S M S எம்டன் 22-09-1914! புத்தகம் சொல்லும் குறியீடு!

S M S எம்டன் கப்பலை பற்றிக்  கொஞ்சம் முந்தைய பதிவில் பார்த்தோமில்லையா?

எம்டன் சென்னைத் துறைமுகத்தில் பர்மா எண்ணெய்க் கிடங்குகள் மீதும் உயர்நீதிமன்றத்தின் பக்கத்திலும் வீசிய குண்டுகள், தொண்ணூற்றைந்து ஆண்டுகளுக்குப் பின்னாலும், சென்னை நகர மக்களின் நினைவில், மிகப் பெரிய  அல்லது மிகப் பெரியசாதனை,  சாதிக்கவே முடியாது என்பதைச் சாதிப்பது இப்படியெல்லாம் பொருள் படும் விதத்தில் இன்றைக்கும் வழக்குச் சொல்லாக இருக்கிறது.

முதல் உலகப் போர் தொடங்கிய  1914, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மூன்று மாதம், இந்தியப் பெருங்கடலில், எம்டன் தனிக்காட்டு தர்பார் நடத்திக் கொண்டிருந்தது. S M S எம்டனின் கடல் சஞ்சாரத்தைக் கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.

தங்களை சிங்கங்களாக வர்ணித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயரை, உண்மையில் குள்ள நரிகள் தான் என்பதையும் நிரூபித்தது. ப்ரிடிஷ்காரர்களிடம், பேச்சில் மட்டுமே தெரியும் கண்ணியத்தை, செயலிலும் கடைப் பிடித்து, எதிரிகளாலும் போற்றப்பட்ட கப்பலின் தலைவர் வான் முல்லரைப் பற்றி நிறையத் தகவல்கள், இன்றைக்கும் நினைவில் நிற்பனவாக இருக்கின்றன. இணையத்தில் தேடவும் கிடைக்கின்றன.

வரலாற்றை ஊன்றிக் கவனிப்பவர்களுக்கு, ஒரு விஷயம் நன்கு புலப்படும்.

1750-1850 இடையிலான நூற்றாண்டு, நிலவுடைமைச் சமுதாயத்தில் நத்தை மாதிரி ஊர்ந்துகொண்டிருந்த உலக வாழ்க்கை, தொழிற்புரட்சியினால் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. அதற்கு முந்தைய ஐயாயிரம் வருடங்களில் காணமுடியாத தொழில் வளர்ச்சி வந்தது உண்மைதான் என்றாலுமே கூட, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் அதே அளவுக்கு அதிகரித்துக் காட்டியது. 

கடலோடிகளாகத் திரிந்த வெள்ளையர்கள் கொள்ளைக் காரர்களாகத் தான்  திரிந்தார்கள். வணிகம் செய்வதாக அதற்கு ஒரு காரணமும் சொல்லிக் கொண்டார்கள். நவீன ஆயுதங்களையும், நயவஞ்சகத்தையும் பயன்படுத்தி ஆங்கிலேயர்கள்  உலகின் பெரும் பகுதியைத் தங்களுடைய சுரண்டலுக்கு, காலனி அடிமை நாடுகளாக்கவும் முடிந்தது! ஆனால் அதைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் போனது.



Life cycle என்று சொல்வார்களே, எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு ஆயுட்காலம் இருப்பது என்று! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கும் அது பிறந்தபோதே, எழுதப் பட்டுவிட்டது. அதைப் பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது S M S எம்டன்! ஊதிக் கொண்டுபோன ஒரு சாம்ராஜ்யப் பெருமிதப் பலூனில் பெரிதாக ஒரு பொத்தலைப் போட்டு, இல்லையடா மகனே, அதிகம் வீங்கினால் அது நோயாகக் கூட இருக்கலாம் என்று ஆளப் பிறந்தவர்களாக மார்தட்டிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்குப் புரிகிற மாதிரி, சொன்னது.

அதை ஆரம்பித்து வைத்தது S M S  எம்டன்! பிரிட்டிஷ் ராணுவ வலிமை, திறமை மீது இருந்த பெரிய சித்திரத்தை வெறும் நூற்றுமுப்பது குண்டுகளை மட்டுமே வீசி, இருபத்தைந்து பிரிட்டிஷ் வணிக, யுத்தக் கப்பல்களை மூழ்கடித்து, பிரிட்டனின் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யக்கனவை ஒன்றுமே இல்லாமல் பண்ணிய ஆரம்பத்தைச் செய்த கப்பல் என்ற வகையிலும் எம்டன் வரலாற்றில் வாழ்கிறது.

1850-1950 இடைப்பட்ட நூறு ஆண்டுகளில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் காணாமலேயே போயிற்று! முதல் உலகப் போர் ஆரம்பிக்கும் பொது வல்லரசாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருந்த பிரிட்டன், யுத்த முடிவில் பல்அத்தனையும்  இழந்த நரியாக நின்றது. இன்டாவது உலகப் போரின் முடிவில் வாலறுந்த நரியாகவும்  ஆகிப் போனது.

1982 இல் அர்ஜென்டினாவோடு நடந்த  ஃபால்க்லாந்து யுத்தம்,  பிரிட்டனின் காலாவதியாகிப் போன ராணுவப் பெருமிதம், மரியாதை, பொருளாதார பலவீனம் எல்லாவற்றையும் அம்பலமாக்கியது. அந்தப் போரில், ஒரு விமானந்தாங்கிக் கப்பலை, அமெரிக்க உளவுத் தகவலை, மறைமுகமான உதவியை  வைத்துக் தான் காப்பாற்ற முடிந்தது என்பதும், அந்த ஒரு கப்பலை இழந்திருந்தால் ஈடு செய்வதற்குக் கூட வழியில்லாத நிலையில் தான் பிரிட்டன் இருந்தது என்பதும் கூடுதல் தகவல்கள்.

S MS எம்டன் குறித்த இந்த வீடியோவைப்  பாருங்கள்! இன்னும் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

 
ஒரு யுத்தக் கப்பலாக மட்டும் எம்டனின் சென்னை விசயத்தைப் பார்க்க முடியவில்லை! ஒரு தற்செயலான சம்பவமாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. வரலாறு சொல்லும் ஒரு குறியீடாகத் தான், இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே என்னால் உணரமுடிந்தது.

இந்தக் கப்பலோடு தொடர்புபடுத்தி, திரு திவாகர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யோசித்துக் கொண்டிருந்த போது, நிறைய யோசனைகளை, தேடல்கள் எழுந்தன. இந்தப் புத்தகம் என் மீது நிகழ்த்திய தாக்கத்தை, புத்தகங்களுக்காகத் தொடங்கின இந்தப் புதுப் பக்கங்களில்தொடர்ந்து பார்ப்போம்! 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் திரு ரெ. கார்த்திகேசு, திண்ணையில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதிய மதிப்புரையை இங்கே படிக்க  



2 comments:

  1. நல்ல கட்டுரை அய்யா, நிறைய வரலாற்று விசயங்களை அறிந்து கொண்டேம். நன்றி அய்யா. அய்யா நான் வெள்ளியங்கிரி மலை நிறைவுப் பகுதியில் சில அரிய புகைப்படங்கள் இட்டுள்ளேன். பார்க்கவும். நன்றி.

    ReplyDelete
  2. தெரியாத நிறைய விஷயங்களை தெரிய வச்சிருக்கு இந்த இடுகை. கூகுலில் தேடியபோது கிடைத்த லின்க் கீழே கொடுத்திருக்கேன். இங்கேயும் நிறைய இன்ஃபர்மேசன் இருக்கு பாஸ்.

    http://www.worldwar1.co.uk/emden.html

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!