Monday, November 09, 2009

பெர்லின் சுவர் கற்றுக் கொடுக்கும் பாடம்!

9 நவம்பர்!  1989 வரலாற்றின் கடந்த பக்கங்கள்!
பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்திருந்த சுவர் இடிக்கப்பட்ட இருபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் இன்றைக்குக் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகின்றன. இந்தத் தருணத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்காக பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், ஃபிரெஞ்சு  ஜனாதிபதி சார்கொசி, ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி க்ளின்டன் ஆகிய நால்வரும், உலகப்போர் முடிவில் ஜெர்மனியை ஆக்கிரமித்திருந்த நேசநாடுகளின் சார்பாகவும்,  முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த மிகைல் கோர்பசேவ், போலந்து நாட்டில் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் போராடிய லேக் வாலேசா இருவரும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

1989 இல் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த ஜெர்மனியை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு முன்னோட்டமாக, பெர்லின் தடுப்புச் சுவர் இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டது. ரஷ்யாவின் இரும்புத்திரையும், திறமையற்ற ஒரு ஆட்சி முறையுமே கூட ஒரு முடிவுக்கு வருவதன் முன்னோட்டமாகவும்  இந்த நிகழ்வு இருந்தது.இரண்டாவது உலகப் போர் முடிந்தகையோடு, ஜெர்மனியை சோவியத் ரஷ்யாவும், அமெரிக்காவும் இரண்டாகக் கூறு போட்டுக் கொண்டன. கிழக்குப்பகுதி கம்யூனிஸ்டுகள் (ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரான்ச்) கையிலும், மேற்குப் பகுதி அமெரிக்காவின் கண்ணசைவிற்கு ஏற்றபடி ஆடுகிறவர்கள் கையிலுமாக ஆட்சிப் பொறுப்பு பலவந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்டது, அதாவது கொடுக்கப்பட்டது.

அடுத்தடுத்த இரண்டு உலகப்போர்களில், ஜெர்மனியின் தொழில்களும், ஆதிக்கக் கனவுகளும் அடிபட்டுப் போனதை விட, ஒரேநாடு  இரண்டாகப் பிளக்கப் பட்டதை ஜெர்மானியர்களால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. 

ரஷ்யாவின் பிடியில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் இருந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்க மேற்குப்பகுதிக்குள் தப்பி போகும் சம்பவங்கள் தொடர்ந்து பெருகிக் கொண்டே போகவும் பெர்லின் நகருக்குக் குறுக்கே 1961 ஆம் ஆண்டு ஒரு பிரிவினைச் சுவர் எழுப்பப்பட்டது. ஃபாஸிஸத்துக்கு எதிரான தடுப்புச் சுவர் என்ற தம்பட்டத்தோடு ஆகஸ்ட் 13, 1961 அதிகாலை வேளையில் எழுப்பப்பட்டது.154 கிலோ மீட்டர் நீளத்துக்கு பெர்லின் நகரைப் பிரித்துக் கான்க்ரீட் சுவரும் முள் கம்பி வேலியும், அங்கங்கே கண்ணி வெடிகளையும் தைத்து வைத்திருந்த ஒரு அரசின் பயத்தை, தன்னுடைய சொந்த ஜனங்களையே நம்பாத, சொந்த ஜனங்களாலேயே நம்பப்படாத ஒரு திறமையற்ற அரசு கிழக்கு ஜெர்மனியில் அன்றைக்கு இருந்தது என்பதையே பெர்லின் தடுப்புச் சுவர் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. தடுப்புச் சுவர் எழுப்பப்பட்ட அந்த நேரத்திலேயே, அது இடிக்கப்படுவதற்கான முகூர்த்தமும் குறிக்கப்பட்டு விட்டது என்பதுதான் விதியின் விளையாட்டோ?சுவரும் கண்காணிப்புக் கோபுரங்களும் ஏகக் கெடுபிடியும், தப்ப நினைத்தவர்களது மன உறுதியைக் குலைக்கவில்லை. வேட்டை நாய்களும், கண்ணிவெடிகளும், கொடுமையான தண்டனைகளும் கூடப் பயன்படவில்லை. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தகவலின் படி கிட்டத்தட்ட 136 உயிர்கள் தப்பிக்கும் முயற்சியில் பலியாயின என்று சொல்கிறது. அதே நேரம், இத்தனை காவலையும் மீறி, ஆயிரக்கணக்கானோர், இந்த  பெர்லின் தடுப்புச் சுவரைக் கடந்து தப்பித்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறது.

இரண்டாவது முறையாக சான்சலர் பதவியை வகித்து வரும் திருமதி ஏஞ்செலா மெர்கெல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நேரத்தில், கிழக்கு ஜெர்மனியில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வந்தார் என்பதும் உபரித்தகவல்.பிளவுபடுத்தப்பட்ட ஜெர்மனி, ஒரே வருடத்தில் ஒன்றாக எழுந்து நின்றது என்பது உண்மையானாலும், மனத்தளவில் பிளவு அங்கே இன்னமும் மாறாத வடுவாக இருந்துகொண்டே தான் இருக்கிறது.

முதலாவதாக, திறமையற்ற ஒரு கும்பலுக்கு நாங்கள் ஏன் தண்டம் அழ வேண்டும் என்று ஒரு பகுதி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஜெர்மனியைத் தன்னுடைய காலத்திலேயே ஒன்றாக்கிப்பார்த்து விடவேண்டும் என்ற பிடிவாதம் அன்றைய சான்சலராக இருந்த ஹெல்மட்  கோலுக்கு இருந்தது. சாலிடாரிடி டாக்ஸ் என்ற பெயரில், மேற்கு ஜெர்மனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய வருமானத்தில் ஐந்தரை சதவீதம் சர்சார்ஜ்  வரியாக.  தனியாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் தாங்கிக் கொண்டார்கள். சிறிது காலம் தான் சுமையாக இருக்கும் என்று, மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டவர்கள் கூட, அந்த வரிவிதிப்பு இருபதாண்டுகளுக்குப் பின்னாலும் தொடர்வதைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கும் மேற்கும் ஒன்றாகி விட்டது போல இருந்தாலும், கிழக்குப் பகுதி மக்களுக்கு உழைத்து முன்னேற வேண்டுமென்ற உத்வேகமோ, முனைப்போ இல்லை. அவர்களுடைய சுமையையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருக்கிறது என்ற அதிருப்தி  இன்னமும் இருக்கிறது.

கிழக்கும் மேற்கும் ஒன்றான   பிறகு ஏதோ பெரிய சாதனை நிகழ்ந்து விடும் என்று நம்பினேன். ஆனால், அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்துச் சமாளிக்கிறமாதிரி ஆகிப்போனதில் எனக்கு வருத்தமே என்கிறார் டோரதியா குன்ஸ் என்ற கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த பெண்மணி. கம்யூனிச எதிர்ப்புக் குழுவில் இருந்த இவரும் நண்பர்களும்  இளமைக் காலம் முழுவதும் ஸ்டாசி என்ற அரசு உளவுப்பிரிவினால் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டவர்கள். இவருடைய பாய் பிரண்டே ஸ்டாசிக்கு உளவு சொல்லிக் கொண்டிருந்திருக்கிறான்! என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்:கிழக்கு ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு, மூன்றில் ஒருபங்கு சம்பளம் குறைவாகவே கொடுக்கப்படுவதாக குறைப்பட்டுக்கொள்கிற அதே நேரம், அங்கே நகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் சாலைகளும் தங்களுடைய வரிப்பணத்தில் இருந்து அள்ளி இறைக்கப்படுவதாக மேற்குப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மனத்தாங்கல் இருக்கிறது.

இன்னொரு வேடிக்கையான புள்ளிவிவரமும் சொல்லப்படுகிறது, மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனேகமாக, கிழக்கு ஜெர்மனிப் பக்கம் வருவதே இல்லை.

கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் அதே நேரம், மனதளவில் பிளவு இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது! இங்கே ஒரு அருமையான செய்திக் கட்டுரையைப் படிக்கலாம்.

மிக சமீபத்தில் ஏற்பட்ட பிளவு தான்! வெறும் அறுபத்தைந்து வருடங்களுக்குள் நடந்து முடிந்தது தான்! இதில் இருந்தே பாடம் கற்றுக்கொள்ள முடியாதவர்கள், சங்க காலம், சங்கத்துக்கு முந்தைய காலம் என்றெல்லாம் வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டு  என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம்?

இரண்டு முரண்பட்ட அரசியல், பொருளாதார முறைகளில் இருந்து விடுபட முடியவில்லை. ஒன்றாக்குதல், என்பது அவசர அவசரமாக, அதே நேரம் எவ்வளவு தப்பாகச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குத் தப்பாகிப் போனது என்பது பெர்லின் சுவர் கற்றுக் கொடுக்கும் பாடம்!

இதைத் தான், இந்திய வரலாற்றின் மிகச் சமீபத்திய பக்கங்களில் இருந்தும் கொஞ்சம் சொல்ல முனைந்தேன்.

வரலாறு! எவ்வளவு பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது!

இந்தப்பதிவை வலையேற்றம் செய்து முடித்தபிறகு மின்தமிழ் வலைத்தள நிர்வாகி திருமதி சுபாஷினி பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்ட நாளைப் பற்றி இரண்டு சுட்டிகளோடு எழுதியிருந்த சிறுகுறிப்பையும் பார்த்தேன்! அதையும் தான் பாருங்களேன்!

இங்கே மற்றும் இங்கே  


 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails