#வெள்ளிக்கிழமைப்பரிதாபங்கள் ராகுல் காண்டிக்கு முட்டுக் கொடுக்கும் சிவசேனா!

வாழ்க்கை ஒரு வட்டமோஇல்லையோ, இந்திய அரசியல் ஒரு வட்டம் தான் போல! கீழே இருப்பது மேலே வருவதும் மேலே இருந்தது கீழே போவதும் அந்த வட்டம் சக்கரம் போல சுழன்றால் நடப்பதுதான்! சிவசேனா கதியும் கூட வெகுசீக்கிரமே அதலபாதாளத்துக்கு வந்துவிடலாம்! அந்த பயம் வந்துவிட்டதாலோ என்னவோ சிவசேனா இப்போது ராகுல் காண்டியைக் குளிர்விக்க என்னென்னவோ செய்து பார்க்கிறது. முதலில் அந்தக் கூத்தைப் பார்த்துவிடலாம்! 


ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுவதாலேயே அவரது குடும்பத்தைப் பற்றி இழிவுபடுத்தும் பிரச்சாரங்களை டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. (இப்படி திடீர்க் கரிசனம் சிவசேனாவுக்கு வருவானேன்?) 

அடுத்த மாத அவுரங்காபாத் மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் தோழமைக் கட்சிகளான சேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே அந்த நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், மத்திய அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு மோடி அரசாங்கத்திற்கு வலிமையான மாற்றாக எதிர்த்து நிற்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.

அடிக்கடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை புகழும் சிவசேனாவின் பத்திரிக்கையான 'சாம்னா' பத்திரிகை ராகுல் காந்தியை ஒரு போர் வீரன் என இம்முறை பாராட்டியுள்ளது.

இதுகுறித்து இன்று வெளியான சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் கூறபட்டுள்ளதாவது: "டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் ராகுல் காந்திக்கு அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை. அவ்வாறு இல்லாதிருந்தால், ராகுல் காந்தி குடும்பத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரங்களை பாஜகவினர் மேற்கொள்ள மாட்டார்கள். ஒருவன் சர்வாதிகாரியாக இருந்தாலும் தனக்கு எதிராக ஒரே ஒரு மனிதன் இருந்தாலும் அவனைக் கண்டு அஞ்சுகிறான். இந்த தனி வீரன் நேர்மையானவனாக இருந்தால், அந்த பயம் மேலும் நூறு மடங்கு அதிகரிக்கிறது. டெல்லி ஆட்சியாளர்களின் ராகுல் காந்தி குறித்த அச்சம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது ஒரு நல்ல விஷயம். நரேந்திர மோடியைத் தவிர பாஜகவுக்கு வேறு மாற்று இல்லை என்பதையும், ராகுல் காந்தியைத் தவிர காங்கிரஸு க்கு வேறு மாற்று இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி ஒரு பலவீனமான தலைவர் என்று பிரச்சாரம் செய்த போதிலும், அவர் இன்னும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை ஒரு போர்வீரனைப் போல அஞ்சாமல் எதிர்த்து நின்று தாக்குகிறார். இந்த எதிர்க்கட்சி, ஒரு கட்டத்தில், பீனிக்ஸ் போன்ற சாம்பலிலிருந்து கிளம்பிவரும். 

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளதாக நேற்றைய இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி சொல்கிறது. 

இதெல்லாம் ஓட்டுப் பொறுக்குவதற்காக சிவசேனா அடிக்கும் குட்டிக்கரணங்கள் மட்டுமே என்பதைத் தனியாக விளக்கிச் சொல்ல வேண்டாம் இல்லையா?

எனவே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஓவைசியின் கட்சி என்று எல்லோரும் ‘பெயர் மாற்றம் கூடாது,’ என்று உத்தவ் தாக்கரேயை மிரட்டி வருகின்றனர். போதாக்குறைக்கு உபியின் சமாஜ்வாதி கட்சியும் ஜோதியில் கலந்திருக்கிறார்கள். தந்தையின் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார் உத்தவ் தாக்கரே.
பெயரை மாற்றினால், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிடும். மாற்றாவிட்டால், சிவசேனா மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்க முடியாது. ஆகவே, பெட்ரோமாக்ஸ் லைட் வேண்டாம்; ஒரு சிம்னி விளக்காவது கொடு என்பது மாதிரி விமானநிலையத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார் உத்தவ்.
பாஜக ஜாலியாக சிவசேனா படுகிற பாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இத்தனை களேபரத்திலும் ஒரு கை தேர்ந்த அரசியல் ராட்சசன் மூச்சுவிடாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அது சரத் பவார். எது நடந்தாலும் சரி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிக்குத்தான் மரண அடி விழும் என்பதால், வார்த்தைகளை அளந்து பேசி, நாடகத்தைக் கச்சிதமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அனேகமாக, அடுத்த மகாராஷ்ட்ரா தேர்தலில் முக்கியமான போட்டி என்பது பாஜக மற்றும் சரத்பவாரின் கட்சிக்கு இடையிலே மட்டுமே இருக்கக்கூடும். காங்கிரஸ், சிவசேனா இருவருமே தற்போது…. ‘உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டே…” தான்.    இப்படியாக இந்த விவகாரத்தின் உள்வயணங்களை மிக விரிவாக முகநூலில் ரசித்து எழுதியிருக்கிறார் சேட்டைக் காரன் பதிவர் வேணுகோபாலன். முழுதாய்ப்படிக்க இங்கே

எப்படியோ அரசியல் ஒவ்வொருவரையும், அரசியல் கட்சிகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது ஏனென்று புரிகிறதா? #ஆடுறதும்கூவுவதும்காசுக்கு

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. சிவசேனா தன் அடையாளத்தை இழந்துவிடும், காங்கிரஸை தொடர்ந்து ஆதரித்தால். காரணம் சிவசேனாவின் அடித்தளம் இந்து மற்றும் மராத்தா ஆதரவு. பாஜகவை எதிர்த்தால் அதன் அடித்தளத்திற்கு பங்கம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. சிவசேனா மட்டுமல்ல, மாநிலக்கட்சிகள் அத்தனைக்குமான தேவை அவசியம் நீண்டகாலத்துக்கு முன்னாலேயே முடிந்துவிட்டது என்பது என்னுடைய திடமான கருத்து நெ.த சார்!

      பாழடைந்த கட்டடத்தை சிலந்திவலையும் ஒட்டடையும் தாங்கிப்பிடிக்கிற மாதிரி இந்த மாநில உதிரிக்கட்சிகள் பெரும்பாலும் நீடிக்கவே தகுதியற்றவை. உதிரிக் கட்சிகளை முற்றிலும் நிராகரிக்கவேண்டிடும் என்பதை நீண்டநாட்களாகவே பதிவுகளில் வலியுறுத்தி வருகிறேன்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!