சண்டேன்னா மூணு! செய்திகள்! கருத்து! விமரிசனம்!சமீப காலமாக மத்தியில் காங்கிரஸ் அமைச்சர்கள் கொஞ்சம் நல்ல கலகலப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்! சசிதரூர் டிவிட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்! கபில் சிபல் இன்னொரு விதத்தில்........!

தினமணி செய்தி இங்கே! ஜெயராம் ரமேஷ் எதையாவது சொல்லி, மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்! மக்களும் ஏன் எதற்கு என்று யோசிப்பதேயில்லை! இதற்கும்,வழக்கம் போல, கொஞ்சம் கைதட்டலும், கொஞ்சம் கண்டனங்களும் கிளம்பியிருக்கின்றன.

போபால் ஏப். 2: பட்டமளிப்பு விழாவின் போது அதற்குரிய ஆடையை அணியும் பழக்கம் ஆங்கில காலனி ஆட்சி விட்டுச் சென்ற எச்சம் என்று கூறிய மத்திய அமைச்சர் ரமேஷ், விழா மேடையிலேயே பட்டமளிப்பு விழாவுக்கான மேலங்கியை கழற்றி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தினார்..

போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் 7-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்துகொண்டார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பட்டமளிப்பு விழா அங்கியை அணிவது வழக்கம். பட்டம் பெறும் மாணவர்களும் இதுபோன்ற அங்கி அணிவது வழக்கம்.

ஆனால் இந்த வழக்கத்துக்கு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

"சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நாம் காலனி ஆட்சியின் அடிமைதளைகளை விடுவிக்கவில்லை. இதுபோன்று அங்கி அணிவதை அநாகரிகமான செயலாகவே நான் கருதுகிறேன்" என்று கூறிய அமைச்சர் தான் அணிந்திருந்த அங்கியை கழற்றினார். அவர் அவ்வாறு செய்தவுடன் அதிர்ச்சி கலந்து வியப்பில் விழாவில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் கைதட்டி வரவேற்றனர்.

சாதாரணமாக ஆடை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டால் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


அடிமை நாடாக ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கத்தில் இந்தியா  இருந்தபோது, கல்வி என்பதும் மதத்தைப் பரப்பும் ஒரு கருவியாக, கிறித்தவ மதபோதகர்களாலேயே நடத்தப்பட்ட தருணங்களில், பட்டம் அளிப்பவர்கள் பாதிரியார்களாகஇருந்து,  பாதிரிமாருக்குரிய பாவாடை போன்ற உடையணிந்து வர, பட்டம் பெறுபவரும் அதே மாதிரி உடை அணிந்து வரவேண்டும் என்பது ஒரு மரபாக இருந்ததை நினைவில் வைத்துக் கொண்டு பார்த்தால் அமைச்சர் சொன்னதில் தவறேதுமில்லை என்பது தெரியும்! ஆனால், இது நம் நாட்டு  மாண்புமிகுக்களுக்குத்  தெரிவதற்கே அறுபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது!

சபாஷ் அமைச்சரே! சபாஷ்!

சுதந்திரம் அடைந்து அறுபத்துமூன்று ஆண்டுகளுக்குப் பின்னல் கூட, காலனி ஆட்சியின் அடிமைச் சங்கிலியில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்பது, காலம் கடந்த ஞானோதயமாக, இப்போதாவது உங்களுக்குப் புரிய ஆரம்பித்திருப்பதற்காக இன்னொரு தரம் சபாஷ்! காலனி ஆட்சி, அடிமைத்தனத்தின் சின்னமாக, பட்டமளிப்பு விழா கவுன் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா? வேறு ஒன்றுமே கண்ணுக்கு, அறிவுக்குப் புலப்படவில்லையா?

அமைச்சர்கள் பாட்டுக்கு  ஏதோ இப்படி ஏடாகூடமாக, மறந்துபோய் உண்மையைச்  சொல்லிவிட்டுப் போய் விட்டால் எப்படி? எதிர்ப்பதற்கு ஆள் வேண்டாமா? அதுவும் வந்தாயிற்று!

பழங்காலத்து விகார்கள்,போப்கள் மாதிரி ஆடையணிந்து தான் வரவேண்டுமா என்று அமைச்சர் சொன்னது, தங்களுடைய மத நம்பிக்கையைக் காயப் படுத்திவிட்டதாக, போப்பை அவமதிப்பது போல இருக்கிறது. அதனால் அமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெங்களூரில்  இருக்கும் குளோபல் கவுன்சில் ஆப் இந்தியன் கிறிஸ்டியன்ஸ் என்ற அமைப்பின் தலைவர் சாஜன் ஜார்ஜ் அறிக்கை விடுத்திருக்கிறார்!

விவரமறியாத சிறுவர்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த பாதிரிகளைக் காப்பாற்றுகிறார் தற்போதைய போப் என்று வாடிகனிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஜனங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்! போப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷங்களும் வலுவாக எழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், அமைச்சர் போப்பை அவமதித்து விட்டார், மத நம்பிக்கையைக் காயப் படுத்திவிட்டார் என்று சொல்வது இன்றைய ஜோக்! வேறு என்ன மாதிரி எடுத்துக் கொள்ள முடியும்! சிரிக்கத் தான் முடியும்!

இந்த விவகாரத்தில் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள இங்கே! சொல்லியிருப்பதில் ஒரு சின்ன சாம்பிள்.

 

"This would radically change under the authoritarian John Paul II and his German enforcer, Josef Ratzinger, now Pope Benedict XVI. More than 100 theologians were silenced, embarrassed and cast out of Catholic institutions in a vain attempt to stop the development of a more democratic church.

We now see the results – a mass exodus from the church. The Pew Forum on Religion and Public Life reported that 10.1 per cent of the adult population in the United States now consists of people who have left the Catholic Church for another religion or for no religion. To put it another way, one out of every 10 people in the United States is an ex-Catholic. Ireland, the most Catholic country of all, has seen similar dramatic losses."

oooOooo


சசிதரூர் ! மத்திய அமைச்சரவையில், வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர்! மிக மிக சுவாரசியமான, விவரம் தெரிந்த மனிதர்! எதைச் சொன்னாலும் அவரது கட்சிக்காரர்களே விவகாரமாக்கி விடுவார்கள்! டிவிட்டரில் சசி தரூர் என்ன சொன்னாலும் அதை ஊதிப் பெரிதாக்குவது சில காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு! முழுநேரத் தொழிலும் கூட !

சமீபத்தில் டிவிட்டரில் காந்தியைப் பற்றி ஜார்ஜ் ஆர்வெல் சொன்ன ஒரு அரிதான லிங்கை டிவிட்டியிருக்கிறார்! ஒரிஜினல் காந்தியை பற்றி நினைக்கக் கூட, ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே கொஞ்சம் ஆச்சரியம் தான்!அகில்ரானா என்பவருக்கு ரீட்வீட் செய்த ஒரு குறுஞ்செய்தியில் அரசியல்வாதிகள் மக்களுடைய நண்பர்களாக இருக்க முடியாது என்று  சொல்கிற அளவுக்கு மனிதர் தொடர்ந்து ஆச்சரியப் படுத்திக் கொண்டு இருக்கும் அதே நேரம் காங்கிரசின் காலை வாரும் கலாசாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு, மனிதர் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்வதாக இன்னொரு டிவிட்டிய செய்தி இருந்தது!

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருந்த செய்தியில் சசி தரூர்  சொன்னதாக இப்படி இருந்தது. "இந்திய அரசியல் கலாசாரத்தை மாற்றவே விரும்பினேன். ஆனால் என்னைக் கீழே தள்ளி விட்டார்கள்!"

ஒன்று, ஏற்கெனெவே கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதர் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்  அதே நேரம் "நான் அப்படிச் சொல்லவே இல்லை, பத்திரிகைகள்தான் திரித்துப் போட்டு விட்டன" என்கிற மாதிரி அரசியல்வாதிகள் அடிக்கடி அடிக்கிற பல்டி மாதிரியும் இல்லாமல், எவ்வளவு நாசூக்காக நழுவியிருக்கிறார் பாருங்கள்! டிவிட்டரில் பார்த்தது, ரசித்தது!


Times of India falsely claims I said I tried to change Ind's pol culture.Am not that foolish!

 

Despite TOI's misleading lead,I am not grandiose enough to claim I can change India's political culture. Just trying to be myself&do my work


மனிகண்ட்ரோல்டாட்காமில், சசி தரூர் கொடுத்த பேட்டியை  வைத்துத் தான் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திய வெளியிட்டது. அதை மூன்று பகுதிகளாக இங்கே பார்க்கலாம்!  மூன்றில், இரண்டாவது பகுதி, டிவிட்டரில் அவரது குறுஞ்செய்திகள் எழுப்பிய அதிர்வலைகளைப் பற்றிச் சொல்வதை இங்கேயே பார்க்கலாம்!தொடர்ந்து அவரைப் பற்றி மேலிடத்தில் போட்டுக் கொடுப்பதற்கே முழுநேரமாக வேலை செய்யும் காங்கிரஸ்காரர்களை மனிதர் சீக்கிரமாகவே புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்! அவர்கள் கத்திக் குரல் கொடுப்பதற்கு முன்னாலேயே சமாதானம் சொல்லியாயிற்று! விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், காங்கிரசின் ஒரு பகுதி தவிக்கிறது! காங்கிரசில் இந்த மனிதரை எனக்கு ஏனோ மிகவும் பிடித்திருக்கிறது! டிவிட்டரில்  

இப்ப என்ன செய்வீங்க?! இப்ப என்ன செய்வீங்க?!


oooOooo
 


"என்னுடைய மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் உன்னுடைய சுதந்திரம் முடிந்து விடுகிறது." 

இப்படி சுதந்திரத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. சுதந்திரம் என்றால், என்ன வேண்டுமானாலும் என்று அர்த்தமில்லை. ஒரு எல்லைக்குட்பட்டது தான் என்பதை ஏனோ  மறந்து விடுகிறோம்!

சானியா மிர்சா திருமணத்தைப் பற்றி சிவசேனா முதலில் முட்டாள்தனமாகத் திருவாய் மலர்ந்து எதையோ சொல்ல  ஆரம்பித்து, அப்புறமாக மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்து. இங்கே  பெயர் தெரியாத ஹிந்து அமைப்புக்கள் ஒரு தனி நபரின் திருமணத்தைப் பற்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிற முட்டாள்தனங்களை கொஞ்சம் எரிச்சலோடு  பார்த்துக் கொண்டிருந்த போது அவுட்லுக்  வார இதழில் அஜித் பிள்ளை எழுதிய இந்தப் பகடி கண்ணில் பட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாள் லவ் ஜிஹாதி ஒரு வார்த்தை செய்திகளில்  என்று அடிபட்டது நினைவிருக்கிறதா? அந்த வார்த்தையை வைத்துக் கொண்டே, இதை கற்பனை செய்ததாக முடித்திருக்கிறார். முட்டாள்தனத்துக்கு இன்னொரு முட்டாள்தனம் தான் பதிலாக இருக்க முடியும் என்று நினைக்கிற கலாசாரத்தில் இருந்து என்று விடுபடப் போகிறோமோ தெரியவில்லை!

நகைச் சுவை, கிண்டல், பகடி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை!

 

7 comments:

 1. சசி தரூர் சாரு மாதிரி ஆட்களை வெளைக்காரன் நல்ல அடையாளம் கண்டுகிட்டதால் பான்கீன்மூனுக்கு இடத்தை அளித்தான். நமக்கு அவரை பத்தி தெரியாததுனால ராஜாங்க மந்திரியாக்கி தினமும் காமெடி ஷோ பார்த்து மகிழ்கிறோம்.

  ReplyDelete
 2. வாருங்கள் அமர்!

  சசி தரூர் ஐ நா சபை பொதுச் செயலாளர் தேர்தலில் தோற்றுப் போனதற்கு முக்கியமான காரணம், அமெரிக்ககா இந்தியாவிற்கு அந்தப் பொறுப்பும், கவுரவமும் கிடைத்துவிடக் கூடாதென்பதற்காகத் தான்.

  சீனா கூட, ஆதரிக்கவில்லை. இது ஒரு தனிநபரின் மீது உள்ள விருப்பு வெறுப்புக்களால் முடிவு செய்யப் படுகிற விஷயம் இல்லை.

  அமெரிக்க ஆதரவுடன் பதவிக்கு வந்த கோபி அண்ணன், கடைசி காலங்களில் அமெரிக்காவுக்குப் பிடிக்காதவராக ஏன் ஆகிப் போனார் என்பதை கொஞ்சம் பழைய செய்திகளில் தேடித் பார்த்தாலே போதும்!

  இங்கே வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் எஸ் எம் கிருஷ்ணாவை விட, அவர் கீழ் ராஜாங்க மந்திரியாக இருக்கும் சசி தரூர், சர்வ தேச அரசியல் நன்கு தெரிந்தவர்.

  எதனால் சசி தரூரை, நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்பதை கொஞ்சம் விரிவாகச் சொன்னால் நல்லது!

  தவிர, அவர் செய்வதைக் காமெடியாக்கிக் கொண்டிருப்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தானே ஒழிய அவரில்லை!

  டிவிட்டரில் அவருக்கு ஏழு லட்சம் பேருக்கு மேல் பாலோயர்ஸ் இருக்கிறார்கள்! அதையும் இங்கே உள்ளூர் அரசியல்வாதி எவரையும், ஜனங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்ற தகவலோடு சேர்த்துப் பாருங்கள்!

  மனிதர் சொல்வதில் கருத்துவேறுபாடு இருக்கிறதோ இல்லையோ, ஜனங்களோடு தொடர்பில் இருக்கிறார்!

  ReplyDelete
 3. இந்தியாவே ஏழ்மை நாடு தான். நாலும் தெரிந்த சசி தரூர் பல லட்சங்கள் செலவு செய்து ஐந்து நட்சத்திர ஓட்டலில் தான் தங்கினார், விமானத்தில் economy class ல் பயணம் செய்ய வலியுரித்தினால் மாட்டு வண்டி பயணம் என்பார், காஷ்மீர் பிரச்சனை ஐ தீர்ப்பதில் சௌதி ப்ரோகர் ஆகா செயல் படும் என்பார். ச்சே சசி தரூரு இந்தியாவுக்கு கிடைச்ச என்ன ஒரு தலிவரு.

  ஐ நா பொது செயலாளர் பதவி பெற்றிருந்தால் இலங்கை தமிழர்கள் இல்லாமல் செய்திருப்பார் இந்த மல்லு.

  ReplyDelete
 4. /* டிவிட்டரில் அவருக்கு ஏழு லட்சம் பேருக்கு மேல் பாலோயர்ஸ் இருக்கிறார்கள்! */

  ஜெ மோ வுக்கு கூட லட்சகணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

  ReplyDelete
 5. டிவிட்டரில் தொடர்பவர் எண்ணிக்கையைச் சொன்னது வெறும் பாபுலாரிடிக்காக மட்டும் அல்ல! எத்தனை பேருடன், அவர் விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார், என்ன செய்கிறார் என்பதை, கொஞ்சம் வித்தியாசப் படுத்திச் சொல்வதற்காக மட்டுமே! இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்த அளவு பின் தொடர்பவர்களோ, அவர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்குப் பிரசித்தி இருக்கவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டீர்களானால், நான் சொல்வது புரியும்!

  ஜெமோவுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன?!

  இலங்கைப் பிரச்சினையில்,மலையாளிகள் மீது நிறையகதைகள் சொல்லப் படுகின்றன. அவைகள் வெறும் கதைகள் மட்டுமே!

  ReplyDelete
 6. நல்ல தகவல்கள், நிறைய செய்திகள். நன்றி அய்யா.

  ReplyDelete
 7. செய்திகளைத் தெரிந்துகொண்டால் போதுமா திரு.சுதாகர்?

  உங்களுடைய ரியாக்ஷன் என்ன என்பதையும் சேர்த்துச் சொன்னாள் அல்லவா முழுமையாக இருக்கும்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!