" இத்தனை எழுதித்தள்ளிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை. எழுதாவிட்டால் அத்தனை நூல்களையும் நான் உள்ளே அல்லவா வைத்திருக்க வேண்டும்!"
ஒருஎழுத்தாளர் குப்பை கொட்டுவதைப் பற்றி இப்படிப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தைகளைப் படித்துவிட்டு, குப்பை சுமக்கிறவர்கள் மேல் பரிதாபம் மேலிட்டு கவிதை மாதிரி ஒன்றைக் கிறுக்கித் தள்ளிய பழைய பதிவு இது!
இங்கே குப்பை கொட்டாதீர் என்று ஒவ்வொருவரும் கதறிக் கொண்டே, அடுத்தவரிடத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம்!அடுத்தவர் போடுவது குப்பை என்று உறைக்கிற அளவுக்கு, தான் போடுவதும் அதுதான் என்பது இங்கே எவருக்கும் புரிவதே இல்லை!
குப்பைகளைப் பற்றி, குப்பை கொட்டுவதைப் பற்றி ஸ்ரீரங்கம் வி.மோகன ரங்கன் தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் எழுதியிருந்த கவிதை ஒன்று இன்றைக்குக் கண்ணில் பட்டது! மனிதனைக் குப்பை கொட்டும் பிராணி என்றே உருவகப்படுத்தியிருந்தவிதம் நெற்றியில் அறைகிற மாதிரி...!
முழுக் கவிதையும் இங்கே!
ரோடு பொறுக்குபவனின் ஸாலிலக்கி
அப்பப்பா! எவ்வளவு குப்பைகள்!
ஜனங்கள் சர்வ சாதாரணமாகக்
குப்பை போடுகின்றனர்.
வேண்டாமா தூர எறி.
விழுந்துடுத்தா விட்டுத்தள்ளு.
என்ன வேகம்! என்ன அவசரம்!
கண்ணாடி வளையல் கைக்குட்டை
பொம்மை பர்ஸ் உதட்டுச் சாயம்
அட்டைப் பெட்டி ப்ளாஸ்டிக் கூடை
மருதாணி பாக்கட்டு மண்ணடைந்த ஊதல்
கால் கொலுசு கலர் பென்சில்
செய்தித்தாள் எண்ணைக் குப்பி
காலில் மிதிபட
கால்களுக்கிடையில் உருள்பட
நாய் மோந்து நக்கிக் கால்தூக்கி
கல்லடியில் நாய் குதிக்க
உருண்டு, காலில் மிதிபட்டு, உதைபட்டு..
பொருள்:..பொருள்..பொருள்..
உருக்குலைந்து உருமாறி உருவிழந்து
உரு இன்னும் இருந்து
உலக நடை நெடுக மக்களைப் போலவே ..
மூட்டை கனக்கிறது.
மீண்டும் ஒருமுறை வரவேண்டும்
பென்சில் பால்பாயிண்ட் பேனா
கைகடியாரம் விழுந்தது கூட தெரியாம ஓட்டம்
காலில் மிதிபட்டு உருள்பட்டு நசுங்கி
அப்பப்பா!
மனுசன் ஒரு குப்பை போடும் பிராணி
அடடா! இது என்ன டிபன் மூட்டை
யார் சாப்பிடப் போகிறார்கள்?
காலில் மிதிபட்டு...
ராத்திரி பிடித்த எலியை அடித்து
தெருவில் தூக்கி எறிந்ததை
காக்கை அவசரத்தில் கொத்தியது போக
நாய் மோந்து பூனை பார்த்து
காலில் மிதிபட்டு நசுங்கி.....
மனிதன் ஒரு குப்பை போடும் பிராணி.
அட! இது என்ன? அதிசயமாய் இருக்கிறது!
இதுவரையில் காணாத பொருள்!
யார் இதை இங்கே போட்டது?
என்ன வினோதம்!
யார் காலிலும் மிதிபடாமல்
நாய் மோக்காமல், காக்கை கொத்தாமல்
உரு மாறாமல் மழுங்காமல்
என்ன இது? அப்பா! யாருடையது?
உங்களுதா?..... இல்ல
உங்களுதா...... இல்லப்பா ஆளைவிடு.
சார்..நீங்கள்....நகருய்யா...வழியில
நின்னுகிட்டு
ஐயா இது உங்களுடையதா?
ஏனய்யா கிண்டலா
சரி வாங்க அவன்கிட்ட என்ன பேச்சு?
யாருதும் இல்லயா? சரி நமக்கென்ன?
தூக்கி எறிவோம்..ஏன்? மூட்டையில போடுவோம் ...வேணாம் ..
வினோதமா இருக்கே!
நாமே வச்சுக்குவோம்
வலது கால் சராய் பை ஓட்டை
இடது பையில போட்டுக்குவோம்
என்ன இது! ஆச்சரியமா இருக்கு?
சரி நம்ம வேலை...பொறுக்கு...பொறுக்கு
பொறுக்கு....போய் போட்டுவிட்டு..
இன்னொரு நடை?...
இல்ல இன்னிக்கு இதோடு போதும்
காலம் முழுக்க பொறுக்கினாலும்
அள்ளி முடியாது மனிதன் போட்ற குப்பை
சாமீ!...
யாரு? என்னய்யா? யாரைப் பார்த்து
சாமீங்கற? தள்ளு குப்பையை எடுக்கணும்..
ஆஹா முகத்தைப் பாருங்கள்..
இப்படி ஒரு முகம் இதுவரையில் கண்டதில்ல
யோவ்! என்ன கிண்டலா?
வழியப் பார்த்துக்கிட்டுப் போ
சும்மா...ரோடு பொறுக்கறவன பார்த்து
வெட்டிப் பேச்சு வேணாம்
என்ன தத்துவம்! என்ன உபதேசம்!
யோவ் இது என்னய்யா வம்பா போச்சு
யாரைக் கும்பிட்றானுக?
பின்னால யாராவது வாரானா?
என்னடா இது எல்லாம் கிறுக்கனுகளா?
என்னாத்துக்கு இந்தக் கவல?
நடையைக் கட்டு...குப்பை..குப்பை
என்ன குப்பை போட்றானுக மனுசனுக!
அப்பாடி! தூக்கி வை ...
மூட்டைய அந்த ஓரத்துல...
ஒரு டீ அடிச்சிட்டு பீடி வலிப்பமா?
டீ கிடக்கட்டும்...இப்படி..சாய்ஞ்சுக்கினு
உட்கார்ந்து...ஒரு தம்...
தோ ஏரோப்ளேன் போறான்
ஆமா அங்கன போயி
இவனுக குப்ப போடுவானுகளே
என்ன பண்ணுவானுக?
ஏகப்பட்ட நட்சத்திரம்!
எல்லாம் எவன் போட்ட குப்பையோ?
பொறுக்காம கெடக்குது...
மொத்தமா அள்ளிப் ..போடுவானுக
போல... ஒரு நாளைக்கு
இந்தப் பொருள் உன்னுதான்னு கேட்டா
அந்த ஆளு அப்படி கத்துறான்!
அந்த அம்மாவும் சொல்லுது....
அவங்கிட்ட என்ன பேச்சு?....
அட மறந்துட்டேன் இன்னும் இருக்கா?
என்னாப் பொருளு அதிசயம்மா?
பொறுமையா பிரிச்சா என்னன்னு தெரியுது
என்னது.... அட....
மன அமைதி
அதான் அந்த கும்பிடு கும்பிட்டானுகளா?
இதப்பார்ரா...தங்கிட்ட இருக்கறத குப்பைல போட்டு...மத்தவன்ட்ட இருக்கறத கும்பிட்டுத் திரியுறானுக....
மனிசன் குப்ப போடும் பிராணி... !
பீடி இன்னிக்கு நல்லாவே இருக்கு.....!!
ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கனுடைய மோகனத்தமிழைப் பற்றி இந்தப்பக்கங்களில் முன்னமேயே பார்த்திருக்கிறோம். குறிப்பாக, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் அவர் "எது பக்தி" என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்த இழையில் அப்படியே அகம் கரைந்து உருகி நின்ற தருணங்களை இங்கே பார்த்திருக்கிறோம். இப்போது எது பக்தி புத்தகவடிவிலும் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தத் தலைப்பில் எழுதிய முதல் இருபத்தொரு பத்திகளையும், வாசகர் சந்தேகங்களுக்கு விடையளித்த ஆறேழு பதிவுகளையும் இங்கே வரிசையாகப் படிக்கலாம்.
அதன்பின்னர் வந்த பகுதிகள் ஒன்று, இரண்டு, மூன்று
மோகன ரங்கனும் மின்தமிழ் கண்ணனும்
நேற்று முன்தினம் வரை வெளியிட்ட பகுதிகள் அத்தனைக்கும் தொடுப்பு இங்கே இருக்கிறது. அடுத்து வெளிவருவதையும் இங்கே பார்க்கலாம். மோகனத்தமிழில் கொஞ்சம் தோய்ந்துதான் பாருங்களேன்! பக்தி என்பதை இத்தனை சுவையாக, தெளிவாக பி ஸ்ரீ அவர்களுக்குப் பிறகு வேறெவரும் எழுதி நான் படித்ததில்லை.
அந்தவகையில், திரு மோகனரங்கனின் மோகனத்தமிழ் படித்ததும் பிடித்ததுமாக!