ராஜா காது கழுதைக் காது! ராஜா காது........!


பொறுப்பு, பொதுக்கணக்கு, விசாரணை என்று வந்தாலே காங்கிரஸ் கொஞ்ச நஞ்சமல்ல, நிறையவே தடுமாறும்! 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளு மன்றத்தால் நியமிக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு விவகாரத்திலும் அப்படித் தான்!எந்தெந்த இடங்களில் சறுக்கினார்கள், தடுமாறினார்கள், உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்தத்தலையங்கம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது .பொதுக் கணக்குக் குழு ஒன்றும் தண்டிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல! அதன் வேலை,ஒருவிஷயத்தைக் குறித்து விசாரணை நடத்தி, நாடாளு மன்றத்துக்கு என்ன செய்யலாம் என்கிற பரிந்துரையை, ஒரு அறிக்கையாகக் கொடுப்பது மட்டும் தான்.

ஆனால், விசாரணை என்று லேசுபாசாக ஆரம்பித்ததாலேயே, ஏகப்பட்ட குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துவிடுவதை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவிர்க்க முடியவில்லை. ஒரு கேள்விக்கு பதில் என்று பார்த்தால், ஏகப்பட்ட கேள்விகளுக்கு இடம் கொடுக்கிற மாதிரி, தோண்ட தோண்ட பூதங்களாகக் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.ஆ.ராசா மட்டுமல்ல, மன்மோகன் சிங் முதல் ரத்தன் டாட்டா, அணில் அம்பானி, கார்பரேட் அரசியல் தரகர்கள் என்று  ஏகப்பட்ட பேர் அம்பலத்துக்கு வருவதை இனிமேலும் மூடி மறைக்க முடியாதே! தினமணி தலையங்கத்தைக் கொஞ்சம் பாருங்கள்!


"நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, பொதுக் கணக்குக் குழு (பிஏசி)எதற்காக எல்லோரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்களில் ஒருவரான மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது, இந்த விசாரணையை ஊத்திக் கவிழ்க்கும் முயற்சியின் முதல்கட்டம் தொடங்கி விட்டது என அப்போதே தெளிவாகிவிட்டது.

 பி.ஏ.சி.-யின் தனி விசாரணை தேவையில்லை என்ற எதிர்ப்பு ஏற்பட்ட நாளன்று சட்டத்துறைச் செயலரும், அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியும் நேரில் விளக்கம் அளிக்க வந்திருந்தனர் என்பதையும், இப்போது கசிந்துள்ள அறிக்கையில்,"அன்றைய தினம் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாஹன்வதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்கிற நடைமுறை சரியானது தான் என்கிற கருத்தை, சட்டத்துறையைப் புறந்தள்ளி விட்டு நேரடியாகத் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவித்தார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும் இப்போது இணைத்துப் பார்க்கும் போது, இவர்களுக்குக் கோபம் எங்கே கிளைக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.

 நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தாலும்கூட, நாடாளு மன்றத்தால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு, அரசுக்கு ஏற்பட்ட நிதியிழப்பு குறித்து விசாரிக்க முழு உரிமை பெற்றுள்ளது. அதன்படிதான், பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தொலைபேசித் துறைச் செயலர் முதல் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்து வந்தார். அவர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது.

பொதுக் கணக்குக் குழு நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப் படாத சில விஷயங்களும்கூட வெளிப்பட்டுள்ளதும், இவை பொதுக்கணக்குக் குழு அறிக்கையில் பதிவு செய்யப்படுமேயானால், இதில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்களை நாளை நீதிமன்றமும் கையில் எடுக்கக் கூடும் என்கிற அச்சமும்தான் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.

 பி.ஏ.சி. விசாரணைக்குத் தடை விதித்த பிறகு, அடுத்ததாக இந்த அறிக்கையைத் தடுத்து நிறுத்தும் முகமாக, சமாஜ்வாதி கட்சியின் அங்கத்தினர் ஒருவர், பகுஜன் சமாஜ் கட்சியின் அங்கத்தினர் ஒருவர் என இரண்டு பேரை மட்டும் தங்கள் பக்கம் "இழுத்து'க்கொண்டு எண்ணிக்கை பலத்தை 11 ஆகக் காட்டி, இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, ஜோஷி மீது கடுமையாக வசை பாடினார்கள்.

இதையெல்லாம்விட பெரிய கேலிக்கூத்து, இவர்களின் "ரகளை பொறுக்க மாட்டாமல் ஜோஷி வெளியேறியபோது, ஓடுகிறார் என்று கேலி பேசியதுடன், அந்த 11 பேரும் உட்கார்ந்து பிஏசி தலைவராகப் பேராசிரியர் சைபுதின் சோசை த் தேர்வு செய்தார்கள்.


பிஏசி தலைவராக இருப்பவர் மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை கூடத் தெரியாமல், மாநிலங்களவை உறுப்பினரான சோஸ் தேர்வு செய்யப்படுகிறார் என்றால், இது குறித்து இன்றுவரையிலும் மக்களவைத் தலைவரும் பிரதமரும் ஏதும் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருப்பார்கள் என்றால், இதை என்னவென்பது?

 இந்த அறிக்கை உள்நோக்குடன் கசிந்தது என்றும், மத்திய அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாரிக்கப் பட்டது என்றும் காங்கிரஸ் கட்சி கருதினால் அதை பிஏசி கூட்டத்தில் விவாதிப்பதும், கேள்வி கேட்பதும் நியாயமானதே. ஆனால், அதற்காக அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது இத்தனை நாள்களாக பிஏசி நடத்திய விசாரணையையே அழிப்பதாக ஆகாதா?

பி.ஏ.சி.-யில் ஒவ்வொருவரும் தெரிவித்த தகவல்களை வைத்துத் தான் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உறுப்பினர்களுக்கே நன்றாகத் தெரியும். அத்தனையும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள். இதில் தனியாக ஜோஷியோ அல்லது பாஜகவோ இட்டுக்கட்டி எழுதுவதற்கு ஏதுமில்லை. அவ்வாறு இருந்தால், விசாரணையில் பதிவு செய்யப்படாமல் தன்னிச்சையாக எழுதப்பட்ட பகுதிகள் எவையெவை என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரினால் அது நியாயமான அணுகுமுறையாக இருந்திருக்கும்.

இவர்களது அடிப்படை அச்சம் , இணையான விசாரணை நடந்தால், அறிக்கை வெளியானால், தங்கள் குற்றம் மேலும் உறுதி செய்யப்படும் என்பதுதான். ஆகவேதான் காங்கிரசும் திமுகவும் இதில் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன.

 நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தன்னிச்சையாகத் தயாரித்துவிட்டார் என்று கூக்குரலிடுகிறார்கள் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள். இது போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கும்போது, குழுவின் சார்பில் விசாரணையின்போது அனைவரும் கலந்து கொள்வதும் அதன் தலைவர் அறிக்கையைத் தயாரிப்பதும்தானே வழக்கம். அந்த அறிக்கை குழுவின்முன் விவாதத்துக்கு வைக்கப்படும் போது, தங்கள் ஆதரவையோ, ஆட்சேபணைகளையோ உறுப்பினர்கள் பதிவு செய்வதுதானே முறை?

 பொதுக்கணக்குக் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதுதான், காங்கிரஸ் - திமுக உறுப்பினர்களின் ஆவேசத்துக்கும், அவசரத்துக்கும் காரணம்.

2003-ல் கார்கில் போரின்போது ராணுவக் கொள்முதல்கள் பற்றி விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பூட்டா சிங் தலைமையிலான பொதுக் கணக்கு விசாரணைக் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் அன்று ஆட்சியிலிருந்த பாஜக தடுத்தது. இப்போது, முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்யவிடாமல் இன்றைய ஆளும் கட்சிகள் தடுக்கின்றன.

தவறுகளையும், முறைகேடுகளையும் யார் செய்திருந்தாலும் வெளிக் கொணர வேண்டிய நமது மாண்புமிகு உறுப்பினர்கள், தவறுகளை மூடி மறைப்பதில் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது.

இந்தியா ஒளிர்கிறது,  நிஜம்!"

எதிலெல்லாம் என்று கேட்கிறீர்களா?

ஊழலில்! பொறுப்பற்ற தனத்தில்!செயல்படாத அரசு நிர்வாகத்தில்! தடைக்கற்களாக இருப்பதே நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுடைய முக்கியத் தொழிலாக ஆனதில்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!

பொதுக்கணக்குக் குழு விவகாரத்தில் காங்கிரசின் நிலையை  திருமதி ஜெயந்தி நடராசன் தொலைக்காட்சிகளில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த விதம் மிக வேடிக்கையாக இருந்தது.இருநூற்றெழுபது  பக்க அறிக்கையின் சில பக்கங்கள் மட்டும் வெளியே கசிந்தது எப்படி என்று திரும்பத்  திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேட்டிருக்கவேண்டியது, பொதுக்கணக்குக் குழுவின் உறுப்பினர்கள்! பொதுக்கணக்குக் குழுக் கூட்டத்தில்!

ஆனால் அம்மிணி இதற்கு பிஜேபிதான் பதில் சொல்ல வேண்டும் என்று வேறு சொல்லிக் கொண்டிருந்தார். அம்மிணியின் இதே தர்க்கநியாயப்படி, கனிமொழி விவகாரத்தில், கனிமொழி, தயாளு அம்மாள் பெயர்கள் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று தகவல்களைக் கசிய விட்டுக் கொண்டிருந்தார்களே, அப்போது எவரைக் கேட்பதாம்? ஜன நாயகத்தின் ஒவ்வொரு நிறுவனத்தையும் காங்கிரஸ் இடித்துத் தரை மட்டமாக்கிக் கொண்டிருக்கிறதே என்ற கேள்விக்கு அம்மிணி பூசி மெழுகி சொன்ன பதில் சிரிப்பைத் தான் வரவழைத்தது.
பொதுக்கணக்குக் குழு விவகாரத்தில், தங்களுடைய கோளாறுகள் அம்பலத்துக்கு வந்துவிடுமே என்று காங்கிரசும் திமுகவும், PAC அறிக்கையை முடக்கி வைத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். பிஜேபி மீது பழியைப் போட்டுவிட்டுக் கொஞ்ச நாள் குளிர் காயலாம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன!!

ராஜா காது கழுதைக் காது! என் எஸ் கிருஷ்ணன் - மதுரம், டி. ஆர் ராமச்சந்திரன் காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறதா?

அந்தக் கதைதான்!





3 comments:

  1. காதெல்லாம் பெருசாத்தான் இருக்குது.கேட்கத்தான் ஆளில்லை:)

    ReplyDelete
  2. ஜனநாயக நாடு என்று பெயர் வைத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு PAC ஒரு ஓட்டு வித்தியாச ஓட்டில் கவிழ்ப்பும்,அடுத்த நிமிடமே புதிய காங்கிரஸ் தலைவர் அறிவிப்பும்...

    எங்கே போகிறது இந்தியா?

    ReplyDelete
  3. திரு ராஜ நடராஜன்!

    ஜிமெயில் ஐடியுடன் வந்ததால் உங்களுடைய பின்னூட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.Profile இல் சிறிதளவாவது தங்களைப் பற்றிய விவரங்களோடு இருப்பவர்கள் தவிர, மற்றவர்கள் எழுதும் பின்னூட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

    அப்புறம், காதெல்லாம் பெரிசாத்தான் இருக்கு ஆனாக்க கேக்கத்தான் ஆளில்லை! நீங்க இருக்கீங்களே ஐயா!

    ஒரு ஒட்டு வித்தியாசத்தில் கவிழ்ப்பு--நடந்தது கேலிக்கூத்து! செல்லுபடியாகக் கூடியது இல்லை! கவிழ்ந்தது ஜோஷியோ பிஜேபியோ இல்லை! அப்புறம் புதிய காங்கிரஸ் தலைவர் அறிவிப்பும்.....! சோஸ் மாநிலங்கள் அவை உறுப்பினர்! மக்களவை உறுப்பினர் தான் பொதுக்கணக்குக் குழுவுக்குத் தலைமை ஏற்க முடியும் என்ற அடிப்படை விஷயம் கூடத் தெரியாத ஞான சூனியங்கள் தான் காங்கிரசில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்!

    இதை வைத்தெல்லாம், இந்தியா எங்கே போகிறது என்று தீர்மானித்து விட முடியாது! எங்கே போகிறோம் என்பதில் தெளிவு, உங்களுக்கும் எனக்கும், எல்லோருக்கும் ஏற்படுவதுதான் முக்கியம்!

    பிரகாஷ் என்ற ப்ளாக்கரிடமிருந்து s என்று மட்டும் இருந்த ஒற்றை எழுத்துப் பின்னூட்டம், இந்தப்பதிவரைப்பற்றிய குறைந்தபட்ச விவரம் எதுவுமில்லாததால் நிராகரிக்கப்படுகிறது. தங்களை அறிமுகம் செய்துகொள்ளத் தைரியமில்லாதவர்கள், பேசாமல் ஒதுங்கிக் கொள்வதே நலம் என்று கமென்ட் பாக்ஸின் மேலேயே இருக்கிறதே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!