இட்லி வடை பொங்கல்! #73 சசிதரூர்! OPS! சமூக ஊடகங்கள் ஜாக்கிரதை!

புரட்சி நடிகர் எம்ஜியார் ஒரு மகான்! தீர்க்கதரிசியும் கூட! கெட்டிக்காரியின் பொய்யும் புளுகும்  டக்குமுக்கு டிக்குத் தாளம்! எட்டுநாளிளேலே  தெரிஞ்சுபோகும் டக்குமுக்கு டிக்குத் தாளம் என்று சோனியா காங்கிரசின் யோக்கியதை இன்னதென்று அன்றே பாடிவைத்து விட்டார்! அண்ணா நாமம் பழசு.எம்ஜியார் நாமத்துக்கு மகிமை உண்டாவதாக! இரட்டை இலைக்கு அரோகரா!  


இப்படிப் புளகாங்கிதம் அடையக்காரணம் என்னவென்றால் சோனியாவோ,அவர் முந்தானையைப் பிடித்துக் கொண்டே நடக்கும் கட்சிக்காரர்களோ கெட்டிக் காரர்களில்லை! சுத்தக்கேணைகள் தான்!  என்பதை மேலே 10 நிமிட வீடியோவில் காங்கிரசும் இடதுசாரிகளும் அவிழ்த்துவிட்ட பொய்யும் புளுகும் ஒருநாள் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஏவியவர் மீதே திரும்பி, கழுதைக்கு வெள்ளிமூக்கு முளைத்தும் விட்டதாம்! டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் நடத்திய களேபரத்தில் 4 பேர் மரணம், ஒரு காவலர் அடுத்து மரணம் என்று ரத்தக்களரி ஆனதை விட, அதில் ஒரு அமெரிக்க இந்தியர் இந்திய தேசியக் கொடியை ஆட்டிக்கொண்டு போன சம்பவம் மீது இங்கே காங்கிரசின் சசிதரூரும், இடதுசாரிகளும் இந்துத்துவ வெறி, மோடி அஜெண்டா என்றெல்லாம் அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டைகள், உடனுக்குடனேயே அம்பலமாகி,சந்தி சிரிக்கிறது! காங்கிரசுக்கும் சரி, லட்சியக கூட்டாளி இடதுசாரிகள் மானம் எப்போதோ கப்பலேறிப் போய் விட்டதென்பதால் அவர்களுக்கு இதுபற்றிக் கொஞ்சமும் கவலையில்லை! கவலையெல்லாம் தமிழகத்தில் எத்தனை சீட் கிடைக்குமென்பதை விட எத்தனை கோடி நிதி தேறும் என்பதில் தான் இருக்கிறது. 


பன்னீர்செல்வம் வெந்நீர் கொட்டியதைப்போல பதறுவதும், பாமகவின் 20% இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை என்று புலம்புவதும் சரிதான்! ஆனால் 1987 இல் எம்ஜியாரே ஒப்புக்கொள்ளாத இந்தக் கோரிக்கைக்கு OPS, EPS ஒப்புக்கொள்வார்கள் என்றும் சொல்லவில்லையே! யா3ர் பிடிவாதம் ஜெயிக்கப்போகிறது? மருத்துவர் ராமதாசு OR அதிமுக?


டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 19 வரை முழு அதிகாரமும் உள்ள அமெரிக்க அதிபர்தான்! ஆனால் இவர் எங்கே மீண்டு வரப்போகிறார் என்கிற மிதப்பில் ட்வீட்டர் அமெரிக்க அதிபர், இன்னும் சில நண்பர்களுக்கு நிரந்தரத்தடை விதித்திருக்கிறது. முகநூல் என்ன கூத்தடிக்கப்போகிறது என்கிற விவரம் தெரியவில்லை ஆனால் ஓசியில் கிடைக்கிறதே என்று மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள் தலையில் மிளகாய் அரைக்கிற வேலையில் முகநூல் இறங்கியிருக்கிறது

ஒரு பொருளையோ சேவையையோ உங்களால் இலவசமாக பயன்படுத்த முடிந்தால், நீங்களே அந்த நிறுவனத்துக்கான சேவையும் பொருளும் கூட. அதற்கான விலை, நீங்களாகவும் இருக்கலாம்.
ஷேரிங் இஸ் கேரிங் என்கிறது வாட்ஸ் அப் நிறுவனம். "நாங்க உங்க மெஸேஜ இத்தனை நாளா கேர் செய்தோம்; நீங்க இப்போ டேட்டா - அதாவது தகவல்களை ஷேர் செய்யுங்க" என்கிறது.
வாட்ஸ் அப்பை திறந்ததுமே, whatsapp is updating its privacy policy என்று பாப் அப் ஆவதை பார்த்திருப்பீர்கள்.
வாட்ஸ் அப், தனியுரிமை கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. அதை ஒப்புக்கொண்டால், அதன் சேவைகளை முன்பு போலவே பயன்படுத்திக் கொள்ளலாம்; இல்லையெனில் கடையை சாத்திட்டு கிளம்புங்க என்கிறது.
இந்தத் தகவல் தனியுரிமையில் இருக்கும் சமரசம், ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு அல்ல. ஐரோப்பா தவிர்த்த அத்தனை பகுதி உபயோகிப்பாளர்களுக்கானது.
உதாரணத்துக்கு, நீங்கள் உங்கள் நண்பருக்கு, "டேய் சீக்கிரம் ஸ்கை வாக் பக்கம் வந்துடு" என, நீங்கள் இருக்கும் இடத்தின் மேப் ஷேர் செய்தால், அது வாட்சப்க்கும் சேர்த்து தான். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது அம்மாவை விட துல்லியமாக வாட்சப்புக்கு தெரியவரும் இனி. நீங்கள் மேப் பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் IP அட்ரஸ், போன் நம்பர், ஏரியா code இதன் மூலம் தோராயமாக வைத்திருக்கும்.
வாட்ஸ் அப் சிறப்பே, நாம், மற்றவருக்கு அனுப்பும் செய்தி மற்றும் callகள் ரெண்டுமே encrypt செய்யப்பட்ட வடிவில் செல்லும். அனுப்புநர், பெறுநர் இருவரைத் தவிர வேறு யாராலும் படிக்க முடியாது - வாட்ஸ் அப் நிறுவனத்தால் கூட என்பது தான். இதில் இருந்து தான் இப்போது ஜகா வாங்கியிருக்கிறது.
ஃபார்வர்ட் செய்யப்படும் தகவல்கள் கூட, வாட்சப் சர்வரில் encrypted வடிவில் இருக்கும். அந்தத் தகவல் வேறெங்கும் யாராவது பகிர்ந்தால் நாங்கள் செக் செய்துக்கொள்ள முடியும் என, காரணம் சொல்கிறது வாட்சப்.

இது தவிர, டெலிவரி ஆகாத மெஸேஜ்கள் வாட்சப் சர்வரில் முப்பது நாள் வரை சேமிக்கப்பட்டிருக்கும். இதுவும் தவிர நமது போன் கன்டாக்டில் இருக்கும் நம்பர்களையும் வாட்சப் உபயோகித்துக் கொள்ளும். சம்பந்தப்பட்ட நபர் வாட்சப் உபயோகிப்பவராக இல்லாத பட்சத்தில், அந்த எண்ணை எடுத்துக்கொள்ளாது.
பண பரிவர்த்தனை சேவையையும் வாட்சப் செய்து வருவதால், அது தொடர்பான அக்கவுண்ட் இன்பர்மேஷன், பரிவர்த்தனை தகவல்கள், பரிவர்த்தனை முடிக்க தேவையான மற்ற விஷயங்கள், எந்த முறையில் பரிவர்த்தனை செய்கிறீர்கள், எவ்வளவுக்கு செய்கிறீர்கள், ஷிப்மெண்ட் முறை போன்ற தகவல்களையும் வாட்சப் சேமித்து வைத்துக்கொள்ளும்.
இது தவிர உங்களது வாட்சப் முகப்புப்படம், க்ரூப் பெயர், க்ரூப் படம், ஆன்லைனில் இருக்கிறீர்களா, கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் (last seen) என எல்லாவற்றையும் வாட்சப் எடுக்கலாம். இது தவிர, நீங்கள் என்ன Device பயன்படுத்துகிறீர்கள், என்ன மாடல், என்ன மாதிரியான OS, பாட்டரி லெவல் என்ன, IP முகவரி, Time Zone, சிக்னல் strength, Browser பற்றிய தகவல்களும் வாட்சப் track செய்யும்.
பேஸ்புக் நிறுவனம் வாட்சப்பை வாங்கியதற்கு பின்னர், நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்க கூடும்.
உங்கள் மனைவி, 'என்னங்க ரெண்டு கிலோ வெங்காயம் வாங்கி வாங்க' என வாட்ஸ் அப் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால் ஃபேஸ்புக்கில் நீங்கள், போராளி மோடில் போஸ்ட் செய்ய ஓபன் செய்யும்போது, வரிசையாக வெங்காயம் பிக்பாஸ்கெட்டில் 40 ரூபாய் என விளம்பரங்கள் காட்டும்.
'தெய்வமே! நல்லவேளை, ஞாபகப்படுத்தினியே' என வாங்கியிருப்பீர்கள்.
அதற்கு காரணம், வாட்சப் தன்னுடைய தகவல்களை ஃபேஸ்புக்கிடம் பகிர்வது தான். முன்பு சொல்லாமல் செய்ததை, இப்போது, சொல்லிவிட்டே செய்கிறது என்றும் கொள்ளலாம்.
இப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அவர்களது நிறுவனங்களோடு மட்டுமல்லாது, அவர்களோடு tie upபில் இருக்கும் பிற நிறுவனங்களுடனும் ஷேர் செய்யவிருக்கிறது வாட்சப்.
ஏற்கெனவே மொபைல் எண்களை கூட பார்க்க முடியாத அளவு டெலிகிராம் போன்ற செயலிகளில் வசதி இருக்கிறது.இது தவிர, நாம் ஒருவருக்கு அனுப்பிய தகவல்களை எப்போது வேண்டுமானாலும் முற்று முழுதாக அழித்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது.
வாட்சப்போ இந்த முறை, 'இதற்கெல்லாம் பிப்ரவரி எட்டுக்குள் ஓகே சொல்லுங்க இல்லன்னா உங்க அக்கவுண்ட் டெலிட் செஞ்சுட்டு போங்க' என்கிறது. டெலிகிராம் போன்ற செயலிகள் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில் வாட்சப் இதன் மூலம் கணிசமான வாடிக்கையாளர்களை இழக்கும் என்பதும் நிச்சயம்.
பொதுவாக ஸ்மார்ட் போன் இருந்தாலே நம்மை பற்றிய எந்த தகவல்களும் நமக்கு சொந்தமில்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; என்ன தான் பார்த்து பார்த்து அனுமதி தந்தாலும். அப்படி இருக்க, இது மாதிரியான சாட் செயலிகளில் இப்பட்டிப்பட்ட அனுமதி கொடுப்பது என்பது, காதலியுடனான தனிமை உரையாடலில் மூன்றாம் நபர் பக்கத்திலே அமர்ந்து உற்றுப்பார்ப்பது போல, கொஞ்சம் அசௌகரியமான விஷயம் தான்.
'வாட்ஸ் அப் மாதிரி வராதுப்பா; என் எல்லா கான்டாக்டும், பிசினசும் அதில் தான்' என்பவர்கள் தொடரலாம். 'Convey பண்றதுக்கு ஒரு செயலி அவ்வளவு தான்' என்பவர்களுக்கு, இந்திய செயலிகளான ஹைக், டெலிகிராம் இன்னும் பல செயலிகள் இருக்கத்தான் செய்கின்றன.
இல்லையா...? வழக்கம் போல, 'அதான் எட்டாம் தேதி வரை டைம் இருக்கில்ல; அதுவரைக்கும் தள்ளிப்போடுவோம்'னு ஃப்ரியா விடுங்க..
முடிந்தவரை அவசர அவசரமாக இந்த மாற்றங்களுக்கு ஓகே கொடுத்து உடன்படாமல், ஃபிப்ரவரி ஏழாம் தேதி வரையுமாவது நிதானியுங்கள்.
- க.ஸ்ரீப்ரியா -
     
நண்பர்கள் விழிப்போடு இருக்கும்படி கேட்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

மீண்டும் சந்திப்போம்  
              

2 comments:

 1. நான் அக்ரீ என்று தொட்டு விட்ட நிலையில் என் உறவுகளில் பலர் சிக்னல் ஆப்புக்கு மாறி வருகிறார்கள்.  நான் என்ன செய்ய என்று இன்னும் முடியெடுக்கவில்லை.  அதற்குள் வாட்சாப் தன் முடிவில் ஏதாவது மாறுதல் செய்யுமா என்று பார்க்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய பழைய செல்போன் வாட்சப் வீடியோ கால் குளறுபடியால் என்னமோ ஆகிவிட்டது ஸ்ரீராம்! புது போனுக்கு மாறியதில் வாட்சப் ஆப்பையே தேர்ந்தெடுக்கவில்லை.

   பிரச்சினை நம்முடைய ரகசியங்கள் பறிபோவது என்பது மட்டுமில்லை நம்முடைய தொடர்புகள் அவர்களை வைத்து அவர்களுடைய தொடர்புகள் என்று தொடர்ச்சியாக மல்டிலெவல் மார்கெட்டிங் மாதிரி இருப்பது இங்கே பெரும்பாலானோருக்குப் புரியாமல் இருப்பது தான்.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!