#கூட்டணிதர்மம் காத்துல பறக்குமோ? கொஞ்சம் அரசியல்! திக்...திக்..காமெடிகள்!

தமிழக அரசியலில் எதற்குப் பஞ்சமோ இல்லையோ, கூட்டணிக் குழப்பங்களே பெரிய காமெடியாக இருப்பதற்கு ஒரு குறைச்சலும் இருந்ததில்லை. இரண்டு கழகங்கங்களுமே ஒன்றுக்கொன்று இந்த விஷயத்தில் சளைத்தவை அல்ல. சீரியசான அரசியல், அரசு விஷயங்கள் கூடக் கழகங்களால் பெரும் காமெடி ஆக்கப்பட்டதும், கழக முன்னோடிகள் என்போர் காமெடிப்பீஸ்களாகி நின்றதும்தான் திராவிட அரசியல் வரலாறு என்பதை இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்குத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா? 


இந்த 27 நிமிட நேர்காணலை நடத்தும் ரெட் பிக்சின் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதோ நிகழ்ச்சியில் பங்குகொண்ட சவுக்கு சங்கர் மீதோ எனக்கு சொல்லிக் கொள்கிற மாதிரியான அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும் இந்த நேர்காணலை இங்கே பகிர்வதற்கு ஒரே காரணம், என்னதான் ஜெயிக்கிற குதிரை மாதிரி திமுக தன்னைக் காட்டிக் கொண்டாலும், உண்மை நிலவரம் அப்படியில்லை என்பதைத் தோலுரித்துக் காட்டுகிற நேர்காணலாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட மட்டுமே.

திமுக 200 தொகுதிகளில் போட்டியிடும் என்கிற மாதிரி வதந்திகள் திமுகவினராலேயே பரப்பப்பட்டவை தான் என்பதில் சந்தேகம் இருக்கிறதா? மாநிலத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், இன்னபிற உதிரிகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணியில் இருந்தவைதான்! இப்படி உதி!ரிகளோடு கூட்டணி வைக்காமல் திமுக எந்தத்தேர்தலிலும் போட்டியிட்ட்டதே இல்லை சமீபகாலங்களில், உதிரிகளுக்கு சீட்டும் கொடுத்து, செலவுக்குப் பணமும் கோடிகளில் கொட்டி அழுத கட்சியும் கூட திமுக தான்! (அதிமுக மட்டும் யோக்கியமா என்ன? இல்லையே! அந்தக்கூத்தை அப்புறம் பார்ப்போம்) 

200 தொகுதிகளில் திமுக என்றால் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் என்று அர்த்தம். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள உதிரிகளுக்கு வேறு விதமான நெருக்கடி! ஒரு அரசியல் கட்சியாக, களத்தில் நீடிப்பதற்கு, அவை தனிச்சின்னத்தில் நின்று குறைந்த பட்ச வாக்குகள், சீட்டுகளைப் பெற்றாக வேண்டும் என்பதிலேயே திமுகவின் #கூட்டணிதர்மம்  2021 சட்டசபைத் தேர்தல்களில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சோதனைக்கு ஆளாகிற நிலைமை! வைகோ தனிச்சின்னத்தில் தான் போட்டி என்று ஆரம்பித்து வைக்க அதுவே எங்கள் வழியும் என்று திருமாவளவனும் அறிவித்துவிட்டார். CPIயின் முத்தரசன் ரஜனியிடம் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்போம் என்று நிகழ்நேரக் காமெடி செய்திருந்தாலும், இன்னொரு முறை இரண்டு கழகங்களாலும் சீந்தப்படாத உதிரிகள் எல்லாம் சேர்ந்து #மக்கள்நலக்கூட்டணி என்று ஆரம்பிக்கிற வாய்ப்பு நிஜமாகிவிடாமல் இருக்க திமுக 150-160 தொகுதிகளுக்குள்ளாக்கத் தனது இடங்களைக் குறுக்கிக் கொண்டே ஆகவேண்டிய நிலைமை இருப்பதாகவே எனக்குப் படுகிறது. காங்கிரஸ் என்னமாதிரி பேரம், திரைமறைவு காய்நகர்த்தல்களைச் செய்யப்போகிறது என்பது ஊகத்துக்கு அப்பாற்பட்ட விஷயம்! கருணாநிதி காலத்தில் கையை முறுக்கி 63 சீட்டுகள் பெற்றமாதிரி இன்றைக்கு கனவுகூடக்காணமுடியாது. முந்தைய காலங்களில் பெற்ற 41 சீட்டும் சந்தேகமே! ஆனால் 30 சீட்டுகளுக்கும் கீழ் குறைக்க முடியாதபடி, தமிழ்நாடு சோனியா காங்கிரசுக்கு சுமார் 600 நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்களே! கமல் காசரைக் காட்டி சும்மா வேண்டுமானால் மிரட்டலாம்!

அதிமுகவின் கூட்டணிக்கு கதையில், பண உதவி ஒரு பிரமாதமான விஷயமே இல்லை அவரவர் சின்னத்தில் போட்டியிடத் தடையுமில்லை. சீட்டுகளில் பிடிவாதம் பிடிக்கிற கட்சிகளை உதறவும் தயங்குவதில்லை. இந்த முறை பாமகவுக்கு, அவர்கள் விதிக்கிற நிபந்தனைகள், கேட்கிற சீட்டுகளால் அப்படி உதறப்படுகிற நிலைமை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்படி பாமக வெளியேறினால், திமுக அரவணைக்கத் தயாராகவே இருக்கும்! தயாநிதி மாறன் உசுப்பிவிடுகிற மாதிரிப் பேசியதையோ பேசி வாங்கிக்கட்டிக் கொண்டதையோ திமுகவின் தலைமை கண்டுகொள்ளாமல் விட்டதே ஒரு அடையாளம். அதனால் திமுகவின் தற்போதைய கூட்டாளிகள் சிலர் வெளியேறுவதும் இயல்பே

தேதிமுக மிகவும் முன்னெச்சரிக்கையாகத் தாங்கள் அதிமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக துண்டு போட்டு வைத்து விட்டது. 

#கூட்டணிதர்மம் என ஒன்று உண்மையிலேயே இருந்தது கிடையாது.(அப்படி இருந்ததாக நம்புகிறவர்கள் இன்னும் வாஜ்பாய் காலத்தைய mindset இல் இருப்பவர்கள்) கூட்டு சேர்வது தேர்தல் காலத்து நிர்பந்தம் என்பதைத் தாண்டி ஏதோ காலத்துக்கும் தொடர்கிற லட்சியக்கூட்டணி என்பதெல்லாம் சும்மா சொல்லிக்கொள்வதுதான்! எல்லாமே இங்கு காசுக்காக நடக்கிற கூத்தே அன்றி வேறெதுவும் இல்லை. 

மீண்டும் சந்திப்போம்    

                                        

       

2 comments:

  1. அதிமுகவில் ஜனவரி 27 க்குப் பின் என்னென்ன சலசலப்புகள் தோன்றுமோ...

    ReplyDelete
    Replies
    1. அதிமுகவில் சலசலப்பு வேறு ரகம் ஸ்ரீராம்! எடப்பாடி -OPS இருவருக்குள் நடக்கும் நீயா நானா ரகம்! பன்னீர்செல்வம் பிஜேபியின் முழு சப்போர்ட்டும் தனக்கே இருப்பதாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறார். எடப்பாடி தற்போதைக்கு அந்த விஷயத்தைச் சீண்டிப் பார்க்காத தயாராக இல்லாத மாதிரித் தான் தெரிகிறது. இருவரும் தங்களுடைய ஆத்தரவாளர்களுக்கு சீட் கொடுப்பதில், அனேகமாக ஒரு சமரசம் வந்துவிடலாம்.

      ஆனால் , அதிமுகவின் உள்விவகாரம் கூட்டணிக்கு கட்சிகளைப் பாதிக்குமா?பாமக பிஜேபி இருகட்சிகளும் அதிக சீட் கேட்டு முரண்டு பிடித்தால் அதிமுக அதை எப்படிக் கையாளும் என்பதில் நிறைய சுவாரசியமான ஊகங்கள் இருக்கின்றன. போன தேர்தலில் தேதிமுகவுக்கு அதனுடைய இடம் என்னவென்பதைக் காட்டிய மாதிரி இந்த முறை பாமகவுக்கு ஆகலாம் என்பது அதிலொன்று!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!