ஆரோவில் மாத்ரி மந்திர் உள் அறை
வெளியே எத்தனையோ விஷயங்களில் மனம் அலை பாய்ந்தாலுமே கூட, மனம் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் பிப்ரவரி 21 ஆம் தேதி வருவதை ஒட்டி, தரிசன நாள் செய்திக்காகக் காத்துக் கிடக்கிற தவம் கூடவே தொடங்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், புதுச்சேரி ஆசிரமத்திற்குச் சென்று நேரில் தரிசன நாள் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள நேரம் கைகூடாமல் இருந்தபோதிலுமே கூட, மனம் அங்கே தான் மையம் கொள்ள விரும்புகிறது. அவளே எல்லாம் என்று இருந்துவிடத் தவிப்பு இப்போதுதான் பற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
பிரபலமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதையும் பார்த்தாயிற்று! போலித்தனமான தலைவரே என்ற அழைப்பில், கூடியிருந்த கூட்டங்கள் எதிலுமே மயக்கம் அதிகமிருந்ததில்லை என்றாலும் அதிலேயே உழன்ற வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தாயிற்று! நண்பர்களே பகையாகி, உடல்நலமும் கெட்டு, மன நிலையும் ஒத்துழைக்காமல் இருந்த நரகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
அனுபவங்கள் ஒவ்வொன்றும், ஒரு காரணத்திற்காகவே நமக்கு அருளப் படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் நம்மை உயர்த்துவதற்காகவே! நம்மைப் பக்குவப்படுத்துவதற்காகவே!
அவரவர்க்கு வேண்டிய விதத்தில், வேண்டுகிற நேரத்தில் கிடைப்பதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து வியந்திருக்கிறேன். வெற்றிகளாக நான் எண்ணிய எதுவும் நிலைக்கவில்லை என்பதோடு வெற்றிகளே என்னுடைய சுமையாகவும் ஆகிப்போனதாய் அறியவும் ஒரு நேரம் வந்தது. உலக அளவீடுகளின்படி நான் வெற்றி பெற்ற மனிதனில்லை! புத்திசாலியுமில்லை!
தோல்விகள், அவமானங்கள் என்னைச் சுருட்டி முடக்கி வைத்து விடவில்லை! ஒவ்வொரு தோல்விக்குப் பின்னாலும், நான் எங்கே தவறு செய்தேன் என்பதைத் தெளிவாகக் காட்டி, நான் போக வேண்டிய பாதை எது என்பதை வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பதையும் அறிகிற நேரமும் வந்தது. பூஜ்யத்தைச் சின்னதாக வரைந்தால் என்ன, பெரிதாக வரைந்தால் என்ன? வட்டம் மா'வட்டமாகி விடுமா? அப்போதும் அது பூஜ்யம் தானே!
Consent to be nothing and none என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற நிலையை வேண்டிக் காத்திருக்கிறேன் தாயே!
Consent to be nothing and none என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற நிலையை வேண்டிக் காத்திருக்கிறேன் தாயே!
மேலே காண்பது நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன், பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும். ஏதோ ஒரு முறை அப்படியொரு நல்வாய்ப்புக் கிடைத்த தருணத்தை நன்றியோடு இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஸ்ரீஅரவிந்த அன்னையின் மலர்ப்பதங்களில் சரணடைகிறேன்.
பிரச்சினைகள் சூழும்போது..!
1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்" அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.
இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.
என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”
இப்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கும் சில தனிப்பட்டபிரச்சினைகள் ஏகப்பட்ட வலி, வேதனைகளைத் தருவதாக, மறுபடியும் தனித்து விடப்பட்டதாக உணர்கிற அளவுக்கு முற்றிக்கொண்டு வருகிறது. இப்படிச் சோர்ந்து விழுகிற தருணங்களில் எல்லாம் ஸ்ரீ அரவிந்த அன்னை என்னோடு துணையாக இருப்பதை வழிநடத்திச் செல்வதை அறிந்தே இருக்கிறேன். நான் தனியன் இல்லை எனக்கொரு அன்னை இருக்கிறாள் அவளே எல்லாமுமாக இருந்து என்னை வழி நடத்துகிறாள் என்கிற நம்பிக்கையே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே