சின்னச் சின்னச் செய்திகள்! கொஞ்சம் சிந்திக்க, நிறையவே கொதிக்க...!



இந்திய அரசின், அரசியல்வாதிகளின் சுறுசுறுப்பு, செயல்பாடு யோக்கியதை எப்படியிருக்கிறது என்பதை எத்தனை தரம் அவர்களே நிரூபித்தாலுமே கூட ஜனங்களுக்கு இதைக் குறித்த விழிப்புணர்வோ, என்ன செய்வது என்பதில் தெளிவோ இல்லை என்பதைப் பார்க்கும்போது, இந்த நாட்டின் குடிமகனாக வருத்தப் படத்தான் முடிகிறது! நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று ஒதுங்கிப் போய்க் கொண்டே இருந்தோமானால், சுதந்திரம் என்பதும், வளர்ச்சி, பாதுகாப்பு  என்பதும் வெறும் கனவாக மட்டும் தான் இருக்க முடியும்!

முதல்  செய்தி!
அதிலும் இரண்டு விதமாக!


வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அரசுமுறைப் பயணமாகச் சீனாவிற்குச் சென்றிருக்கிறார்!

இந்த விஜயத்தால்  இந்திய சீன உறவுகளில் எந்த ஒரு அபிவிருத்தியும் எதிர்பார்ப்பதற்கில்லை என்று செய்திகள் சொல்கின்றன.இந்திய அமைச்சர் விஜயம் செய்கிற தருனமாகப் பார்த்து, சீனா பாகிஸ்தானுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறது. 


இந்தியாவைக் குறித்து என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாள்வது என்பதிலேயே சீனாவுக்கு இரண்டுவிதமான கருத்துக்கள் இருக்கின்றன.சீன ராணுவம், கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான மக்கள் தினசரி  உள்ளிட்ட ஒரு தரப்பு, இந்தியாவை நம்ப முடியாத ஒரு தரப்பாக, சீனாவுக்கு அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் நாடாகப் பார்க்கிறது. இந்தியாவிடம் கடுமையான அணுகுமுறையைக் கையாளவேண்டும் என்று அந்தத் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

ஜப்பான்  தொடங்கி இந்தியா வரை பிறை வடிவிலான ஒருகூட்டணியை அமெரிக்கா சீனாவுக்கு எதிராகத் தூண்டி வருகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.ஹிந்து நாளிதழில் வெளியாகி ருக்கும் செய்திக் கட்டுரையைப் படிக்க!
 

அதே நேரம், சிறிய அளவில் இருந்தாலும், இன்னொரு தரப்பு, இந்தியாவை ஒரு சுயேச்சையான வளர்ந்து வரும் சக்தியாக பார்ப்பது தான் சரி! இந்தியாஅமெரிக்காவின் கூட்டாளியாக ஆகவோ, சீனாவுக்கு அச்சுறுத்தலாகவோ வர வாய்ப்பில்லை என்று அந்தத் தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி சீன டிராகன் ஒரே நேரத்தில் நெருப்பையும், குளிர்ந்த காற்றையும் ஒரே நேரத்தில் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறது. 
இப்படிப்பட்ட சிக்கலான உறவில், எஸ் எம் கிருஷ்ணா மாதிரி, உள்ளூர் காங்கிரஸ் கோஷ்டிச் சண்டைகளை மட்டுமே பார்த்து  வளர்த்த ஒருவரிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம் இருப்பது இந்த தேசத்தின் துரதிர்ஷ்டம் தான் என்று சொல்ல வேண்டும்! உறவை வளர்க்க முடியாவிட்டாலும், பிரச்சினையை இன்னமும் குழப்பி விடாமல் இருக்க ஆண்டவன் தான் துணை நிற்க வேண்டும்! ஏற்கெனெவே 1956-1962 தருணங்களில் நேரு செய்த குளறு- படிகளின் விளைவுகளில் இருந்தே தேசம் இன்னமும் வெளிவர முடியாத ஒரு சூழ்நிலையில், தெய்வத்துனையை வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும்?

சீனப் பூச்சாண்டி, சீனப் பெருமிதம் என்ற தலைப்பில் ஏற்கெனெவே இந்திய சீன உறவில் உள்ள சில சிக்கல்களை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்! சீனா பூச்சாண்டி காட்டுகிறதென்றால், அதற்கு இந்திய அரசின் கையாலாகாத் தனம் தான் முழுக் காரணம் என்பதையும் பார்த்திருக்கிறோம்! நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் இந்தச் செய்தி, இந்திய அரசின் மெத்தனத்தை இன்னமும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது.

இதையும் பிரம்மசெலானி தன்னுடைய ட்விட்டர் பகிர்வில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்! அமெரிக்க-கனடிய கணினி வல்லுனர்கள், சீனா எப்படியெல்லாம் கணினி வழியாக உளவுபார்ப்பது,  ஹேக் செய்வது என்பதில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகப் பின்தொடர்ந்து ஆராய்ந்து அதன் ஒரு பகுதி ஐம்பத்தெட்டுப்  பக்க அறிக்கையாக ஸ்க்ரிப்
ட் டாட் காமில் தரவிறக்கம் செய்து கொள்கிற மாதிரி வெளியிட்டிருக்கிறார்கள்.அதில், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மிக ரகசியமான கோப்புக்களில் எப்படிப் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் என்று சொல்லி ருக்கிறார்கள்.

The Toronto spy hunters not only learned what kinds of material had been stolen, but were able to see some of the documents, including classified assessments about security in several Indian states, and confidential embassy documents about India’s relationships in West Africa, Russia and the Middle East. The intruders breached the systems of independent analysts, taking reports on several Indian missile systems. They also obtained a year’s worth of the Dalai Lama’s personal e-mail messages. 

 
இதையும் வெளிநாட்டுக்காரன் பார்த்துத் தான்  சொல்ல வேண்டியிருக்கிறது என்பது பெருமைப் பட்டுக் கொள்கிற விஷயமா?! நம்முடைய அரசு இயந்திரத்தின் யோக்கியதை நமக்குத் தெரிந்தது தான்!


oooOooo

இரண்டாவது செய்தி! 
 

பிரச்சினை தானாகவே செத்துப் போகிற வரை அல்லது காணாமல் போகும் வரை அலட்சியம் காட்டு!ஜவ்வாக இழுத்துக் கொண்டே போ! 


இது தான் இந்திய அரசின், இந்திய அரசியல்வாதிகளின் கைகண்ட செயல்பாடாக இருந்து வருகிறது! பிரச்சினை முற்றிப் போனால்,அதிக பட்சம் ஒரு கமிஷன் வைப்பார்கள், அதன் பதவிக்  காலத்தை ஜவ்வாக நீட்டிக் கொண்டே போவார்கள்! கமிஷன் அறிக்கை வெளிவருகிற நேரம், பெரும்பாலும் அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்கள் காணாமலேயே போயிருப்பார்கள்! தீர்ந்தது பிரச்சினை!

சென்ற மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளிவந்த செய்தி! இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள், பார்த்திருந்தாலும் என்ன செய்திருப்பார்கள் என்பது கொஞ்சம் ஆயாசப் படுத்துகிற கேள்விதான்!


முப்பது வருடங்களாக இந்தியாவுக்கும், வங்காள  தேசத்துக்கும் ஒரு உரிமைப் பிரச்சினை! வங்காள விரிகுடாவில் நியூ மூர் தீவு என்ற ஒரு சிறு தீவு, வெறும் மூன்றரைக்கு மூன்று  என்ற அளவில் ஒன்பதரை  சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தான்! இது எங்களுக்குத் தான் சொந்தம் என்று இந்தியாவுக்கும் வங்காள தேசத்திற்கும்  முப்பது வருடங்களாக தாவா தீராமலேயே இருந்தது!

இயற்கை, வெகு சுலபமாக இந்தத் தாவாவைத் தீர்த்து விட்டது!  எப்படி என்கிறீர்களா? புவி வெப்பமயமாவதில், கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வந்ததில் இந்தத் தீவு கடலுக்குள் முழுகிப் போய்விட்டது! 2000 மாவது ஆண்டு வரை கடல் நீர் மட்டம் ஆண்டுக்கு மூன்று மில்லிமீட்டர் அளவுக்கு உயர்ந்து வந்த விகிதம் சமீப காலமாக ஐந்து மில்லி மீட்டர்களாகப் பெருகித் தீவை விழுங்கி விட்டதாம்!  

செய்தியை  இங்கே பார்க்கலாம்.

oooOooo

மூன்றாவதாக ஒரு செய்தி! 
 
அணுமின் நிலைய விபத்துக்கான நட்ட ஈட்டை வரையறை செய்யும் மசோதா பெயரளவுக்கு, இன்னமும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக இருந்த போதிலும், இந்திய நலன்களை முற்றிலுமாக விட்டுக் கொடுத்து விட்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் ஏற்கெனெவே செய்துகொண்டாகி விட்டது. பாராளுமன்றத்தின் ஒப்புதலையோ, பாராளுமன்றத்தில் உறுப்பினர்களோடு  கலந்தாலோசிப்பதையோ செய்யாமல் ஒப்பந்தம் போட்டாகி விட்டது. 

பிரம்ம செலானி எழுதிய இந்தச் செய்திக் கட்டுரை, பாராளுமன்ற ஜனநாயகம் என்பது எப்படி வெறும் கேலிக் கூத்தாகவே இருக்கிறது என்பதைச் சொல்கிறது.  அமெரிக்கா தான் நினைத்ததை சாதித்துக் கொண்டு விட்டது.

இன்னொரு செய்தி! சமீபத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மசோதா நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப் பட்ட தருணத்தில் மாநிலங்கள் அவையில் வெறும் ஐம்பத்துநான்கு உறுப்பினர்களே இருந்தார்களாம்!  மக்களுடைய பிரச்சினையை பேசுவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்த்தால், அதிலும் ஆயாசம் தான் வருகிறது. எந்த  ஒரு மசோதாவைப் பற்றியும், சுயமாகச் சிந்தித்து, மக்களுடைய கருத்தை எடுத்துச் சொல்லி, விவாதித்து, ஒரு தெளிவான முடிவை எடுக்கும் அமைப்புத் தான் பாராளுமன்றம், சட்ட சபை என்பதைப் பற்றிய ஞானமோ கவலையோ எத்தனை  மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பாராளுமன்ற, சட்ட மன்ற நடவடிக்கைகளைக் கொஞ்ச நேரம் தொலைக் காட்சியில் பார்த்தாலே புரிந்து விடுகிற விஷயம் தான்! மக்களுடைய பிரதிநிதியாகச் சரியாகச் செயல்படவில்லை என்றால், அந்த நபரைத் திருப்பியழைக்கும் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது! 


அப்படி ஒன்று பல நாடுகளில் இருப்பதையாவது அறிந்திருப்போமா?

 




11 comments:

  1. இப்போதெல்லாம் செய்திகளைப் படிக்கும் போது ஒரு பற்றற்ற நிலை தேவைப் படுகிறது.எல்லோரும் செய்தியாக மட்டுமில்லாமல் அவரவர்கள் சார்பு நிலையில் செய்தி தருகிறார்கள். இதை ஆழ்ந்து யோசித்து கொதி நிலைக்குப் போகாதிருக்க நிறையப் பொறுமை வேண்டும்

    ReplyDelete
  2. காஷ்மீரை தனி நாடு போல் பாவித்து ஒருவருக்கு விசா வழங்கியுள்ளதே சினா படித்தீர்களா!?

    ReplyDelete
  3. செய்தியைத் தருவதற்கே ஒரு சார்பு நிலை தேவைப்படத்தான் செய்கிறது! அது கூடப் பரவாயில்லை! அனுபவத்தில் அதனதன் தரம், உண்மையைப் புரிந்து கொண்டுவிடலாம்!

    இங்கே நான் சொல்ல வருவது, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கூட அலட்சியம் காட்டினால் எப்படி என்பது தான்!

    ReplyDelete
  4. /காஷ்மீரை தனி நாடு போல் பாவித்து ஒருவருக்கு விசா வழங்கியுள்ளதே சினா படித்தீர்களா!?/


    திரு. அருண்!

    அதற்குக் கூட பார்ப்பனீயத்தின் தில்லாலங்கடி காரணமாக இருக்குமோ?

    ReplyDelete
  5. //அதற்குக் கூட பார்ப்பனீயத்தின் தில்லாலங்கடி காரணமாக இருக்குமோ? //


    உங்களுக்கு தெரியாததா நான் புதிதாக சொல்லி விடப்போகிறேன்!

    நாஸிசம் என்பதை எப்படி பார்பீர்கள், யுதர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த அடக்குமுறை என்பது தானே!

    அய்யர், அய்யங்கார் என உங்களுக்குள் சாதி இருக்கும் போது பார்பனீயம் என்றால் உங்களுக்குள் ஏன் எம்புட்டு கோவம் வருகிறது!

    அடுக்குமுறை வைத்து கொண்டு மனிதர்களை பிரித்து நடத்துவதும், பாஸிச முதலாளித்துவமும், மற்றவர்களை அடிமையாக எண்ணுவதையும் தான் பார்பனீயம் என்கிறேன்! உங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் உண்டா!? பிறகு ஏன்!?

    ReplyDelete
  6. in current ministers who is able to talk with china bravely and long vision ?

    2. why m.k.narayanan shifed to governer - can you guess ?

    ReplyDelete
  7. வாருங்கள் திரு பாலு!

    சீனாவுடன் என்றில்லை, வேறெந்த நாடு ஆனாலும், உறவு கொள்வதில் ஒரு தேசத்தின் நலன்களே முன்னிலைப் படுத்தப் படுவதாக இருக்கும்! தேச நலன்களைக் காப்பாற்றுகிறதிறமையும், வலிமையையும், ஒரு தெளிவான அரசியல் நிலைபாடு இருந்தால் மட்டுமே சாத்தியம்.

    அந்த வகையில் இப்போதுள்ள எந்த ஒரு அமைச்சருமே தகுதியானவர் இல்லை என்பது, கசப்புத்தான், ஆனால் எனக்குத் தெரிந்த வரை அது தான் உண்மைநிலை!

    ReplyDelete
  8. /பார்பனீயம் என்றால் உங்களுக்குள் ஏன் எம்புட்டு கோவம் வருகிறது!/

    வால்ஸ்! கோபம் எதுவும் இல்லை!

    திருடனைத் திருடிக் கொண்டோட விட்டு,
    அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
    ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?


    சிரிப்புத்தான் வருகுதையா!

    ReplyDelete
  9. http://allinall2010.blogspot.com/2010/04/blog-post.html


    இங்கே இருக்கு!

    ReplyDelete
  10. ராஜனின் பதிவில் இலவச விளம்பரம் கொடுத்த வால்சுக்கும், கும்மிக்கும் நன்றி! மதிப்பு வைத்திருக்கிறேன் என்று சொன்ன கோவி கண்ணனுக்கும் நன்றி!

    நான் பெருங்காயமோ, வெறும் காயமோ குறைந்தபட்சம் வெங்காயமோ கூட இல்லை!அதனால், கோவி கண்ணன் சொல்லியிருக்கிற மாதிரி பெருங்காய, வெங்காய வாசனை எதுவும் இங்கே இல்லை!

    ReplyDelete
  11. திரு.பாலு,

    /தானைத் தலைவியின் பிறந்த நாள் அறிவிப்பாகதெலங்கானா தனிமாநிலமாக ஆக்குவதான அரசின் முடிவை வெளியிடலாம் என்ற யோசனையை, கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல் வெளியிட்டு விட்டு, குத்துதே குடையுதே என்று பானா சீனா கண்ணைக் கசக்கியதும், மலையாளத்து மாமேதை எம் கே நாராயணன் காவு கொடுக்கப் பட்டு, மேற்கு வங்காள கவர்னராக ஆக்கப் பட்ட ஸ்டன்ட் சும்மா லேசுப்பட்டதா என்ன!/

    இதை முன்பே இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேனே!

    http://consenttobenothing.blogspot.com/2010/02/blog-post_06.html

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!