உன்னை அறிந்தால்! நீ உன்னை அறிந்தால்....!



தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும் 

ஒருவருடைய தகுதி, தரம் என்னவென்பதை எப்படி அறிந்துகொள்ளமுடியும் என்ற கேள்விக்கு இப்படிச் சொல்கிறது திருக்குறள். ஒருவர் போற்றத் தக்கவரா, அல்லவரா என்பது அவருடைய செயல்களால், அதன் விளைவுகளால் தீர்மானிக்கப் படும் என்ற பட்டறிவு இந்த நாட்டில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

"ஒரு மரத்தின் தன்மை இன்னதென்று அது கொடுக்கும் கனியால் அறியப்படும்" என்று கிறித்தவ வேதாகமும் கூட சொல்கிறது. 

தலைவர்கள் பிறப்பிலேயே தலைமைப் பண்புடன், ராஜா ராணி கதைகளில் சொல்வது போல கால்களில் சங்கு சக்கர ரேகைகளோடு பிறக்கிறார்களா அல்லது, சமூகத்தினால் உருவாக்கப் படுகிறார்களா என்பதைக் கடந்த சில பதிவுகளில், ரொம்ப அதிகமில்லை, கடந்த அறுபது எழுபது வருட வரலாற்று நிகழ்வுகளையே எடுத்துக் கொண்டு, அதுவும் நமக்குத் தெரிந்த சம்பவங்கள், பெயர்களை வைத்துக் கொண்டே கொஞ்சம் பார்த்துக் கொண்டு வருகிறோம்,

மிக அண்மைக் காலத்தில் நடந்தவற்றையே சரியாக மதிப்பிட முடியாத சிலர், வரலாறு என்பதே புனைவுகளால் ஆனது என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அதே நேரம், வரலாற்றைக் குறித்துத் தங்கள் மனம்போன போக்கில் விமரிசனம் செய்தும், இழிவுபடுத்தியும், வரலாற்றுப் பாத்திரங்களுக்கு உள்நோக்கம் கற்பித்தும், சாதி முதலான வர்ணங்களில் வெறுப்பை உமிழ்வதுமாக இருக்கும் போக்கைக் குறித்துக் கவலை கொண்டதனாலேயே, இந்தப் பதிவுகள் அவசியம் என்று கருதுகிறேன்.

என்னுடைய கருத்துக்களை, உங்களோடு பகிர்ந்து கொள்ளும், ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைக்கும் எளிய முயற்சி தான் இது.நான் மெத்தப் படித்தவனுமில்லை,எல்லாம் தெரிந்தவனும் இல்லை.வரலாற்றைத் திருப்பிப் போட்டுக் கதைக்கும் அளவுக்கு,கற்பனை,வக்கிரம் உள்ளவனும் இல்லை.

அதே நேரம், வெறுப்போடு உரையாடும் மனங்கள் என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொல்கிற மாதிரி, வரலாற்று நிகழ்வுகளை என்னுடைய மனம் போன போக்கில் விமரிசிக்கும் அறிவுஜீவித்தனம் உள்ளவனும் இல்லை.

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதாக, திரும்பத் திரும்ப சீனா, பாகிஸ்தான், நேரு, சாஸ்திரி என்றே பேசிக் கொண்டிருப்பதாக ஒரு விமரிசனம் எழுவதாலேயே, இந்த விரிவான விளக்கம் அவசியமாகிறது.

செத்த பிணத்தைக் குழியில் இருந்து எடுத்து, ஒப்பாரி வைக்கும் முயற்சி இல்லை,செத்துப்போனவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் எண்ணத்துடனும் எழுதப்படவில்லை என்பதைத் திரும்பவும் ஒரு முறை சொல்லியாக வேண்டியிருக்கிறது.

இந்தப்பதிவுகளில், சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள், அதன் படிப்பினைகள், தலைமைப் பண்புடன், இந்த தேசத்தை வழிநடத்திச் செல்லும் தகுதியோடு தலைவர்கள் செயல்பாடு இருக்கிறதா என்ற அரசியல் விமரிசனத்தோடு ஒரு விவாதத்திற்கான கருப்பொருளாக உங்களது சிந்தனைக்கு வைக்கப் படுகிறதே தவிர, எனக்கு வேறு வேலை இல்லை என்பதாகவோ, அல்லது படிக்க வருபவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்ற எண்ணத்துடனோ இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

பல லட்சங்களைத் தொடும் ஹிட்ஸ், நூற்றுக்கணக்கான ஃபாலொயர்ஸ், ஒவ்வொரு பதிவுக்கும் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக  இந்த வலைப்பக்கங்களில் எதையும் எழுதப்போவது இல்லை. அப்படிப்பட்ட மயக்கம், பெருமிதம் எதுவும் என்னிடமில்லை. நாடறிந்த அல்லது நாறிப்போன பிரபல பதிவராகும் ஆசை இருந்தால் தான் எழுத வேண்டுமா என்ன?

சுதந்திர இந்தியாவின் தலைவர்களைப் பற்றி வரலாறு என்ன மாதிரியான விமரிசனங்களை எடுத்து வைக்கும் என்பதைக் கடந்த சில பதிவுகளில் பார்த்து வருகிறோம். இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையின் ஆசிரியாராகவும், ரீடர்ஸ் டைஜஸ்ட் மாத இதழின் இந்தியப் பதிப்பு ஆசிரியராகவும் இருந்த திரு ராகுல் சிங் எழுதிய கட்டுரை,



பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் பத்திரிகையில் இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியாகி இருந்ததை, இணையத்தில் வேறு குறிப்புக்களுக்காகத் தேடிக் கொண்டிருந்த போது படித்தேன்.

"இந்திராவின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சி பரிதாபமாக மூன்றரை சத வீதமாகத் தான் இருந்தது. இந்து வளர்ச்சி விகிதம் என்று நக்கலாகச் சொல்கிற மாதிரி! வருமான வரி விகிதமோ உச்ச கட்டமாக 98 சதவீதமாக இருந்ததால் தொழில் செய்வோர் தொழிலை விரிவுபடுத்தவோ, நவீனப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இறக்குமதிஇன மீது எக்கச்சக்கமாக வரி விதிக்கப்பட்டதால் பாதுகாக்கப்பட்ட இந்தியத் தொழில்கள் தரம் குறைந்தவற்றையே உற்பத்தி செய்தன.”

செய்தி வெளியானது பாகிஸ்தானியப் பத்திரிகையில் என்றாலும், எழுதியவர் ஒரு இந்தியப் பத்திரிக்கையாளர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, இன்னும் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் படித்துப் பாருங்கள்!

1975 ஆம் ஆண்டு ஜூன் 12, இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. தேர்தலில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்ததாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயணின் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்த நீதிமன்றம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தல்களில் போட்டியிடத் தடைவிதித்தும் உத்தரவிட்டது. ஜூன் 25 அன்று நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. கப்சிப் தர்பார் என்று வேடிக்கையாக இப்போது சொல்வது அன்றைக்கு நிஜமாகவே நடந்தது. ஏகப்பட்ட கைதுகள், பத்திரிகைத் தணிக்கைகள்,

இவற்றோடு ஏராளமான கோஷங்கள்! எல்லாமே வெறும் கோஷங்கள்! இதைக் குறித்த ஒரு செய்தியைப் படிக்க  இதில் இந்திராவை பற்றிய விமரிசனம் கொஞ்சம் அதீதம் என்றே எனக்குப் படுகிறது.

"வறுமையை ஒழிப்போம்!" "இருபது அம்சத் திட்டம்" இப்படி அரசு இயந்திரங்கள் இப்படி உரக்கக் கூவிக் கொண்டிருந்தன! அரசு கோஷங்களை சுவற்றில் எழுதின முனைப்பை செயலிலும் காட்டியிருந்தால் கொஞ்சமாவது பிரயோஜனம் இருந்திருக்கும்! கோழி கூவுது என்ற ரேஞ்சுக்குக் காங்கிரஸ் காரர்களும், அரசு இயந்திரங்களும், வெற்றுக் கோஷங்களைக் கூவிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்குக் காங்கிரஸ் தலைவராக தேவ காந்த் பரூவா என்று ஒருவர் இருந்தார். மருதைத் தமிழில் எதற்கும் லாயக்கில்லாத, இரண்டும் கெட்டான்களை செல்லமாகக் கிறுக்கு மாய்க்கான்கள் என்று திட்டுவது உண்டு. டி கே பரூவாவைக் கூட அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்! அதுவும் ஒரிஜினல் கிறுக்கு மாய்க்கான்கள் எப்படி எங்கள் பெயரைக் கெடுக்கப்போயிற்று என்று கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்!



"இந்தியா தான் இந்திரா! இந்திரா தான் இந்தியா!

பரூவா இப்படி ஒரு புதிய கோஷத்தை உரக்கக் கூவிக் கூவியே அப்புறம் அவருமே காணாமல் போனார். 

கரீபி ஹடோ! வறுமையை ஒழிப்போம் என்று கோஷம் போட்டவுடன் எப்படி வறுமை காணாமல் போனதோ, அப்படியே இந்திரா தான் இந்தியா என்ற கோஷமும் வெற்று அலம்பலாகிப் போனது!

1965 ஆம் வருடங்களில், ஒரு சிறிய மனிதர், சிறிய என்பது உயரத்தில் மட்டுமே, நேர்மையிலும், அரசியல் தெளிவிலும் இமயமலைமாதிரி உயர்ந்து நின்றார்! போகவேண்டிய திசை என்ன என்பதிலும், முடிவுகளை எடுப்பதிலும் தெளிவாக இருந்தார், எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் இருந்தார்.

பாகிஸ்தானுடன் போர் மேகங்கள் வலுத்துக் கொண்டிருந்த வேளையில் கூட, லால் பஹதூர் சாஸ்திரி விவசாயிகளை மறக்கவில்லை. விவசாயத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன. உந்துசக்தியாகவும் அந்த நாட்களில் அவை இருந்தன!

ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!

சாஸ்திரியின் இந்த முழக்கம், இந்திரா காந்தி காலத்து வெற்று முழக்கங்களைப் போல அல்லாமல் உண்மையானதாக இருந்தது. கைரா மாவட்டத்தில் அமுல் பால் பண்ணையின் நல்ல அம்சங்களைப் பார்த்து, நாட்டில் 1964ஆம் ஆண்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர் சாஸ்திரி. அதே மாதிரி, பசுமைப் புரட்சிக்கும் வித்திட்டவர் சாஸ்திரி என்பது இங்கே நிறையப்பேருக்குத் தெரியாது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, பசுமைப் புரட்சிக்கும் அடிகோலியவர் சாஸ்திரி. அதன் பலனாக, உணவுக்காக வெளிநாடுகளிடம் கையேந்திக் கொண்டிருந்த இந்தியா, குறுகிய காலத்திலேயே  தன்னிறைவு பெற்றதைப் பார்க்க அவர் உயிரோடிருக்கவில்லை.

நேரு மாதிரியே அவருக்கும் சோஷலிசத்தில் நம்பிக்கை இருந்தது. ஆனாலும்,அதை நேரு மாதிரி குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரிக் குறுகிய பார்வையில் பார்க்காமல், யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயல்படத் தெரிந்த விவேகம் இருந்தது.

வல்லபாய் படேல், சாஸ்திரி இருவருக்குமே இயல்பான தலைமைப் பண்பு இருந்தது. தலைவனாக இருப்பதற்கு, கனவு காணுவது ஒன்று மட்டுமே ஒரு தகுதியாக இருக்க முடியாது. கனவு மெய்ப்படக் காரியமாக ஆக்கவும் தெரிந்திருக்கவேண்டும். ஒரு நல்ல தலைவனுக்கு, தன்னுடைய மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லவும் தெரிந்திருக்க வேண்டும்!

தன்னுடைய மக்களை சரியாகப் புரிந்துகொண்டதுடன், அவர்களை ஒரு இயக்கமாகவும் எழுச்சியாகவும் மாற்றத் தெரிந்த வல்லமை மகாத்மா காந்தியிடம் இருந்தது. அது தான் தலைமைக்குரிய, அடிப்படையான பண்பு! எதிரிகளிடமும் கூட ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரிடிஷ்காரர்களைச் சரியாக எடைபோட காந்திக்குத் தெரிந்திருந்தது. அரசியல் ரீதியாக, அரசை நடத்தியவர்கள்தான் எதிரியே தவிர சாதாரண பிரிட்டிஷ் பொதுமக்கள் அல்ல என்பதை காந்தி நன்றாக உணர்ந்திருந்தார்.

நேருவுக்குத் தன்னுடைய மக்களைப் பற்றி, காந்திஜி அறிந்த அளவுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், இந்த தேசத்தைப் பற்றி அவருக்கு ஒரு அழகான கனவு இருந்தது என்ற அளவுக்கு உண்மை. கனவு கண்டு கொண்டிருந்தவருக்கு, எங்கே சறுக்கினோம் என்பதே கடைசி வரை தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய பரிதாபம்!

சீனாவுடன் நட்புறவோடு இருக்க முடியும், இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்தால், நிறைய சாதிக்க முடியும் என்று நம்பினார். ஆனால், அதைச் சாதிப்பதற்காக, உருப்படியான முயற்சி எதையுமே சீனாவின் பார்வையில் அவர் மேற் கொள்ளவில்லை என்பதை, அவரது வெளியுறவுக் கொள்கையில் இருந்த குளறுபடிகளே சொன்னதையும் நாடு பார்த்தது.

குளறுபடிகளை சரி செய்துகொள்ளவும், அதே நேரம் தேசத்தின் நலன்களை விட்டுக்கொடுக்காமல் உறுதியோடு செயல்படவும் இன்னமும் நம்முடைய அரசும், அரசியல்வாதிகளும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பெரும் சோகம்!

திபெத்தை சீனா தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வந்ததை இந்தியா தனக்குப் பக்கத்தில் நெருங்கி வந்த ஆபத்தாக மட்டும் பார்க்கத் தெரிந்த அளவுக்கு, எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்கத் தெரியவில்லை என்பதும், மலைப் பகுதிகளில், கடும் குளிரில் போரிடுவதற்குத் தகுந்த பயிற்சியோ, படைப்பிரிவுகளோ அன்றைக்கு நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை. கோழையான அரசியல்வாதிகளின் கீழ் பணிபுரியும் வீரனும் கூடக் கோழையாக்கப் படுகிறான் என்பதும், உறுதியான அரசியல் நிலைப்பாட்டை, முடிவை எடுக்கத் தெரிந்த தலைவனின் கீழ் எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாத, ஆயுத பலம் இல்லாத படைப் பிரிவுகூட எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதைத் தான் மூன்றானது இடைவெளிக்குள் அடுத்தடுத்து
இந்தியா சந்தித்த இரண்டு போர்களும் சொல்கிற பாடம்.

1965 ஆம் வருடப் போரைப்பற்றி பேச, இன்னமும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

ஆனாலும், எவ்வளவு பேசினாலும் எழுதினாலும், நாம் கடந்த காலங்களில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டோமா, இல்லையா என்ற கேள்வி மட்டும் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கும். சரியான விடை கிடைக்கும் வரை, கேள்விகள் தவிர்க்க முடியாதது தான்!

தலைவரே என்று ஒரு பத்து, நூறு ஆயிரம் பேர்களால் அழைக்கப் படுவதால் மட்டுமே எவரும் உண்மையான தலைவனாகி விட முடியாது! நாற்பது பக்கம் எழுதி வைத்துக் கொண்டு வசனம் பேசுகிறவர்கள் எல்லாம் உண்மையான தலைவராகி விட முடியாது!

தலைமை தாங்க, பரந்த பார்வை இருக்க வேண்டும்! எங்கே போகிறோம் என்பதில் தெளிவு இருக்க வேண்டும்! தன் பின்னால் வருகிறவர்களைத் தடுமாற்றம் இல்லாமல் வழி நடத்திச் செல்லவும் வேண்டும்! அது தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு!

ஒரு உறுதியான, வலிமையான சக்தியாக இந்த நாடு உருமாற வேண்டும் என்றால், போலிகளையும், குப்பைகளையும் தூக்கி எறியத் தெரிந்திருக்க வேண்டும்.சிறு புழுவிற்காகத் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும் மீனைப்போல இலவசங்களில் ஏமாறாமல், ஊழலை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரமும், பிரித்து வைத்துப் பார்க்கும் ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னாலும் இருக்கும் உள்நோக்கம் என்ன என்பதைக் கண்டுகொண்டு, வேற்றுமைகளிலும் ஒரு ஒழுங்கு, ஒற்றுமையைக் காண முடியும் என்ற பிரக்ஞையுடன், நம்பிக்கையுடன் செயல்படவேண்டும்! இது நமக்கு!

தலை முதல் கால் வரை, காலில் இருந்து தலை வரை ஒரு மாற்றத்திற்குத் தயாராகும் பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது! நாமாக, நம்முடைய பொறுப்பை உணர்ந்து செயல்படும் வல்லமையை இறையருள் கைகூட்டுவிக்கட்டும்

2 comments:

  1. பழைய தகவல்கள் என்றாலும் அலுக்காமல் எழுதுவதுடன், அரிய புகைப்படங்கள் உங்கள் பதிவுகளில் காணக் கிடைப்பது மற்றொரு சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!