வெள்ளிக் கிழமை வித்தியாசங்கள்....!

ஆங்கில வருடப் பிறப்புக்கு எப்போதும்போல சில தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, அப்புறமாக மறந்து போய்விடுகிற தன்மையை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் ஒன்று, இரண்டு என்று இரண்டு பகுதிகளாகப் பார்த்திருக்கிறோம்!

ஒன்றோ இரண்டோ
, அல்லது பத்தோ, உண்மையான சாரம் என்னுடைய தீர்மானங்களில் மட்டும் இல்லை, வெறும்  எண்ணிக்கையில் மட்டும் இல்லைஒவ்வொரு அனுபவத்திலும் நான் என்ன கற்றுக்கொண்டு வருகிறேன் என்பதே ஒரே மையக் கருத்து
.
இதை வைத்து மட்டுமே என்னுடைய தீர்மானங்களும், தொடர்ந்து வரும் செயல்களும், விளைவுகளும் இருக்கும் !
இப்படி ஜம்பமாக வேறு சொல்லிக் கொண்டாயிற்று! அவ்வளவு தானா?
அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு ஒரு சராசரிக்கும் கீழே போய் விடுகிற உத்தேசமில்லை!தமிழ்ப் புத்தாண்டிலிருந்தாவது அவற்றில் சிலவற்றைக் கறாராகக் கடைப்பிடிக்க உத்தேசம்! ஆரம்பித்தாயிற்று!
.
கிடைத்திருக்கும் நேரத்தின் அருமை தெரிந்து பயன்படுத்துவது, எளிதாகக் கைவராது, சிரமப்பட்டுத் தான் கைவசமாகும்  என்பது நன்றாகவே உறைத்திருக்கிறது. நான் ஒரு மனிதனாக இருக்கிறேன் என்பது, சிந்தித்துக் கொண்டே இருப்பதில் தான்!

Thesis-->Anti-Thesis-->Synthesis
சிந்திப்பதும் கூட  நேரெதிர் முரண்பாடான இரண்டின் இயக்கத்தில் ஒரு மையப் புள்ளையைக் கண்டு பிடித்து அங்கே இருந்து புதிதாகத் தொடங்குவதில் தான்! பழைய நினைப்புடா பேராண்டி என்று பழையதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில் இல்லை! இந்த முரணியக்கத்தைத் தொடர்ந்து கொண்டே போவது கூட, ஒரு எல்லை வரைதான் என்றும் தோன்றுகிறது! அந்த எல்லையை வெறும் டயலடிக்ஸ் (முரண் இயக்க வாதம்)  பேசிக்கொண்டு அறிய முடியாது என்பதும் ஒருவாறாகப் புரிய வந்திருக்கிறது.
நிஜ உலகில் நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பது கடினம்!  அரிதும் கூட!
ஆனால், இணையம் மாதிரி ஒரு மின்வெளிப் பரப்பில், அல்லது கனவுலகில்..........

ஒன்று-    உங்களுடைய நண்பர்கள் உங்களை ஒரு செயலைத் தீர்மானிக்கும் முடிவுக்குத் தள்ளாமல் இருந்தால்,

இரண்டு- உங்களுடைய இணைய வழி நண்பர்கள், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவலைப் பரவச் செய்யாமல் இருந்தால்,

மூன்று-   உங்களுடைய நண்பர்கள், நீங்கள் பத்திரமாகப் போற்றிக் காப்பாற்றிவரும் நம்பிக்கைகளைக் கண்ணியமாகக் கேள்வி கேட்காமல்           இருந்தால்,

நான்கு-    உங்களுடைய நண்பர்கள், உங்களிடமிருந்து மிகச் சிறந்ததை வலியுறுத்தாமல் இருந்தால்,

நீங்கள் இணையத்தில், அல்லது கற்பனை உலகத்தில், புதிய நண்பர்களைத் தேட வேண்டிய நேரம் வந்து விட்டது!
புதிய நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்! 


சேத் கோடினுடைய  இந்த வலைப்பதிவைத் தொட்டு  

இங்கே சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா?


********


படித்ததும் பிடித்ததும் பற்றிப் பேசி நீண்ட நாட்களாகி விட்டது இல்லையா?

இன்றைக்கு ரீடரில், சொல்வனம் இணைய இதழில் ஸ்ரீரங்கம்
மோகன ரங்கனைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரை ஒன்றும்,
தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கும் ஸ்ரீரங்கம்
மோகன ரங்கன் கவிதைகள்  தொகுப்பில் இருந்து ஐந்து கவிதைகளை எடுத்துப் போட்டிருந்ததைப் படித்தபோது, மனதுக்கு மிக நிறைவாக இருந்தது!


பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்!

"கவிதையில் வாழும் ஜீவன் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். கவிஞர் என உலகம் போற்றும் இச்சைகளும், கனவுகளும் இல்லை. கவிதைகளும் அன்றாடம் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கவும் இல்லை. தான் எதுவாக வாழ விரும்புகிறோமோ அவ்வாறு வாழ்வதிலா அல்லது வாழ்வதைப் பறையறிவிப்பதிலா அக்கறை?

எனக்குத் தெரிந்து தினம் கவிதையென எழுதிக்குவித்துக் கொண்டிருக்கும் ஒருவர். தமிழகமே அவர் வாய் முத்து உதிர்வுக்கு ஏங்கிக் கிடக்கிறது. அவரைச் சுற்றிப் பெருங்கவிஞர் கூட்டம். ஆனால் அவரைக் கவிஞர் எனச் சொல்ல அக்கூட்டத்தில் ஒருவரும் இல்லை. வியப்பென்னவெனில் அவருக்கும் சரி அவரைச் சுற்றிய கூட்டத்துக்கும் சரி, கவித்வம் இன்றளவும் கிட்டியபாடில்லை.
கவிஞர் என்று தெரியப்படாத மோகன ரங்கனின் கவிதை ஒன்று ........" 
வெங்கட் சாமிநாதனுடைய இந்த வார்த்தைகள் , மோகனத் தமிழுக்குச் சொந்தக்காரரை அடையாளம் காட்டியதைப் படித்தபோது, ஏதோ என்னையே சொல்லிவிட்ட மாதிரி அவ்வளவு சந்தோஷம்! நிறைவு!

இதே இணைய இதழில் தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கும் ஸ்ரீரங்கம்
மோகன ரங்கனுடைய கவிதைத் தொகுப்பிலிருந்து  ஐந்து கவிதைகள்!

ஸ்ரீரங்கம்
மோகன ரங்கனுடைய மோகனத் தமிழை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே கொஞ்சம் ருசி பார்த்திருக்கிறோம்! மின்தமிழில் அவருடைய  விவாத இழைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஆனந்த அனுபவம்  ஒன்று இரண்டல்ல!   

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய "எது பக்தி" என்ற விவாத இழையைப் படித்த பிறகு, அப்படியே உறைந்துபோய், அகம் கரைந்து போய் அனுபவித்த அந்தத் தருணம் இருக்கிறதே!



சொல்வனத்தில் வெங்கட் சாமிநாதனுடைய  கட்டுரையைப் பார்த்து விட்டு மின்தமிழில் மோகனரங்கனுக்கு வாழ்த்துச் சொல்ல ஒரு தனி இழையை துவங்கியிருக்கிறார்கள்! அங்கே வெங்கட் சாமிநாதன் எடுத்தாண்ட பகுதியைப் படிக்க இங்கே! ரங்கன் மன மின் வான்!

நல்லதொரு வாசிப்பின் சுகமே தனி!


*******
 ச்சும்மா...ட்டமாஷு!




chrispychicken32  என்ற பெயரில் ஒருவர் தான் பார்த்ததிலேயே, மிகச் சிறந்த அழுகை அல்லது ஒப்பாரி என்று இருபத்தாறே செகண்டுகள் ஓடும் இந்த வீடியோவை யூட்யூபில் வலை ஏற்றம் செய்திருக்கிறார்! 
இதையும் 124624 ரசிக மகாஜனங்கள் ரசித்துப் பார்த்ததாக விவரம் கீழே இருக்கிறது!

எனக்கு ஒரு சந்தேகம்!
இந்த மொறுமொறுப்பான கோழிக்குஞ்சு 
நம்மூர் சிவாஜி கணேசன்கள், கமலஹாசன்கள்  தரையில் உருண்டு புரண்டு ஒப்பாரி வைக்கும் காட்சியைப் பார்த்திருந்தால்  என்ன செய்வார்.......?
என்ன ஆகியிருப்பார்.....?

தெரிந்தால் சொல்லுங்களேன்!



 

2 comments:

  1. சில இடங்களில் மோகனகிருஷ்ணன் என்று எழுதியிருக்கிறீர்களே - அது ஏதோ காரணத்திற்காக எழுதப்பட்டதா தவறி எழுதப்பட்டதா ஐயா?!

    ReplyDelete
  2. வணக்கம் திரு.குமரன்!

    கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு அது! நீங்கள் சுட்டிக் காட்டிய பிறகே கவனித்துத் திருத்தியிருக்கிறேன்.

    தவறைத் திருத்திக் கொள்ளத் தகவல் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!