சண்டேன்னா மூணு! தேர்தல் முடிவுகள் சொல்லும் விசித்திரச் செய்திகள்!



பந்தியில் இடமில்லை எழுந்திரு என்று சொன்னபோது, இலை கிழிஞ்சிருக்கே என்று சொன்னானாம் ஒருத்தன்!


கேலியாக இப்படி ஒரு கதை சொல்வார்கள்! திமுகவின் கதையும் அப்படித்தான் இருக்கிறது.நாளை திங்கட்கிழமை, கருணாநிதி டில்லிக்கு வருவாராம், சிறையில் மகளை சந்திப்பாராம், ஆனால் சோனியாவை சந்திக்க மாட்டாராம்! சோனியா இவரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுத்தாராமா என்ன!?  ஐமு கூட்டணிக் குழப்ப வெர்ஷன் 2, இரண்டாண்டைத் தாண்டுவதைக் கொண்டாட இன்று மாலை கொடுக்கப்படும் விருந்தில், சும்மா பெயரளவுக்கு நாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, டி ஆர் பாலு மட்டும் கலந்துகொள்வார் என்று சொல்கிறார்கள்!

ஐமுகூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய கூட்டாளியாக இருந்ததெல்லாம் கடந்தகாலம், பழங்கனவு! வெறும் பதினெட்டே எம்பிக்களை மட்டும் வைத்துக் கொண்டு, ஆறு மத்திய அமைச்சர் பதவிகளை, அதுவும் தாங்கள் சம்பாதிக்க முடிந்த பசையுள்ள துறைகளாக வாங்க முடிந்த சாமர்த்தியத்தை, நிரா ராடியா என்ற கார்பரேட் தரகரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டு, அம்பலமானதிலேயே பார்க்க முடிந்தது.

அந்த ஒலிப்பதிவு  செய்யப்பட்ட உரையாடல்களில் இருந்தே திமுக இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சோதனைகளின் ஆரம்பத்தைத் துல்லியமாகப் பார்க்க முடியும்! கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்தாலேயே  திமுகவின் இன்றைய தலைவிதிக்கு, தயாநிதி மாறன்,ரத்தன் டாட்டா இருவருக்கிடையில் எழுந்த ஈகோ, வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட படலம் காரணமாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்! தயாநிதிக்கும் டாட்டாவுக்கும் ஆரம்பித்த பனிப்போர் இப்படியெல்லாம் மாறும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. கருணாநிதி நேற்றைக்கு அறிக்கையில் சொன்னதுபோல, இமயம் முதல் குமரி வரை திமுகவை பழிதீர்க்கும் படலம் என்பதில் கொஞ்சமும் உண்மையில்லை.

நிரா ராடியாவுடன்  கனிமொழி, ராசாத்தி மற்றும் ஆ.ராசா பேசியவைகளில் இருந்தும், ரத்தன் டாட்டாவுடன் பேசியது, அப்புறம் ஆ.ராசாவுக்கு பாராட்டுப் பத்திரமாக டாட்டா எழுதிய கடிதங்கள் (எல்லாம் பொதுவெளியில் வந்துவிட்டன) இவைகளில் இருந்து, டாட்டாவுக்கு ஆ.ராசா தகவல் தொழில் நுட்ப அமைச்சராக மறுபடி வந்ததில் இருந்த மகிழ்ச்சி, அந்தக் குறிப்பிட்ட அமைச்சர் பதவி ராசாவுக்கே கிடைக்க வேண்டும் என்பதில் கனிமொழி காட்டிய அதீத அக்கறை எல்லாம் இப்போது மறுபடியும் சந்திக்கு வந்து நிற்கிறது.

ஒரு தேர்தல் முடிவு, இத்தனை தலைகீழாகக் காட்சிகளைப் புரட்டிப் போட்டு  விட முடியுமா என்ன! புரட்டிப் போட்டிருக்கிறது! உதயசூரியனை உச்சிக்கு வந்தது அஸ்தமனமாவதற்குத்தான் என்பதைத் தெளிவாகச்  சொல்லியிருக்கிறது.மறுபடி எழுந்திருக்க முடியுமா என்பதையும் கேள்விக்குறியாக்கி  வைத்திருக்கிறது.சென்ற தேர்தல்களிலேயே பணம் கொடுத்து வாங்க முயற்சித்த வாக்குகளில் பாதிக்குமேல் விழவில்லை என்ற அங்கலாய்ப்பு இருந்தது. இந்தத்  தேர்தலில், பணம் கொடுத்து மட்டுமே வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே திமுகவின் தலையில் கொட்டிச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக, மதுரை இளவரசரின் கொட்டம் இனிமேலும் இங்கே மட்டுமல்ல எங்கேயும் எடுபடாது என்பதையும் சொல்லியிருக்கிறது. 

இந்தத்  தேர்தல் முடிவுகளில், மிக வெளிப்படையாகத்  தெரிகிற ஒன்று--திமுக அமைத்த மெகா கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வாக்குகள் திமுகவுக்கு வலு சேர்ப்பதற்குப் பதிலாக, திமுகவின் வாக்கு வங்கி ஒரேயடியாகச் சரிந்ததில் , திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் சேர்ந்தே சரிந்தன என்பதுதான். இந்த விஷயத்தைத் தான் முந்தைய இருபதிவுகளில் கோடிட்டுக் காட்டியிருந்தேன். திமுகவுடன் கூட்டணி என்பதே இந்தக் கட்சிகளுக்கு வினையாகிப் போனது.

வெளிப்படையாகத் தெரிய வருகிற இன்னொரு அம்சம், இந்தத்தேர்தலில் தன்னுடைய வரட்டுப் பிடிவாதத்தைத்தலர்த்திக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேதிமுக-விஜயகாந்த் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றியைப் பெற்றிருப்பதுதான்! இருபத்தொன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று,எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றதுடன், மாநிலக்கட்சியாக அங்கீகாரம், சின்னம் இவற்றையும் பெற்றிருக்கிறது. திமுக்க்வுடன் கூட்டணி வைத்த பாமக, மாநிலக் கட்சி அந்தஸ்து, மாம்பழச்சின்னம் இவற்றை இழந்ததோடு, இளைய ஐயா அன்புமணிக்கு ராஜ்யசபா சீட், மந்திரிக் கனவு எல்லாவற்றையும் சேர்த்தே இழந்திருக்கிறது. கருணாநிதி முதன்முதலில் கூப்பிட்டு முப்பது சீட் கொடுத்த ராசியோ என்னவோ!விடுதலை சிறுத்தைகள், இன்னபிற உதிரிக் கட்சிகளைப் பற்றித்தனியாக சொல்லவே வேண்டாம்!

கலைஞரின் பொன்னர் சங்கர் என்று திரைப்படம் வெளியான ராசியோ என்னவோ, கொங்குமண்டலத்தில் திமுகவைத் தோற்கடிப்பதைத்  தவிர வேறு முக்கியமான வேலையே இல்லை என்று கொங்கு வெள்ளாளர்கள் மட்டுமின்றி,இதர தரப்பு மக்களும் ஒருமித்து முடிவு செய்து விட்ட மாதிரித்தான் ரிசல்ட் இருந்தது.

சத்தமே இல்லாமல் இந்தத் தேர்தலில் இன்னொரு விசித்திரத்தைக் காண முடிந்தது.ஹெட்லைன்ஸ்டுடே ஓஆர்ஜி இரண்டாவது முறையாக எடுத்த கருத்துக் கணிப்பில் பிஜேபி மூன்று சதவீத வாக்குகள் பெறும் என்று சொன்னதை, அதுமட்டும் அப்படியே பலிக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஜெயித்தது என்று ஒரு இடம் கூட இல்லையென்றாலும், பிஜேபி முந்தைய வாக்கு சதவீதம் 2.1 என்பதிலிருந்து 3.1 சதவீதமாகத் தன்னுடைய ஆதரவு பலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்தப் பெரிய கட்சியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முன்வராத நிலையில், தனித்தே போட்டி என்ற நிலையை எடுத்து, அதில் கண்ணியமான ரிசல்ட்டையும் பெற்ற கட்சி பிஜேபிதான்! 

காங்கிரஸ் ஜெயித்த நான்கு தொகுதிகளில் பிஜேபி பெற்ற வாக்குகள் ஜெயித்தவர் பெற்ற வித்தியாசத்தை விட அதிகம் என்பது கொஞ்சம் வேடிக்கைதான்! இப்படித்தான் பிஜேபி, தான் விரும்பாமலேயே கூட, காங்கிரசுக்கு சாதகமாக நடந்து கொண்ட சந்தர்ப்பங்களை, இந்தப்பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்!
ஆனால், இந்தத்தேர்தல், சத்தமே இல்லாமல் அரசியல் அனாதையாக தொடர வேண்டிய பரிதாபத்தை, வைகோவின் மதிமுகவுக்கு  உண்டாக்கி இருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தவறான முடிவு வைகோவின் அரசியல் தற்கொலைக்கு சமமானது என்பதை இந்தப் பக்கங்களிலேயே  பார்த்திருக்கிறோம்! திமுகவுக்கு மதிமுக தொண்டர்கள் களத்தில் இறங்கி  வேலை செய்ததும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாத உண்மை! உண்மையில், திமுக கூட, மதிமுக ஆதரவு தங்களுக்குத்தான் என்று கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததும் உண்மை.

மதிமுகவின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி 'மின்னல்' முகமது அலி, நாங்கள் தான் தேர்தலிலேயே போட்டியிடவே இல்லையே தேதிமுக எங்கள் கோட்டையைப் பிடித்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும் என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்! தூத்துக்குடி தேதிமுக நிர்வாகி காசிராஜன், மதிமுக கோட்டையைப் பிடித்துவிட்டதாக சொன்னதற்கு எழுந்த எதிர்க்கேள்வி இது. மதிமுக தன்னுடைய கோட்டை என்று நினைத்துக் கொண்டிருந்த தென்மாவட்டத் தொகுதிகள் பலவற்றிலும், மதிமுக என்ற ஒரு கட்சியைப் பற்றிய ஞாபகமே இல்லாமல்,வாக்காளர்கள் அதிமுக, தேதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இந்தத்தேர்தல் முடிவுகள், கருணாநிதிக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்குமோ, அதை விட அதிக அதிர்ச்சியை  வைகோவுக்குக் கொடுத்திருக்கிறது.ஆனால் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மறுக்கும் வைகோவின் உணர்ச்சிவசப்படுகிற இயல்பு, அவருக்கும் சரி, அவரைப் போலவே இமிடேட் செய்து கொண்டிருக்கும் மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் சரி, எந்த நன்மையையும் தரப்போவதில்லை.

தேர்தல் முடிந்தபிறகு, அகற்றப்பட்ட மதிமுக கொடிக்கம்பங்களை மறுபடி தூக்கி நிறுத்த வைகோ அழைப்பு விடுத்திருக்கிறார்! கட்சியைப் போல அல்லாமல் கொடிக் கம்பங்களாவது நிமிர்ந்து நிற்கிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!






 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!