றைக்கும் என்னிடம் நீடித்துவரும் ஒரு வழக்கமாக இருக்கிறது. விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நண்பர்கள், பெரியவர்கள், புத்தகங்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே காரணமாகச் சொல்ல முடியும்.  என்னைப் பற்றி இப்படிச் சொல்லிக் கொள்ளும்போது, என்னை மாதிரியே எத்தனைபேர் ஒரு நாளிதழில் வெளி வரும் தலையங்கத்தைப் படிக்கிறார்கள், அப்புறம் அதைப் பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் தெளிவான விடை தெரிவதில்லை. முதலில் சமூகப் பொறுப்புடன் எத்தனை நாளிதழ்கள் தலையங்கத்தைத் தொடர்ந்து எழுதிவருகின்றன என்று கேட்டால், அதற்கும் விடை எத்தனைபேருக்குத் தெரியும் என்பது கூட என்னால் ஒரு குத்துமதிப்பாகச் சொல்ல முடிவதில்லை.



தமிழகத்தில் பெரும்பாலான நாளிதழ்கள் தலையங்கம் என்ற ஒன்றையே மறந்து விட்டன. அல்லது, தங்கள் சௌகரியத்துக்கேற்றபடி எழுதுவது மட்டுமே தலையங்கமாக வருகிறது. இந்த மாதிரி இல்லாமல், பொது விஷயங்களில், ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஒரு தெளிவான பார்வையோடு பிரச்சினையை அணுகுகிற விதத்தில் தலையங்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களாக, ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், என்று ஆங்கிலத்தில் பல நாளிதழ்கள் இருந்தாலும், தமிழில் ஒரே ஒரு நாளிதழ் தான், ஆரம்பகாலம் முதல், ஒரு நாளிதழின் கடமையாக இன்றைக்கும் தலையங்கத்தை வெளியிட்டு  வருவதாக இருக்கிறது! அது தினமணி! திரு ஏ. என் சிவராமன் ஆசிரியராக இருந்த காலங்களில் இருந்து தினமணி தலையங்கங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.



இப்படிச் சொல்லும்போது, வேறு சில இதழ்களிலும் தலையங்கங்கள் அவ்வப்போது  வருகிறதே, பார்ப்பதில்லையா என்று கேட்கிறீர்களா? தலையங்கம் என்ற பெயரில் வருவதெல்லாம்  தலையோடு இருப்பதாக எண்ண முடியவில்லை! நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த சிந்தனையும் கொண்டு ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள தைரியமில்லாத, தலைல்லாத முண்டங்களாகத் தான், சில நாளிதழ்களின் ஆசிரியர் பக்கம் அல்லது தலையங்கங்களைப்  பார்க்க முடிகிறது. அரசியல் கட்சி சார்புடைய நாளிதழ்கள் என்றால் கேட்கவே வேண்டாம்! குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரிக் குருட்டாம்போக்கில், ஒருபக்கச் சார்புடன்  திட்டித் தீர்ப்பதற்காகத் தான் தலையங்கமே என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்துபோனவைகளாக மட்டுமே இருப்பதை இங்கே கணக்கில் சேர்த்தி இல்லை!



இந்தத் தலையங்கம் நேற்றைய தினமணி நாளிதழில் வெளியானது. "போதுமே இந்தப் போலித் தனம்!" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. கொஞ்சம் கவனமாகப் படித்தீர்களானால், சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை, இந்தப் போலித் தனத்தை உதறினால் எந்த அளவுக்கு நன்மை  உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்!

போதுமே இந்தப் போலித்தனம்..!

இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும்  நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.

அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.

உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.

இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப் படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.  நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.

இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன் படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில்  நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?

ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும் பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதை வாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளி விவரங்களும் சேகரிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?

தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?

ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!

இந்தத் தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் பத்தியும் சொல்வதைப் புரிந்து கொண்டால் .....

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!

 
எலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு  திரும்புகிறான்!

அதே மாதிரித் தான்!

சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!

எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

இப்போதாவது........  

இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !

உலகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,

எங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு

இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!  




 

பாரதியார்! ஆய்வுகள், அவதூறுகள்..! திரித்துச் சொல்லப்படும் உண்மைகள்!


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் மோகனத் தமிழாக வரும் ஸ்ரீ ரங்கம் வி.மோகன ரங்கனைப் பற்றி, அவருடைய பரந்த வாசிப்பு அனுபவம் பற்றி இந்தப்பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். (சு)வாசிக்கப்போறேங்க வலைத்தளத்தில் ஸ்ரீ ரங்கம் மோகன ரங்கனுடைய "படித்தான் பரிந்துரையாக" சீனி.விசுவநாதன் அவர்கள் எழுதிய பாரதி ஆய்வு:சிக்கல்களும் தீர்வுகளும் நூல் விமரிசனத்தை, மின்தமிழில் இருந்து அப்படியே மீள்பதிவு செய்திருந்தேன்! மின்தமிழில் இருந்து எடுத்துப் போடுவதற்கு அதன் நிர்வாகிகளுள் ஒருவரான  முனைவர் நா.கண்ணன் ஆட்சேபமெல்லாம் சொல்ல மாட்டார் என்ற தைரியம் தான்!

ஸ்ரீ ரங்கம் மோகன ரங்கன், என்னவென்று விவரித்துச் சொல்லாமல், திலகர் மறைந்தபோது பாரதி ஏன் அவரைப் பாடவில்லை  என்ற கேள்வியைத் தாங்களே கேட்டுக் கொண்டு, பாரதியைப் பற்றித் திரித்துச் சொல்வதற்கு, சீனி விசுவநாதன் எழுதிய இந்தப் புத்தகத்தில் தெளிவான விடை இருக்கிறது என்பதை மட்டும் சொல்கிறார். 


எழுத்தாளரும், பதிவருமான ஜீவி தன்னுடைய பின்னூட்டத்தில் திரு. வ.ரா  எழுதிய புத்தகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

கீற்று தளத்தில் பாரதியாரின் புதுச்சேரி வாசத்தைப் பற்றி பாரதி வசந்தன் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை இது தொடர்பாக வாசித்ததில், அதில் இருந்து ஒரு பகுதியை எடுத்து ஜீவி சாருக்கு பின்னூட்டமாகப் பதிவிலும் எழுதினேன். அது வருமாறு:


"உண்மையில் பாரதியின் இந்தச் 'சித்தக்கடல்” நூல்தான் அவனின் புதுச்சேரி வாசத்தை உள்ளது உள்ளபடி நமக்குக் சொல்லிக்கொண்டிருக்கும் காலக் கண்ணாடி; இலக்கிய சாசனம். 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே பாரதி புதுச்சேரி வந்திருக்கக்கூடும் என்பது பாரதி ஆய்வாளர்களின் முடிவு. அந்தக் காலம் பாரதியின் இலக்கிய வாழ்வில் மிகவும் நெருக்கடியான காலம். அவன் சூரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்ததும் திலகரின் கொள்கையையும், வழியையும் ஆதரித்துத் தம்முடைய 'இந்தியா” பத்திரிகையில் 'எரிமலையாய்...” எழுதிக் கொண்டிருந்தான். அப்போது திலகருக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர்களையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கியபோது பாரதி மீதும் அவர் நடத்திய 'இந்தியா” பத்திரிகை மீதும் சென்னை சர்க்கார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தலைப்பட்டதும் பாரதியின் நண்பர்கள் அவரை உடனே புதுச்சேரிக்குப் போய்விடும்படி ஆலோசனை வைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் பாரதி, தேச விடுதலைக்காகச் சிறை செல்வதைக் காட்டிலும் கவிதைத் தொண்டு மூலமாக விடுதலை வேள்வியை வென்றெடுக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட, அதன்படியே அவனும் புதுச்சேரி வர நேர்ந்தது.

இந்த அரசியல் பின்புலத்தை அறிந்து கொள்ளாது, 'பாரதியார் கோழை, பயங்கொள்ளி என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். சிலர் வாய்விட்டும் சொன்னார்கள். பாரதி பயங்கொள்ளி அல்ல. ஒரு மனிதனுடைய உள்ளத்தின் உண்மையான நிலைமையை, அவன் பேசுகிற பேச்சு தெளிவாகக் காண்பித்துவிடும். பாரதியின் எழுத்திலே அச்சத்தை, தாட்சண்யத்தை லவலேசமும் காண முடியாது. நெருக்கடியில் பயப்படுகிறவன் அவன் அல்லன். பாரதி புதுச்சேரி போவதற்குக் காரணம் அவனுடைய நண்பர்கள். நண்பர்களின் யோசனைத் திறனில், பாரதிக்கு எல்லையற்ற நம்பிக்கை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதி பட்ட கஷ்டங்கள், சிறைக் கஷ்டங்களைக் காட்டிலும் நிரம்ப ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும். 'எண்ணெய் காய்கிற இருப்புச் சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப் போல ஆயிற்று பாரதியாரின் புதுச்சேரி வாசம்...” என்று பாரதியால் 'தமிழ்நாட்டுத் தேசபக்தன்” என்று அரவிந்தரிடத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட வ.ரா. என்கிற வ. ராமஸ்வாமி ஐயங்கார் தம்முடைய 'மகாகவி பாரதியார்” நூலில் குறிப்பிடுவது பாரதியின் புதுச்சேரி வாழ்வின் இன்னுமொரு இலக்கியப் பதிவு."

முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே



அதைப் படித்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய கட் அண்ட் பேஸ்ட் தமிழ் ஓவியா ஐயா "பாரதி பாடல் புரட்டு: "பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம் " என்ற தலைப்பில் பெரியாரின் குடியரசு கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை வெட்டி ஒட்டி  செய்திருந்த வேலை ஒன்றையும் பார்த்தேன்!


"பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிர பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து, அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி, ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன.

இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியைக் காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத்தின்பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால், இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.

அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திப் பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.

இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்திவைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க.

இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரியமல்ல என்றாலும், நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்."
-------------------
தந்தை பெரியார்- “ குடிஅரசு”, கட்டுரை, 10.02.1929 -
நூல்: “பெரியார் களஞ்சியம் குடிஅரசு” தொகுதி - 8 பக்கம் 38-39
அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

இது, இரண்டு எதிர்முனைகளைப் புரிந்து கொண்டு யோசிப்பதற்காக! அப்படிப் பேசுகிற நபர்களின்  உள்நோக்கம், அந்தரங்க சுத்தியையும் தெரிந்து கொள்வதற்காக!

இப்படி எதிர்மறையாக, ஆதாரமோ, பகுத்தறிந்து பார்க்கும் திறமோ இல்லாமல் சேற்றை அள்ளி வீசுவதன் மூலம் மட்டும் எந்த உண்மையை இவர்களால் நிறுவ முடிந்திருக்கிறது?

பாரதியைப் பற்றிச் சொல்லியிருக்கும் வாசகங்கள்,  பாரதிக்குப் பொருந்தியதோ இல்லையோ, தனக்கு கன கச்சிதமாகப் பொருந்தியதை, பெரியார் அந்தக் கட்டுரையை எழுதிய நேரத்தில் அறிந்திருக்க முடியாது.  இந்த வார்த்தைகள் பொய்த்துப் போனதை அறிந்த  பிறகும் கூடப் பெரியார் அடிப்பொடிகள் இன்னமும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாதது  ஏன்?   பெரியார் நூல்களின் பதிப்புரிமை யாருக்கு என்ற பிரச்சினையும், அப்படி உரிமை கொண்டாடியது எதற்காக  என்பது வெளிப்பட்டுப் போன பிறகும் கூட, கட் அண்ட் பேஸ்ட்  வேலையைக் கடமையாகச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, இந்தப்  "பகுத்தறிவு" படும், அல்லது படுத்தும் பாட்டை நினைத்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!


எவரெவரோ பாரதியைப் பற்றி எழுதுகிறார்கள்! என் கணவர் பாரதி என்று திருமதி செல்லம்மாள் பாரதி, தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதைப் படிக்க இங்கே. (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

 

ஒரு புதன் கிழமை! செய்திகள் நல்லதுக்குத் தானா நஞ்சான்னு தெரியலையே....!


இன்றைக்கு மக்களவையில், அணு உலை விபத்து நஷ்டஈட்டை வரையறை செய்யும் மசோதா, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதினெட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. 



அமெரிக்காவிடம் சிக்கிக் கொண்டு, இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தவித்த தவிப்பு இருக்கிறதே....! 

எதிர்க்கட்சிகள் கொண்டு வருகிற எந்தத் திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக, காங்கிரஸ் தன்னுடைய பழைய நிலையில் இருந்து இறங்கி வந்ததில் இருந்தே, சாவி, ஆளும் ஐமு கூட்டணிக் குழப்ப வெர்ஷன் இரண்டின் பிரதமரிடமோ, காங்கிரஸ் கட்சியிடமோ இல்லை என்ற சந்தேகத்தை உறுதிப் படுத்துவதாக இருக்கிறது.

திருத்தங்களுடன், மசோதா நிறைவேற ஆதரித்த பிஜேபி கட்சியும்,அதன் சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜஸ்வந்த் சிங்கும் கூட ஒரு கேள்வியை மிக அழுத்தமாக பிரதமரிடம் முன்வைத்திருக்கிறார்.

"உண்மையோடு,நாணயத்தோடு, வெளிப்படையாகப் பேசுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டியை, நாடாளுமன்றத்தை இந்த மசோதா விவகாரத்தில்
எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக முடுக்கி விடுகிறீர்கள்?"

பிரதமரிடமிருந்தோ, ஆளும் தரப்பிலிருந்தோ இந்தக் கேள்விக்கு நேரடியான,வெளிப் படையான பதில் இல்லை.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்திய விஜயத்திற்காக இதை அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டியது இல்லையே! அமெரிக்கா  ஆட்டுவிக்கிறபடி எல்லாம் ஆட வேண்டிய அவசியம் தான் என்ன? நாம் ஒன்றும் தென்கொரியா இல்லை,
தென் கொரிய முன்னுதாரணத்தை நாம் பின்பற்ற வேண்டியதுமில்லை என்று சொன்னதற்கு மிகவும் மழுப்பலாக பதில், கொஞ்சம்
பேரத்தை
க் கூட்டித் தருகிறேன்,எப்படியாவது எல்லோருமாக சேர்ந்து மசோதாவை நிறைவேற்றித் தந்துவிடுங்கள் என்ற மாதிரி, அள்ளித் தெளித்த கோலமாக இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இங்கே என்டிடிவி செய்தியில்

பிரதமர்,எப்போதும் போலவே அமெரிக்கக் கம்பனிகளுக்கு ஆதாயம் தருவதுபோலத் தான் இந்த மசோதா இருக்கிறது என்பதை மறுத்திருக்கிறார்.



ஆ! ராசா! என்று வாயைப் பிளக்கிற மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லப் பட்டபோது கூட மறுத்தவர் தான் திரு.மன்மோகன் சிங்! இப்படி, தன்னுடைய கூட்டணிக் குழப்பம் ஒவ்வொன்றிற்கும் சப்பைக் கட்டுக் கட்டுவது, மறுத்து அறிக்கை விடுவதைத் தவிர, இந்த ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் இரண்டாவது ஆண்டு பதவிக்காலத்தில் மன்மோகன் சிங் எதையும் பிரமாதமாக சாதிக்கவில்லை என்பது இன்னொரு முறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பதினெட்டுத் திருத்தங்கள் என்ன பெரிய மாறுதலைக் கொண்டு வந்து விடும் என்பது இனிமேல்தான் தெரியும். 

மேலோட்டமாக, வெறும் ஐநூறு ரூபாய் கோடிகளாக வரையறை செய்து அறிமுகப் படுத்தப் பட்ட நட்ட ஈடு, இப்போது மூன்று பங்கு அதிகரிக்கப் பட்டு ஆயிரத்தைநூறு கோடிகளாகப் பெரிய மனதுடன், காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இவ்வளவு ஒற்றுமையாக இந்த விஷயத்தில் ஒன்று சேரவில்லை என்றால் இந்தப் "பெருந்தன்மை" கூட வந்திருக்காது என்பது ஒருபுறம்!

சட்ட வரைவில்,அணு உலை நிறுவும் நிறுவனங்களைத் தப்ப வைக்கிற விதத்தில், விபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் என்று இருந்த வார்த்தையை நீக்கவும் அரசு சம்மதித்திருக்கிறதாம்! 


ஒரு சட்டம் என்ன நோக்கத்திற்காக, என்னென்ன விஷயங்களைத் தொட்டு இயற்றப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் தெளிவாக வரையறை செய்து, யார், எதற்கு,எந்த அளவுக்குப் பொறுப்பு என்பதைத் தீர்மானிக்க உதவியாக இயற்றப் படுவதற்குப் பதிலாக, குறைகளோடு தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதும், திருத்தங்களைப் "பெருந்தன்மையோடு" ஏற்றுக் கொண்ட விதம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது.



"Yet few questions are being asked as to why the government is in an unseemly rush to pass such legislation and join the Convention on Supplementary Compensation, which hasn’t even come into force.

With the fundamental issues having been eclipsed from the debate, the focus has fallen on the right to recourse in the operator’s fiduciary liability policy. The government’s repeated attempts to dilute the right-to-recourse provisions against suppliers have exposed a disturbing dimension of the relationship between the executive branch and Parliament. First, a key word, “and”, was mysteriously added to the parliamentary standing committee’s text to water down those provisions.

When a furor greeted that surreptitious insertion, the government simply decided to supplant the committee’s agreed text with a new formulation that sets the right-to-recourse bar so high (“the nuclear incident has resulted as a consequence of an act of supplier or his employees, done with the intent to cause nuclear damage…”) as to render that right infructuous. All this raises troubling questions about the executive branch’s persistent moves to nullify a parliamentary committee’s work.

Broadly, the nuclear deal, which was pushed through without building “the broadest possible national consensus” that the PM had promised, has come to symbolize the decline of Indian politics, with self-aggrandizement replacing principles as the guiding philosophy for parties and national interests taking a back seat."

இது நேற்றைய எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் திரு பிரம்ம செலானி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. முழுக் கட்டுரையையும் வாசிக்க



மகாராஷ்டிரா மாநிலத்தில் தாபோல் மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமெரிக்க என்ரான் (தற்போது திவாலாகி விட்டது) நிறுவனத்திடம் ஏமாந்த கதையிலிருந்து இந்திய அரசோ, இந்திய அரசியல்வாதிகளோ எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. ஒன்று இரண்டல்ல, நாற்பது அணு உலைகளை அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து வாங்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இப்படி மொத்தக் கொள்முதல் செய்கிற எந்த ஒரு வாடிக்கையாளரையும், தயாரிப்பாளர்கள் எளிதில் ஒதுக்கி விட முடியாது! இந்த அளவுக்கு வாங்கும் வாடிக்கையாளர், மிகவும் முக்கியமானவராகத் தான் இருப்பார்! 

ஆனால், இங்கேயோ, விஷயமே தலைகீழாகத் தான் இருக்கிறது! அமெரிக்க அரசு நம்முடைய கைகளைப் பின்னால் முறுக்கி, வலுக் கட்டாயமாக, நஷ்ட ஈடு தரும் பொறுப்பில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை வெகு கவனமாகப் பாதுகாத்திருக்கிறது, நிர்பந்தம் செய்திருக்கிறது. 

அணு உலைகளை நிறுவி நிர்வகிக்கப் போகிற நான்கு அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாகவே, (இந்திய மக்களது வரிப் பணத்தில் இருந்து) கடைத் தேங்காயை எடுத்து அமெரிக்கப் பெருச்சாளிகளுக்குப் பலகாரம் சுட்டுப் போடுகிற வேலையாகத் தான் ஐ மு கூட்டணிக் குழப்ப அரசின், காங்கிரஸ் கட்சியின் செயல் பாடு இருக்கிறது என்பது நிச்சயமாகப் பெருமைப் படக்கூடிய விஷயம் அல்ல!

அணு உலைகளால் தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் புறக்கணிக்க முடியாது என்று ஒரு வாதம் வலுவாக முன்வைக்கப் படுகிறது. சரிதான்! அதைவிட, இந்திய மக்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது இல்லையா?

இன்னொரு போபாலை, அல்லது பேரழிவை இந்த தேசம் தாங்குமா?

*படங்கள் இணையத்தில் இருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டவை. உரிமை அதை உருவாக்கியவர்களுக்கே!  




 

சண்டேன்னா மூணு! தரூர்! ட்விட்டர்! ஓட்டு இயந்திரம்!

ஒரு வழியாக சுனந்தா புஷ்கர்-சசி தரூர் திருமணம் இன்றைக்கு பாலக்காட்டுக்குப் பக்கத்தில் "மிக எளிமையாக" நடந்தேறிருக்கிறது. சுனந்தா தரப்பில் இருந்து இருபதுபேர் உட்பட மொத்தமே நூறு உறவினர்கள் மட்டும் தான் அழைக்கப் பட்டிருந்தார்களாம்! அதைவிட அதிசயமாக, ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், சிட்டிங்  எம் பி திருமணத்திற்கு வெறும் இருபத்தைந்தே போலீஸ்காரர்கள் தான் காவலுக்கு இருந்தார்களாம்! 

இதுவே தமிழ்நாட்டில், ஒரு சிட்டிங் அல்லது முன்னாள் ஒண்ணரை அணா வார்டு கவுன்சிலர் வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்..........!

இரண்டு பேருக்கும் இது மூன்றாவது திருமணம் என்பதும் எனக்கு 54 உனக்கு 48 என்பதும் நினைவுக்கு வந்தால் இந்தத் திருமணம் மிக மிகத் தனிப்பட்ட, அடக்கமாக, எளிமையாக நடந்ததில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை தான்!

டிவிட்டரில் உங்களுக்கிருக்கும் எட்டு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து நானூற்று ஐம்பத்தாறு பாலோயர்களில், கொஞ்சம் பேராவது உங்களுடைய நலம் விரும்பிகளாக, வாழ்த்துச் சொல்கிறவர்களாக இருப்பார்கள்! என்ன, துபாய்,  உங்கள் தோழியுடைய துபாய்த் தொடர்புகள் தான் கொஞ்சம் இடிக்கிறது! கொச்சி ஐபிஎல் அணி உரிமைப்பங்குகளை உங்களுடைய தோழி பெற்றதும், அப்புறம் விட்டுக் கொடுத்ததும், மந்திரிப் பதவி பறி போனதும்,  சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிக் கொண்டு வந்ததும் கொஞ்சம் வேகமாகவே நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள்!



Anyhow,   நல்வாழ்த்துக்கள் தரூர்!

ட்விட்டர் தான் அவரைப் பிரபலமாக்கியது, ட்விட்டர் தான் அவரை சர்ச்சைகளில் சிக்க வைத்தது என்றாலும் இன்றைக்குத் திருமண நாள்! அதனால்  தரூரை நல் வாழ்த்துக்களுடன் விட்டு விடலாம்!

அவர் இடத்தை நிரப்ப ஆட்களா இல்லை? 


oooOooo



டிவிட்டரில் சர்வ வல்லமை உடைய கடவுள் என்ற பெயரில் ஒருவர் டிவிட்டியிருக்கும் ஒரு சுவாரசியத்தை மேலே பாருங்கள்! பைபிளும், சாப்ட்வேர் லைசன்சும் ஒன்று தான் என்று சர்வ வல்லமை  உள்ள  கடவுளே  சொல்கிறாராம்! சாப்ட்வேர் லைசன்சையும், பைபிளையும் படிக்காமலேயே கடைசிப்பக்கம் வரை ஸ்க்ரோல் செய்து ஒப்புகை அளிக்கிறோம் இல்லையா, அதனாலேயே இரண்டும் ஒன்று என்பது இந்தக் கடவுளின் வாதம்!


oooOooo



சத்யமேவ ஜெயதே! சும்மா உளா உளா காட்டிக்கு நாங்க சொன்னா, அதை நம்பி உண்மை பேசுவீங்களா?பேசுவீங்களாங்கறேன்!


உண்மையைச் சொன்னால் உடம்பெரியும்!

"Mr. Prasad, managing director of a Hyderabad-based technology firm NetIndia, had taken the help of two other researchers – a Michigan University professor J. Alex Halderman and a Holland-based technology activist Rop Gonggrijp, to demonstrate that EVMs used in India could be tampered by altering small components of the machine.

The researchers had used a genuine EVM in their ‘vulnerability demonstration’ on April 28 and the Election Commission of India had then rejected the claim outright. After video footage of the demonstration showed the serial number of the EVM, authorities found that one of the EVMs in Mumbai collectorate was ‘stolen’ and a case registered in MRA Marg station on May 13."

எலெக்ட்ரானிக் ஒட்டு இயந்திரங்கள் சுத்த சுயம் பிரகாசமானவை! உஜாலா போடாமலேயே வெள்ளையாகத் தான் இருக்கும் என்று அரசும், ஆட்சியாளர்களும்,  தேர்தல் கமிஷனும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அப்படிச் சொல்வது உண்மை இல்லை, அதை டாம்பர் செய்ய முடியும், அதை இஷ்டப்படி செட் செய்து வேண்டிய ரிசல்டுகளைக் காட்ட வைக்க முடியும் என்று உண்மையைச் சொல்கிறேன் என்று கிறுக்குத் தனமாக ஆரம்பித்தால்....?

உண்மையைச் சொல்பவன் சதிகாரன்!

இப்படி ஒரு எம்ஜியார் படப் பாட்டு ஒன்று வருமே நினைவு வருகிறதா? ஆரம்ப வரிகூட, கடவுள் ஏன்
கல்லானான்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே என்று ஆரம்பிக்குமே!



 

இதைச் சொல்ல இத்தனை நாளா, அர்ஜுன் சிங்....?




""  உலகையே உலுக்கிய, 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவில் போபால் நகரில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த விஷவாயுக் கசிவும், அதனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் இனியும் சர்ச்சைக்குரிய பொருளாகத் தொடர்கிறது என்பதே உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதற்கான எடுத்துக் காட்டு என்றுதான் கூற வேண்டும். 

அரசு 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலப்படி, ஏறத்தாழ பத்து லட்சம் பேருக்கும் அதிகமானோர் போபால் யூனியன் கார்பைடு நிறுவன விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் அளித்திருக்கிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்தபின்னும், அன்றைய விஷவாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் குணமானபாடில்லை. அவர்களது வாரிசுகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூளைவளர்ச்சி இல்லாமலும், கண்பார்வை அற்றவர்களாகவும், நுரையீரல் கோளாறு உடையவர்களாகவும் தலைமுறைகள் கடந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

போபால் நகரில் இவ்வளவு பாதிப்பையும் ஏற்படுத்திய யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை உடனடியாக அன்றைய மத்தியப் பிரதேச அரசு கைது செய்தது. ஆனால், கைது செய்யப்பட்ட வாரன் ஆண்டர்சன் 1984-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் சிங். 

கடந்த ஜூன் மாதம், கால் நூற்றாண்டுக்குப் பிறகு, போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் ஒரு தீர்ப்பு வந்தது. அதன்படி, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட ஏழு பேருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும், தலா 2,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுதான் இந்த வழக்கில் வழங்கப்பட முடிந்த அதிகபட்ச தண்டனையாம். ஏனென்றால், இதற்கு முன்பே வழக்கு நீர்த்துப் போகும்படியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதுதான் காரணம். 

ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பு வெளியானதுமுதல் போபால் விஷவாயு விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வாரன் ஆண்டர்சனைத் தப்பிப் போகவிட்டது யார் என்கிற கேள்வி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை நாளும் பதில் பேசாமல் மௌனம் காத்த முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது திடீரென்று ஒரு தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். 

வாரன் ஆண்டர்சனைத் துணிந்து தான் கைது செய்ததாகப் பீற்றிக் கொள்ளும் அர்ஜுன் சிங், உடனடியாக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகக் கூறுகிறார். நான் தகவல் தெரிவித்தவுடன், ""ராஜீவ் எதுவுமே பேசவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் பிரதமர் ராஜீவிடமிருந்து ஆண்டர்சனுக்கு ஆதரவாகவோ, ஆறுதலாகவோ எதுவுமே கூறப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் குற்றப்படுத்துவது அடாத செயல்'' என்று கூறும் அர்ஜுன் சிங், தன்னை அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பலமுறை தொடர்பு கொண்டு வாரன் ஆண்டர்சனை விடுவிக்க வற்புறுத்தியதாகவும் அதனால்தான், யூனியன் கார்பைடு தலைவரை ஜாமீனில் விடுவித்துத் தப்பிப்போக உதவ நேர்ந்தது என்றும் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் அர்ஜுன் சிங். 

அதுசரி, உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் வற்புறுத்தினார் என்பதால், பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நேரிடையான தொடர்பு வைத்திருந்த முதல்வர் அர்ஜுன் சிங் அவரைக் கலந்தாலோசிக்காமல், ஆண்டர்சன் தப்பிப் போக உதவினாரா? உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக முதல்வர் அர்ஜுன் சிங்கைத் தொந்தரவு செய்து ஆண்டர்சனைத் தப்பிப்போக உதவினார் என்றே வைத்துக் கொள்வோம். ஆண்டர்சன் தப்பிப்போன விவரம்கூடத் தெரியாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி? விவரம் தெரிந்தும் பேசாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி? இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணம் தனது உள்துறை அமைச்சர் என்று தெரிந்தும், நரசிம்ம ராவைப் பதவியில் தொடரவிட்டாரா பிரதமர் ராஜீவ் காந்தி? அவ்வளவு மக்கா? திறமையோ, விவரமோ எதுவுமே இல்லாதவரா ராஜீவ் காந்தி? 

ஆண்டர்சனைத் தப்பிப்போக, உள்துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலால் அனுமதித்தபோதும், அவரது கைதை ஆவணப்படுத்தி, தகுந்த நேரத்தில் மீண்டும் ஆண்டர்சனை விசாரணைக்கு உள்படுத்த வழிகோலியது தான்தான் என்று பெருமை தட்டிக் கொள்ளும் அர்ஜுன் சிங், ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறார். அது என்ன கேள்வி தெரியுமா? மத்தியப் பிரதேச அரசின் தனி விமானத்தைக் கொடுத்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்தது ஏன்? என்பதுதான் அது. 

நரசிம்ம ராவ்மீது அர்ஜுன் சிங்குக்கு இருந்த அரசியல் விரோதம் உலகம் அறிந்த உண்மை. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, என்.டி. திவாரியுடன் கைகோத்து, கட்சியில் பிளவு ஏற்படுத்த அர்ஜுன் சிங் முயன்றதும் ஊரறிந்த ரகசியம்.  


பதில் சொல்ல வர முடியாத இறந்துபோன நரசிம்ம ராவின் மீது பழி சுமத்தி, ராஜீவ் காந்திக்கு, ஆண்டர்சன் விவகாரத்தில் தொடர்பில்லை என்று சப்பைக்கட்டுக் கட்ட முற்பட்டிருக்கும் அர்ஜுன் சிங்கிடம் மேலும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.  

இதைச் சொல்ல இத்தனை நாளா? 
25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும். இத்தனை ஆயிரம் உயிர்களின் உயிரைக் குடித்த, வாழ்க்கையுடனும், வருங்காலச் சந்ததிகளுடனும் விளையாடிய சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஏனென்றால், இறந்துபோன ராஜீவ் காந்தியும், நரசிம்ம ராவும் சாட்சி சொல்ல வரப்போவதில்லையே! "


இந்த மாதம் பதின்மூன்றாம் தேதி தினமணி நாளிதழ்  தலையங்கம் எழுப்பியிருக்கும் கேள்வி இது! 



இன்னொரு போபால் வேண்டவே வேண்டாம்! இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் போபாலை விடக் கொடூரமான அணு உலை விபத்து நஷ்ட ஈட்டை வரையறை செய்யும் மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறதே!

அடுத்தவர் தலையில் பழியைத் தூக்கிப் போடுவதும், தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைத்து பரம்பரை வீரம் பேசி வீணாய்ப் போவதும் காங்கிரசுக்குப் பரம்பரை வியாதி! நேரு காலத்தில் வி கே கிருஷ்ணமேனன், அப்புறம் வரிசையாக நேரு பரம்பரைக்காகத் தியாகம் செயப் பலி கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் இப்போது, நரசிம்ம ராவ் வரை வந்து நிற்கிறது, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!வியாதி காங்கிரசோடு போனால் யாரும் இங்கே கவலைப்படப்போவதில்லை, ஒழிந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடலாம்! இந்த தேசத்து ஜனங்களையும் அல்லவா இந்த வியாதி பிடித்துக் கொண்டு வாட்டிக் கொண்டிருக்கிறது!

என்ன செய்யப் போகிறோம்? உங்கள் கருத்தையும் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்! 


 



வரலாற்றைப் பேசுதல்....! சுதந்திர தினச் சிந்தனைகளாக........

சுதந்திர தினச் சிந்தனைகளாக, நாடு விடுதலை அடைந்த தருணங்களில் இருந்து, பிரிவினை, பிரிவினை ஏற்படுத்திய ஆறாத ரணம், பிரிந்துபோன பிறகும் கூடத் தொடரும் விபரீதமான தொந்தரவுகள் என்று கொஞ்சம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

சென்ற வருடக் கடைசியில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மகன் வாங்கி வந்திருந்த புத்தகங்களில் "இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு" என்ற புத்தகமும் ஒன்று. கிழக்கு வெளியீடு.

படிக்க ஆரம்பித்த தருணங்களில் முப்பது நாற்பது பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாத சலிப்பூட்டும் மொழிநடை, திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது போல இருந்தது என்பதால், அந்த நேரத்தில் வெறுத்துப் போய் தூக்கி எறிந்து விட்டேன். இந்த நான்கு நாட்களில் பிரிவினை பற்றிக் கொஞ்சம் பேசலாமே என்று எழுத ஆரம்பித்த நேரத்தில் மறுபடி அதைத் தேடி எடுத்து படித்து முடித்தேன். இப்படி ஒரு அபத்தமான புத்தகத்தை இதுவரை படித்ததே இல்லை!  


ஆசிரியர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதே குழப்பமாக, தெளிவில்லாமல் அப்படி ஒரு அபத்தம்!
 

புத்தகத்தில் பிரிவினைக்கான காரணமாக, "இது வெறும் அரசியல் வரலாறல்ல, மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப் பட்ட இரு தேசத்து மக்களின் சரித்திரமும் கூட!" என்று பின் அட்டையில் போட்டிருக்கிற ஒன்று, அந்த மதவெறி என்ற பேயாவது விரிவாக, தெளிவாகப் பேசப் பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  

சகட்டுமேனிக்கு காந்தி, நேரு, ஜின்னா,படேல், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஆர் எஸ் எஸ், இப்படி எல்லோரையும் ஒட்டு மொத்தமாகக் குற்றம் சொல்கிற இந்தப் புத்தகத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் கொஞ்சம் நல்லெண்ணம் படைத்தவராக, ஏதோ அவர் மட்டும் இந்த இரத்தக் களறியைத் தடுக்க முயன்றும் முடியாமல்  போனவராகச் சித்தரிக்கப் படுகிறார். 

அவர், இந்திய வைசிராயாக இருந்த லார்ட் மவுண்ட் பேட்டன்! 

இந்திய வரலாற்றை, ப்ரிடிஷ்காரர்களைவிடத் திரித்துப் பாடப் புத்தகங்களாகவும் ஆக்கி வைத்தார்கள் என்று இடதுசாரிகளைப் பற்றிக் குற்றம் சொல்வது உண்டு! அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதிரி, இந்தப் புத்தகம் இருக்கிறது.இந்தப்புத்தகத்தில் ஆசிரியர் மருதன், பரபரப்புக்காக, shock value கூட்டி வாசகங்களை எடிட் செய்து சூடாக இன்றைய மனநிலைக்குத் தகுந்தபடி  ஆறிக் குளிர்ந்து போன நிலையில் கூட சூடான மிளகாய் பஜ்ஜி என்று கூவி விற்கிற மாதிரித் தான் இந்தப் புத்தகமும் இருக்கிறது.நேர விரையம், விலை கொடுத்து வாங்கின காசும் விரையம் என்பதைத் தவிர இந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

184 பக்கங்களில் குழப்பிக் கொண்டே போகும் இந்தப் புத்தகத்தை விட, நீடூர் ஆன்லைன் காம் என்ற இந்த வலைப் பதிவின் ஒரே பக்கம் இன்னமும் அழுத்தமாக, பிரிவினை யாரால் தூண்டப்பட்டது என்பதைத் தெளிவாகவே சொல்கிறது!
 

"இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….

கி-பி எட்டாம் நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.

1)இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.

2)பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும். பொறாமையையும், குரோதத்தையும் ஏற்படுத்துதல்.

பிரிட்டிஷ் சதி

ஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:     “பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் ‘வுட்’எழுதியுள்ள கடிதத்தில்,  ”ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்”எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,   “மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்”என எழுதியுள்ளார்.

கர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதியுள்ளார்:   “படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப் படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்”

(இஸ்லாமும்,இந்தியக்கலாச்சாரமும்.by P.N.பாண்டே.நீரோட்டம் பதிப்பகம்,சென்னை) 

 


கே நட்வர் சிங், இந்திய வெளியுறவுத் துறைப் பணியில், முப்பத்தோரு வருட காலம் பணி புரிந்து விட்டு, ஒய்வு பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர். 1956-1958 கால கட்டங்களில் சீனாவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தவர், பிறகுஅமெரிக்கா, யுனிஸெஃப் என்று பல இடங்களில் பணியாற்றிய பிறகு, கடைசியாக 1984 இல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர்.


இங்கே சாகும் தருவாயில் காசி நகரில் கங்கைக்கு அருகில் ஒண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் ஒண்டிக் கொள்வது எதற்காக, காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் தேவைப்படுவது எதற்காக என்பதை நான் விலாவாரியாகச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை அல்லவா!


இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், நேருவின் காலத்தில் நட்வர் சிங் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார், சீனாவிலும் பணியாற்றியிருக்கிறார், அந்த நேரத்து அதிகாரபூர்வமான நிலையை, நிலவரத்தை அறிந்தவர் என்பது தான். மற்ற அரசியல் வியாதிகளைப் போல ஒரு தகுதியுமில்லாமலேயே, வாய்க்கு வந்ததைப் பேசி அதுவே இலக்கியம், மொழிக்கு இலக்கணம் என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிற கூட்டத்தோடு சேர்த்து விட முடியாது.


சீனா டயரி என்று நட்வர் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.ரூபா அண்ட் கோ வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் மீதான விவாதங்களில் பேசும்போது இந்திய சீன யுத்தத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தார். அது கீழே உள்ள சுட்டியில்!



Former External Affairs Minister K Natwar Singh on Tuesday regretted that India has not yet comprehensively analysed the reasons behind the 1962 war with China, saying such an exercise was "really necessary."

Speaking at a discussion on his recent book 'My China Years -- 1956-88, he touched upon various phases of Sino-India relationship in the last 60 years and felt things would have been different had Rajiv Gandhi won the 1989 elections.

"Why 1962 happened. No serious analysis of it took place on our side," Singh said indirectly criticising Government's secretive policy in revealing details of the war.

About the war with China, he said "Mao-Tse Tung decided to teach India a lesson after they felt that we were encroaching on their land."

India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister said, without elaborating on his observation.

On the border dispute, he said Tawang did not figure in the map of India in 1953.

திரு நட்வர் சிங் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறார். 1962 யுத்தம் ஏன் நிகழ்ந்தது? நம்முடைய தரப்பில் பிரச்சினையை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியது ஏன்?

அடுத்து நட்வர் சிங் எழுப்பும் ஒரு முக்கியமான பிரச்சினை 1960 இல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அன்று நிலவிய பலப்பரீட்சையை புரிந்து கொள்ளாமல் இந்தியா தவற விட்டு விட்டது என்பது தான்.இதைப் பற்றி மறந்து கூட இந்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ இன்றுவரை எதுவும் பேசுவது இல்லை. நட்வர் சிங்கும் இதைப் பற்றி விலாவாரியாக எதுவும் கூறாமல் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்
படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கி படிக்கலாம்
 
இந்திய சீன உறவில், திபெத்திய பிரச்சினை பெரும் விரிசலை ஏற்படுத்தியது போக. பிரிடிஷ்காரர்கள், இந்திய சீன எல்லைகளை நிர்ணயிப்பதில் மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டிருந்ததும் அடுத்த பிரச்சினைக்கான விதையாக வீரியத்தோடு கிளம்பியது.

1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப்பிரதமர் சூ என் லாய் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, அதாவது அக்சாய் சின் பகுதியை இந்தியா விட்டுக் கொடுப்பது, பதிலுக்கு சீனா அருணாச்சல பிரதேசம் என்று தற்போது அழைக்கப் படும் பகுதி மீது உரிமை கொண்டாடாமல் இருப்பது என்ற மாதிரி எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது, நேரு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அப்படிச் செய்தால், நான் இங்கே பிரதமராக இருக்க முடியாது என்று சொன்னதாகவும் ஒரு குறிப்பு உண்டு. நேருவின் அணுகுமுறை, தங்களை அவமதிப்பதாக சீனா கருதியதும், நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே யுத்தம் தொடங்கப் பட்டதாகவும் தகவல்கள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்தன.  

இதைத் தான், நட்வர்  சிங், என்னவென்று விவரித்துக் கூறாமல் 1960 வாக்கிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு வந்ததைத் தவற விட்டு விட்டது என்று மட்டும் சொல்கிறார்.


(இதே மாதிரி 1948 இல் பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த நேரம், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், நேருவிடம் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளலாம் என்று வேண்டிய போது,  "joint defence..! against whom?" என்று நக்கலாக நேரு நிராகரித்ததாகவுமே கூட ஒரு செய்தி உண்டு. அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே, பாகிஸ்தான் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல், இன்று வரை ராணுவம் நேரடியாகவோ, அல்லது தங்களது பொம்மை அரசை வைத்தோ தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது)


நாற்பத்தேழு ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஒரு போரில் முடிந்தது ஏன் என்பதைப் பற்றியோ, அரசு இயந்திரம் மரத்துப்போன ஜடமாக, அரசியல், ராணுவ ரீதியாக, ராஜதந்திர ரீதியாக தயாராக இல்லாமல் இருந்த கேவலத்தைப் பற்றியோ இன்றைக்கும் கூட ஒரு சரியான விமரிசன அணுகுமுறை இல்லை. இந்திய அரசும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு மூடு மந்திரமாக வைத்திருக்க முடியுமோ, அந்த அளவு மூடி வைக்கவே விரும்புவது வெளிப்படை.


எவரோ செய்த முட்டாள்தனத்துக்கு எவரையோ பலிகடா ஆக்கி விடுவது காங்கிரஸ் கட்சி அன்றையிலிருந்து இன்றைக்கும் செய்து கொண்டிருக்கும் உத்தி. சீனாவிடம் கேவலமாக அடிவாங்கியதில் மக்களிடம் எழுந்த கோபத்திற்கு பலிகடாவாக வி கே கிருஷ்ண மேனன் ஆக்கப் பட்டு, அவரும் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


நேருவுடைய பிரம்மாண்டமான சமாதானப் புறா இமேஜ் வெறும் காற்றடைத்த பலூன் தான் என்பதை ஒரு சின்ன ஊசிக் குத்திலேயே சீனா நிரூபித்த பரிதாபத்தை எடுத்துச் சொல்ல, நேருவுக்குப் பக்கத்தில் எவருமே இல்லை.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்


தவறு செய்யும் பொது அதை இடித்துரைத்து, சரியான பாதையைக் காட்டுபவரைத் துணைக் கொள்ளாத அரசன், கெடுப்பதற்கென்று எவருமில்லாமலேயே கெடுவான் என்ற வள்ளுவர் கூறும் வாழ்வியல் உண்மைக்கு நேருவுடைய அன்றைய கையைப் பிசைந்து கொண்டு நின்ற நிலையே சரியான சமீப காலத்து உதாரணம்.  

அதைவிடக் கேவலம், சீனப்போர் முடிந்து ஒரு வருடம் ஆன பின்னாலும் கூட, அவர் சரியாகப் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு "The efficacy of nonviolence is not entirely convincing" என்று ஒரு பேட்டியில் சொன்னதே சரியான நிரூபணம்.


ஆயுத பலமோ, எதிரியை இனம் கண்டுகொள்ளும் பக்குவமோ இல்லாத பாமர மக்களை, சுதந்திர வேட்கை கொள்ளச் செய்வதற்கும், அந்நியர் ஆட்சியை எதிர்த்து உறுதியாக நிற்பதற்கும், அப்பாவி ஜனங்களை ஆயுத பலம் கொண்ட மிருகத்தனமான அரசு இயந்திரத்தை செயலற்றுப்போகச் செய்ய, மகாத்மா காந்தி சாமர்த்தியமாகக் கையிலெடுத்த ஆயுதம் சாத்வீக மறுப்பு எனும் சத்தியாக்கிரகம். தடியால் அடித்து மண்டையை பிளந்து ரத்தம் கொட்டிய போதிலும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்த சத்தியாகிரகிகளைக் கண்டு தடியெடுத்தவன் பயந்தான். அந்த சூழ்நிலையே வேறு!


வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பார்த்த நினைவு வருகிறதா? பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல்! வீர வேல் என்று உணர்ச்சி கொப்பளிக்க போர் புரிய வந்த படை,நவீன ஆயுத பலம், பழக்கமில்லாத போர்முறைக்கு முன்னால்   பீரங்கி குண்டுகள் முழங்கவுமே காணாமல் போகும் காட்சி நினைவுக்கு வருகிறதா?


ஒரு அரசைத் தலைமை ஏற்று நடத்துபவன், அதே மாதிரி நின்றால், இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு போய்ச் சமாதானம் பேசும்போது தியாகு காறித் துப்புவது போலத் தான் நடக்கும். அப்படித்தான் நடந்தது!


ஆக காந்தியோடு நீண்ட காலம் இருந்தும் நேருவுக்கு காந்தியின் மிக எளிமையான, நேர்மையான உத்திகளும், காந்தீயமோ அகிம்சைப் போராட்டம் என்றால் என்ன என்பதோ புரியவில்லை. ஐரோப்பிய நாகரீகத்தில் மிகவும் ரசிகராக இருந்து, வெள்ளையர்களோடு உறவாடினபோதிலும், அவர்களிடமிருந்து தந்திரத்தையும் நவீன உத்திகளையும் கற்றுக் கொள்ளவும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில், உலக சரித்திரத்தை வெறும் ஏட்டளவில் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, அதைத் தன் மகளுக்கும் கடிதங்களில் கற்றுக் கொடுக்க முனைந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது?


இதே மாதிரி லண்டனிலேயே பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்து, ஆங்கிலம் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்க இந்திய விடுதலைக்காக ஆதரவுப் பிரசங்கங்கள் மட்டுமே நிகழ்த்துவதில் வல்லவராக இருந்த வி. கே கிருஷ்ண மேனன். இன்னொரு ஆங்கிலேய நாகரிக ரசிகர். நேருவுக்கு ஏற்றார்போல, சரியான ஜாடிக்கேற்ற மூடியாக வந்து அமைந்ததை என்னவென்று சொல்வது?


இந்த இரண்டு நபர்கள், தங்களுடைய ஐரோப்பிய ஞானத்தைக் கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தார்கள். ஆங்கிலேயர்கள் விட்டுப்போன ஐசிஎஸ் எச்சங்களுடைய உதவியுடன், இந்தியாவைச் சுற்றியிருந்த சூழ் நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே கொள்கைகளை வகுத்தார்கள். முதல் சோதனை 1948 இல் பாகிஸ்தானிய காஷ்மீர் ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்தது.


அங்கிருந்தாவது சரிசெய்துகொள்ளும் போக்கு தொடங்கியிருந்தால், நேரு என்ற ஷோக்குப்பேர்வழி, காந்தியின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அரசியல் வாதியும் ஆன மாதிரி, ஒரு ராஜதந்திரியாக உயர்ந்த நிலையாகவும் மாறியிருக்கும்!


1951 இல் திபெத்தை சீன ராணுவம் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது அக்கினிப் பரீட்சைக்கு, நேருவின் அயலுறவுக் கொள்கைஉள்ளானது. தலாய் லாமா தன்னுடைய ஆதரவாளர்களோடு இந்தியாவுக்கு ஓடி வருகிறார். ஒரு மதத் தலைவர் என்ற முறையில், மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக முடிவெடுத்திருந்தால் அது, சோதனையாக இல்லாமல், சாதனையாகவும் மாறியிருக்கும்!திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்று வெளிப்படையாக இந்திய அரசு ஒப்புக் கொள்வதற்கே அடுத்து பதினேழு வருடங்கள் தேவைப்பட்டன. அப்போது கூட, இரட்டை நாக்குடனேயே திபெத் பிரச்சினை அணுகப்பட்டது.


நேருவின் கண்களை அந்த கால கட்டத்தில், கண்முன்னால் தெரிந்த யதார்த்த உலகைப் பார்க்க விடாமலும், புரிந்துகொள்ள விடாமலும், வெறும் கற்பனாவாதியாகவே இருக்கச் செய்தது எது என்று இன்னமும் எனக்குப் புரியவே இல்லை.  

சோஷலிசக் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பித்த நேரு, விழித்துக் கொள்ளவே இல்லையோ என்றுகூட சமயங்களில் அவரைப் பற்றி அங்கேயும் இங்கேயும் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவதுண்டு.


தன்னுடைய பகல் கனவு குரூரமாக க் கலைக்கப்பட்டு, சமாதானப் புறா இமேஜும் பறிபோய், மனமுடைந்த நிலையில் நேருவின் மரணம் நேர்ந்தது.


தயிர்வடையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீதேறி நரகத்துக்குக் கூடப் போகலாம்!" இந்த வார்த்தை நினைவுக்கு வரும் போதெல்லாம், நேருவின் கதை சொல்லும் பாடம் தான் எனக்கு நினைவுக்கு வரும்.


அப்புறமாவது காங்கிரஸ் கட்சியும், இந்திய அரசும் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால், இன்று வரை அதற்கான அறிகுறி ஒன்றுமே புலப்படவில்லை!. 


இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எந்த அர்த்தமுமில்லாமல் போனதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம். சுப்ரமணிய சாமி என்றாலே ஒரு கோமாளி, ரீல் மன்னன், முட்டையடி வாங்குவதற்கே பிறந்தவர் என்றமாதிரி நக்கலான எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!  

ஆனாலும், சீனப் பிரச்சினையில், இங்குள்ள அரசியல்வாதிகள் எவரையும் விட அதிகம் அறிந்தவர் என்ற முறையில் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.


பிரச்சினையை இன்னமும் விரிவாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.

திரு.நட்வர் சிங், அவருடைய புத்தகம் குறித்து எழுதிய  இந்தப் பகுதிகள் ஏற்கெனெவே எழுதியதன் மீள் பதிவு தான்! கேள்விகள் அப்படியே இருக்கின்றன என்பதால்!