சண்டேன்னா மூணு! #அரசியல் #ரஜனி #தந்திடிவி

தமிழக அரசியல் களம் இன்னமும் சூடேறவில்லை என்பதை இங்கே பலமுறை சொல்லிவந்திருக்கிறேன். அதுவும் போக இங்கே அதிமுக அரசு'பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வருகிற போதிலும்  அரசுக்கெதிரான எந்த ஒரு அதிருப்தி அலையும் காணோம்! கோடிக்கணக்கில் செலவு செய்து இசுடாலினை முன்னிறுத்தி எல்லா இடங்களிலும் தேர்தல் விளம்பரம், பரப்புரை என்று திமுக மாதக்கணக்கில் தம்பட்டம் அடித்து வருவதிலும் கூட  இசுடாலினுக்கு ஆதரவு அலை ஜெயிக்கிற அளவுக்கு எங்கேயும் காணோம் என்பது இப்போதைய கள நிலவரம். இரண்டு அணிகளும் கூட்டணியை முடிவு செய்து போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்களை அறிவிக்கிற வரை அரசியல் களத்தில் எந்தவொரு பரபரப்பும் இருக்காதென்பதை, வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் ஊடகங்கள் கூடக் கொஞ்சம் அடக்கி வாசிப்பதற்கு அதிமுக தரும் விளம்பரங்கள் காரணமாக இருக்கலாம்!


இது இன்றைக்கு தந்திடிவியில் ஒளிபரப்பான ஆயுத நிகழ்ச்சி! அரசியலுக்கு வரமாட்டேன் மன்னித்து விடுங்கள் என்று வீட்டுக்குள் பதுங்கிவிட்ட ரஜனியை, #தலைவா_வா என்றழைத்து ரசிகர்கள் ஆங்காங்கே நடத்திய போராட்டம், அல்லது அழுவாச்சி காவியத்தை வைத்து நிகழ்ச்சி நடத்துகிற அளவுக்குத்தான், அரசியல் களம் சூடு பிடிக்காமலேயே இன்னும் இருக்கிறது.

இந்த 46 நிமிட விவாதத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், வராமல் ஓடிப்போன ரஜனிகாந்தைப் பற்றி தந்திடிவி ஒரு உள்நோக்கத்துடனேயே இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியிருக்கிறது. #தலைவா_வா என்று கூவுகிறவர்கள் ரஜனியின் அரசியல் வருகையில் ஆதாயத்தை எதிர்பார்த்துச் செலவு செய்தவர்கள் என்பதை நெறியாளர் ஹரிஹரன் வெளிப்ப்டையாகவே கேள்வி எழுப்புகிறார்.. அந்த வகையில் ரஜனியைப் பங்ச்சர் செய்த மாதிரியும் ஆயிற்று , திமுகவைத் திருப்தி செய்வது போலவும் ஆயிற்று.

ரஜனிகாந்த் தன்னுடைய தலைவிதியை நொந்து கொண்டு சும்மா இருக்கவேண்டியதுதான்! இனிமேல் வாய்ஸ் கொடுத்தாலும் இதற்கு மேலும் அவமானப் பட வேண்டியதுதான்! வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை  சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும்!

இதனால் ரஜனியை மலைபோல பிஜேபி நம்பி இருந்த மாதிரி, மலை காணாமல் போனதால் அதிமுக பொதுக் குழுவில் கேபி முனுசாமி அதிமுகவோ திமுகவோ தேசியக் கட்சிகளை நம்பி இல்லை என்று மீண்டும் சீண்டிப் பார்க்கிற மாதிரிப்  பேசியதில், வாய்ச்சவடால் தெரிகிறது, அவ்வளவுதான்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகிற வரை அதிமுகவால் பிஜேபிக்கு எந்தப் பிரயோசனமுமில்லை கழற்றி விடப் படுமேயானால் திமுக எளிதாக ஜெயித்து விடமுடியும் என்பது கூடப்புரியாமல் கேபி முனுசாமிகள் பேசலாம்! எடப்பாடி தரப்புக்கு அது புரிந்திருக்கிறதா இல்லையா என்பதில் பிஜேபி கூட்டணியில் அதிமுக நீடிக்குமா என்பதற்கான விடையும் இருக்கிறது.

இந்த விடுகதையையில்  முதலில் விடுபடப் போவது பாமக தானா என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய வேடிக்கை! 

மீணடும் சந்திப்போம் 

             

6 comments:

 1. நானென்னவோ, அதிமுகவுக்கு பாஜக பெரும் சுமை, 10% ஓட்டிழப்புக்கு பாஜக காரணமாகிவிடும் என்றே நம்புகிறேன். பாஜகவுக்கு இன்னும் 2 சதவிகித வாக்குகள்கூட தமிழகத்தில்்இல்லை, அதைச் சேர்த்துக்கொள்பவர்கள் 10% சிறுபான்மையினர் வாக்கிழப்புக்குத் தயாராக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

  நீங்க என்னடான்னா பாஜக கூட்டணி என்று எழுதறீங்க. இது, என்னை நம்பி அதிமுக இருக்கிறது என நான் சொல்வதைப் போன்றது.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நெ.த.சார்!

   மேம்போக்காகப் பார்க்கையில் நீங்கள் சொல்வது சரியாக இருப்பதுபோலத்தான் தோன்றும்! ஆனால் எம்ஜியார் சூடுபட்டுக் கற்றுக் கொண்ட பாடத்தை, இன்றைக்கு எம்ஜியார் ஆரம்பித்த கட்சியினரே மறந்துவிட்டதைப் போல, நீங்களும் இந்திராவுடன் எம்ஜியார் பட்டுத் தெரிந்து கொண்ட அனுபவத்தை மறந்துவிட்டீர்களா என்ன?

   என்னதான் மாநிலத்தில் தனிச் செல்வாக்கு இருந்தாலும் மத்தியில் ஆளுகிற கட்சியை அனுசரித்துப் போகாமல் பப்பு வேகாது என்பதை எம்ஜியாருக்கு இந்திரா ஆட்சியைக்களைத்துப் பாடம் சொல்லிக் கொடுத்தார். அன்று அவர் கொடுத்த இடமே, மாநிலத்தில் சட்டசபையில் அதிக இடங்களை இந்திரா காங்கிரஸ் கேட்காது. பதிலுக்கு நாடாளுமன்றத் தேர்தல்களில் மூன்றில் இரண்டுபங்குக்கு குறையாமல் இந்திரா கட்சிக்கு கொடுத்து விட வேண்டும் என்கிற formula உருவானதற்கு காரணம் அந்த வகையில் எம்ஜியார், கருணாநிதிக்கே இந்த ,சொல்லிக் கொடுத்த ஆசான்!

   பிஜேபி கதை வேறு! இந்திரா காங்கிரஸ் மாதிரி, கேபி முனுசாமி சவடால் பேசுகிற மாதிரி, அதிமுக மீது சவாரி செய்கிற முடவர்கள் கட்சி அல்ல! நந்தி மாதிரி வழியை மறிக்கிற கழகங்களை, நயமாகச் சொல்லி வழி விடச் சொல்வதோடு நிற்காமல், அப்படி வழி விடாமல் கழகங்கள் மறித்தால், அதை உடைப்பதற்குத் தயங்குவதுமில்லை என்பதைப் பிற மாநில அனுபவங்கள் காட்டுகின்றன.

   தமிழிசை காலத்து பிஜேபி அல்ல இப்போதிருப்பது என்பதைக் கொஞ்சம் மனதில் வைத்துக் கொண்டு என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போமே! தமிழக பிஜேபி முற்றிலும் மாறிவிட்டது, பலவீனங்களே இல்லை என்று நான் நினைக்கவில்லை என்பது வேறு விஷயம்!

   Delete
 2. எனக்கும் நெல்லையில் கருத்துதான். ஆனால் பத்து சதவிகித அளவுக்கு இழப்பு இருக்கும் என்கிற அளவுக்கு தோன்றவில்லை!  ஆனால் வரும் தேர்தல் பெரிய கவர்ச்சி அலை, அனுதாப அலை, ஜெ, கருணா போன்ற ஆளுமைகள் இன்றி சாதாரணமாக இருக்கும்நிலையில் கணிக்க முடியாத அளவில் இருக்கும்  என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. மேலே நெல்லைத்தமிழனுக்கு என் மனதில் படுவதை விரிவாகச் சொல்லிவிட்டேன் ஸ்ரீராம்!

   இங்கே ஜெயிக்கிற தரப்புக்கும் தோற்கிற தரப்புக்கும் 3% --5% வாக்கு வித்தியாசமிருந்தாலே அதிசயம்! பல தொகுதிகளில் வாக்குவித்தியாசம் 1000-2000 ரேஞ்சில் தானிருக்கிறது. இதில் அதிமுகவுக்குத் தனிப்பட்ட வாக்குவங்கி அதிகம் திமுக உதிரிக்கட்சிகளோடு கூட்டுவைத்து அதை ஈடு செய்வது போலத் தோன்றினாலும் கள்ள ஒட்டுப் போடுவதில் திமுக கில்லாடிகள் என்பதை மறுக்க முடியாது..

   Winner takes all என்கிற பிரிட்டிஷ் தேர்தல் முறையில் ஒரே ஒரு ஓட்டுக் கூடுதலாக வாங்குகிறவரே ஜெயித்தவர் என்பதை மறக்கலாகுமா?

   Delete
 3. எனக்கு அதிமுகவுக்கு பிஜேபி யை சேர்த்தால் 10% ஓட்டு இழப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. எப்படியும் சிறுபான்மையினர் ஓட்டு அதிமுகவுக்கு கிடையாது. ஒவைசி வந்தால் திமுகவுக்கு பெரிய ஆபத்து. பிஜேபியினால் யாருக்கும் எந்த லாபமும் கிடையாது. அதிமுகவுக்கு ஆபத்தும் இல்லை என நினைக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பந்து! ஒவைசியின் வருகையால் விளைந்திருக்கிற ஒரே நன்மை இங்கே pseudo seculars முகத்திரையைக் கிழித்ததுதான்! சிறுபான்மைக்காவலர்களாக இதுவரை நடித்துவந்தவர்களால் சிறுபான்மையினருக்கு எந்தநன்மையுமே கிடைக்கவில்லை என்பதும் அம்பலப்பட்டு நிற்பதும் தான்!


   ஒவைசி திமுக கூட்டணிக்குள் வரவில்லை ஆனால் அவர் தன்னை அகில இந்திய அளவில் இஸ்லாமியர்களுக்கான ஒரே கட்சி என்று காட்டிக் கொள்வதற்காக, தமிழகத் தேர்தல்களிலும் போட்டியிடுவார்! திமுக அவர் விஷயத்தில் அந்தர்பல்டியடித்ததற்கு, இங்குள்ள IUML, ஜவாஹிருல்லா போன்ற லெட்டர்பேட் கட்சிகள், இங்கே உருது பேசும் இஸ்லாமியர் அதிகம் கிடையாதே, ஒவைசி கட்சி எதற்கு என்று குதித்ததும் ஒரு காரணம்!

   ஆனால் ஒவைசி கட்சி கமல்காசருடைய மய்யம், சீமானுடைய நாம் தமிழர் கட்சிகளோடு களம் இறங்குவதற்குத் தடை இருக்கிறதா?

   தமிழகத்தில் பிஜேபியினரால் வாக்குகள் ரீதியாகப் பெரிய உபயோகம் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் அவர்களால் எந்தவொரு கழகத்துக்கும் பலத்த சேதாரத்தை அரசியல் ரீதியாக ஏற்படுத்த முடியும்.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!