கொஞ்சம் கொறிக்க! #அரசியல் இன்று!
அந்த ஏழு நிமிடங்களும் பெருமாள் முருகனும் : கருத்துசுதந்திரம் எதுவரை?
இந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற்பட்டதில்லை. இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை. வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை எந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.
காமம், போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்று காமம், காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்துவிடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை" நிறையவே பார்த்திருக்கிறேன்.
ஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!
1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை!
கதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்! ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான்! இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!
கதை சொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாக எழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம், கருத்து சுதந்திரம், இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப் பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப் புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.
மைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.
நண்பர் வெளியிட்ட ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.
நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அந்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி, குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.
இன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.
டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர் இருவருமே கற்பழிப்பு, கொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமான வருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர்,ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.
ஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் "ஏழு நிமிடங்கள்" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்ட தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்று அபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.
எல்மோ டங்கனை அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின் செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.
இப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல் பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.
கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது.
1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது! கதை சொல்லும் போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல! ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம் எதை வைத்து வரையறை செய்வது? கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?
ஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த கையோடு இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?
The Seven Minutes! இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது..என்று இந்தப் பக்கங்களில் எழுதி ஐந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால் சில புத்தகங்களும், கலைப்படைப்புக்களும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இன்னமும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

யாருக்கும் வெட்கம் இல்லை, அட, எனக்கும் வெட்கம் இல்லை அதனால் பதிவு எழுதுகிறேன்!
* கருத்துச்சுதந்திரம் மிக்க ஒர் இடம் வலைப்பூ* என்ற வார்த்தை மட்டுமே என் மனதில் ஆழப்பதிந்த விஷயம். உண்மையில் ஒரு வலைப்பூவில் நாம் நமக்கு தெரிந்ததையும், தெரியப்படுத்த விரும்பும் தகவலையும் தரலாம் என்றாலும் கருத்துச்சுதந்திரம் என்றால் என்ன என்பதை எடுத்துச் சொல்லுங்களேன். " இது அவருடைய கேள்வி.
காளையைப் போல அடுத்தவன் வயலில் மேயப் போவது போல என்று இன்றையசூழலில் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுதந்திரம் என்பது சுயகட்டுப்பாட்டுடன் கூடியது, என்ன வேண்டுமானாலும் எழுதுவேன், பேசுவேன்,செய்வேன் என்பது அல்ல.
On the rule of the road என்ற ஒரு கட்டுரை, கல்லூரிக்குள் நுழைந்தபோது பாடமாகப் படித்தது, மனதில் தங்கி விட்ட கருத்து, அந்தக் கட்டுரையிலே ஆரம்பத்தில் ஒரு பெண்மணி நட்ட நடு வீதியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்துபோய்க் கொண்டிருப்பார். வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறவர்கள் அல்லவா கவலைப்பட வேண்டும்!
நடப்பதற்கு சாலையின் இரு பக்கங்களிலும் நடை பாதை இருப்பதைக் காட்டி அதில் நடக்கலாமே என்று ஒருவர் நல்லெண்ணத்தோடு சொல்கிறார், உடனே அந்தப் பெண்மணி சொல்வார், "எதற்காக? நமக்குத் தான் சுதந்திரம் கிடைத்து விட்டதே!"
அதாவது, சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வது!
கருத்துச் சுதந்திரம் என்பது, இப்படி எல்லைகளே இல்லை என்று சொல்வதற்காக
இல்லை. நாமாக உணர வேண்டும். ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடந்து கொண்டால் எவர்க்கும் பிரச்சினை இல்லை. இணையத்தில், குறிப்பாகத் தமிழ்
வலைப்பதிவர்களிடத்தில், இந்த ஒரு அம்சம் மிகவும் குறைந்து காணப்படுகிறது
என்பதே என் வருத்தம். அந்த வருத்தம் தீர, ஒரு பழைய, ஆனால் இந்த
விஷயத்திற்குப் பொருத்தமான ஒரு கதையைப் பார்ப்போம்.
"குருஷேவ் ஒரு முட்டாள்", "குருஷேவ் ஒரு அடிமுட்டாள்" என்று மாஸ்கோ நகர
வீதியில் ஒருவன் கத்திக் கொண்டே ஓடினான். காவலர்கள் அவனைக் கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் செய்தார்கள்.
நீதிபதி, விசாரித்துவிட்டுத் தீர்ப்புச் சொன்னார்:
"இந்த நபருக்கு ஏழாண்டுகள் கடும் உழைப்பு தண்டனை தருகிறேன், குருஷேவ் ஒரு முட்டாள் என்று சொன்னதற்காக அல்ல, அரசாங்க ரகசியத்தை, இப்படி நடுத்தெருவில் சொன்னதற்காக"
பழைய திரைப்படம் ஒன்றில் என் எஸ் கிருஷ்ணனும், மதுரமும் சேர்ந்து கலக்கிய "ராஜா காது கழுதைக் காது...ராஜா காது கழுதைக் காது.. " காட்சி நினைவுக்கு வருகிறதா? ராஜா காது கழுதைக் காதாகஇருக்கலாம்,அதை அப்படியே சொல்லி விட முடியுமா? இங்கே ராஜா இடத்தில், நம்மையே வைத்து யோசித்துப் பாருங்கள்!
பொருத்தமே இல்லாமல், இந்தக் குழுமத்தில், ஒரு நண்பர் ஒரு தகவலின் மீது தன சொந்த வெறுப்பைக் கொட்டி எழுதியது போல, வேறு 'அரசாங்க ரகசியத்தை' எழுதி விட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்பது, கொஞ்சமாவது புரிய வரும். இது அங்கே அவருக்கு சொன்ன பதில். இந்தக் கருத்துச் சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்றெல்லாம் பேசிக் கொண்டேஇருக்கிறோமே இதை நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எப்படிஅணுகுகிறோம் என்ற யோசனை கொஞ்சம் பலமாகவே இருந்தது.
என்ன நினைப்போடு எழுதியிருந்தாலும் சரி, சில வலைப் பதிவுகள்எழுதியவர்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி, படிப்பவர் மனத்தில் ஒருதாக்கத்தையும், ஏதாவது செய்ய் வேண்டும், இதற்குப் பதில் சொல்ல வேண்டும்என்ற தவிப்பையும் உண்டு பண்ணுவதை அனுபவித்திருக்கிறீர்களா? அப்படிச்சில பதிவுகளைக் கடந்த சில நாட்களாகப் படித்துக் கொண்டும், பதிலையோசித்துக் கொண்டும் இருந்ததன் எதிரொலி தான் இந்தப் பதிவு.
திரும்பிப்பார்க்கிறேன் -கிணறுவெட்ட பூதம் என்ற தலைப்பில், சென்னைசூளைமேடில் உள்ள ஒரு மேன்ஷனில் கடந்த ஒன்பது மாதங்களாகக் குடிநீரில், கழிவுநீரும் கலந்து வருவதைத் தட்டிக் கேட்டதற்காகத் தானும் தன் நண்பர்களும் அனுபவித்து வரும் கொடுமையான சூழலை, நடத்திவரும் போராட்டத்தை, திரு.ரமேஷ் சதாசிவம் எழுதியிருந்ததைப் படித்த பிறகு, நாமெல்லாம் மனிதர்கள் தானா, மனிதர்களுக்கு நடுவில் தான் வாழ்கிறோமா என்றெல்லாம் ஐயப்பட வேண்டியதாகிவிட்டது. சங்கம் வைத்துக் கொடி பிடித்துக் கோஷம் எழுப்பாமலேயே, இணையம் வழியாக, திரு ரமேஷ் சதாசிவம் ஒரு புதுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர் கவனத்திற்கும் அவரது இணையப் பக்கங்கள் வழியாக இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஜுனியர் விகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இணையத்தில் நிறையப் பதிவர்கள், இந்தப்பக்கங்கள் உட்பட, இந்த செய்தியை முடிந்தவரை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனாலும், இந்த நிமிடம் வரை, அரசு இயந்திரம் விழித்துக் கொண்டதாகவோ, ஒரு நியாயமான தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த மாதிரித் தெரியவில்லை.
ஆகஸ்ட் பதினைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. கோட்டையில் மூவர்ணக் கொடி பறக்கும். எல்லாத் தொலைக்காட்சிகளிலும், 'சுதந்திரத்திருநாளை முன்னிட்டு சிறப்புத் திரைப்படம், திரைப்பட நடிகர் பெட்டி' எல்லாம் வரும்- சுதந்திரத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பாருங்கள், சுதந்திரத்தைப் போற்றுங்கள்' என்று விளம்பரம் வேறு! நமக்கும் அது தானே வேண்டும்!
எவனுக்கு, எங்கே, என்ன நடந்தால் நமக்கு என்ன வந்தது?
இந்த யோசனையோடு இருந்தவனை, இன்னொரு பதிவு வேறு விதமாக அசைத்துப் பார்த்தது.அதிகாரத்தின் பீடங்கள் என்று தலைப்பிட்டு, பாண்டியன் கிராம வங்கியில் இரு ஊழியர்களை, வங்கியில் நடக்கும் சில விஷயங்களை Bank Workers Unity என்ற பத்திரிகையில் எழுதியதற்காகத தற்காலிகப் பணி நீக்கம் செய்திருப்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் திரு. மாதவராஜ் . அந்த இருவரில் ஒருவர் இளைஞர், அன்டோ கால்பட் என்பது பெயர் கொக்கரகோ என்ற பெயரில் வலைப்பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். இளமையின் ஆவேசமும், பொறுமையின்மையும் எழுத்தில் நன்றாகவே வெளிப்படுகிறது. அவருடைய, இந்த வார்த்தைகளில், ஒரு சிறு பகுதி இது.
"எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.






