அருண் ஷூரி! ராம் ஜேத்மலானி! அப்புறம் ஆடிட்டர் குருமூர்த்தி!

தலைப்பில் வரிசைப்படுத்திய மாதிரியே  ஞாபகப் படுத்திக் கொள்ள முடியுமானால், நிச்சயம் அரசியலில் நீங்கள் கில்லிதான்! சந்தேகமே இல்லை! ஆனால் ஆசைப் படுகிற மாதிரியெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? இங்கே வரலாறு என்பது வெறும் புனைவுகளால் ஆனது என்று சில இடதுசாரி அறிவுசீவிகள் சொல்லக் கேட்டது உண்டு ஆனால் வரலாறு என்பது ஜனங்களுடைய மறதியின் மீது கட்டி எழுப்பப்படுவது என்பது மட்டும்தான் இங்கே இந்திய அனுபவமாக இருக்கிறது.


அருண் ஷூரி! யாரென்று நினைவுபடுத்திக் கொள்ளக் கஷ்டமாக இருந்தால் எட்டுநாட்களுக்கு முன் ஆடிட்டர் குருமூர்த்தி, துக்ளக் ஆண்டுவிழாவில், தீயை அணைக்க கங்காஜலத்துக்காகக் காத்திருக்க முடியுமா? சாக்கடை நீரானாலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னதாக அவருடைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நண்பர் ஒருவரைக் குறிப்பிட்டாரே, அவர்தான்! அவரே தான் மேலே ஹிந்து நாளிதழின் சித்தார்த் வரதராஜன் நடத்துகிற The Wire தளத்தில் கரண் தாப்பருடன் ஒரு நேர்காணலில் உரையாடுகிறார். வீடியோ 27 நிமிடம் தான்! கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு பார்த்து விடுங்களேன்! 

வாஜ்பாய் காலத்தில் அவரது அமைச்சரவையில் அருண் ஷூரி இருந்தார் என்பதில் வாஜ்பாயோ பிஜேபியோ பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லை! முரசொலி மாறனும் ராம்ஜேத்மலானியும் கூடத்தான் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தார்கள்! பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவா அதை பார்க்க முடிகிறது? கோபுரத்தில் இருக்கும் பொம்மைகள் தாங்கள் தான் கோபுரத்தையே தாங்குவதாக  நினைத்துக் கொள்வதுபோல, அருண் ஷூரி போன்றவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதில் காணாமலும் போனார்கள்!!

ராம்ஜேத்மலானி மிகவும் பெயர் போன வக்கீல் தான்! இந்திராவை, ராஜீவ் காந்தியைக் கடுமையாக விமரிசனம் செய்தவர் தான்! அதெல்லாம் யாருக்காவது நினைவிருக்கிறதா? 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் கனிமொழி திஹார் சிறைக்குப்போனபோது, அவருடைய வழாக்கறிஞராக வாதாட கருணாநிதியால் அழைக்கப்பட்டவர் ராம்ஜேத்மலானி என்பதுதானே உடனடியாக நினைவுக்கு வருகிறது!

https://scroll.in/ தளத்தில் அருண் ஷூரியைப் பற்றி, சரியாக நான்கு வருடங்களுக்கு முன்னால், Why we must all be wary of Arun Shourie when he attacks Narendra Modi next என்று தலைப்பிட்டு வாருவாரென்று வாரியிருந்ததைப் படிக்க இங்கே. அருண் ஷூரியின் நாக்கு, பேனா எல்லாமே இரட்டை தான் என்கிற சலிப்பு இன்றைக்கும் பொருந்துவதாகத்தான் இருக்கிறது!!

அருண் ஷூரி  இந்த நேர்காணலில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தன்னையறியாமலேயே ஒப்புக் கொண்டு இருக்கிறார். விவசாயிகள் போராட்டம் என்று பஞ்சாப் விவசாயிகள் மட்டும் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடியோ அவரது அரசோ பஞ்சாபிகளைக் குறைத்து மதிப்பிடவோ, தேச விரோதிகள் என்றோ சொல்லவில்லை. பதினோரு சுற்று பேச்சுவார்த்தை நடத்திஇருக்கிறார்கள். எதற்கும் ஒத்து வராத நிலையில் இனிமேல் அரசே முன்வந்து பேச்சு வார்த்தைக்கு அழைக்காது என்று தான் சொல்லி இருக்கிறார்களே தவிர, பேச்சுவார்த்தையே கிடையாது என்று கதவை முழுதும் அடைக்கவில்லை. உண்மையில் இந்திரா காண்டி போல பிந்தரன்வாலாக்களை வளர்த்து விடாமல் மிகவும் கவனமாக சீக்கியர்களுடைய உணர்வு புண்பட்டுவிடாமல் கவனமாகக் கையாளுகிறார்கள் என்று தான் படுகிறது. 


இது அந்தநாட்களில் ராம் ஜேத்மலானி எழுதிய புத்தகம். 176 பக்கங்களில் அன்றைய தலைமை நீதிபதியையும், அட்டர்னி ஜெனெரல் சோப்ராஜியையும் கடுமையாக விமரிசித்து எழுதப்பட்டதாக நினைவு. எழுதியவருக்கும் அருண் ஷூரிக்கும் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று எனக்குப்படுகிறது..

அப்புறம் ஆடிட்டர் குருமூர்த்தி .....!  

சாக்கடையாக இருந்தாலும் பரவாயில்லை, திமுகவைத் தோற்கடிக்க சசிகலாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அருண் ஷூரி எந்தக்காலத்திலோ சொன்னதைத் தொட்டுச் சொன்னது நேரெதிராக முடிந்திருக்கிறது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற கதையாக, டில்லியில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர், உள்துறை அமைச்சர் இருவரையும் சந்தித்தபிறகு சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வது 100% சாத்தியமே இல்லாதது என்று பேட்டியளித்திருக்கிறார். குருமூர்த்தியை இப்படி எல்லோருமாகச் சேர்ந்து தனியாகப் புலம்ப விட்டு விட்டார்களே என்று பரிதாபமாகத்தான் இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.                   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!