கனிமொழி! கரீம் மொரானி !பின்தொடரும் சோக நிழல்!



எதிர்பார்த்தது போலவே, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சினியுக் பில்ம்ஸ் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை நிராகரித்திருக்கிறது. பாலிவுட் வட்டாரங்களில் மிகவும் செல்வாக்குடன் திரிந்த பைனான்சியர்,( financier Czar என்று இந்தப்பணமுதலையை சொல்கிறார்கள்) திகார் சிறைக்கு ஒருவழியாக போயே ஆகவேண்டிய நிலையை திமுகவின் தற்போதைய  ராசி உண்டாக்கி ருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்! ஏற்கெனெவே, திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேர்தலில் தோற்றோம் என்று சில அரசியல் கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டன. ஊழல் விவகாரத்திலும் அந்த ராசி தொடருகிற மாதிரித் தான்  தோன்றுகிறது!!
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் மகா சமுத்திரத்தில், கரீம் மொரானியின் பங்கு என்னவோ மிகவும் சிறியதுதான்! கறுப்பை வெளுப்பாக்கியது தான்! விஞ்ஞான  பூர்வமாக ஊழல் செய்து ஓவர் எக்ஸ்பீரியன்சாகிப்  போனதே இத்தனை வினையாகப் வந்துமுடியும், வீட்டுப் பெண் திஹார் சிறைக்குப் போக வேண்டி வரும் என்பதை ஆ!ராசா அண்ட் கம்பனியோ,  அவர்களுக்கும் தலைவராக இருந்தவரோ நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

டிபி ரியாலிட்டி, அதன் துணை நிறுவனங்களில் இருந்து பல தொகைகளாக வாங்கி அதை அப்படியே  கலைஞர் டீவீக்கு இருநூற்றுப் பதினாலு கோடி கை மாற்றியது ஒன்றுதான் மொரானி செய்த உபயம்! இப்படி இந்த இருநூறு கோடி ரூபாய் வெள்ளையாகக் கை மாற்றியதற்குக் கமிஷனாக ஆறு கோடி ரூபாய் சம்பாதித்தார் என்று சிபிஐ   சொல்லிருக்கிறது. சிபி ஐ குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்த்த நாளில் இருந்தே மொரானி கோர்டில் ஆஜராகாமல், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துவிட்டு ஒரு மருத்துவ மனையில் போய் படுத்துக் கொண்டார். கைமாற்றி விட்டதுக்கே இப்படி என்றால் கையூட்டுக் கொடுத்தவர்களுக்கும், கையூட்டு வாங்கியவர்களுக்கும் என்ன காத்திருக்கிறது என்பது புரிகிறதா? இப்போதைக்கு, வெறும் ஊகத்தோடு விட்டு விடுவோம்!

ருத்துவக் காரணங்களை சொல்லி இது வரை மொரானி முன்ஜாமீன் கேட்டு வந்தார். சிபிஐ சிறப்புநீதிமன்றம், சென்ற வெள்ளிக் கிழமை அதை நிராகரித்தது. திஹார் சிறையில் மருத்துவ வசதிகள் இருக்கின்றன என்று சொன்னது நீதி மன்றம். வேறு வழி இல்லாமல், வழக்கமான ஜாமீனுக்கு  மனுச்செய்திருந்தார். இன்று திங்கட் கிழமைஅதை விசாரணைக்கு  எடுத்துக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதி மன்றம் ஜாமீன் வழங்க மறுத்து, உடனடியாக நீதிமன்றக் காவலில்  வைக்க உத்தரவிட்டது. திஹார் ஜெயிலுக்கு ஒரு ஆம்புலன்சில் தான் கொண்டு போக வேண்டும் என்றதையும் நீதிமன்றம் நிராகரித்தது. பாலிவுட் பைனான்ஷியரான கரீம் மொரானி, இதை எதிர்பார்க்காமல் இல்லை. டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அவரது சகோதரர் முஹமத் மொரானி சொல்லிருக்கிறார்.

நீதிமன்றங்களில் அளவுக்கு மீறின டிராமா எடுபடாது என்பதை, இந்த மாதிரி ஒன்றிரண்டு  சந்தர்ப்பங்களில் பார்க்கும் போதே கோடைமழை மாதிரி அவ்வளவு சுகமாக இருக்கிறது

னிமொழி தனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான், கணவர் வெளிநாட்டில் இருக்கிறார், நான் ஒரு பெண், என்ற காரணங்களை அடுக்கித் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனு மீது விசாரணை டில்லி உயர்நீதிமன்றத்தில், இன்று மதியம் இரண்டுமணி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. திமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைபரப்பு செயலாளர் குஷ்பூ உட்பட, திமுக மாஜிகள் நிறையப் பேரை நீதிமன்ற வளாகத்தில் பார்க்க முடிந்ததாக செய்திகள் சொல்கின்றன.

ப்போது கனிமொழி மீது சிபிஐ  தாக்கல் செய்திருக்கிற குற்றப் பத்திரிகை, 2G ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஒரு சிறிய முனைதான்! ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெறப்பட்ட லஞ்சப்பணத்தில் ஒரு பகுதி  கலைஞர் தொலைக் காட்சிக்குக் கைமாற்றப்பட்டிருக்கிறது என்பது இந்தக் குற்றச்சாட்டின் சாராம்சம். கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்தில் பங்குகள் வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம், பங்கு விலை எவ்வளவென்பது நிர்ணயிப்பதில் கருத்தொற்றுமை ஏற்படாததால் கடனாகக் கருதப்பட்டு, முப்பத்தொரு கோடி ரூபாய் வட்டியுடன் திருப்பிச்  செலுத்தப்பட்டு விட்டது என்பது கலைஞர் டிவி தரப்பு வாதம். ஆனால், இந்தப்பணப் பரிமாற்றம் எல்லாம் ஆ.ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, மூடி மறைக்க அவசரம் அவசரமாக ஏற்படுத்தப்பட்ட சால்ஜாப்புகள் என்கிறது சிபிஐ.


ரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி! எப்படின்னு சொல்லுங்க! தணிக்கைக் குழுத்தலைவர் (CAG) திரு வினோத் ராய் தங்கள் முன் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று ஜேபிசி கேட்டதற்காக, இன்றைக்கு அவரும் ஆஜராகி விளக்கம் சொல்லியிருக்கிறார். 

ஆ!ராசான்னு திறந்த வாய் மூடாமக் கேட்டுக்கிட்டாங்களான்னு இனிமேத்தான் தெரியோணும்! இவ்வளவு இருக்குமுன்னு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் தேத்தி இருக்கலாமோன்னு  கூட சிலருக்குத்  தோணியிருக்கலாம்!!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்  கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை சொல்லியிருப்பதன் அடிப்படையில் ராஜாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்,  ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள் பெற்ற உரிமங்கள் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிவைக்கப் போக, அரசும் வேறு  வழியில்லாமல் விசாரணைக்கு ஒத்துக் கொண்டது. பிரஷாந்த் பூஷன், சாந்தி பூஷன்கள் தனியாகவும், சுப்ரமணிய சுவாமி தனியாகவும் தொடுத்திருந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம், இந்த ஊழல் வழக்கின் விசாரணையைத் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தது. இதில் குற்றம் சாட்டப்படுகிறவர்களை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தையும் அமைத்தது. 

இந்தத் தொடுப்பில் என்டிடீவீ தொலைக்காட்சியில் நடந்த விவாதம் மூன்று பகுதிகளாக இருப்பதில் முதல் பகுதியைப் பார்க்கலாம். வீடியோ இணைப்பு தானாகவே ஓட ஆரம்பிப்பது கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் நீக்கப்பட்டு, சுட்டி மட்டும்! அடுத்த இருபகுதிகள் இங்கே மற்றும் இங்கே


ந்த விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் பேசும் ரேணுகா சவுத்ரியும், அபிஷேக் மனு சிங்வியும் என்னமாய் வழிகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள் 
. 
கனிமொழியோடு இந்த விவகாரம் முடிந்து விடுமா? 

(இன்னும் நிறையப்பேர் சிக்குவார்களா?) இந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல அவர்கள் இருவரும் தவித்த தவிப்பு  இருக்கிறதே!அப்பப்பா!


னிமொழி, சரத்குமார் இருவருடைய ஜாமீன் மனு மீதான விவாதங்களைக் கேட்ட டில்லி உயர்நீதிமன்றம், உத்தரவைப் பிறகு அறிவிப்பதாகத் தேதி  குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறது.ஜூன் முதல் வாரத்தில் வேறு சிலருடைய மனுக்களையும் விசாரிக்க வேண்டிய நிலையில்,  இது எதிர்பார்த்ததுதான். கனிமொழி,திமுகவின் சோகம் தொலைக் காட்சிகளில் வருகிற மெகா சீரியல் மாதிரியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேறு தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சாக்கோ தான் தலைவர். இன்றைய விசாரணைக்குப் பிறகு, நிருபர்கள் மாறன் மீது சில புகார்கள் தெரிவிக்கப் பட்டிருக்கிறதே என்று கேட்டதற்கு, அதெல்லாம் ஊடகங்களாகக் கிளப்பியவைதான் என்ற மாதிரி சொல்லி இருக்கிறார். ஜேபிசி முன் ஆஜராகுமாறு தயாநிதி மாறனுக்கு சம்மன் வருகிற வாரம் அனுப்பப்படும் என்றும், இன்னும் யார் யாரையெல்லாம் விசாரிப்பது என்பது முடிவு செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் ஜேபிசி தலைவர் சாக்கோ சொல்லியிருக்கிறார்.

னிமொழி விவகாரம் வெறும் ஆரம்பம் மட்டும் தான்! தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியாது! இன்னும் அவிழ்க்கப் படாத முடிச்சுக்கள், வெளிவரவேண்டிய தகவல்கள் நிறைய இருக்கின்றன. மூன்றாவது, நான்காவது துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படுகிற வரை, இப்போது பெயர் குறிப்பிடப் பட்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திஹார் சிறைக்கு "உள்ளே" தான் இருக்க வேண்டும்.

"வெளியே" இருப்பவர்களில் எத்தனைபேர் சிபிஐ குற்றப் பத்திரிகை வளையத்துக்குள் வருவார்கள், விசாரணை என்ன திசையில் போகும் என்பதெல்லாம் இப்போதைக்குத் தெளிவாகாத சித்திரமாகத்தான் இருக்கும்.




No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!